“ பயணம் ” என்ற வார்த்தையே மிக உன்னதமான சிறப்பு பெற்ற வார்த்தை எனக் கருதுகிறேன். பயணம் இல்லையயனில் எந்த ஒரு செயலும் முழு வடிவம் பெறுவதில்லை. நதிகளின் பயணம் எத்தனை எத்தனை வறண்ட நிலங்களை செழுமையாக்குகின்றன. சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம் தானே அவரது புரட்சி வாழ்வில் பல முக்கிய எண்ணங்களை கொண்டு சேர்த்தது.

அத்தகைய பயணத்தைப் போன்று மிகவும் சிறப்பானதொரு பயணம்தான் முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மேதகு அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணம். இந்தியாவின் வட மாநிலத்தில் பணி புரியும் நான் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்ப வேண்டிய நீண்ட பயணத்தில் சென்னை இரயில் நிலையக் கடையில் “ எனது பயணம் ” நூலை வாங்கினேன்.

டெல்லியில் பணிபுரிந்த காலங்களில் மேதகு. அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும், அவரது செழுமையான சிந்தனை வளம் மிக்க உரைகளையும் கேட்டு மகிழும் வாய்ப்பையும் பெற்றேன். “ எனது பயணம் ” வெறும் கதை சொல்லும் நூல் அல்ல. அப்துல் கலாம் அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையில் எப்படி தான் கண்ட கனவினை, செயல் வடிவம் கொடுத்து வெற்றிகரமாக மாற்றினார் என்ற வழியை, சிந்தனையை நமக்குக் கற்றுக் கொடுக்கும் நூலாகும்.

நூலின் முகப்பு அட்டையிலேயே “ கனவிற்கு செயல் வடிவம் கொடுத்தல் ” என எழுதப்பட்டுள்ளது. இந்நூலில்  கலாம் அவர்கள் தன் வெற்றிகரமான, மன நிறைவான வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கிறார்.
அவருக்குள் நல்ல எண்ணங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும், நல்ல கனவினையும் விதைத்த தன் பெற்றோர்களையும், நண்பர்களையும், தனது சகோதரி, மைத்துனர் மற்றும் இராமேஸ்வரத்து இயற்கையையும், நீல நிற கடலையும் நினைத்து அவர்கள் எப்படி தன்னுள் நல்ல விதைகளைத் தூவினர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் கூறுகிறார். தனது தந்தையின் மூலம் அதிகாலை நடை பழக்கத்தையும், பொறுமை, உழைப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும் நினைவு கூர்கிறார்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது புதிதாய் வந்த ஆசிரியர், ஒன்றாய் அமர்ந்திருந்த அப்துல் கலாமையும் அவரது நண்பர் இராமநாதனையும் தனியாக பிரித்து அமரச் சொன்னார். ஆசிரியர் இவ்வாறு செய்தது ஒற்றுமையாக இருந்த நண்பர்களின் மனதை கலங்கச் செய்தது. விசயத்தை அறிந்த அப்துல் கலாம்
அவர்களின் தந்தை ஆசிரியரிடம் சென்று மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நற்கருத்தினை முன் வைக்கிறார்.

தனது தாயின் உழைப்பையும்,நற்குணங்களையும் தனது சகோதரி நகைகளை விற்று உயர்கல்விக்கு உதவியதையும், சகோதரியின் கணவர், சிறுவனாயிருந்த அப்துல் கலாமின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாய் இருந்து கலாமின் சிந்தனை ஓட்டங்களை வளர்த்ததையும் நினைவு கூர்ந்து, வாசிக்கும் வாசகர்களை உறவுகளின் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார். தன் ஆளுமைகளை வளர்த்த புத்தகங்களைப் பற்றி நினைவு கூர்கிறார்.

புத்தகங்களின் மேன்மையை ஒரு கவிதையில் அழகாக இவ்வாறு கூறுகிறார்.

புத்தகங்கள் எப்போதும் என் தோழர்கள்
கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக
அவை எனக்குக் கனவுகளைக் கொடுத்துள்ளன
கனவுகள் பணித்திட்டங்களில் முடிவடைந்தன.
பணித்திட்டங்களை நம்பிக்கையோடு ஏற்றுக்
கொள்வதற்கு அவை எனக்கு உதவியுள்ளன..
தோல்வி நேரங்களில் அவை எனக்கு
துணிச்சலைக் கொடுத்துள்ளன.
நல்ல புத்தகங்கள் எனக்கு
தேவதைகளைப் போல இருந்து வந்துள்ளன
அவை என் இதயத்தை மென்மையாகத் தொட்டுள்ளன
எனவே புத்தகங்களை உங்களது நண்பர்களாக
ஆக்கிக் கொள்ளுங்கள்.
இளைய தலைமுறையினரே..!
புத்தகங்கள் உங்களது நண்பர்களாக
விளங்கட்டும்..!
நூலை முழுமையாக வாசித்து முடிக்கும் போது,நமது சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் விடா முயற்சியோடு போராட வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற கருத்துக்களை நம்முள் பதிய வைக்கிறார் அப்துல் கலாம்.

“ கனவுகள் என்பவை நம் தூக்கத்தில்
நாம் காண்பவை அல்ல ; நம்மை
ஒரு போதும் தூங்கவிடாமல் பார்த்துக்
கொள்பவைதான் நமது கனவுகளாக
இருக்க வேண்டும் ” என உயர்ந்த கனவுகளின் முக்கியத் துவத்தை  எடுத்துரைக்கிறார். இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க இந்த சுட்டியை அழுத்தவும் http://udumalai.com/?prd=anathu%20payanam%5Ba.p.j.abdul%20kalam%20kanvukaluik%20sayalvadivam%20koduithal%5D&page=products&id=13978

******

ஜனவரி மாத பயணம் சிற்றிதழில் வெளிவந்துள்ள பத்தி ..

******


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube