(ஒரே நாளில் இந்த பதிவை எழுதாமல் அவரை பற்றிய எண்ணங்களை மனதில் அசைப்போட்டு, அந்த பசுமையான நினைவுகளை மீட்டு தினமும் எழுதுகிறேன்.)


நல்ல ஆசிரியராகவும், சிறந்த மனிதராகவும் வாழ்ந்த கணபதி வாத்தியாருக்கு எனது எழுத்தை காணிக்கையாக்குகிறேன்.

நம்பிக்கையுடன்
தேவராஜ் விட்டலன்


டெல்லியின் மாலை நேரத்தில், குளிர் மெல்ல மெல்ல மேனியை தொட்டுச்செல்லும் தறுணத்தில், ஊர் நினைவுகள் மனதில் எழ தொலைபேசியை எடுத்து பேசிய போதுதான் தெரிந்தது கணபதி வாத்தியார் இறந்த செய்தி.

கடந்த முறை விடுமுறைக்கு சென்றபோது கணபதிவாத்தியாரை பார்த்து பேசிய நினைவுகள் மனதில் வட்ட மடித்தது. பழைய நினைவுகளை ஆழ் மனதின் அடியிலிருந்து கிளர்ந்து எழ செய்த அவரது பேச்சுகள் இன்னும் மனதினுள் நீங்கா நினைவாக நிறைந்துள்ளது.

“சார் வணக்கம்…
ம்… ம்… யாரு…
அடையாளம் தட்டுப்படலையே…
சார் நான் ராமநாதபுரம்.
கேம்பிரி வாத்தியார் பேரன்…
அப்படி சொல்லுயா… இப்பதான் புரியுது
தாத்தா நல்ல மனுசன் போய் சேந்துட்டாரு…
நானும் நாள எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்
எத்தன நாள் லீவு வந்துருக்கப்பா…”

ஒரு மாசம் லீவு சார். என்ன சார் இந்த வயசுலையும் தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருக்கீக. ஆமாம்யா என்ன செய்ய்றது சும்மாவே இருக்குறதுக்கு இப்படி பொழுத கழிக்கிறது நல்லா இருக்குயா.

சரிங்க சார் நான் எழுமலை (எங்கள் கிராமத்தின் அருகில் உள்ள நகரமையமான கிராமம்) வரைக்கும் போறேன்.  பாப்போம் சார்…

என கூறிவிட்டு அவரிடமிருந்து விடைப்பெற்றாலும் அவரை பற்றிய நினைவுகள் அன்று முழுவதும் மனதில் எழுந்த வண்ணமிருந்தது.

சரளை கற்கலும், வலைந்து நெளிந்த சாலைகளும், சாலையோரமிருக்கும் அய்யனார் சாமியும், சாலையின் ஓரம் நிறைந்து காணப்படும் புளியமரங்களும், கரிசல், செம்மண் என மாறிக் கிடந்து மயக்கும் பூமித்தாயின் அழகும் அன்று மனதிற்கு இதம் தறவில்லை. கணபதி வாத்தியாரை பார்த்த தறுணத்தில் இருந்தே “அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு அலைந்து திறிந்த பால்ய கால நினைவுகளே மனதில் எழுந்த வண்ணமிருந்தது”.

அது 1994–ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது கணபதி வாத்தியார் அரசு துவக்கப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணிபுரிய வந்தார். அதுவரை பள்ளியை கண்டாலே கசக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொண்டு திரிந்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு, கணபதிவாத்தியார் வந்ததில் இருந்து பள்ளியை பற்றி மனதில் பதிந்த எண்ணங்கள் மாறத்துவங்கியது.

கணபதி வாத்தியாரின் இதமான பேச்சும், கனிவான அன்பும் அனைத்து மாணவர்களையும் அவர் பக்கம் திருப்பியது.

அந்த அரசு துவக்கப்பள்ளிக்கு கணபதி வாத்தியார் வந்தது முதல் ஒரு புத்துணர்வும், மகிழ்ச்சியும், மாணர்வகளிடம் தொற்றிக் கொண்டது. புத்தகத்தினுள் புதைந்து விடாமல் மாணவர்கள் அனைவரும், மகிழ்ச்சியுடன் விளையாடிக் கழித்து மகிழ்ந்த காலமது.

அந்த வருட அரையாண்டு விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அது கணபதி வாத்தியார் வந்ததில் இருந்துதான் சாத்தியாமானது என்பதை மாணவர்கள் அனைவரும் புரிந்து கொண்டு அவரை மனதில் போற்றி மகிழ்ந்த்தோம்.

ஊருக்குள்ளேயும், தெருவுக்குள்ளேயும், கரடுகளுக்குள்ளும், முட்காடுகளுக்குள்ளும் அலைந்து திரிந்த எங்களை புற உலகை முதன் முதலாய் காட்டியது கனபதி வாத்தியார்தான்.

கணபதி வாத்தியார் கட்டையான மனிதர் என்றாலும் சிவப்பு நிறத்துடனும், வழுக்கைத்த்லையுடனும், முகத்தில் எப்போதும் புன்னகையை ஏந்திக் கொண்டும் அழகாக இருப்பார்.

துவக்கப்பள்ளிக்கு அருகிலேயேதான் என் வீட்டிலிருந்து அந்த அழகான ஒடு வேய்ந்த வீடு இன்னும் ஆழ் மனதின்  சித்திரமாய் பதிந்துள்ளது. பனை மர விட்டங்களும், ஓடுகளினூடே கண்ணாடி பதித்த அந்த வீடு அழகாக காட்சியளித்தது.

வளர்வதும் மடிவதும் வாழ்க்கை தத்துவத்தில் நிதர்சனமான செயல்களாக இருந்தாலும், இரண்டிற்குமிடையே உள்ள வெற்றிடம்தான் வாழ்க்கையின் சூட்சுமமா..

கருவேல மரங்களுக்குள் வீடுகள் அமைத்தும், மட்டைப் பந்து வாங்க பணமில்லாத தறுணத்தில், வீட்டில் உபயோகித்து எரிந்த டப்பாக்களை வைத்தும் உள்ளத்தில் எந்த ஒரு காழ்புணர்ச்சியும் இல்லாமல் விளையாடி மகிழ்ந்த அந்த பால்ய கால தறுணங்கள் மனதில் பசுமையாய் நிறைந்துள்ளது.

அன்றும் அப்படித்தான் பள்ளியின் அருகில் உள்ள முட்புதர்களை செப்பனிட்டு, அந்த இடத்தை மொழுகி வீடு செய்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தோம்…

மணியோசையடித்தது…

ஆனால் விளையாட்டின் மூலம் கிடைத்த மகிழ்ச்சி மனதைக் விளையாட்டிலேயே பினைத்திருந்தது. விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்தால் செவிகள் மணியோசையின் ஒலியை கிரகிக்க மறுத்தது.

வகுப்புகளில் வருகைப்பதிவேடு ஆரம்பமானது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் எட்டுப்பேர் ஒரே நேரத்தில் வகுப்பில் இல்லாதது. ஆசிரியர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

நாங்கள் அவ்வேளையில் விளையாட்டில் தொலைந்துபோயிருந்தோம். மாணவர்கள் இல்லாத விவரம் தலைமை ஆசிரியர் வசம் கொண்டு செல்லப்பட்டது. அவரே ஆசிரியர்களை தேடச் சொன்னார். அவரும் தேடினார்.

சிறிது அலைச்சலுக்கு பின்னர் ஆசிரியர்கள் எங்களை கண்டுபிடித்தனர். ஒரு ஆசிரியர் எங்களை புளிய விளாரால் அடித்து இலுத்துச் சென்றார். அதனைக் கண்ட கணபதி வாத்தியார் ‘விடுங்கையா அந்த பயலுகல போய் அடிச்சுகிட்டு, இந்த வயசுல விளையாடாம பெறகு எந்த வயசுல விளையாடுவாங்க’.

பாவம்யா… பொடுசுக…

டேய் இங்க வாங்கடா… (கணபதி வாத்தியார்)

வெளையாடுறதுக்காடா ஒங்க ஆத்தா, அப்பன் வயலுல வேலைசெஞ்சு படிக்கவக்கிறாக லூசுபயலுகளா.. வெளயாட்டுல காட்டுற ஆர்வத்தை கொஞ்சம் படிப்புலயும் காட்டனும் தெருஞ்சுக்கங்க என்றார்.

மௌனம் எங்களை கட்டிப்போட்டிருந்தது…  இல்லை மௌனமான மாணவர்களைப்போல நடித்தோம்.

கணபதி வாத்தியார் தொடர்ந்தார்…

டேய் எத்தன பேருக்கு ஆறாம் வாய்ப்பாடு தெரியும், தெருஞ்சவங்க கைய தூக்குங்க என்றார். எனக்கு ஆறாம் வகுப்பு வாய்ப்பாடு ஐந்துவரைக்கும்தான் தெரியும், இருந்தாலும் கையை தூக்கிட்டேன்.

ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம் பல்லை இழித்துக் கொண்டிருந்தது.

பாத்தெங்களாடா கணக்கு வாத்தியார் பேரங்கிறத சொல்லிப்பூட்டான். ஒங்கலோட வெளையாடி திருஞ்சாலும் படிக்கிறதுல சரியா இருக்கானுள்ள அவனுடைய வெவரத்தனத்த பாத்தேங்கள்ள, நீங்களும் இருக்கங்களே… மக்கு…..க (என சொல்ல வாய் வந்தும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டார், யாரையும் மக்கு என அவர் எப்போதும் திட்ட மாட்டார், படிக்காத பையன்களையும், விவரம் வர்ரப்ப அவனுங்களா படிச்சுகிருவாங்க என்பதில் அவர். உறுதியாக இருந்தார்.

சிறிது அமைதியாய் இருந்தவர், பின் இவனுங்க எல்லாரோட தலையில கொட்டுப்பா என்றார் என்னை பார்த்து. எனக்கு ஏக சந்தோசம் பால்யத்தில் கொட்டுவது என்பது நிறைந்த சந்தோசம் தறும் செயலாக இருந்தது.

எல்லோருடைய தலையிலும் கொட்டினேன்.

நண்பன் ராஜாவின் தலையில் கொட்டும்போது, அவன் வாடி மாப்ள வெளியில வச்சுக்கிறேன் என்றான்.

சரிப்பா நீ ஆறாம் வாய்ப்பாடு சொல்லு என கணபதி வாத்தியார் கூறும்போதுதான் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

நடுங்கி கொண்டே வாய் பாட்டை சத்தமாக சொன்னேன் .

ஓரார் ஆறா.. ஈராறா பண்ணண்டா.. முவ்வாறா பதினெட்டா.. நலாறா இருபத்தி நாலா, ஐயாறா முப்பதா, ஆறாறா ஆறா றா.. ஆ.. ஆ.. என பஞ்சு மிட்டாயை போல இழுக்க ஆரம்பித்தேன்.

அ.. அப்படியா.. இதுதான் நீ படுச்ச லச்சணமா..

மதில் மேல பூனை போல என திட்டினார். அரை குறையாய் படிக்கும் மாணவர்களை கணபதி வாத்தியார் இவ்வாறுதான் திட்டுவார்.

சரி அப்ப இவனுக்கு பூசையை ஆரம்பிச்சுரவேண்டியதுதான், டேய் இவன் தலையில கொட்டுங்கடா என்றார்.நண்பன் ராஜா முதல் ஆலாய் இததாண்டா எதிர்பாத்தேன் மாப்புள என வசமாய் கொட்டினான்.

அன்றிலிருந்து ஆறாவது வாய்ப்பாட்டை நான் இன்றுவரை மறக்கவேயில்லை.

எல்லாம் கொட்டின் ரகசியம்……….

(நினைவுகள் மலரும்)


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube