கைக்குட்டை கனவுகள்

 பூவின் இதழில் முத்தமிட்டு  தேனை எடுத்துச் செல்லும் ஓர் வண்டின் திருப்தி போல்…

பட்டாம் பூச்சியை விரட்டிப் பிடித்த ஓர் குழந்தையின் குதூகலம் போல்…

வருசம் பூராவும் வறண்ட தேகத்தையே கொண்டிருக்கும் எங்கள் ஊர் கண்மாய், ஏதோ ஓர் மழைக் காலத்தில் தன்னை சீர்படுத்தி மகிழ்ச்சியை கரைகளெல்லாம் தவழவிட்டுக் கொண்டிருக்கும்  உன்னத காலம் போல், உங்கள் முன் கவிதைகளை சமர்ப்பித்ததில் சந்தோசம் கொள்கிறேன்.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தீராத ஆசை உண்டு.  அது அவரவர் மனங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.

களிமண்ணாய்தான் பூமியில் அவதரித்தோம்.  சமூகக் குயவன் எவ்வாறு ஆக்கிரமிக்கிறானோ அதுபோலவே உருவம் பெறுகிறோம்.  நிரம்பியிருக்கும் எந்தப் பொருளுக்கும் ஒர் வடிகால் தேவைப்படுகிறது.  அது எழுத்தாக எனக்கு அமைந்தது.

பொன் வண்டுகளை வளர்ப்பதில் தொடங்கிய என் கனவு, உலகை என்னவென்று புரியாமல் உழன்று கொண்டிருந்த பால்யத்தில் வளர்ந்து இன்று கவிதையாய் விஸ்திகரித்துள்ளது.  அந்தக் கைக்குட்டை கனவுகள் தான் எனக்கு அடித்தளம்  தந்தது.

(a+b)2 என் அல்ஜீப்ரா சூத்திரத்தை மனனம் செய்ய இயலாமல், கணக்கு வாத்தியாரிடம் கைகள் வீங்க வாங்கிய அடியின் வலியை, கவிதை எழுதி குறைத்துக் கொண்டேன்.  நேசிக்கும் பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க இயலாமல் டெஸ்க்கிலேயே அவள் பெயரைக் கிறுக்கிய நண்பனுக்காக பிறந்தது என் முதல் கவிதை.  பள்ளி முடிந்ததும் மதுரையில் புரபசனல் கொரியரில் வேலை செய்த போது மல்லிகைத் தெரு, ரோஜாத் தெரு, தாமரைத் தெரு என கவிதைகளாய் தெருவின் பெயர்கள் இருக்கும்.

மல்லிகைத் தெருவில் நுழைந்தவுடன், மல்லிகை வாசம் மனதை மயக்கும்.  ரோஜா தெருவுக்குச் சென்றால் ரோஜாவின் இதழ்களைப் போல் அங்குள்ள மக்களும் வசீகரமாய் பழகுவார்கள்.  அங்கு கண்ட காட்சிகளும், அனுபவங்களும்  என்  சட்டைப் பையில் மேலும் கனவினைத் திணித்தது.

பணி நிமித்தமாக கிடைத்த தனிமை, என்னை எழுத்தாளர் சமுத்திரத்தில் தள்ளிவிட்டது.  விடுமுறைக்கு வரும் போதும் போகும் போதும் புத்தகங்களையும், கனவுகளையும் சுமந்து செல்வேன்.

கண்ணதாசனும், வைரமுத்துவும், எஸ்.ராமகிருஷ்ணனும், நா.முத்துக்குமாரும், சத்யஜித்ரேவும் எனக்கு ஆறுதல் அளித்துக் கொள்டிருப்பர்.

கவிதை ஓர் சமூகத்தின் ரகசிய செயல்பாடு என்றும், கவிதையின் வழியாக வெளிப்படும் உருவகங்கள் அந்தக் கலாச்சாரத்தின் ரகசிய அடையாளங்கள் என்றும் “போர்ஹே” சொன்ன வரிகளையே நானும்  முன் மொழிகிறேன்.

இங்கே நான் பிரசவித்திருக்கும் கவிதைக் குழந்தைகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.  எனது குழந்தைகளை கூர்ந்து பாருங்கள் உங்களது முகச் சாயலும் தெரியும்.

தேடலுடன்
தேவராஜ் விட்டலன்

பயணம் பதிப்பகம்
வெளியீடு: டிசம்பர் 2008

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube