THE WAY OF HOME ..

The way of home

காலம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது; ஆனால் காலத்தில் சந்தித்த , பழகிய மனிதர்களின் நினைவுகள் மட்டும் மனதில் பசுமையாக நின்றுவிடுகிறது. சமீபத்தில் THE WAY OF HOMEஎன்ற கொரிய மொழி திரைப்படம் பார்த்தேன். ஏழுவயது சிறுவனுக்கும் , அவனது பாட்டிக்கும் இடையிலான அன்புதான் கதை. இந்த படத்தை பார்க்கும்பொழுது கண்டிப்பாய் நமது முன்னோர்களின் நினைவுகளும், பால்யகால காட்சிகளும் மன ஆழத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிடுகிறது.

 

சேங்-ஊ என்ற சிறுவனை அவனது அம்மா நகரத்திலிருந்து மலைப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு அழைத்துவந்து தனது வயதான தாயிடம் விட்டுச்செல்கிறாள். நகரத்தில் வளர்ந்த சிறுவனுக்கு மலை கிராமத்தின் தனிமை பிடிக்கவில்லை. சிதிலமடைந்திருக்கும் மரத்தாலான அந்த வீட்டில் எறும்புகள் அங்குமிங்குமாக ஊர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வீட்டையே சேங்-ஊ விற்கு பிடிக்கவில்லை. பாட்டியை கண்டாலே அவனுக்கு எரிச்சலாய் வருகிறது. தனது ஒவ்வொரு செயலிலும் பாட்டியை நிராகரிக்கிறான். பாசமாக அரவணைக்க வரும் பாட்டியை அழுக்கானவள் என்கிறான். பின் வீட்டில் வெளியிலிருக்கும் பாட்டியின் பழைய நைந்துபோன சூவின் மீது சிறுநீர் கழிக்கிறான். ஆனால் பேச இயலாத வயதான அந்த பாட்டி பேரனை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்கிறாள். அன்றைக்கே சேங்-ஊ வின் அம்மா நகரத்திற்கு திரும்பிச்செல்கிறாள். வீட்டிற்கு செல்லலாம் என அழைக்கும் பாட்டியை சிறுவன் ஊமை, செவிடி என திட்டுகிறான். அனுபவத்தின் பேரமைதியாய் முதியவள் அமைதியாக பேரனின் திட்டல்களை ஏற்றுக்கொண்டு நடந்து செல்கிறாள். சிறிது தூரம் சென்ற பாட்டி திரும்பி பேரனை கையசைத்து அழைக்கிறாள். முதியவளின் ஏக்கத்தை கண்டு சேங்-ஊ சிரிக்கிறான். இந்தக்காட்சியை காணும்பொழுது சிறுவயதில் பால்யத்தில் என் தாத்தாவை நிராகரித்த காட்சிகளும், திட்டிய வார்த்தைகளும் நினைவுகளும் வந்து கண்களை குளமாக்கியது.

 

சேங்- ஊ தான் கொண்டுவந்த வீடியோ கேமில் விளையாடிக்கொண்டே இருக்கிறான். ஊசியில் நூலை மாட்டித்தரும்படிச் சொல்லும் பாட்டியை திட்டிக்கொண்டே மாட்டித்தருகிறான். ஒரு கட்டத்தில் வீடியோகேமின் பேட்டரி தீர்ந்துவிடுவதால், அவதியுருகிறான், துணி துவைத்துக்கொண்டிருக்கும் பாட்டியிடம் சென்று பணம் கேட்கிறான். பாட்டி தன் நெஞ்சின் மேல் கைவைத்து தடவுகிறாள். சேங்-ஊ கோபத்தோடு பாட்டியை திட்டி, தள்ளிவிட்டு விட்டு வீட்டிற்குள் ஓடி ஜாடியை உடைக்கிறான். பின் பாட்டியின் செருப்பை எடுத்து தூர வீசி விடுகிறான். செருப்பில்லாமல் நடந்து செல்லும் பாட்டியை பார்த்து சிரிக்கிறான். தூரத்தில் இருக்கும் கடைகளுக்கு பேட்டரி வாங்க ஓடுகிறான். அலைந்து திரிகிறான். எங்கும் பேட்டரிகள் கிடைக்காததால் துவண்டுபோய் மீண்டும் வீடு வந்து சேர்கிறான். வீட்டிற்கு செல்ல பாதை மறந்து அழுதுகொண்டிருக்கும் சேங்-ஊ வை பாட்டி வந்து அழைத்துச்செல்கிறாள்.

தன் பேரனுக்கு அவன் விரும்பியதை எதுவும் தன்னால் செய்ய இயலவில்லையே என பாட்டி வருந்துகிறாள். பின் ஒரு நாள் உனக்கு என்ன சாப்பிட வேண்டும் என சைகையில் கேட்கிறாள். அவன் பீஜா, ஹேம்பர்கர், கெண்டுச்சிக்கி சிக்கன் என்கிறான். பின் தனது புத்தகத்தை எடுத்துவந்து பாட்டிக்கு காண்பிக்கிறான். பாட்டி சிக்கன் உணவை மட்டும் புரிந்துகொள்கிறாள். பின் தனது பேரனுக்கு சந்தைக்கு சென்று கோழி வாங்கிவந்து சமைக்கிறாள். தூங்கிக்கொண்டிருக்கும் சேங்-ஊ வை அழைத்து சாப்பிட சொல்கிறாள். ஆசையோடு எழுந்த சேங்-ஊ சிக்கனை பார்த்துவிட்டு, இது கெண்டுச்சிக்கி சிக்கன் இல்லை என அழுகிறான். பாட்டியை திட்டுகிறான். ஏக்கத்தோடு பாட்டி பேரனை பார்க்கிறாள்.

பாட்டி எப்போதும் தன் பேரனை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளவே நினைக்கிறாள். ஆனால் பேரனுக்கோ அவளது அன்பை உணர முடியாத வயது. பேரனின் உலகமோ விளையாட்டினால் ஆனதாக உள்ளது. அந்த கிராமத்தில் கிடைத்த தனிமையை அவன் உள்ளம் ஏற்க மறுக்கிறது.

ஒரு முறை அவன் பாட்டி சுருட்டி வைத்திருந்த வீடியோகேமின் கவரை பிரித்து பார்க்கும்பொழுது அதனுள் பேட்டரி வாங்க பாட்டி பணம் வைத்திருப்பதை பார்க்கிறான் சேங்-ஊ. அந்த கணத்தில் தனது பாட்டியின் பாசத்தை உணர்கிறான் சேங்-ஊ. அவன் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது.

இறுதியில் சேங்-ஊவின் அம்மா அவனை அழைத்துச்செல்ல மலைகிராமத்திற்கு வருகிறாள். பிரிவின் போது பாட்டியின் அன்பை முழுமையாக உள்வாங்கிக்கொள்கிறான் சேங்-ஊ.

படம் முழுவதும் பாட்டிக்கும் , பேரனுக்குமான உறவை ; முதுமைக்கும், பால்யத்துக்குமான உறவை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் Lee Jeong-hyang.

2002 ல் வெளியான இந்த படம் பல விருதுகளை பெற்றுள்ளது.

உலகசினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டியபடம்.

THE WAY OF HOME PART 1

THE WAY OF HOME PART 2

2 Responses so far.

  1. Sundar says:

    Super expiration

  2. உஷா says:

    நானும் படம் பார்த்திருக்கிறேன்..பேரனோடு கடைவீதி போகுமிடம்,சிறுவன் பாட்டியை அவதானிக்கும் அந்த இடம் மிக அற்புதமாய் இருக்கும்…கவிதை போன்ற திரைப்படம் அல்லவா…அருமை..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube