தர்மம்….

நீண்டு வளர்ந்திருக்கும் தேவ்தர், யாரிகுல், சினார் மரங்களையும், சினார் மரத்தின் அழகிய இலைகளையும், வளைந்து வளைந்து செல்லும் அழகிய நதிகளையும், மலைகளில் படிந்திருக்கும் பனிகளையும், வானில் சுதந்திரமாக எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளின்றி பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும், பறவைகள் எழுப்பும் இனிய சப்தங்களையும், வண்ண வண்ண மலர்களையும் பார்த்து, மகிழ்ந்து இயற்கையின் அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹேமந்த். காஷ்மீரில் இருக்கும் அழகிய பனி படர்ந்திருக்கும் மலைகளை பார்க்கும் போதெல்லாம் ஹேமந்தின் மனதில் மகாகவி பாரதியின் “” வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் ” என்ற பாடல்தான் நினைவில் வந்து கொண்டிருந்தது.

இராணுவப் பணியில் இருந்தாலும், காஷ்மீரின் குளிரைத் தாண்டியும் தமிழகத்தில் இருக்கும் தன் கிராமத்தில் அடிக்கும் வெக்கையின் கதகதப்பு ஹேமந்தின் அகத்தில் இருந்துகொண்டே இருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவ முகாமை தொலை நோக்கியில் பார்க்கும் பொழுதெல்லாம், ஒன்றாய் இருந்த இந்தியாவை எண்ணி ஏங்கும் அதே வேளையில், மதத்தின் பெயரில் தீவிரவாதத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தும் போர்க் குணமும் அக்னிச் சுடராய் அவனுள் எரிந்து கொண்டிருந்தது.

சாப் சாயா ஆகயா.. இதர் ரக்குதும் என யூசுப் கேத்தலியில் தேனீர் வைத்துச் சென்றதும், வழக்கம் போல் காலையில் நடக்கும் நடைப் பயிற்சிக்கு தனது சூவை பாலிஷ் செய்து தயார் படுத்திக் கொண்டிருந்தான் ஹேமந்த். பரபரப்பான இராணுவப் பணி என்றாலும், கிடைக்கும் நேரத்தில் எப்போதும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹேமந்தின் பழக்கமாக இருந்தது. நண்பர்கள் அவனை “” டேய் .. எப்படி இப்படி புஸ்தகத்தை படிச்சுக்கிட்டே இருக்க முடியுது. கிடைக்கிற நேரத்த ஜாலியா எஞ்சாய்பண்றத விட்டுட்டு, புஸ்தகத்துலயே தொலைஞ்சி போயி இருக்கையேடா ” எனக் கூறுவது தினமும் வழக்கமாக இருந்தது.

ஹேமந்த்… ஆப் சுட்டி ஜானேக்கா டைம் ஆகையா, கல் ஜானாகே என விடுமுறை செல்ல வேண்டிய காலம் வந்து விட்டதென சுபேதார் சுர்ஜீத் சிங் நினைவு படுத்திக் கூறினார். சுர்ஜீத் சிங் எட்டடி உயரமும், கோதுமை நிறமும், திட காத்திரமான உடம்பும் கொண்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்தாஜி. கார்கில் சண்டையில் அவர் குண்டடிபட்ட காயத்தின் தழும்புகள் அவரின் வீரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தன. எதிரியோடு எப்படி போர் புரிய வேண்டும் என்ற முறையை மிகவும் தத்ரூபமாக விளக்குவார். சீனியர் இராணுவ அதிகாரியாக

இருக்கும் அவர் பலமுறை ஜவான்களுக்கு வகுப்புகள் எடுப்பது வழக்கம். ஹேமந்தின் நல்ல மனசை புரிந்து கொண்ட சுர்ஜீத் சிங் அவன் மேல் விசேசமான கவனம் செலுத்துவார். ஹேமந்தின் மேல் இருந்த பிரியத்தின் காரணமாக ஹேமந்த் விடுமுறையில் செல்லும் காலத்தை நினைவில் வைத்திருந்து ஹேமந்துடன் பேச்சை ஆரம்பித்தார் சுபேதார் சுர்ஜீத் சிங். அவர் சிரிக்க ஆரம்பித்தால் சில நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார். அப்படி ஒரு கம்பீரமான அழகான சிரிப்பு.

அதிகாலையில் விடுமுறைக்கு செல்ல வேண்டியதால், அன்றைய இரவு முழுவதும் ஹேமந்திற்கு ஊர் ஞாபகங்கள் வந்து கொண்டே இருந்தது. குறிப்பாய் சுப்பையா தாத்தாவின் நினைவுகள் அவன் அடிமனதிலிருந்து தோன்றி, மனதை கனக்கச் செய்தது. ரஜாயை இழுத்து போர்த்திக் கொண்டு கண்களை மூடினான். அறையின் வெளியே பனி விழுந்து கொண்டிருந்தது.

வீட்டைச் சுற்றியும் வேப்பம் பழங்கள் சிதறிக் கிடந்தன. வெக்கை மிகுந்திருந்தது. வீடே மஞ்சளாடை உடுத்தியது போன்றிருந்தது. வேம்புவின் வாசம் வீடெங்கும் நிறைந்திருந்தது. வீட்டை விட்டு வேகமாக வெளியே வந்தான் ஹேமந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு இராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வந்துள்ளதால் ஹேமந்தின் கண்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தன. சுப்பையா தாத்தா இருந்தவரை எப்படி இருந்த வீடு இப்போது இப்படி ஆகிவிட்டதே என தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.

மனசு கஷ்டப் படுறப்பெல்லாம் இந்த மரத்துக்கு கீழே வந்து ஒக்காந்துட்டா மனசுக்கு ஆறுதலா இருக்குடா என தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டான். கோமாளி பாண்டி, கருப்பு கந்தசாமி, மைனரு மாணிக்கம், அலப்பற அலமேலு என அத்தெரு வாசிகளுக்கு இந்த வேப்ப மரம்தான் ஓய்வகம் அல்லது ஆறுதலகம். சுக துக்கங்கள், கேலி பேச்சுக்கள் என அனைத்தும் இந்த வேம்புவின் அடியில் பகிர்ந்து கொள்ளப்படும். தன் பால்ய காலத்தைப் போன்றே இன்னும் கிராமத்து மனிதர்கள் மரத்தின் அடியில் வந்து படுத்துக் கொண்டிருப்பது ஹேமந்திற்கு சிறிது ஆறுதலாய் இருந்தது.

மரத்தில் ஏறும் சிறு எறும்புகள் கூட சீராக வாழ பழகியுள்ளது. ஆனால்

மனிதர்களாகிய நாம் அப்படி இல்லையே. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்தவர்களில் சுப்பையா தாத்தாவும் ஒருவர் என தன் மனதில் எண்ணிக்கொண்டான் ஹேமந்த். தாத்தாவுடன் பழகிய அந்த அழகிய பசுமையான நினைவுகள் மனதில் காட்சியாய் விரிந்தது.

தாத்தாவுக்கு ஹேமந்துடன் இரத்த உறவு இல்லை என்றாலும் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பாசம் இருந்தது. கருத்த தேகம், நரைத்த முடி, சிரித்தால் தெரியும் முத்து பற்கள், வாயிலிருந்து வெளிவரும் கலகலப்பான பெருத்த சப்தம்.. இதுதான் சுப்பையா தாத்தா. ஹேமந்த் பால்ய காலத்தில் அப்பா அம்மாவுடன் இருந்ததைவிட சுப்பையா தாத்தாவுடன் இருந்ததுதான் அதிகம். தாத்தா மரங்கள் நடுவதில் விருப்பம் உடையவராக இருந்தார். அவர் வைத்துவிட்டுச் சென்ற வேம்பில்தான் இன்று எத்தனை மனிதர்கள் இளைப்பாறுகிறார்கள். டேய் மனுசனா பொறந்தா ஏதாச்சம் செஞ்சுட்டு சாகணும்டா, கொறஞ்சது நாலு மரமாவது வச்சுட்டு சாகணும்டா என்பார் சுப்பையா தாத்தா.

காலையில் டயர் செருப்பு போட்டு நடப்பதில் தொடங்கி இரவில் தலைகாணி வைக்காமல் தூங்குவது வரை அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு பொருள் இருக்கும்.

“” டேய் குட்டிப்பயலே நாம என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்குறோம். காட்டு மேட்டுல அலையுறோம். புழு பூச்சிக சுத்தி திரியுற இடம். டயர் செருப்பு போட்டு நடக்குறப்ப கேக்குற சத்தத்துல புழு பூச்சிக தானா ஓடிப்போயிரும் ” என்பார்.

ஆனா ஒனக்கொன்னு தெரியுமா, புழு பூச்சிகளைவிட மோசமானவங்க நம்ம மனுசப்பசங்க. என சொல்லும் தாத்தா, இல்லாத குடும்பங்களுக்கு பல உதவிகள் செய்து வந்தார். எப்போதும் சக மனிதர்களின் மேல் அன்பு செலுத்தினார். நம்ம என்னத்தடா கொண்டு போப்போறோம். இருக்குறப்ப இல்லாதவனுக்கு கொடுக்குறதுல தப்பு இல்லடா என்பார். தலைகாணி வைக்காம தூங்குனாதான்டா நல்லா இரத்த ஓட்டம் ஓடும். சீரா ஓடுனாதான்டா சீரா வேல செய்ய முடியும் என்பார். புத்தகங்கள் வாசிப்பதிலும் கிராமத்து பாணியில் வாய் மொழிக் கதைகள் கூறுவதிலும் மிகவும் புலமை வாய்ந்தவராக இருந்தார்.

தொலைவில் ஐஸ் விற்பவரின் குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறுவயதில் சுப்பையா தாத்தா அவனுக்கு ஐஸ் வாங்கிக் கொடுத்து, சந்தோசமாக இருந்த நாட்கள் மீண்டும் நினைவில் மலர்ந்தது.

ஒருமுறை ஹேமந்த் சுப்பையா தாத்தாவிடம் பட்டாளத்துக்கு போகப்போவதாக சொன்னதற்கு ம்… கிழிச்ச, பட்டாளத்துக்கு போகணுமுன்னா உடம்பு நல்லா தெரண்டு ஆம்பளதனம் தெரிய வேண்டாம். நீயும் இருக்கியே, ஒட்டடக் குச்சிக்கு வேட்டி கட்டினது போல. ஒழுங்கா காலங்காத்தால எந்திரிச்சு பழைய கஞ்சித் தண்ணிய வெறும் வயித்துல குடிச்சுட்டு, ஊற வச்ச சுண்டலையும் கடலையையும் வாயில போட்டு மென்னுகிட்டு ஊரையே நாலு ரவுண்டு தெனமும் வரணும்டா என்பார்.

ஹேமந்த் இராணுவத்திற்கு தேர்வாகி சென்ற பொழுது, கண்ணீர் வடித்து ஆசிர்வதித்து அனுப்பிய ஒரே நபர் சுப்பையா தாத்தாதான். சுப்பையா தாத்தா இருந்தவரை வீடு வீடாகத்தான் இருந்தது. குடும்பம் ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும் ஓடிக் கொண்டிருந்தது. அவர் மறைந்த பிறகு லகான் இல்லாத குதிரையை போல தன் இஷ்டத்திற்கு ஓடிக் கொண்டுள்ளது.

வீட்டுத் திண்ணையிலிருந்து பாப்பாத்தி பாட்டியின் முனகல் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. பாப்பாத்தி பாட்டி சுப்பையா தாத்தாவின்

மனைவி. சுப்பையா தாத்தா இருந்த காலத்தில் ஓஹோவென வாழ்ந்த பாப்பாத்தி பாட்டி இன்று அதே வீட்டின் திண்ணையில் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருக்கிறார்.

ஹேமந்தை பாப்பாத்தி பாட்டியால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. வாழ்வின் கடைசி நாட்களை கடந்து கொண்டிருக்கிறாள் பாட்டி. கிழிந்த சேலையும் நடுங்கிய கைகளுமாய் முனங்கிக் கொண்டிருந்தாள் பாப்பாத்தி பாட்டி. தாத்தா இருந்த காலத்தில் நன்றாக வாழ்ந்த மனுசி இன்று யாரும் கவனிக்காமல் அல்லலுற்று துன்புறுவதை ஹேமந்தினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. வயசாயிட்டதால படுக்கிற இடத்திலேயே மூத்திரம் ஆயி இருக்கிறா. திங்க மட்டும் கேட்டுக்கிட்டே இருக்கா என பக்கத்து வீட்டு நபர்களிடம் பாட்டியின் மகள் வழிப் பேத்தி சுப்புத்தாயி கூறிக் கொண்டிருந்தாள்.

வேம்புவின் வழியே ஊடுருவிய சூரியக் கதிர்கள் ஹேமந்தின் முகத்தில் ஒளிக் கற்றைகளை வீசிக் கொண்டிருந்தன. கிராமத்திலிருந்து தனது வீடிருக்கும் நகரத்திற்கு வந்ததிலிருந்து ஹேமந்த் மனதில் கனத்த மெளனம் இருந்து கொண்டேயிருந்தது. தனது அறையில்

இருக்கும் புத்தகங்கள் எதையும் வாசிக்க இயலாமல் இருந்தது. சுப்பையா தாத்தா வைத்துவிட்டுச் சென்ற மரத்தில் எண்ணற்ற பறவைகள் கூடு கட்டி ஒன்றாய் எந்த பாகுபாடுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் உழைத்துக் கட்டிய வீட்டில், அவரது இரத்த உறவுகளே முரண்பட்டிருப்பது ஹேமந்தின் மனதிற்கு புரியாத புதிராகவே இருந்தது.

“” இவன் அந்த சுப்பையா கெழடோட சுத்திட்டு இருந்தப்பவே தெரிஞ்சு

போச்சு. சுப்பையா மாதிரியே எல்லாத்தையும் செய்யுறான். புஸ்தகம் படிக்கிறதும், மரத்தப் பாத்துக்கிட்டே நிக்கிறதும், இருக்கிற காச அடுத்தவங்களுக்கு கொடுக்குறதும் அந்தக் கெழடுதான் அப்படி இருந்து செத்து போயிட்டாப்புல.. இவனும் அவரைப் போலவே செய்ய ஆரம்பிச்சுட்டானே. பட்டாளத்துல இருந்து வந்தமா..

பைக்க எடுத்துக்கிட்டு நாலு சொந்தக்காரங்க ஊருக்கு போனமான்னு இருந்தாத்தானே.. நம்ம வீட்டுலயும் மாப்புள இருக்கான்னு தெரியும். இவனும்

இருக்கானே.. ” என ஹேமந்தின் அப்பா புலம்பிக் கொண்டிருந்தார். தனது அறையிலிருந்து அப்பாவின் புலம்பல்களைக் கேட்ட ஹேமந்தின் மனம் ஏனோ சுர்ஜித் சிங்கை நினைக்கத் துவங்கியது. ஹேமந்த் சோர்ந்து போகும் நேரத்திலெல்லாம் சுர்ஜீத் சிங் தனது வாழ்க்கை அனுபவத்தினால் பல நல்ல விசயங்களை நயமாக புரிய வைத்து மனதை தேற்றுவார். கிராமத்திலிருந்து வந்த களைப்பில் அறையில் இருந்த காற்றாடியை சுழலவிட்டு கண்களை மூடினான்.

வெளியில் வெக்கை மிகுந்திருந்தது. ஜன்னலின் வழியாக உஷ்ணக் காற்று வீசிக் கொண்டிருந்தது. மாலையில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றான் ஹேமந்த். பேருந்து நிலையம் எப்போதும் போல் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் அங்கும் இங்குமாய் ஏழை எளிய மனிதர்கள் அமர்ந்திருந்தனர். பால்ய காலத்தில் உருண்டைக் கிழவி என ஹேமந்தினால் பாசத்தோடு அழைக்கப்பட்ட பாட்டிதான் பத்மா பாட்டி. பத்மா பாட்டிக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். குடித்துவிட்டு ஊதாரியாய் சுற்றித் திரிந்த அவன் ஒரு நாள் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான். தனித்து விடப்பட்ட பத்மா பாட்டிக்கு குழந்தைகள் என்றாலே உயிர். தனது அன்பினை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவாள்.

அந்தப் பாட்டியைப் பார்த்தாலே ஹேமந்திற்கு சந்தோசமாக இருக்கும். பாட்டி

கொடுக்கும் அரிசி மாவினால் செய்த உருண்டை மிகவும் ருசியாக இருக்கும்.

ஹேமந்த் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் நோயுற்ற பத்மா பாட்டி யாரும்

கவனிக்க இயலாததால் அல்லலுற்று இறந்து போனார். ரோட்டோரம் பிளாட்பாரத்தில் பத்மா பாட்டி சாயலைப் போன்றிருந்த வயதான பாட்டியைப் பார்த்தவுடன் ஹேமந்தின் மனதில் இனம் புரியாத வருத்தம் உண்டானது. ஒரு சேலையை மட்டும் உடம்பில் போர்த்திக் கொண்டு, அதுவும் அழுக்கேறிப் போயிருந்தது. நடுங்கிய கைகளுடன் நெளிந்த தட்டை வைத்துக்

கொண்டு மிகவும் பரிதாபமான குரலில் அந்தப் பாட்டி தன்னை கடந்து போகும் மனிதர்களிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள். ஹேமந்திடமும் கைகளை நீட்டினாள் பாட்டி. சும்மா சுற்றிப் பார்க்க வந்ததால் பணம் எதுவும் அவன் எடுத்து வரவில்லை. தன்னால் அந்த கணத்தில் பாட்டிக்கு உதவி செய்ய இயலவில்லையே என வருந்தினான். நாளை தன்னால் ஆன உதவியை பாட்டிக்குச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

சாலையில் மனிதர்கள் பரபரப்பாய் இயந்திரத்தைப் போல் இயங்கிக் கொண்டிருந்தனர். எத்தனை மனிதர்கள் மனசாட்சிக்கு நேர்மையாய் நடந்து கொள்கிறார்கள். இந்த வயதான பாட்டியும் ஒரு காலத்தில் நன்றாய் வாழ்ந்திருப்பார். பாட்டிக்கும் குழந்தைகள் கண்டிப்பாய் இருப்பார்கள். இல்லாமல் கூட இருக்கலாம். எனினும் ஏதாவதொரு சொந்தத்தை கண்டிப்பாய் உண்டாக்கி இருப்பார். அந்த சொந்தங்கள் கை விட்டதினால்தானே இத்தகைய மனிதர்கள் சாலை நெடுகிலும், வாழ்வின் கடைசி தருணங்களில் மிகவும் அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என பல எண்ணங்கள் ஹேமந்தின் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.

மறுநாள் மறக்காமல் பாட்டிக்காக பணத்தை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்றான் ஹேமந்த். அந்த வயதான பாட்டி அவன் கண்ணில் படவே இல்லை. அடுத்தடுத்த நாட்களில் பாட்டியைத் தேடிச் சென்றும் பாட்டியைக் காண முடியவில்லை.விசாரித்துப் பார்த்ததில் சரியான விபரங்களை அங்கிருப்பவர்களால் கூற இயலவில்லை. ஏதுமற்ற அந்தப் பாட்டிக்கு தன்னால் உதவ முடியவில்லையே என்ற எண்ணம் ஒருவித ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கு செல்ல வேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.

காஷ்மீருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலையில் ஜன நடமாட்டம் குறைந்திருந்த வேளையில் பேருந்து நிலையத்தில் அந்தப் பாட்டியைத் தேடினான் ஹேமந்த். பாட்டியைக் காணவில்லை. இரயில் நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டான். இரயில் நிலையம் வந்த போது அங்கிருந்த மரங்களில் இருந்த பறவைகளின் சப்தம் விடிவதற்கு இன்னும் சிறிது நேரம் இருப்பதை சொல்லிக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக சூட்கேஸையும், பிற சாமான்களையும் பேருந்திலிருந்து இறக்கி, இரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் ஹேமந்த். இரயில் நிலைய வாசலில் அந்தப் பாட்டி அமர்ந்திருந்தாள். பாட்டியை ரயில் நிலைய வாசலில் பார்ப்போம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை ஹேமந்த். தன் பையிலிருந்த பணத்தை எடுத்து அந்தப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொடுத்தான். நல்லாயிருங்க பாட்டி என்று கூறி விட்டு, பிளாட்பாரத்திற்குள் சென்றான் ஹேமந்த்.

டெல்லி செல்லும் ரயில் முதல் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. தனது இருக்கை எண் உள்ள பெட்டியைத் தேடி இருக்கைக்கு அடியில் சாமான்களை வைத்து விட்டு சன்னலோரமாக அமர்ந்தான் ஹேமந்த். பாட்டியைப் பார்த்ததில் அவன் மனம் பாரமற்று லேசாக இருந்தது. இரயில் சிறிது நேரத்தில் புறப்பட்டது. ஹேமந்தின் மனம் காஷ்மீரை நினைக்கத் தொடங்கியது. கிழக்கு திசையிலிருந்து சூரியனின் வெளிச்சக் கதிர்கள் பூமியின் மீது பரவத் தொடங்கியது.

**பயணம் நவம்பர் மாத இதழில் வெளிவந்துள்ள சிறுகதை**


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube