கருவேல மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், குளங்கள், கண்மாய்கள், அந்த கண்மாயின் அருகிலேயே குடியிருக்கும் அய்யனார் சாமிகள் என அனைத்தையும் வேகமாக கடந்து கொண்டிருந்தது பேருந்து. சும்பப் பய எதுக்கு இந்த வெரட்டு வெரட்டுறான்.. கொல்லையா போகுது , நாதாரிப் பய.. – என தண்டட்டான் அணிந்த கிழவியொருத்தி , பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாக ஓட்டிச் செல்லும் ஓட்டுனரைப் பார்த்து சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

எப்போதும் வறண்டிருக்கும் அந்த பூமி , இப்போது பசுமையாடையுடுத்தி காணப்பட்டது. மழ இந்த வாட்டி பரவாயில்லப்பா .. போட்ட காச எடுத்துறலாம் என நம்பிக்கையுடன் சம்சாரிகளிருவர் பேசிக் கொண்டு வந்தனர்.

அப்போதும் வெளியே மழை தூரிக் கொண்டிருந்தது..

மழை மண்ணோடு கொண்ட உறவினால் மண்வாசம் பிறந்து பரவியது அந்த மண்வாசனையை நேசமுடன் உள் இழுத்துக் கொண்டான் நடேஷ்.

ஐந்து மாதம் கழித்து தான் பிறந்து வளர்ந்த மண்ணில் பாதம் பதிக்க போகிறோம் என்ற அந்த உற்சாகம் அவனுள் ஒரு பரபரப்பை உண்டாக்கியிருந்தது.

 ஆனால் எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும் அவனுள் அந்த நிகழ்வு பெரிய காயத்தை உண்டாக்கியிருந்தது. மறக்க நினைத்தாலும் அந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது.

 ஏன் அவன் என்னை பார்த்தும் பார்க்காதவாறு விலகிச் சென்றான்.. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நண்பன் என்ற பாசம் , ஒரே ஊர்க் காரன் என்ற பாசம் கூட இல்லாமல் போய்விட்டதே. – என்ற ஏக்கம் நடேஷின் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.

அது திருவிழாக் காலமாக இருந்ததினால் கூட்டம் பேருந்தில் நிரம்பி வழிந்துகொண்டு இருந்தது.

எல்லோரும் பத்து, பத்து ரூபாயா நீட்டுனா எப்படியா சில்லரையா கொடுங்க.. என்ற எரிச்சலுடன் டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தார் நடத்துனர்.

வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களின் பேச்சு, பழக்கவழக்கங்கள், பாச வார்த்தைகள் என அனைத்தயும் நெடுநாளைக்குப் பின் கேட்பதற்கு திருப்தியாய் இருந்தது நடேஷிற்கு .

ஊர் நெருங்க, நெருங்க பாலாவுடன் கடைசியாய் பேசி பிரிந்த காட்சிகளும், பழைய நினைவுகளும் கரையானைப் போல மனதை அரிக்கத் தொடங்கியது.

ஏலே மாப்ள எப்படா வந்த, – நல்லா இருக்கையா, சரக்கெல்லாம் இருக்குதுல்ல என பரபரப்பாய் பாசத்துடன் கேட்டார் குருமூர்த்தி மாமா.. பேருந்து நிறுதத்தின் அருகில் டீக்கடை வைத்துள்ளார் குரு மூர்த்தி மாமா . இந்த டீக்கடைதான் இளவட்டங்கள் சேரும் இடமாகவும், இளவட்டங்களின் நட்புச் சின்னமாகவும் இருந்தது. இங்குதான் ஊரைப் பற்றிய விமர்சனம் தினமும் நடக்கும். சில நாட்கள் கலகலப்பாக செல்லும் விவாதம், சில நாட்களில் கைகலப்பில் முடியும்.

அப்போதெல்லாம் பாலா கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பான். அவன் குடும்பத்தின் ஏழ்மை நிலையும், அதனூடாக பெருகி வழியும் சோகமும் அவனிடம் எப்போதுமே இருந்ததில்லை.

மாப்ள இந்தா ஸ்பெசல் டீ எனக் கொடுத்தார் குருமூர்த்தி மாமா. பாலா தன்னை பார்த்தும் , பார்க்காமல் சென்றதைப் பற்றி குருமூர்த்தி மாமாவிடம் கூறினான் நடேஷ்.

அதப்பத்தி ஏங் கேக்குற மாப்ள, அது பெரிய கொடுமை.. அது சரி , ஒனக்கு வெவரமே தெரியாதுள்ள, என்னத்த நாஞ் சொல்ல, நீதான் அவங்க வீட்டுக்கு போவையே அங்கேயே போயி பாத்துக்க, என ஒரு புதிர் ஒன்றை விதைத்து விட்டு அமைதியானார் குருமூர்த்தி மாமா..

புதிரை மனதில் சுமந்தபடி தன் வீட்டை நோக்கி பயணமானான் நடேஷ். தனது ஆத்மார்த்தமான நண்பனுடன் சந்தோசமாய் விடுமுறையைக் கழிக்கலாமென பல கனவுகளுடன் வந்தவனுக்கு இந்நிகழ்வு பெரிய ஏமாற்றமாய் இருந்தது.

வீட்டிற்கு வந்து உறவுகளைக் கண்ட பின் சிறிய நிறைவு மனதிற்கு உண்டானாலும் , வீட்டில் சற்று இளைப்பாறி விட்டு மீண்டும் குருமூர்த்தி டீக்கடைக்கே சென்று பாலவை பற்றி விசாரித்து அறிந்துகொள்ளலாம் என்ற எண்ணமே நடேஷின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அன்று மாலையில் குருமூர்த்தி மாமா டீக்கடைக்கு சென்றபோது ”கடையில் ஒரு முதியவர் மெதுவடையை வாங்கி தன் நடுங்கும் கைகளில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக புசித்துக் கொண்டிருந்தார்”.

தம்பி முதியோர் பென்சன் இந்த மாசத்துள்ளருந்து கூட்ட போறாங்களாமே, நெசமாவா எனக் கேட்டார். ஆமாம் தாத்தா மாசம் 500 ரூவா கூட்டப் போறாங்க என  நடேஷ் கூறியதைக் கேட்ட உடன் முதியவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உதித்து மறைந்தது.

மனதில் குடியிருந்த சஞ்சலங்களை மறந்து இயல்பு வாழ்க்கைக்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றான் நடேஷ் எனினும் ஐந்து மாதங்களுக்கு முன் பாலாவின் வீட்டிற்கு சென்ற அந்த நினைவுகளே நடேஷின் மனதில் படமாய் ஓடியது.

அன்று சரியாய் மாலை ஏழு மணியிருக்கும் பாலாவின் வீட்டை நோக்கி இருட்டும் வெளிச்சமும் கலந்த வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தான் நடேஷ். தெருவின் வெளியில் எந்த மனித அடையாளமும் கண்ணுக்கு புலப்படவில்லை. நட்சத்திரங்களும், நிலவும் நிறைந்த வானத்தை கண்டு ரசிக்க எந்த மனிதர்களும் அங்கில்லை.

எல்லோரும் தொலைக்காட்சிக்குள் தங்களை தொலைத்திருக்க கூடுமென மனதில் எண்ணிக் கொண்டான் நடேஷ். பாலாவின் வீட்டிற்குள் நுழையும் முன்பே , அனைவரும் அவரவர் பணிகளில் மூழ்கியிருப்பது கண்ணில் தட்டுப்பட்டது.

தொடர்ந்த இருமலோடு நெசவு நெய்து கொண்டிருந்தார் பாலாவின் தந்தை மோகன். அடுப்படியில் அம்மா பாக்யமும், வீட்டின் வட மூலையில் அக்கா கற்பகம், கிழிந்த துணிகளை தையல் மெஷினில் தைத்துக் கொண்டிருந்தாள்.

சில கணங்களுக்குப் பின் வாசலில் நிற்கும் நடேஷை கண்டு கொண்ட அக்கா கற்பகம் ..

அம்மா நடேஷ் தம்பி வந்துருக்கு எனக் கூறியவாறே நடேஷை வா.. தம்பி என அழைத்தாள் கற்பகம் அக்கா. கற்பகம் அக்கா பாலாவை விட நான்கு வயது மூத்தவள். வீட்டில் படிந்துள்ள ஏழ்மைக் கறை அவளது வாழ்க்கையிலும்  பிரதிபளித்து, அவள் வாழ்க்கையை வண்ணமயமாக இல்லாமல் செய்து விட்டது. இன்னும் அக்காவிற்கு திருமணம் ஆகவில்லை..

அஞ்சரைப் பெட்டியை திறந்து சிதறிக் கிடக்கும் ஒன்றிரண்டு சில்லரைகளை பொருக்கி கொண்டு வேகமாக குருமூர்த்தி மாமா டீக்கடைக்கு சென்றுகொண்டிருந்தாள் கற்பகம் அக்கா. பாலாவின் அப்பா பேசக் கூட இயலாமல் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின் பாலாவின் அம்மா தொடர்ந்தார்கள். – “ நீங்க ரெண்டு பேருமே மிலிட்டிரியில சேர்றதுக்கு ஒன்னாத்தான் ஓடிக்கிட்டிருந்தீங்க,  ஒனக்கு வேல கெடச்சி , அப்பா, அம்மாவ நிம்மதியா வச்சிருக்க. இவனப்பாருப்பா கெடச்ச வேலைய வேணாம்னு விட்டுட்டு வந்துட்டான். கற்பகங் கல்யாணத்துக்காக சேத்து வச்சிருந்த காசோட, இன்னும் கொஞ்சம் கடன வாங்கி இவனுக்காக கொடுத்தோம்.

இவன் சம்பாரிச்சி குடும்பத்தோட வறுமை மாறிடும், கற்பகத்துக்கு நல்ல எடத்துல பேசி முடிக்கலாம்னு நெனச்சுக்கிட்டு சந்தோசமா இருந்தோம். ஆனா இவன் வேலைக்கு சேந்த பத்தாவது நாளே என்னால முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டான்யா,..கடன் கொடுத்தவங்க எல்லாம் திருப்பிக் கேக்குறாங்க நான் என்ன செய்வேன் என” கண்களில் நீர்மல்க கூறினார் பாக்யம் அம்மா..

”பாலா இப்ப எங்க இருக்கான் எனக் கேட்டான் நடேஷ்.

அவன் சித்தி வீட்டுக்கு போயிருக்காம்பா, ஒரே மகன்னு செல்லமா வளத்துட்டு, இப்ப தெணறிப்போய் கெடக்குறோம்பா.என வருந்தினார் பாக்யம் அம்மா.

அப்போது வாசலில் இருந்து … தம்பி இருக்கான்ல போகலையில்ல எனக் கேட்டுக் கொண்டே வேகமாக வந்தாள் கற்பகம் அக்கா. வீட்டின் சூழலை கண்டவுடன் உணர்ந்துகொண்டு , அம்மா எதுவும் சொன்னாங்களா என நடேஷிடம் கேட்டாள் …

   “ இந்த அம்மாவுக்கு எத்தன தடவ சொன்னாலும் இங்கிதம் பத்தாது வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க கிட்ட போயி சொந்தக் கதை, சோகக் கதைய சொல்லிக்கிட்டு என குருமூர்த்தி மாமா டீக்கடையிலிருந்து வாங்கி வந்த டீயை தந்தார்.

எப்போதும் அருந்த சுவையாய் இருக்கும் குருமூர்த்தி மாமாக் கடையின் டீ..

அன்று ஏனோ கசந்தது..

 ”ஏம்பா நேத்து தோனி எத்தன ரன்னு அடிச்சான் பாத்துச் சொல்லுயா” – என சுப்பையா தாத்தா கேட்ட கேள்வியால் நிகழ்காலத்துக்கு வந்தான் நடேஷ். இருபது பந்துல ஐம்பது ரன்னு அடிச்சிருக்காப்ல.. இந்தியா ஜெயிச்சுருச்சு என காது சிறிது மந்தமாக கேட்கும் சுப்பையா தாத்தாவுக்கு சப்தமாக கூறிவிட்டு கடையை விட்டு நடந்தான்.

நடேஷின் மனதெங்கும் பாலாவை பற்றிய நினைவுகளே கொடியைப் போல பிணைந்து பின்னியிருந்தது. நேராக பாலாவின் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும் என எண்ணியவாறே பாலாவின் வீடு இருக்கும் தெருவை நோக்கி நடந்தான். இன்றும் பாலாவின் வீட்டிற்குள் நுழையும் முன்னே..

பாக்யம் அம்மாவும், கற்பகம் அக்காவும் கண்ணில் தட்டுப்பட்டனர். பாலாவினுடைய அப்பாவின் இருமல் சப்தம் மட்டும் கேட்கவில்லை. வீடே பெருத்த மௌனம் சூழ்ந்து கொண்டதை போன்ற உணர்வைத்தந்தது.

அம்மா என அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்தான் நடேஷ். கற்பகம் அக்கா வாப்பா தம்பி என முன்பிருந்த உற்சாகமின்றி அழைத்தார். முன்பிருந்ததை விட கற்பகம் அக்கா மெலிந்திருந்தாள் , அவள் கண்களை சுற்றி கருவளையம் படர்ந்திருந்தது. முன்பு அக்கா தைத்துக் கொண்டிருந்த தையல் மெஷினும் காணவில்லை.

இன்றும், அக்கா வாளியை எடுத்துக் கொண்டு அஞ்சரை பெட்டியில் சிதறியிருக்கும் ஒன்றிரண்டு சில்லரைகளை பொருக்கி எடுத்தாள். வீட்டின் சூழ்நிலையை புரிந்து கொண்ட நடேஷ் வேண்டாம் எனக் கூறியும் அக்கா கேட்கவில்லை, அக்கா வீட்டை விட்டு வெளியேறிச் சென்றாள். நடேஷ் அக்கா சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வேளையில்தான் அந்த புகைப்படம் அவன் கண்ணில் தட்டுப்பட்டது , பாலாவினுடைய அப்பாவின் புகைப்படம் அது , அந்த புகைப்படத்திற்கு மாலையிட்டு வைத்திருந்தனர். – நடேஷின் நெஞ்சு படபடத்து, கண்கள் குளமாகியது.

அப்போது அடுப்படியில் இருந்து தம்பி என அழுது கொண்டே வந்தார், பாக்யம் அம்மா..

அவரே தொடர்ந்தார் ..

நீ வந்துட்டு போனதுக்கப்புறம் அவனுக்கு புத்திமதி சொல்லி பலரு கால்ல கையில விழுந்து, கடன வாங்கி ஒரு வேலையில சேத்துவிட்டோம்ப்பா.. அந்த வேலையில இருந்தும் கூட ஓடிவந்துட்டான்பா.. அன்னைக்கு ஒடிஞ்சு விழுந்த அவங்க அப்பா, வளந்து நிக்கிற பொண்ண கட்டிக் கொடுக்க முடியலையேன்னு ஏக்கத்தோட இருந்தாரு, “இவன வச்சு குடும்பத்த முன்னேத்தலாமுன்னு பாத்த மனுசனுக்கு அது நடக்காத காரியமாக தெரிஞ்சு போச்சு ,.. ஏங்கி ஏங்கியே அந்த மனுசன் செத்து போயிட்டாப்ல. என பாக்யம் அம்மா கூறும் போது அவர்களின் கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

அப்போது கற்பகம் அக்கா வந்தாள் , இப்போது அம்மாவை அக்கா எதுவும் திட்டவில்லை , அக்காவிற்குள்ளும் வலி மிகுந்திருந்தது.. கற்பகம் அக்காவும் அழத் தொடங்கினாள்.

அம்மாவே தொடர்ந்தார்..

ஒரு வாரமாகுது தம்பி வீட்ட விட்டு ஓடிப்போயிட்டான் ..எங்க இருக்கான் என்ன செய்றான்னு ஒரு தகவலும் இல்லை.. – என அப்போதும் குடும்பத்தை சீரழித்த மகனை திட்டாமல் ..அவன் மேல் இருக்கும் பாசமே வெளிப்பட்டது வார்த்தைகளாய்.

அக்கா வாங்கி வந்த டீ ஆரிக் கொண்டிருந்தது..

நடேஷால் இன்னும் அங்கு இருக்க இயலவில்லை, ஊருக்கு வரும்பொழுது பாலாவை பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மௌனமாய் அவர்களிடமிருந்து விடைபெற்று நடந்து சென்றான் இருட்டும் வெளிச்சமும் கலந்த அந்த தெருவில்.

– முற்றும்-


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube