மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் ஓன்று வீடு – கல்யாணம் பண்ணி பாரு வீட கட்டி பாரு என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழிவழக்கு. அந்த மொழியின் அர்த்தத்தை இந்த திரைப்படமும், வாழ்க்கையும் எனக்கு கற்று கொடுத்த கற்பிதங்களும் மனதில் எண்ண அலைகளை எழுப்பிவிட்டு சென்றது. இந்த பத்தியை எழுதும்போது அஸ்ஸாமில் பனிமழை பொழிந்து கொண்டுள்ளது. சிறிய நடுக்கத்தோடு பின்னிரவில் பத்தியை எழுதி கொண்டு உள்ளேன். நான் கடந்து வந்த வீடு கட்டுதலின் கஸ்ட்டமும், புரிதலும்தான் மனதில் எழுந்து நின்றது. வீடு திரைபடத்தில் ஒவ்வொரு காட்சியும் கொண்டாடி மகிழலாம் அப்படி ஒரு அழகான திரைக்கதை அழுத்தமான பதிவு.

அந்த படத்தில் கே.எ.சொக்கலிங்க பாகவதரும், அர்ச்சனாவும், இந்துவும், வீடு தேடி அலையும் காட்சிகள் நெரிசல் மிகுந்த நகர் வெளியில், வழி எதுவும் தெரியாமல் பிழைப்பிற்காக குடும்பத்தோடு அலைந்து திறியும் அப்பாவி ஜனங்களின் முகங்களை கண் முன் கொண்டு வருகிறது. சொந்த வீட்டில் இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் இந்த இரண்டிற்கும் உள்ள வலியை நான் உணர்ந்துள்ளேன். இந்த திரைபடத்தில் பாகவதர் சொல்லும் படியாக ஒரு டயலாக் வரும் இப்ப எல்லாம் தங்கத்துக்கும், நிலத்துக்கும் தாமா வெலஅதிகம் என்பார் தன் பேத்திகளிடம். ஆம் அவர் சொன்னது சத்தியமான வார்த்தைகள்தானே தங்கத்திற்கும், நிலத்திற்கும் மனிதர்கள் போட்டி போட்டு கொண்டு நாயாய் அதன் பின்னே அலைகிறோம், ஆனால் அவையும் நம்மை அலையை வைக்கிறது காற்று அலைகழிக்கும் தூசியை போல. வீடு திரைபடத்தில் இளையராஜா கொடுத்துள்ள பின்னணி இசையில் மயங்கி திளைத்துள்ளேன். காதல், சோகம்,தேடல் இவை அனைத்திற்கும் அழகாக இசை அமைத்துள்ளார்.

ஒவ்வொரு இசையும் அற்ப்புதம். பின்னிரவில் இரவில் இசையின் ஸ்பரிசத்தை அனுபவித்து பருகிகொண்டே மனது சந்தோஷத்தில் லயித்து இருந்தது. திரைபடத்தில் வீடு தேடி அலையும் போது ஒருவீட்டின் உரிமையாளர் கூறுவார் நீங்க nonveg (நான்வெஜ்) கூட சாப்பிடலாம் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ” என்று.. அந்த காட்சி எனது மனதில் ஒளிந்திருக்கும் பழைய நினைவை எழுப்பி விட்டது. சென்னையில் வாடகை வீடு பிடிப்பதென்பது சாதாரண விசயமில்லை, அப்படி வீடு கிடைத்தாலும் பெரும்பாலும் வீட்டின் உரிமாயாளர் அவர் வீட்டு நாயுக்கு குடுக்கும் மரியாதையை கூட வீட்டில் குடி இருப்பவர்களுக்கு குடுப்பதில்லை.

என் அண்ணனின் வீடு சாலிகிராமத்தில் இருந்தது அந்த வீட்டிற்குள் எப்போதாவது செல்லும்போதே வீட்டின் உரிமையாளர் ஏதோ வேற்று கிரக வாசி உள் நுழைகிறான் என்ற எண்ணதோடு தான் பார்ப்பார். அவரின் பார்வை, அக்னியை கடந்துதான் ஒவ்வொரு முறையும் மாடியில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு செல்ல வேண்டும். சில தினங்களுக்கு பிறகு நீங்க நான்வெஜ் எல்லாம் சாப்பிட கூடாது என்றார். என்ன சார் இப்படி சொல்றீங்க உங்க கிட்ட கேட்டுட்டு தானே குடி வந்தோம் என்றதற்கு, நான் சொல்லுறது மாரி இருந்தா இருங்க இல்லீன்னா நடைய கட்டுங்கயா என்றார். அவருக்கென்ன இவனை ஆயிரம் பேர் வீடின்றி அலைகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் நமக்கோ சென்னையில் வீடு கிடைப்பதே கஷ்ட்டமான காரியம். இப்படி கிடைத்த வீட்டை ஏன் விடுவானேன் என நினைத்துகொண்டு உணவு பழக்கத்தையே மாற்றிக்கொள்ள வேண்டி இருந்தது.

வீடு படத்தில் கஷ்ட்டப்பட்டு லோன் வாங்கி , அங்கும் இங்கும் கடன் பெற்று வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் காட்சி ஓன்று இருக்கிறது. அப்போது பின்னணியில் இளையராஜாவின் வயலின் சப்தம் அந்த சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கும். அந்த காட்சி சில வருடங்களுக்கு முன் கிராமத்தில் எங்கள் வீடு கட்டிய நினைவுகளை கிளர்ந்து எழுப்பியது. வீடு கட்டுதலின் வலியை அந்த வீட்டுக்காரன் மனதில் சுமந்து கொண்டேதான் உள்ளான். யாராவது ஒருவர் பரவாயில்லப்பா கஷ்ட்டப்பட்டு ஒரு நல்ல லட்சணமான வீட கட்டிட்டயே என கூறும்போது அவன் அடையும் களிப்பு சொல்லில் அடங்காதவை. நாங்கள் வீடு கட்டும்போதும் படத்தில் வருவது போன்ற ஒரு நம்பிக்கை தூரோகி காண்ட்ராக்டர் எங்களையும் அழ வைத்து விட்டான். மண் அடிப்பதிலேயே சில ஆயிரங்களை சாப்பிட்டுவிட்டதை கண்டு கொண்ட பின்னர், அவனை விலக்கி விட்டு சுயமாகவே கொத்தனார்களை வைத்து வீடு கட்டி முடித்தோம்.

படத்தில் முருகேசன் தாத்தாவாக வரும் சொக்கலிங்க பாகவதர் மனமெங்கும் வலியை நிரப்பிவிட்டு சென்று விடுகிறார். அவரை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாத்தாக்களின் நினைவு கண்டிப்பாய் வரும் என நினைக்கிறன். அந்த முதுமையின் வலியை அவர் உணர்ந்து நடித்திருக்கிறார், நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார் எனதான் கூற வேண்டும்.

பாலு மகேந்திரா என்ற ஒரு மாகா கலைஞனின் பார்வையில் மனித சமுதாயம் அன்றாடம் கடக்கும் இந்த நிகழ்வை, அற்புதமாக திரைக்கதை அமைத்து நமக்கு படமாக காண்பித்து உள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்த்தேன் சினிமாவை நேசிக்கும் இளைய சமுதாயத்திற்கு இந்த படம் ஒரு பாடமாக இருந்துகொண்டுள்ளது.

(*புதிதாக கட்டிய வீட்டிற்கு சொக்கலிங்க பாகவதர் ஆசையோடு வந்து பார்த்துவிட்டு படியில் அமரும்போது, படத்தில் முக்கிய குறியிடான மெட்ரோ வாட்டர் போர்ட் அங்கே இருப்பதை நமக்கு காண்பிகிறார்.

*தாத்தா தன் பேத்திகளுக்காக ஆசையாய் சேர்த்து வைத்த பணத்தை, மரண பயம் வந்த ஒரு வெயில் ஏறிய நாளில் இந்த பணத்தை தான் உயிர் நீத்த பிறகு இருவரும் சமாமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என நோட்டில் எழுதி வைக்கிறார். பின் தன் மனைவியின் தாலி கொடியையும் இருவரின் திருமணதிற்கு பயன்படுத்தி கொள்ளும் படியும் எழுதி வைக்கிறார் பின்பொரு கஷ்ட்டமான சூழ்நிலையில் பண்ணதை வீடு கட்டுவதற்காக எடுத்து கொடுக்கிறார். இறுதியில் தாத்தா இறந்த பின் அர்ச்சனா நோட்டை பார்த்து படிக்கும் காட்சியில் முதலில் எழுதிய பண பங்கீடு அடிக்க பட்டிருக்கும்.

இப்படி இந்த படத்தில் பல காட்சிகளை கூர்ந்து பார்க்கும் பொழுது இயக்குனரின் திறமையை அறிந்துகொள்ளலாம்)

இந்த படத்தில் என் மனதில் நிலையாய் நின்றுகொடிருப்பிவர் கே.எ.சொக்கலிங்க பாகவதர்தான். அவரின் உழைப்பு உயர்ந்தது. அதற்கு ஈடு தர எதுவுமில்லை ஆனால் அவ்வளவு முதிர்ந்த வயதிலும் நடித்த அவருக்கு திரையுலகம் கொடுத்தது என்ன என்று பார்க்கும் போது மனதில் எண்ணற்ற கேள்விகள் எழுந்து நிற்கிறது?

One Response so far.

  1. Spike says:

    Aricltes like this just make me want to visit your website even more.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube