நாம் காணும் காட்சிகளின் ஏதோ ஒரு நிகழ்வுதான் ஒரு படைப்பை உருபெற காரணமாய் அமைந்துவிடுகிறது. எண்ணற்ற எண்ண அலைகள் மனதில் வளர்ந்து, அவை ஒரு கதையாகவோ, கவிதையாகவோ, கட்டுரையாகவோ, நாவலாகவோ அழகாய் ஒரு பூச்செடியை  போல் பூத்து குலுங்கும் போது ஒரு படைப்பு முழுமை பெறுகிறது.

“தடை ஓட்டங்கள்” என்ற இந்த சிறுகதை தொகுப்பு சமூகத்தில் படிந்துள்ள பல அழுக்குகளை தெளிவாய் வாசகனுக்கு கொண்டு செல்கிறது. இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் நெல்லிக்கனியை போன்றது, வாசித்து முடித்த பின்னும் மனதில் இனிமை தந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது காட்சிகளாய் கண்ணில் தெரிகிறது.

“நிராகரிப்பின் வலியை உணர்ந்த ஒருவன், அந்த வலியை சுமந்து கொண்டு, தன் ஆளுமையை மறைத்து வாழ்க்கையை தன் குடும்பத்திற்காகவே தியாகம் செய்த தனது அன்னையை எண்ணி  ஏங்குகிறான்.

அந்த ஏக்கத்தின் தொடர்ச்சியாக ஒரு கடிதம் ஜனிக்கிறது, தன் அன்னையின் அருமை பெருமைகளை உணர்ந்த அவன் தன்னை மன்னிக்கும்படி, தனது தாய்க்கு கடிதம் வரைகிறான். அந்த கடிதத்தை வாசிக்கும் தாயின் பின்னோக்கிய எண்ணத்தில் கதை வளர்ந்து, இப்போது இயலாமல் இருக்கும் போது கிடைக்கும் சுதந்திரத்தை எண்ணி ஏங்குவதில் கதை நிறைவடைகிறது.

இந்த “தடை ஓட்டங்கள்” –  என்ற சிறுகதை எத்தனையோ  திறமை மிகுந்த பெண்களின் முகத்தை, குடும்பம் என்ற திரை மறைத்து விடுகிறது என்பதை அழாகாய் கூறுகிறது. கதையை வாசித்து முடிக்கையில் கண்கள் குளமாகிறது.

“வாழ்க்கை அன்பென்னும் அச்சாணியை” பற்றிக் கொண்டுதான் செல்கிறது. அந்த  அச்சாணி இல்லை என்றாள் வாழ்க்கை சக்கரம் நகராமல் சிதைந்து விடுகிறது. நாம் காணும் திரைபடத்திற்கு பின் எண்ணிலடங்கா மனிதர்களின் உழைப்பு உள்ளது என்பதையும், திரைதுறையில் வெற்றிபெறும் கனவுகளோடு எத்தனையோ நபர்களின் வாழ்க்கை சிதைந்துள்ளது என்பது இன்றளவும் இருக்கும் முழுமையான உண்மை.

ரத்னா, சதீஷின் வாழ்வும் இவற்றுள் அடக்கம், சதீஸ் என்ற திறமை மிகுந்த மகா கலைஞன் விருட்சமாய் வருவதற்கு முன்னரே நோய் வந்து வாடி விடுகிறான், அந்த கட்டத்திலும் அவனை விட்டு பிரியாமல் தன் காதல் என்ற அச்சாணியை பிடி தளராமல் செய்து அவனுடனே பயணிக்கிறாள் ரத்னா.

இருவேறுலகங்கள் இதுவென்றால்.. என்ற இந்த கதை திரைதுறையின் முழுமையான முகத்தை தெளிவாக காட்டுகிறது.

இந்துக்களின், இந்தியாவின் நாயகனாகவே கருதப்படும் பகவான் ராமனின் வாழ்வின் இறுதிகாலத்தை “சாத்திரம் அன்று சதி” என்ற அழகான சிறுகதையாய் கொடுத்துள்ளார். இது ஒரு மாறுபட்ட, தைரியமான முயற்சி.

தன்னை விடாமல் துரத்தும் ஏழ்மையிலும் தன் இறந்த தாயின் கனவை பூர்த்தி செய்ய கல்வியை தேடி தான் பணிபுரியும் வீட்டிலிருந்து வெளியேறும் செல்லியின் கதாபாத்திரம் மிகவும் வலி நிரம்பியது, எத்தனையோ குடும்பங்களில் இன்னும் இது போன்ற நிலை இருந்துகொண்டுதான் உள்ளது.

இந்த “கண் திறந்திட வேண்டும்” இந்த சிறு கதை இயக்குனர் பாலு மகேந்திரா அவரிகளின் கதை நேரத்தில் “நான் படிக்கணும்” என்ற திரைகதையாக வெளிவந்து வாசகர் வட்டத்தில் பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஓன்று.

குடும்பத்திற்காகவே தன் வாழ்வை அர்பணித்த தாய் (தடை ஓட்டங்கள்).. தன் காதலை போற்றி வாழும் ரத்னா (இருவேறுலகங்கள் இதுவென்றால்).. தன் தாயின் கனவை நிறைவேற்ற தான் பணிபுரியும் வீட்டிலிருந்து வெளியேறும் செல்லி .. (கண் திறந்திட வேண்டும்).. சமுதாயத்தில் நடக்கும் மீறல்களை எண்ணி ஏங்கும் ராதா (நெட்டை மரங்கள்).. சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது தன் மகனாக இருந்தாலும் அவனை காவல் துறைக்கு பிடித்து கொடுக்கும் வீரம் மிகுந்த பேச்சியம்மா (ஆத்தா).. என எத்தனையோ கதா பாத்திரங்களை ஆசிரியர் படைத்தது உலவ விட்டுள்ளார் ஆசிரியர் திருமதி. எம்.எ.சுசிலா அவர்கள்.

ஒரு தொகுப்பில் ஒரு சில கதைகள் நன்றாக இருந்தாலே பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது  போல் அந்த  தொகுப்பே சிறந்ததாக மலர்ந்து விடிகிறது.. ஆனால் இந்த தடை ஓட்டங்கள் என்ற இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் சிறந்ததாய் உள்ளது.

பெண்ணியக் கருத்துக்கள், சிந்தனைகள் தொகுப்பு முழுவதும் ஓங்கி ஒலிக்கின்றன. ஆசிரியர் பெண்ணிய கருத்துக்களிலும், போராட்டங்களிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அத்தகைய கதைகள் அனைத்தும் தொகுப்பிற்கு கிரீடங்களாக உள்ளன.

பெண் என்ற மகா சக்தியை இன்றளவும்  நமது சமூகம் ஒரு கவர்ச்சி பொருளாகவே பார்த்து வருகிறது, ஜனங்களுக்கு அதிகம் கிடைக்கும் வெகுஜன இதழ்கள் தங்களது பத்திரிக்கையில் பெண்களை மோகப் பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். தங்களது பக்கங்களில் அத்தகைய படங்களை இடுவதற்கு பதிலாக இத்தகைய போற்றத்தக்க ஆளுமை மிகுந்த பெண்ணிய படைப்பாளிகளுக்கு இடமளித்து அவர்களது படைப்புகளை பிரசுரித்தால் அவை மக்கள் மத்தியில் பரவலாக சென்றடையும்.

“கடவுள் தேடல்.. முடிவற்றது.  படைப்பு தேடலும் அப்படித்தான்”  காரணம் “எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்”. எனக்  கூறும் ஆசிரியர் திருமதி. எம்.எ.சுசிலா அவர்கள் மிகவும் போற்றுதற்குரிய இடத்தில் இருப்பவர்  என்பதை இங்கு கூறிக்கொள்வதில் எனக்கு ஐயமில்லை.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube