நல்ல படங்களையோ, நல்ல புத்தகத்தையோ  படிக்கும் போது நல்ல எண்ணங்கள்  பொங்கிவருகிறது. அந்த ஜீவனுள்ள எண்ணங்களைப் பிடித்து; அவற்றை விடாமல் பற்றி வாழ்க்கையில் பயணிப்பதே பெரிய சாகசமாக கருதுகிறேன். சில தினங்களாகவே பார்க்க வேண்டிய படங்கள் என ஒரு லிஸ்ட்டை உண்டாக்கி வைத்துக் கொண்டு யூ டியூப்பில் தேடிக் கொண்டிருந்தேன்.

sandyaa    download (2)நேற்று ஓவியர் வீரசந்தானம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டேன். மிகச் சிறந்த மனிதர். அவர் வரைந்த அழகிய ஓவியங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். (எந்த காலத்திலும், ஒரு உண்மையான கலைஞன் தோற்றதாக சரித்திரம் இல்லை. சில நேரம் அவன் சிரமத்திற்கு உள்ளாகிறான்) என அவர் கூறிய கருத்துக்கள் எப்போதும் மனதில் நிறைந்திருப்பவை. அவரது வீடியோக்கள் சில வற்றைப் பார்த்தேன். பெரும் போராளி. அவரை நேரில் சந்தித்திருக்க வேண்டும். அறியாமல் விட்டுவிட்டேன்.

இன்று சந்தியாராகம் திரைப்படத்தைப் பார்த்தேன். வீரசந்தானம் அவர்கள் நடித்துள்ளார் என்றதற்காகவே மீண்டும் பார்த்தேன். 80 களின் முக்கியமான அடையாளமாகத் தெரியும் தாடி வைத்திருந்தார். கடைசிவரை அதே ஸ்டைலில்தான் வாழ்ந்துள்ளார். சந்தியாராகம் திரைப்படம் எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதன் சிறப்பையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

சந்தியாராகம் திரைப்படத்தில் எல்லாக் காட்சிகளும் கவிதையைப் போன்றதுதான். அவற்றுள் சில காட்சிகள் எனக்கு பெரும் தரிசனத்தைக் கொடுத்தது. படத்தின் முதல் காட்சியே ஒரு கிராமத்தின் அதிகாலையை படம் பிடித்துக் காட்டுகிறது. பின் கேமரா சொக்கலிங்கம் என்ற வயாதனவனின் வறுமையான வீட்டினையும், விசாலாட்சி என்ற புத்திரபாக்கியம் இல்லாத , புத்திர சோகத்தோடு வாழ்ந்து ஏங்கிக் கொண்டிருக்கும் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தையும் காட்டுகிறது. குறிப்பாக பாட்டி விசாலாட்சி கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் ஒரு காட்சியில் “ ஏண்டி கருப்பி இதுகளெல்லாம் உன் கூடையே இருக்கும்னு நினைப்பா; ரெக்க மொளைக்கவும் பறந்து போயிடும்; நீ மட்டும் கெக்கெனு நிப்ப’ எனச் சொல்லுவார். தனிமையின் விரக்தியையும், வயோதிகத்தில் ஆதரவிற்காக ஏங்கியிருக்கும் முதுமையின் தேவையையும் இந்தக் காட்சியில் அழுத்தமாக சொல்லியிருப்பார் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள்.

sandyaragamவிசாலாட்சி பாட்டி இறந்ததும் சொக்கலிங்க பாகவதர் கதறி சப்தமிடும் காட்சி எல்லோர் மனதையும் கலங்க செய்துவிடும். பின் கிராமம் நீங்கி ஆதரவைத்தேடி ஒரே தம்பி மகனாக சென்னையில் வாழும் வாசுவை (வீரசந்தானம்) தேடிச் செல்கிறார். பின் அங்கு நிலவும் வறுமையானச் சூழலை விவரிக்கிறது காட்சிகள். ஒரு கட்டத்தில் யாருக்கும் பாரம் இல்லாமல் வாழ்வோம் என நினைத்துக் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடுகிறார் சொக்கலிங்க பாகவதர்.

பின் அர்ச்சனா தன் மாமனாரைத் தேடி முதியோர் இல்லம் வந்து உரையாடும் காட்சிகள் ஜென் கவிதையை போன்றவை. படத்தின் இறுதிக்காட்சியில் சொக்கலிங்க பாகவதர் தன் விரல்களை; பிஞ்சுக்குழந்தையின் கரங்களுக்குள் வைப்பார். அந்தப் பிஞ்சுக்குழந்தை பற்றிக்கொள்ளும். திரைப்படம் அங்கே முடிகிறது.

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஆதரவுக்கரம் நீட்டியேதன் இவ்வாழ்க்கையை கடக்க வேண்டும். எல்லா உறவுகளும் முக்கியமானவைகளே ; யாரையும் உதாசீனப்படுத்தக் கூடாது என்ற நல்ல கருத்துதான் என்னுள் இந்த சந்தியாராகம் பாடிச் சென்றது.

கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் (சொக்கலிங்கபாகவதரின் நேர்காணல்)

சந்தியா ராகம்

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube