கும்போகணத்தில் இந்த விபத்து நடந்து 13 (14) ஆண்டுகள் ஓடி விட்டன. அந்த குழந்தைகள் (விபத்து நடக்காமல்) இருந்திருந்தால்; அந்தப் பிஞ்சு முகங்கள் எல்லாம் இன்று வாலிபத்தில் மகிழ்வோடு பவனிவந்துகொண்டிருப்பர். அத்தகைய கோர விபத்து நடந்த பின்னும் நாம் நமது சிந்தனைகளை சரி செய்து கொள்ளவில்லை என்பதே மிகவும் வேதனையளிக்கும் விசயமாக உள்ளது. இன்னும் நகர்புறங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயரில் வசதி ஏதுமின்றி ; கட்டட விதிமுறைகளின்றி இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளை எல்லோரும் கடந்துதான் செல்கிறோம். அத்தகைய பள்ளிகளில் இன்னும் நம் குழந்தைகளை சேர்பித்துக் கொண்டுதானுள்ளோம். image29951

எல்லாவற்றையும் மறக்கும் சக்தி தேவையானதுதான்; அப்படியான மறதி இல்லையென்றால் மனிதர்களாகிய நாம் பிரிந்த உறவுகளை எண்ணி ஏங்கி ஏங்கி  இறந்துவிடுவோம். ஆனால் நமக்கு படிப்பினைக்குடுத்த இத்தகைய பேரிழப்பையும் நாம் மறந்துவிட்டோம் என்பதுதான் வேதனையாக உள்ளது.

கும்பகோண நிகழ்வு என்னையும் மிக பாதித்தது.அப்போது எனது எண்ணங்களை ஒரு நோட்டில் பதிவு செய்து வைத்திருப்பேன். அத்தகைய கவிதைகள்தான் 2008 ல் கைக்குட்டைக் கனவுகள் என நூல் வடிவம் பெற்றது. அவை எல்லாம் கவிதைகள் என நான் அன்றுக் கூறிக்கொண்டேன். இப்போது அந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது; ஒரு நேசம் நிறைந்த மனிதனின் குறிப்புகள் என நினைத்துக் கொள்கிறேன்.

kavithai-book

இந்தக் கவிதையில் புருஷோத்தமன் என்ற பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது எதேச்சையாக சந்தத்திற்காகத்தான் அந்தப் பெயரை கவிதையில் மொழிந்திருந்தேன். ஆனால் சில வருடங்கள் கழித்து எனது ஊரைச் சேர்ந்த அண்ணன் புருஷோத்தமன் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இறந்துவிட்டார். அப்போது இந்தக் கவிதையைப் படிக்கும் போது; மிக நெருக்கமான உணர்வை இக்கவிதை அளித்தது. மொழி பொதுவானது;உணர்வுகள் பொதுவானவை; சந்தோசங்களும் துக்கங்களும் அப்படித்தான் போல.

தாயின் ஏக்கம்..!
( 2004 ஜூலை 16 கும்பகோணப் பள்ளித்
தீ விபத்தில் உயிர்த்த கண்ணீர் கவிதை.)

புள்ள வரம் வேணுமுன்னு
புள்ளயார வேண்டி வந்து
புதன் கிழமை பெத்தெடுத்தேன் உனக்கு
புருஷோத்தமன்னு பேரும் வச்சேன்..

பள்ளிக்கூடம் போயி
பட்டமெல்லாம் வாங்கி  நீ
பண்போட வாழணும்னு இந்த
பவுனுத் தாயி ஆசைப்பட்டேன் அதனால
பள்ளிக்கூடம் சேத்துவிட்டேன்..

பள்ளிக்கூடம் போறேன்னு
பாசத்தோட கையசைச்ச  இப்படி
நிரந்தரமா போயிருவேயயன
நெனைச்சிக்கூட பாக்கலையே..

கொள்ளி போட
ஒரு புள்ள நீ இருக்கயயன
தெம்பாயிருந்தேனே இப்ப
தெணறிக் கெடக்குறேனே..

ஒன்ன பெத்த வயிற
எரியவிட்டு  நீ
எரிஞ்சி போயிட்டேயே..

ஆத்தா மாரியாத்தா
மடப்புரம் காளியாத்தா
எ ( ம் ) புள்ளய ஏத்துக்கிட்ட
இப்ப என்னையும் ஏத்துகிட்டு
எ ( ம் ) புள்ளகிட்ட சேத்துரடி.

One Response so far.

 1. Rathi devi says:

  Rathi devi

  மறக்க முடியாத கனல் எரிந்து கொண்டேதான் இருக்கிறது ஆங்காங்கே பரிகொடுத்தவர்களின் நெஞ்சில் வலி ரணம்…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube