மனித வாழ்வின் ஆதாரமாய் சாட்சியாய் இருப்பவை  கடிதங்கள். ஒவ்வொரு  முறை, கடிதம் எழுதும் போது வாழ்கையை, காலத்தை பதிவு செய்கிறோம். இத்தகைய சிறப்பு பெற்ற கடிதத்தின் முக்கியத்துவத்தை நாம் இப்போது முழுமையாய் இழக்கும் நிலையில் உள்ளோம்.

இப்படியே சென்றால்  இனி வரும் புதிய தலைமுறைகளுக்கு கடிதம் என்ற ஓன்று இருந்தது என்பதே தெரியாமல் போய்விடும். இப்பொழுதெல்லாம் குழந்தைகளின் கையில் விளையாட்டு பொருளாய் கை பேசிகளை   திணித்து விடுகிறோம்.  அப்படி இருந்தால் எப்படி உய்க்கும் உலகம்.

கைப்பேசியில்  நாம் பேசும் வார்த்தைகள் அழிந்து விடுகிறது. ஆனால் கடிதத்தில் வரைந்த வார்த்தைகள் நினைவுகளிலும் நெஞ்சினிலும் பதிந்துவிடுகிறது. ஒவ்வொரு கடிதமும் உண்டாக்கும் உணர்வுகள் சொல்லில் அடங்காதவை.

நான் பள்ளியில்  படிக்கும் போது நாகயசாமி என்ற நண்பன் கிடைத்தான். ஒரு கோடை விடுமுறையில் போஸ்ட் கார்டில் அவன் எழுதிய கடிதம் எனக்கு கிடைத்தது. அந்த கடிதம்தான் முதன் முதலாக எனது பெயரிட்டு வந்தது. அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 அவன் நட்பை அன்று மிக நெருக்கமாக உணர்ந்தேன்.  எனது பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளதே என எண்ணி எண்ணி பெருமை கொண்ட நாள் அது. அந்த கடிதத்தை எனது சட்டை பைக்குள்ளேயே வைத்து கொண்டு பல நாட்கள் சுற்றி அலைந்துள்ளேன்.

வருடம் வருடம் வரும் எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் பொங்கல் திருவிழாவுக்கு சொந்தங்களை கடிதத்தின் வாயிலாக அழைப்பார் என் தாத்தா. அவர் பாசத்தோடு கடிதத்தை தொடங்குவதும் நிறைவு  செய்வதும் அழகாய் இருக்கும்.

தாத்தாதான் என்னை முதன் முதலாக கடிதம் எழுத சொன்னார் அது தாத்தாவின் அக்காவிற்காக எழுத பட்ட கடிதம்  அவர் சொல்ல சொல்ல நான் கடிதத்தில் எழுதினேன். பின் இறுதியில் தாத்தா வாங்கி வாசித்து பார்க்கும் பொழுது எழுத்துப்பிழை நிறைந்திருந்தது.

அவர் சிரித்து கொண்டே “லூசு பயலே இப்படியா எழுதுறது என கடிந்து கொண்டார் “.

பணியில் சேர்ந்த பின் கிடைத்த தனிமையில் நிறைய கடிதம் எழுதினேன், எனக்கும் பல கடிதங்கள் வந்தது அந்த கடிதங்களை இன்னும் சேகரித்து வைத்துள்ளேன்.

பிரிவின் வலியை தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்த தருணங்களில் கடிதங்கள்தான் எனக்கு ஆறுதல் அளித்தது. மனம் தொய்வுரும் வேளையில் எல்லாம் மீண்டும் மீண்டும் பழைய கடிதங்களை எடுத்து வாசிப்பேன் அந்த கடிதங்கள் என்னை அரவணைத்து என் வலியை ஒவ்வொருமுறையும் குறைத்து கொண்டு இருந்தது. கடிதம் எழுதும் ஒவ்வொரு முறையும் மனம் சந்தோசம் அடைகிறது. மனதில் இருந்து ரம்மியமான வார்த்தைகள் மழையாய் ஜனித்து கடித கடலில் இணைகிறது. கைபேசிகளின் ஆதிக்கம் தலை தூக்கும் இவ்வேளையில் கடிதத்தின் முக்கியத்துவத்தை நாம் சிறுது சிறிதாய் மறந்து வருகிறோம்.

இலக்கியத்திலேயே கடித இலக்கியம் என ஓன்று இருந்துள்ளது. கல்லீல் ஜிப்ரான் எழுதிய கடிதங்கள், புதுமைபித்தன் எழுதிய கடிதங்கள் என அவர்கள் எழுதிய கடிதங்களின் வாயிலாக அவர்களது வாழ்க்கையை மிக அருகில் சென்று உணர்ந்து வருகிறோம்.

திரைபடத்தில் வரும் கடிதத்தை மையமாக வைத்து எழுதிய பாடல்கள் என் மனம் கவர்ந்தவை. ஓர் பழைய படத்தில்  நடிகர் ஜெய்சங்கர் ஒரு காதல் பாடல் பாடுவார் ” நான் அனுப்புவது கடிதம் அல்ல, உயிர் என தொடங்கும் அந்த பாடல்…

திரு வைரமுத்து எழுதிய ஒரு பாடல் எனக்கு எப்போதும் சந்தோசத்தை தந்து கொண்டே இருக்கும்.

காதல் கடிதம் தீட்டவே
மேகமெல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்… – என்ற
அந்த பாடல் காதலில் கடிதம் எவ்வாறு செயல்பட்டது என்பதை தெளிவாய் கூறுகிறது.

சில நாட்கள் முன் என் தோழியிடம் நீ இனிமேல் அடிக்கடி எனக்கு கடிதம் எழுது என ஆவலோடு  கேட்டேன்.

.. ம்ம் அதெல்லாம் முடியாது பேசுனா பேசு பேசாட்டி போ என்றாள். இதுதான் இன்றைய சமூகத்தின் நிலை.

கடிதம் நம் வாழ்வின் சாட்சி, அழிந்து வரும் கடிதத்தின் முக்கியத்துவத்தை நாம் அழியாமல் காப்பாற்ற வேண்டும். இது ஒரு தனி நபரால் இயலாத காரியம். அனைவரும் ஒத்துழைத்து, ஒன்றாய் சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் மனதிலும் கடிதத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் எடுத்து கூற வேண்டும்.

கடிதம் எழுதுதல் எனபது ஒரு பண்பாடு, மொழியின் வளர்வு நிலைக்கும், உணர்வுகளின் வெளிப்பாடு நிலைக்கும் இதுதான் சிறந்த ஊடகம். அவற்றை அழிவில் இருந்து காப்பாற்றுவது நமது கடமையாகும்.

தெரு நாடகங்கள் போட வேண்டும், மக்கள் கூடும் அணைத்து இடங்களிலும் கூச்சத்தை தூக்கியெறிந்து விட்டு கடிதத்தின் இன்றியாமையை பற்றி பேச வேண்டும் பேசுவதன் வாயிலாகதான் கடிதத்தின் அழிவை சரி செய்ய முடியும்.

அதுதான் கடிதம் என்ற மகத்தான ஒரு ஊடகத்திற்கும் நாம் செய்யும் நன்றிக் கடன்.

One Response so far.

  1. Srikanth says:

    உண்மை நண்பரே!


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube