அம்மாவின் நினைவுகள் -1


சில தினங்களுக்கு முன்புதான் என் அம்மா இறந்து விட்டார். மரணத்தின் வலியை இப்போதுதான் மிக அருகில் இருந்து உணர்கிறேன். நோயின் பிடியில் சிக்கி அம்மா அவதியுறும் பொழுதெல்லாம் ஆற்றாமல் கதறி அழுதேன். இதற்கு ஒரு விடிவுகாலமே இல்லையா இறைவா என் அன்னை இப்படி நோயில் வாடிக் கொண்டிருக்கும் போது என்னால் எதுவுமே செய்ய இயலவில்லையே என நொந்துள்ளேன்.

நான் அம்மாவின் அருகிலேயே இருந்த பொழுது எப்போதும் அம்மா என்னை எழுப்புவார்கள் , நான் எழுந்து அவர்களுக்கு உதவி செய்வேன். சில தினங்களுக்கு பிறகு அவர்களால் சப்தமிட்டு எழுப்ப இயலாத சூழ்நிலையில் வீட்டில் இருந்த ஒட்டடைக் குச்சியினை எடுத்து என்னை தட்டி எழுப்புவார்கள், நான் எழும்போது , பாவம் என எனக்காக அவர் பரிதாப படுவார். இறுதியில் எனது அன்னை ஒரு அதிகாலைப் பொழுதில் இறந்துவிட்டார்.

அன்றைய இரவில் வழக்கம் போல அம்மா என்னை எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் அருகில் ஒட்டடைக் கம்பை எடுத்து வைத்துவிட்டு அவர் அருகிலேயே உறங்கிவிட்டேன். ஆனால் அதிகாலை வரை அம்மா என்னை எழுப்பவே இல்லை. அம்மா சோபா சீட்டில் அமர்ந்தவாறே இறந்துவிட்டாள், என் அம்மாவை எழும்மா எழு என சப்தமிட்டு பார்த்தேன். அம்மாவின் உடலை தொட்டு பார்த்தேன் , அம்மாவின் உடல் குளிர்ந்து இருந்தது. அம்மா இறந்துவிட்டாள், ஆம் எனக்கிருந்த  அம்மா என்ற உறவு இந்த மண்ணில் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.

எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஒரு தாயின் உறவைப் போன்ற மேன்மையான உறவும், பாசமான உறவும் எதுவுமில்லை. என் அம்மாவின் உடலை பார்த்துக் கொண்டிருந்தேன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது , மண்ணில் இருப்பவர் எல்லாம் இறப்பவர்தானே என்ற தத்துவத்தை மனதில் எண்ணிக் கொண்டு அம்மாவின் உடலை எடுத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டோம்.

ஆம்புலன்ஸில் அம்மாவின் உடல் வைக்கப்பட்டது. அம்மாவை போர்வையில் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டார்கள். என் அம்மாவிற்கு அதிக குளிர் என்றாலே ஒத்துக் கொள்ளாது , இப்போது அவள் குளிர்சாதனப் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறாள், இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் , அம்மா இருந்த அறையில் மின் விசிறி கூட சுழலக் கூடாது என சப்தம் போட்ட அம்மா இன்று குளிர்சாதனப் பெட்டியில் அடங்கியுள்ளாள்.

அம்மாவை வாழ்ந்த கிராமத்திற்கு கொண்டுவந்து , அம்மாவிற்கு இறுதிக் காரியங்களை செய்துமுடித்தோம் . ஊர் மக்கள் அனைவரும் செவ்வாயும், வெள்ளியும் சாமிக்கு மஞ்சத்தண்ணி ஊத்தி கும்புட்டவளுக்கா இந்த கெதி என வருத்தப்பட்டனர்.

என்ன செய்வது மண்ணில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இறந்துதானே ஆக வேண்டும்.

இன்றோடு அம்மா இறந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. நான் அம்மா வாழ்ந்த வீட்டில் உள்ளேன் ஒவ்வொரு அறையையும் பார்க்கும் பொழுது அம்மாவின் நினைவுகள்தான் பொங்கி வழிகிறது 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube