வெயில் ஏறிய பின்பொழுதில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினான் முத்து. அவனது நிழலும் அவனைப்பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களில் பதநீர்க் கடைகளும், தர்பூசணிக் கடைகளும் நிறைந்திருந்தன. வழக்கம் போல் வாகனங்கள் அதீதமான ஒலியை எழுப்பிக் கொண்டே சென்று கொண்டிருந்தன. சில மாதங்களுக்கு முன்பு இதே சாலையில்தானே குழப்பமான மன நிலையோடு அலைந்து திரிந்தோம். இப்போது மனதில் தெளிவு பிறந்திருந்தாலும் அப்போது வலியையும், சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த ஆத்மார்த்தமான உறவு சாலையோரமிருக்கும் இந்த வேம்புதானே என, வேம்புவைப் பற்றிக் கொண்டு தன் பழைய நினைவுகளை அசைபோடத் தொடங்கினான்.

அந்தப் பரபரப்பான சாலையைப் பார்க்கும் பொழுது அவன் ஆழ்மனதிலிருந்து நினைவுகள் மேலெழும்பி வரத்துவங்கின. இராணுவத்தில் சேர்வதற்கு முன்பு இதே சாலையில்தானே சைக்களில் அலைந்து கொண்டிருப்போம். அதோ அந்த தியேட்டரின் நேர் எதிரேதானே ஒரு வயதானவர் டீக்கடை வைத்திருந்தார். அந்த இடமே மாறிவிட்டதே, அவர் இப்போது எங்கே இருப்பார். என அவனது நினைவுகள் எழுப்பி விட்ட கேள்விகள் மனதினுள் நதியைப் போலக் கட்டற்று ஓடிக் கொண்டிருந்தது.

எந்த ஒரு திட்டமிடுதலும் இன்றி எடுக்கப்பட்ட விடுமுறை, அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை எனத் தொலைபேசி வந்ததும் உடனே ஆர்மி கமாண்டரை தொடர்பு கொண்டு எமர்ஜென்ஸியாக விடுமுறை கேட்டுக் கிளம்பி வர வேண்டிய நிர்பந்தம். எந்த ஒரு உறவுப் பின்புலமும் இன்றித் தனித்திருக்கும் அன்னைக்கு முத்து ஒருவனே துணை.

முன்பு பணி புரிந்த அலுவலகம் இருந்த இடத்திற்கு வந்திருந்தான் முத்து.. ஆனால் அந்த அலுவலகம் இருந்த சுவடே அழிக்கப்பட்டு, அங்கு பிக்பஜார் சாப்பிங்காம்ப்ளக்ஸ் எழுப்பப்பட்டிருந்தது. சாலையோரம் இருந்த வேம்பு மட்டுமே இருந்தது. முன்பிருந்ததை விடப் பெரிய மரமாகவும், அடர்ந்த கிளைகள் கொண்டதாகவும் இருந்தது வேம்பு. வேம்புவின் சருகுகள் உதிர்ந்து நெடுந்தூரம் வரை விரவியிருந்தது. முத்து தனது பழைய நினைவுகளோடு வேம்புவை ஸ்பரிசித்தான். வேம்புவை சுற்றி போடப் பட்டிருந்த திண்ணை இப்போது இல்லை. வேலை முடிந்தவுடன் அப்பாடா என வேம்புவின் கீழ் அமர்ந்து கொண்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலையை நோக்கும் பொழுது எண்ணற்ற புரிதல்கள் மனதில் குவியுமே, என்ற நினைவுகளை எழுப்பிக் கொண்டு நெருங்கிய உறவாய் வேம்பு மட்டுமே இருந்தது. அந்த சாப்பிங்காம்ப்ளக்ஸின் கீழ் உள்ள அரிசிக் கடைக்குச் சென்று விசாரித்தான்.

“தம்பி அந்த ஆபீசு மூடி மூனு வருசமாச்சுய்யா’’ எனக் கூறிவிட்டு தனது பணியில் மூழ்கிவிட்டார் கடைக்காரபெரியவர். அவரது கரங்கள் படுவேகமாக பொட்டலங்களை மடித்துக் கொண்டிருந்தது.

சுசிலா அக்காவை எப்படிப் பார்ப்பது, அம்மாவுக்கு வந்த அந்தப் புற்றுநோய் , அதே புற்றுநோய்தானே அந்த அக்காவுக்கும் வந்திருந்தது. அக்காவிற்கு அப்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்களே என்ன சிகிச்சை,, இப்போது அக்கா எப்படியிருக்கிறாள், எந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டாள் என்ற விபரங்களை அக்காவிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம் என வந்தவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

எப்போதும் ஆறுதல்   அளித்துக் கொண்டிருக்கும் வேம்புவைப் பற்றிக் கொண்டு, என்ன செய்வது என்ற யோசனையில் லயித்திருந்தான் முத்து.

தோட்ட வேலைகள் செய்தும், சூளையில்  செங்கல் அறுத்தும் அம்மா தனக்காக்க கஷ்ட்டப்பட்ட நினைவுகள் வந்து , முத்துவின் கண்கள் குளமாகியது. தன்னைத் தன் சொந்தக் காலில் நிற்கச் செய்த அன்னையை நன்றாகக் காலம் பூராவும் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்த அவனது கனவுகள் இப்போது காற்றில் அலையும் எருக்கம் பூவைப் போல் அலைக்கழிக்கப் படுவதை அவனது மனம் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

எண்ணற்ற முகங்கள் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். எத்தனையோ மருத்துவமனைகள்  புற்று நோய்க்கு சிகிச்சை அளித்தாலும், அம்மாவைக் காப்பாற்றியாக வேண்டும், நல்ல மருத்துவரிடம் அவரைகொண்டு சேர்க்க வேண்டும் என்ற அதீதமான பாசத்தால் முத்து தடுமாறிக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவனுக்கு பாக்யலட்சுமி அக்காவின் நினைவு வந்தது, பாக்யலட்சுமி அக்காவும், சுசிலா அக்காவும் நெருங்கிய சிநேகிதிகள். பாக்யலட்சுமி அக்கா காய்கறிவாங்கக் கடைக்கு வரும்பொழுதெல்லாம், சுசிலா அக்காவைக் காண அலுவலகம் வந்து, அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள், பாக்யலட்சுமி அக்கா, முத்துவிடமும் பாசமாகப் பேசுவாள்.

அக்கா மெழுகுவர்த்தி செய்வது, சோப்பு தயாரிப்பது என சிறுதொழில் செய்து வந்தாள் ஆதலால் அக்காவிற்கு அடிக்கடி கடிதங்கள் வந்து கொண்டேயிருக்கும்.  ரோஜாத் தெருவில் இருக்கும் பாக்யலட்சுமி அக்காவின் வீட்டிற்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், அக்கா பாசமுடன் தேநீர் தருவாள். அந்தத் தேநீரின் சுவை அற்புதமாக இருக்கும், பாக்யலட்சுமி அக்காவின் வீட்டிற்கு முன் எப்போதும் பசுமை நிறைந்திருக்கும். அக்கா வளர்க்கும் ரோஜா செடிகளில் பூத்த மலர்களால் அந்த தெருவே மணமணக்கும் என்ற நினைவுகளை சுமந்து கொண்டு ரோஜாத் தெருவை நோக்கித்தனது பயணத்தைத்துவங்கினான் முத்து.

தெருவின் துவக்கத்திலேயே கணேசன் அண்ணனின் டீக் கடையிருக்குமே , அந்தத் தெருவைக் கடக்கும் ஒவ்வொரு முறையும். தம்பி டீக் குடிச்சுட்டுப் போப்பா என பாசமுடன் அவர் கேட்கும் போது தட்டாமல், அவரோடு உரையாடிக் கொண்ட்டிருந்தது ஒரு சுகமான அனுபவம். கணேசன் அண்ணன் ஒரு இலக்கிய விரும்பி. சிரிப்புத் துணுக்குகளை அள்ளி வீசுவார். அவர் பேசும் அழகே அனைவரையும் கவர்ந்துவிடும். கனத்த மனதோடு சென்றால் தன் ‘டீ’ என்னும் ஊசியால் மனதை சரி செய்துவிடுவார்.

ஒரு தடவ பள்ளிக் கூடத்துல “T” ன்னு எழுதத் தெரியாம வாத்தியார் கிட்ட அடி வாங்கிட்டு வந்தவன்தான். அதுக்கப்புறம் பள்ளிக் கூடத்துப் பக்கத்துல எட்டிக் கூட பாக்கல . இப்ப பாரு தெனமும் எத்தன டீ போடுறேன் என தன் வலிகளையும் , சிரிப்புகளாய் மாற்றத் தெரிந்தவர்.

அந்த அன்பான முகங்கள், பாசத்தை மட்டுமே காட்டிய முகங்கள்..கஷ்டத்தில் கரைந்த போது ஆறுதல் சொன்ன முகங்கள் எனப் பழைய நினைவுகளில் மிதந்தபடியே நடந்து சென்றான் முத்து. அக்காவின் வீடு இருந்த தெருவிற்கு வந்துவிட்டான். நல்ல வேளை டீக்கடை இருந்தது, அண்ணனும் மறக்காமல் நினைவு வைத்திருந்தார்.

கணேசன் அண்ணனும், முத்துவும் சேர்ந்து பாக்யலட்சுமி அக்காவின் வீட்டிற்கு சென்றனர். எப்போதும் போல் ரோஜாக்கள் பூத்திருந்தது. காலிங் பெல்லை அழுத்திய பின் சிறிது தாமதமாகத்தான் அக்கா கதவைத் திறந்தாள்.

’ம்ம்..கணேசனா கூட யாரு’….

’மறந்தாச்சா , கொரியர்ல வேல செஞ்சான்ல நம்ம முத்துப் பய ’- என அண்ணன் கலகலப்பாக அக்காவுக்கு முத்துவை நினைவுபடுத்த அக்கா புரிந்து கொண்டு வீட்டினுள் அழைத்துச் சென்றாள்..

’தம்பி மிலிட்ரியில சேந்தப்பரமும் , நம்மள மறக்காம இருக்கே. . பரவாயில்ல ..’

’அம்மா எப்படிப்பா இருக்காங்க’என பாக்யலட்சுமி அக்கா கேட்டதற்கு , கணேசன் அண்ணன் , முத்துவின் வலிகளைப் புரியவைத்தார்.

சிறிது மௌனத்திற்குப் பின் ,..

’கர்ப்பப் பையிலே புற்று நோய் வந்துருக்கு, நம்ம ஊர் பக்கத்துல இருக்குற டவுனு ஆஸ்பத்திரியில அல்ட்ராசவுண்ட் எடுத்துப் பாத்த டாக்டரு, இனி இங்க ட்ரீட்மென்ட் செய்ய முடியாது, சென்னையில இருக்குற ஆஸ்பத்திரியில கொண்டுபோய்ப் பாருங்கன்னு சொல்லியிருக்காங்க’

’அதுக்கடுத்துதான் மிலிட்ரியில இருக்குற எனக்கு தகவல் சொன்னாங்க,

எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல, எனக்கு இருக்குற ஒரே உறவு என் அம்மாதான், அதனால அவங்களக் கண்டிப்பாக் காப்பாத்தியாகனும், அப்பதான் சுசிலா அக்காவுக்கும் கொஞ்சம் வருசம் முன்னாடி புற்றுநோய் வந்த , ஞாபகம் வந்தது, அதனாலதான் அக்காவ பாத்து மேற்கொண்டு ட்ரீட்மென்ட் எப்படி, எந்த டாக்டரிடம் காண்பிச்சா வேகமா குணமாகும் என கேட்டு தெரிஞ்சுக்கலாமுன்னு அக்காவ தேடி வந்தேன், அங்க ஆபீஸே இல்ல .. ’ எனத் தனது வலிகளை வார்த்தைகளாய்க் கொட்டித் தீர்த்தான் முத்து.

’தம்பி அந்த ஆபீஸ்தான் மூடி ரொம்ப நாளாச்சேப்பா, ஆனா சுசிலா அக்கா நல்லாதா இருக்கா, சென்னையிலதான் இருக்கா நான் அவ போன் நம்பர், அட்ரஸ் கொடுக்குறேன். நீ அவள போயி பாரு கண்டிப்பா அம்மாவ நல்ல ஆஸ்பத்திரியில காட்டி காப்பாத்திடலாம் ’ என்றாள் பாக்யலட்சுமி அக்கா.

சோகங்களால் சோர்ந்து போயிருந்த அவனது மனதிற்கு , அக்காவின் ஆறுதலான வார்த்தைகளைக்கேட்டபின் வாழ்க்கையின் மீது, மனிதர்களின் மீது சிறிது நம்பிக்கை முளைவிட்டது. சுசிலா அக்காவின் முகவரியைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது கிராமத்தை நோக்கி, தன்னை வளர்த்த அன்னைக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையைக் கொடுக்க அவசரமாக நடந்தான். அவன் முகத்தில் முன்பிருந்த பயமும், கலக்கமும் மறைந்திருந்தது.

பேருந்துப் பயணத்தில் நகரும் பனைமரங்களைக் காணும் பொழுதெல்லாம் முத்துவிற்கு அய்யாவின் ஞாபகம் வந்துவிடும். அய்யா பனைமரம் ஏறுவார். அதுதான் அவரது தொழில் , அப்படிப் பனைமரம் ஏறும்போது அய்யா கால் இடறி கீழே விழுந்து இறந்த நினைவு அவன் அடிமனதில் வேர் ஊன்றியிருந்தது.

தனது கிராமத்திற்குப் பேருந்து வந்து சேரவும்,மழை தூரவும் சரியாக இருந்தது, நனைந்து கொண்டே , வீடு போய்ச் சேர்ந்தான். அந்த ஓடு வேய்ந்த வீட்டில் தனித்திருக்கும் அம்மாவுக்குத் துணையாக கனகு அக்கா இருந்தாள்.

’வாப்பா..’ என அக்கா அழைத்தாள் , அம்மா வயிறு வலிக்குதே என அழுது கொண்டிருந்தாள். முத்து அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு, அம்மாவுக்கு ஆறுதல் கூறினான்.

’அம்மா எல்லாம் சரியாயிடும் , நாளைக்கே சென்னைக்கு கிளம்புறோம், அங்க, சுசிலா அக்காவ பாத்து நல்ல டாக்டருக்கிட்ட கொண்டு போயி காட்டுறேம்மா, எல்லாம் சரியாயிடும்’. எனத் தழுதழத்த குரலில் பாசத்தோடு நம்பிக்கையூட்டுகிறான் முத்து..

வெளியில் மழை வேகம் பிடித்திருந்தது..

வாசல் வழித் தெரியும் தெருவிளக்கின் ஒளியை பார்த்துக் கொண்டே , தனது அன்னையை மடியில் தூங்க வைத்துக் காலத்தைக் கடந்து கொண்டிருந்தான் முத்து..

அதிகாலை புலர்ந்ததும் டவுனுக்குப் போகும் முதல் வண்டியைப் பிடித்து, அங்கிருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் பயணித்தனர் தாயும், மகனும். நோய் ஏன் வருகிறது, நோய் வரும் பொழுதுதான் உறவுகளின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ள இயலுமா, என்ற எண்ண அலைகள் முத்துவின் மனதில் அடித்துக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் வலியால் தூங்காமல் முனகிக் கொண்டிருந்த அம்மா அசந்து தூங்குவதைக் கண்டு பாசத்தோடு அம்மாவின் கேசத்தை வருடி விட்டான்.

சென்னை வந்ததும் சுசிலா அக்காவின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, அக்காவின் முகவரியைக் கண்டறிந்து சுசிலா அக்காவின் வீடு வந்து சேர்ந்தனர். அக்கா முன்பைவிட குண்டாகவும், ஆரோக்யமாகவும் இருந்தாள்.

அம்மாவிற்கு என்ன நோய் என கேட்டாள், கர்பபையில் புற்றுநோய் வந்துள்ளதாக டாக்டர் கூறுகிறார் என வருத்தமாக சொன்னான் முத்து,

’பயப்படாதீங்க, இங்க நல்ல டாக்டருங்க இருக்காங்க,  குணப்படுத்திடலாம், நாளைக்கே டாக்டருக்கிட்ட போறோம் ’ என அக்கா கூறியதைக் கேட்ட போது முத்துவிற்கு ஆறுதலாக இருந்தது.

மறுநாள் காலையில் அக்கா… டாக்டர் மல்லிகா அவர்களிடம் அழைத்துச் சென்றாள்…

டாக்டர் முத்துவின் அம்மாவை பரிசோதனை செய்து விட்டு , முத்துவை அழைத்தார்.

’பயப்படுறதுக்கு இதுல எதுவும் இல்ல,.. ரீசன்ட்டா எவ்வளவோ பெசலிட்டீஸ் வந்துருக்கு.

பேசன்ட்டுக்கு வந்துருக்குற நோயோட பேரு Cervix Cancer (Uterus) அம்மாவுக்கு இது ஆரம்பக்கட்டம்தான், இந்த நோயை Radiotherapy, Surgery, Chemotherapy ன்னு பல வகையான ட்ரீட்மெண்ட் கொடுத்து சரி செஞ்சிடலாம்.ஆனா அவங்களுக்கு தைரியத்தை நீங்கதான் அதிகமாக்கொடுக்க வேண்டியது வரும். ஏன்னா நாங்க மருந்துகளைத் தந்தாலும், மனசுல நம்பிக்கை இருந்தாதான் , நோயில இருந்து மீண்டு வர முடியும்.

மார்பகம், கர்ப்பப்பை வாய்,ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் –ன்னு உடம்புல எந்த பாகத்துலையும் புற்று நோய் வரலாம், இதைக் கண்டுபுடிக்கிறது கொஞ்சம் சிரமமான காரியமா இருந்தாலும் சில சோதனை மூலம் கண்டுபுடிச்சுடலாம். நாப்பது வயசுக்கு மேல எல்லாரும் கண்டிப்பா புற்று நோய் பரிசோதனை செஞ்சுக்குறது நல்லது என டாக்டர் மல்லிகா கூறியபோது முத்து முற்றிலும் கவலைகளைத் துறந்திருந்தான். தொடர்ந்து எடுத்துக் கொண்ட ட்ரீட்மென்டினால், சில மாதங்களில் அம்மா ஆரோக்யமான பழைய மனுசியாக உருமாறினாள்.

அம்மாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்று கனகு அக்காவிடம் நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு, சக மனிதர்கள் மேல் அன்பும், கருணையும் கொண்டிருக்கும் மனித முகங்களை எண்ணிக் கொண்டே நகரத்திற்கு வந்துவிட்டான்.” தம்பி..  என்னப்பா ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்க”.., என்ற அரிசிக் கடைப் பெரியவரின் ஆத்மார்த்தமான விசாரிப்பினால் சுய நினைவுக்கு வந்த முத்து, ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் உதிர்த்துவிட்டு, வேம்புவை நீங்கி மௌனமாக வெயில் ஊறித் திரியும்சாலையை நோக்கி நடந்தான்.

4 Responses so far.

  1. Nesam says:

    சிறுகதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  2. Narayanan says:

    நல்ல கதை ……….

  3. பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  4. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube