பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் நல்ல படங்களை பார்க்க சேனல்களை திருப்பினால் அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் ஆடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நல்ல படங்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. இரண்டரை மணி நேரம் படம் பார்த்து இறுதியில் நமக்கு கிடைப்பது மனச்சோர்வுதான். இத்தகைய சூழ்நிலைகளில் மனது குறும்படங்களை தேடி சென்றது. குறும்படங்கள் விரைவில் முடியக்கூடியவை எந்த இடைவேளையும் இல்லை. நல்ல புரிதல்களை தரக்கூடியது .
சமீபத்தில் சலகெருது – குறும்படம் பார்த்தேன்…
காட்சிகள் இவ்வாறு தொடங்கியது…
உறுமி மேளத்தின் சப்தத்தோடு படம் தொடங்குகிறது சலகெருது விழா நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் மாடுகள் நிறைந்து உள்ளது. மனிதர்கள் காலில் சலங்கை கட்டி கொண்டு ஆடுகிறார்கள். தொலைதூரத்தில் மலைச்சாமி சலகெருதிற்காக வளத்த தன் மாட்டை தயார் செய்கிறான். மாடுகளுக்கு மாலை அனுவித்து சிறப்பு செய்கிறார்கள் பின் மாடுகளுக்கான போட்டி நடை பெறுகிறது புழுதிகள் பறக்க மாடுகள் சீறிக்கொண்டு ஓடுகின்றன. கல் முள் எல்லாம் கடந்து மாடுகள் சீறி பாய்கின்றன. இறுதியில் மலைச்சாமியின் மாடு வெற்றி பெறுகிறது. இதை பொறுக்காத மைனர்களின் ஆட்கள் மலைசாமியோடு சண்டை போடுகின்றனர். கைகலப்பு நடை பெறுகிறது பெரியவர் ஒருத்தர் தலையிட்டு சண்டையை களைத்து விடுகிறார். ஆனால் மைனரும் அவனுடைய ஆட்களும் மனதில் வன்மம் கொண்டு செல்கின்றனர்.
பின் காட்சி மலைச்சாமியின் வீட்டை சுற்றியே நடைபெறுகிறது. தன் மகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்கிறான் மலைச்சாமி. பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை பாண்டி (கண்டக்டர் பாண்டி) தன் நக்கலான பேச்சால் சில மணித்துளிகளே வந்தாலும் நம் மனதில் நின்று விடுகிறார்.
கல்யாணத்தை நடத்த கடைசியாக தான் ஆசையாக வளத்த மாட்டை விற்கிறான்.
மாடு வீட்டை விட்டு வெளியேறியவுடன் வீட்டே வெறிச்சோடி கிடக்கிறது. தன் குடும்பத்தில் இருந்த ஒரு நபரின் இழப்பாக அதை நினைகின்றனர். மாடை பிடித்து சென்ற தரகரின் வீட்டில் மாடு எதுவும் உண்ணாமல் இருக்கிறது. பின் இரவில் மாடு தன்னை ஆசையாக வளத்த மலைச்சாமியின் வீட்டை நோக்கி ஓடுகிறது. அந்த பின்னிரவில் மைனரின் ஆட்கள் மாட்டை பார்த்துவிடுகின்றனர் மாட்டை பின் தொடர்ந்து சென்று அடித்து கொன்று விடுகின்றனர். அந்த வாயில்லா ஜீவன் இறந்துவிடுகிறது. அதிகாலையில் இந்த விஷயம் கேள்விப்பட்டு மலைச்சாமி ஓடி வருகிறான் சாமியா வளத்த மாட்ட வித்தது நான் செஞ்ச பெரிய தப்புன்னு நினைத்து வருத்தபடுகிறான் அந்த மாட்டிற்கு இறுதி காரியம் நன்றாக செய்ய வேண்டுமென்று மாட்டை விற்றவரின் வீட்டை நோக்கி ஓடி வருகிறான். ஆனால் மாடு கசாப்பு கடைக்கு சென்று விடுகிறது. கண்களில் நீர் கசிய ஓடி செல்கிறான். ஆனால் மாட்டை வெட்டி கிலோ கணக்கில் வித்து கொண்டிருந்தனர். மலைச்சாமி தன் மாட்டிற்கு இந்த கெதியா என பெருங்குரலெடுத்து அழுகிறான். அந்த குரல் நம் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பி செல்கிறது…
திரையில் “கொன்றால் பாவம் தின்றால் பெரும் பாவம்” என்ற எழுத்துக்களோடு படம் முடிகிறது.
படத்தின் காட்சிகள் பால்ய கால நினைவுகளை மனதில் எழுப்பி விட்டது. அந்த இரவு இன்னும் என் மனதில் பெரும் வலியை தந்துகொண்டுள்ளது அது நாங்கள் ஆசையாய் வளர்த்த ஆடு, பெரும் வலியில் துடித்து இறந்த இரவு. ஆட்டை நாங்கள் ஆடாக வளர்க்கவில்லை அந்த ஆட்டை நேசித்து வளர்த்தோம் ஆனால் ஆடு பின்னிரவில் இறந்துவிட்டது. அந்த வலி இன்னும் அடி மனதில் உள்ளது. இந்த சலகெருது படமும் அந்த நினைவுகளை கிளப்பிவிட்டது. விசால் பரணிதரனின் இசை மனதை நெருடுகிறது எஸ்.முருகானந்தத்தின் சலகெருது. நம்மை சுற்றி உள்ள ஜீவன்களை புரிந்து கொள்ள ஒரு பாடம்.
இயக்கம்: எஸ்.முருகானந்தம்
17-அஜிஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6.
படத்தை பார்க்க விரும்புகிறவர்கள் முகவரியை தொடர்பு கொள்ளவும்
இணையத்தில் கொடுத்துள்ள சுட்டியில் தற்பொழுது இப்படம் கிடைப்பதில்லை,
வாசகர்கள் யாருக்காது, இப்படத்தின் சுட்டி (லிங்க்) கிடைத்தால் பகிரவும்.