புத்தகங்கள் எப்போதும் மனதிற்கு நிறைவளித்துக் கொண்டிருக்கின்றது. நல்ல நட்பு கூட சில தவறான புரிதல்களால் கசந்து விடும் இக்கால கட்டத்தில் என்றுமே புத்தகங்கள் நல்ல நண்பனாய், ஆசானாய் உள்ளது.
உலக புத்தக கண்காட்சி நிறைவு நாளான இன்று புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் ஒரு புத்தகமாவது வாசித்து விட வேண்டும் என்பது என் ஆசை. சுதந்திரமாய் எழுத வேண்டும் எழுதி கிடைக்கும் வருவாயில் வாழ வேண்டும் என்ற என் அதீதமான ஆசை நடை முறை வாழ்கைக்கு துளியும் சாத்தியமற்றது. எனினும் நமக்கு வரும் வேலையைதானே செய்ய முடியும் , எழுதுவது என்பது எப்போதும் உற்சாகம் அளிப்பதாகவே உள்ளது.
புத்தகங்களை வாங்கி கொண்டு பயணிக்கும் பொழுது ஒரு இசை என்னை ஈர்த்தது. அது டெல்லியில் நிறைந்திருக்கும் பாலத்தின் அடியில் இருந்து வந்தது. அற்புதமான இசை.. மனதை வருடிச் சென்ற அந்த ராகம் என்னை அங்கேயே நிற்க வைத்தது.
இசைக்கு சொந்தக்காரரான அந்த முதியவர் கிழிந்த மேலாடைகளுடன் காணப்பட்டார் அவரைச் சுற்றி யாருமே இல்லை.. அவர் கண்களை மூடி ஆழமாக இசையோடு லயித்து இசைத்துக் கொண்டிருந்தார். பேருந்துகளின் இரைச்சல், தன்னலமிக்க மனிதர்களின் சப்தங்கள் என எதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் ஆழ்ந்து இசையோடு பயணித்துக் கொண்டிருந்தார்.
அவர் முன் விரிக்கபட்டிருந்த வெள்ளைத் துண்டில் ஒரு சில ஒரு ரூபாய் சில்லரைகள் சிதறியிருந்தது, என்னால் முடிந்த பணத்தை அவருக்கு இட்டேன். என்னும் மனதில் திருப்தி ஏற்படவில்லை. அவர் இசையை நிறுத்தாமல் பயணித்துக் கொண்டிருந்தார்.
சில கணங்களுக்கு பின், கண்களை திறந்தார். அவர் கண்களில் சாந்தம் நிரம்பியிருந்தது. அவர் என்னை பார்த்து சிரித்தார். நான் இசை நன்றாக இருந்ததாகவும். சாப்பீட்டீர்களா என கேட்டேன். அவர் பரவாயில்லை நான் சாப்பிட்டுக் கொள்வேன். நன்றி என்றார்..
பேருந்தில் பயணம் செய்து அறை வந்த பின்னரும். அவரின் இசையும், சாந்தமான கண்களும் மனதில் சுழன்றுகொண்டிருந்தது..