கட்டுரை ஆசிரியர் திரு.பா. கிருஸ்ணன் (தினமணி)

 

தில்லியை விட்டுப் போக மறுத்தேன்.. 

 

என் வேர் என்னவோ தமிழகம்தான், சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பத்தில் 1931ம் ஆண்டு மே 20ம் தேதி பிறந்தேன். பெரியப்பா சோமசுந்தர ஐயர் வேலூர் நகர சபையின் சேர்மனாக இருந்தார். பள்ளி முடித்த பிறகு, வேலூர் ஊரிஸ் கல்லூரியில், இண்டர்மீடியட் படிப்பைப் பூர்த்தி செய்தேன். அங்கு தமிழ்ப் பற்றுக்கு வித்திட்டவர் யோகசுந்தரம் என்ற ஆசிரியர்.

தில்லி மத்திய செயலகத்தில் சரித்திர ஆய்வுத் துறையில் ஆய்வாளராக இருந்த கே.என்.வி சாஸ்திரி என்பவருக்கு உதவியாளர் தேவைப்பட்டதால், தில்லியிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், நான் தில்லிக்கு பயணமானேன். 1950ம் ஆண்டு தில்லிக்கு வந்தேன். அப்போது கே.வி. சேஷாத்ரி என்பவர் எனக்குப் பழக்கமானவர். அவர் ஐ.ஏ.எஸ்.பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்.

சாஸ்திரியிடம் 1950 முதல் ஆறு ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். பின்னர் சாஸ்திரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டுக்குத் திரும்பத் தயாரானார். அப்புறம் எனக்கும் தில்லியில் வேலை இல்லை என உணர்ந்தேன். தமிழகத்துக்குப் பயணம் செய்ய சேஷாத்ரி ஏற்பாடு செய்தார். என்னை வழியனுப்பியவர் சேஷாத்ரி. நான் ரயிலில் ஏறினாலும், ஆக்ரா நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கினேன். கைச்செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து தில்லிக்கு அடுத்த ரயிலில் புறப்பட்டு வந்து சேர்ந்த்தேன். தில்லியை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமேயில்லை.

பின்னர், மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சரகத்தில் டெபுடி செக்ரட்டரியாக இருந்த வி.கே. வெங்கட்ராமன் என்ற வேலூர்க்காரர் வீட்டில் இருந்தேன். பிறகு, மத்திய பொதுப்பணித் துறையில் எம்.கே.சிவசுப்பிரமணியம் என்பவர் மூலம் வேலையில் சேர்ந்தேன்.

அப்போது எனக்கு தினக் கூலியாக ரூ. 1.75 கிடைக்கும். ஆனால் மாதத்தில் 14 நாளுக்கு மேல் வேலை கிடையாது. இந்த இடத்தில் சில விஷயத்தை நினைவு கூர்ந்தாக வேண்டும். அப்போது, புது தில்லி தீன் மூர்த்தி பவன் பகுதியில் ராணுவத் தளபதிகள், உயர் அதிகாரிகளின் வீடுகள் இருக்கும். அவற்றை பராமரிப்பது மத்திய பொதுப்பணித் துறையின் வேலையாகும்.

அத்துறையில் அதிகாரியாக இருந்த குப்தா என்ற அலுவலர் எனக்கு அந்த அதிகார் வீட்டுக்குப் போய் என்ன பழுது பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டு வா : இந்த அதிகாரி வீட்டில் என்ன ரிப்பேர் செய்ய வேண்டும் என அறிந்து வா’ என்று பணிப்பார்.

நானும் அப்படியே செய்வேன். அப்போது எந்த அதிகாரியும் அமைச்சரும் பந்தா காட்டுதே இல்லை. சில சமயம் நான் அலுவலகத்தில் இருந்தபோது, உயர் ராணுவத் தளபதிகள்,  அதிகாரிகள் நேரடியாக வந்து , என்னிடம் இன்னின்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள்.

இந்திரா காந்தி காலத்தில் பெரிய தலைவராக இருந்த தாரகேஸ்வரி சின்ஹா என்ற தலைவி கூட சாதாரணமாக வந்து சொல்லிவிட்டு போயிருக்கிறார். அந்த பணிக்குப் பிறகு, எம்.சி. ஜெயராமன் என்ற பொறியாளரிடம் பணிபுரிந்தேன். அப்போது கரோல்பாகில் வீடு.

அந்த சமயத்தில் பாலம் கிராமப் பகுதியில் சர்வதேச விமான நிலையம் கட்டும் பணி நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.

நான் கரோல் பாகிலிருந்து பாலம் விமான நிலையப் பகுதிக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் சைக்கிளில் வந்துவிடுவேன். சுமார் நான்கு அண்டுகள் அந்த பணியில் இருந்தேன். மாட்டு வண்டியில் விமான நிலையம் கட்டுமானப் பகுதியில் சுரங்கப்பாதை இருந்தது. பாலம் கிராமத்திலிருந்து அந்தப் பக்கம் உள்ள மங்களபுரி கிராமத்துக்கு சுரங்கப் பாதை வழியாக மாட்டு வண்டியெல்லாம் போகும். நான் பல முறை ஜாலியாக சென்று திரும்பியிருக்கிறேன்.

எனக்கு சிறிய வயதில் பெரியம்மை நோய் வந்ததால், காது கேட்கும் திறனை இழந்துவிட்டேன். இருந்தாலும் வேலைக்கு அசரமாட்டேன். பாலம் விமான நிலையத்தின் மண் பரிசோதனை போன்ற பணிகளில் எனக்குச் சிறிய பங்கு உண்டு.

எம்.சி. ஜெயராமன் நேர்மைக்குப் பெயர் போனவர். எப்போதும் எனக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார். பொதுப் பணித்துறையில் இருக்கும் போது காரியம் ஆக வேண்டும் என்பதற்கும், சில தில்லு முல்லுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் பணம் கொடுப்பார்கள். அதற்கு மசியாதே என்றார். அதைக் கடைசி வரையில் பின் பற்றினேன்.

இதன் பிறகு, திருமண ஏற்பாட்டுக்காக சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அதை நான் ஏற்கவில்லை. காரணம், தில்லியிலேயே பிழைப்பில் நிலைப்பெற்ற எனக்கு சென்னையில் என்ன வேலை கிடைக்கும்? தில்லிக்கு வந்தாலும், கிடைக்கும் ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியுமா என்ற சந்தேகம்.

இவையெல்லாம் சேர்ந்து நான் பிரமச்சாரியாகவே வாழச் செய்துவிட்டன. மாத வாடகை ரூ 11: ரூ 30 சம்பளத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தேன். கரோல் பாகில் ராமானுஜம் பவனில் அறைக்கு மாதம் ரூ 11 வாடகை,. அதை நடத்திக் கொண்டிருந்த ராமானுஜம் பரோபகாரி. வசதியற்ற தென்மாநில இளைஞர்களுக்கு இலவசமாகவே சாப்பாடு போட்டார். காங்கிரஸ் கட்சியில் அலுவல் பணியில் இருந்த பலருக்கு அவர் இப்படி உதவியுள்ளார்.

அந்தக் காலத்தில் பிரதமர் நேரு முக்கியமான விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பார். ஆனால் துளி கூட பந்தா இருக்காது. அவருக்கு அருகே யாரும் செல்லலாம். புகைப்படக் காரர்கள் நெருக்கமாக இருந்து புடமெடுப்பார்கள். போலீஸ் கெடுபிடி இல்லை.

ஒரு சமயம், ராமானுஜன் மீட்டிங்கில் பங்கேற்றவர்களுக்கு உணவு எடுத்துச் சென்றபோது, கூடவே நானும் சென்றேன். சர்வ சகஜமாக நேருவின் கருத்தரங்க அறைக்குள் நுழையமுடிந்தது. நான் மட்டுமல்ல . சாதாரண பணியாளர்களும் எட்டிப் பார்த்துவிட்டு, நேருவைக் கண்டு மகிழ்வது உண்டு.

முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் வருவார்கள். ஒரு முறை இந்திராகாந்தியிடம் நான் ஆட்டோ கிராப் கொடுத்து பண்டித நேருவின் கையெழுத்தை வாங்கியிருக்கிறேன். இதுபோல் ஏராளமான தலைவர்களின் கையெழுத்துகளை வாங்கினேன். அதனால் தான் ‘மஞ்சரி’ இதழ் ஆசிரியர் என்னை கையெழுத்து வேட்டைப் புலி என்றே அழைத்தார். தமிழர்களின் பங்கு மகத்தானது: தில்லி நகரம் மாறவில்லை. ஆனால், மக்களும் வாழ்க்கை, பண்பாடு ஆகியவை பெரிதும் மாறிவிட்டன. அன்று மனிதர்களுக்கு மனிதர்கள் உதவி செய்வார்கள்.

இப்போது அப்படியில்லை. ஆனால் கோவில்கள் நிறைய பெருகிவிட்டன. எல்லோரும் கடவுளை வழிபட்டு புகழ் தேடுகிறார்கள். அன்று அப்படியில்லை. வயிற்றுப் பசியைத் தீர்த்தால் போதும். இன்று இரைச்சல், வேகம்தான் அதிகமாயிருக்கிறது.

அந்தக் கால தில்லியை விட இன்றைய தில்லிக்கு ஒரே ஒரு சிறப்பு உண்டு. வேலை தேடி வருவோர் இங்கே பிழைத்துப் போகலாம் என்ற நிலை இருக்கிறது. எங்கள் காலத்தில் அப்படியெல்லாம் கிடையாது.

வேலை முடிந்தால், ஊருக்குப் புறப்படுவார்கள். அப்போதெல்லாம் தென்னாட்டவர்களுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. நிஜலிங்கப்பா காலம் வரையில் அரசியலில் நல்ல மதிப்பு இருந்தது. ஸ்டேட்ஸ் மென் இதழில் ஆசிரியராக இருந்த ரங்காச்சாரியின் பணியில் நிர்வாகம் குறிக்கிடாது. அதனால்தான் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் தொடர்ந்து எழுதினார்.

வட இந்தியத் தலைவர்களும் கூட பந்தா இல்லாமலேயே பழகினர். தில்லியின் நிர்வாக வளர்ச்சிக்குத் தமிழர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. இன்று..?

இருந்தாலும், நான் தில்லியை விட்டுப் போக மறுக்கிறேன்.. என்று கணீரென்று கூறுகிறார் ராஜாமணி.

மூத்த தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி – இயற்கை எய்தினார்…

எழுத்தில் தொலைந்த வாழ்வு…

———————————————————————————————————————————————

நன்றி : தினமணி

குறிப்பு:- திரு. கணேசன் அவர்கள், தினமணி செய்திதாளில் இருந்து, மறைந்த எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களின் பேட்டியை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார். அவர் அந்த பேட்டியை வலைதளத்தில் பதிவு செய்யும்படி கூறினார். அவர் வேண்டுகோளை ஏற்று, எழுத்தாளர் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களின் பேட்டியை இங்கே தட்டச்சு செய்துள்ளேன்.

http://nganesan.blogspot.com

———————————————————————————————————————————————

One Response so far.

  1. Paa Krishnan says:

    தினமணி இதழின் கடைசி பக்கத்தில் இம்ப்ரின்ட் பகுதியை தயவு செய்து படிக்கவும். அது போன்ற கட்டுரை காப்பி ரைட் உள்ளது. அனுமதி இன்றி, வலை தளத்திலோ, இணையத்திலோ பதிவு செய்ய கூடாது. கட்டுரை ஆசிரியர் மட்டுமே அதைக் கையாள முடியும்.
    தயவு செய்து இதை கவனத்தில் கொள்க. இது சட்ட விஷயம். திரு நா கணேசன் கவனத்துக்கும் கொண்டு செல்க.
    பாகி


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube