ஹாச்சூ நதி சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் புளுபப்பி மலர்கள் அழகாய் பூத்திருக்கின்றன. புளுபப்பி மலர்களின் வண்ணங்களால் நதிக்கரை மேலும் அழகாக தெரிகிறது.  எங்கள் இராணுவ முகாம் நதிக்கரையின் அருகில் உள்ள மேட்டில்தான் அமைந்திருக்கிறது. அறையிலிருந்து பார்த்தால் ஹாச்சூ நதியில் மீன்பிடிப்பவர்கள், புளுபப்பி மலர்களை பரித்துச்செல்பவர்களென நதிக்கரையில் மனிதர்கள் நடமாடுவது தெரியும்.  அந்த அழகிய நதியை கடக்க இராணுவத்தினர் இரும்பிலான பாலம் அமைத்திருந்தனர். பாலத்தில் பூட்டான் வாசிகள் பலவண்ணங்களைக் கொண்ட பிரார்த்தனை கொடிகளை கட்டியுள்ளார்கள். வெள்ளை நிறம்நீரையும், சிவப்பு நிறம் நெருப்பையும், பச்சை நிறம் இயற்கையையும், மஞ்சள் நிறம் பூமியையும், நீல நிறம் காற்றையும் குறிக்கும் பிரார்த்தனை வசனங்கள் எழுதப்பட்ட கொடிகள் காற்றில் அழகாக பறந்தவண்ணமிருக்கின்றன.1

புத்த கொடிகள் அசைந்து கொண்டிருக்கும் இரும்பு பாலத்தை கடந்துதான் ஞாயிற்றுக்கிழமைகளில் ”தார்ஸி”  மீன்களை வாங்கிக்கொண்டு முகாமுக்கு நடந்துவருவான். “தார்ஸி” ஏழு வயது நிறம்பிய பூட்டானிய சிறுவன். “தார்ஸி” என்பது திபெத்திய வார்த்தை. ”தார்ஸி” என்றால் திபெத்தில் ”நல்ல வருங்காலம்” எனப்பொருள்.  தார்ஸி ஒவ்வொரு ஞாயிறும் மீன்களை கொண்டுவருவது ஜவான்கள் அனைவருக்கும் நல்ல வருங்காலமாகத்தான் இருக்கிறது. தார்ஸி வாரவாரம் ஞாயிற்று கிழமைகளில் கொண்டுவரும் மீன்கள்தான் எங்களுக்கு கிடைக்கும் மதிய உணவை மேலும் மணமும் ருசியும் கொண்டதாக்கியது. மேற்கு வங்கத்தை சேர்ந்த முக்கர்ஜி என்ற சமையற்கலைஞர்எங்கள் முகாமில் பணிசெய்து கொண்டிருக்கிறார். நான் பூட்டானிலுள்ள இந்திய இராணுவ முகாமுக்கு பணிக்கு வரும் முன்னரே அவர் பணியிலிருந்தார். அருமையாக சமைப்பார். வங்காளிகள் மீன்களை சுவையாக சமைப்பதில் கை தேர்ந்தவர்கள்தான் ஏனெனில் மீன் அவர்களின் வாழ்க்கையில் அன்றாட புலங்கும் உணவாக இருக்கிறது. பூட்டானில் கிடைக்கும் டுருக் 1000 பியருடன் தார்ஸி கொண்டுவரும் மீன்களை சேர்த்து சாப்பிடும்பொழுது தனி ருசி உண்டாகிவிடுகிறது. 

இடுங்கிய கண்களுடனும், சப்பிய நாசியுடனும் தார்ஸி புன்னகைக்கும் போது அழகாக இருப்பான். தார்ஸியின் முகத்தை காணும்பொழுது எனக்கு கதிரை பார்ப்பது போலிருந்தது.  தார்ஸியின் சிறிய அழகிய கண்களைப் போன்றுதான் கதிரின் கண்களும் இருந்தது. அந்த அழகிய  கண்களில் எப்போதும் ஒரு பிரியம் இருந்துகொண்டேயிருப்பது தெரியும். தார்ஸியின் தாத்தா அருகில் உள்ள ஜோங்கில் புத்த துறவியாகி வசித்து வருகிறார். எப்போதாவது எங்கள் முகாமிற்கு வருவார். மொட்டை அடித்த தலையுடன் , சிவப்பு நிற அங்கி அணிந்து  வரும் அவரை பார்க்கும் பொழுது புன்னகைகையை வீசிச்செல்வார். எப்போதாவதுதான் பேசுவார்; டோர்ஜி தனது குடும்பத்தை பிரிந்து புத்த மடாலயத்திற்கு வந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர்  கேட்பதை நிதானமாக உள்வாங்கிக் கொண்டு அமைதியாக பதிலளிப்பார். 1958ல் பிரதமர் நேரு பூட்டானுக்கு வந்தபொழுதுசிறுவனாக இருந்த தனது நினைவுகளை பகிர்ந்துகொள்வார். ஜவகர்லால் நேரு கொடுத்த ரோஜா பூங்கொத்துக்களை சில நாட்கள் இதழ்கள் உதிரும்வரை பத்திரமாக வைத்திருந்தத்தாக மகிழ்ச்சியாக   கூறும்பொழுது சுருக்கம் விழுந்த அவரது முகத்தில் ஒரு ரோஜாப்பூ மலர்வதைபோலிருக்கும்.

ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் தார்ஸி இராணுவ முகாமிற்கு  வந்துகொண்டிருக்கிறான்.  அவனுக்கு தாத்தா டோர்ஜியை பார்க்கவே பிடிப்பதில்லை. ஜவான்களோடுதான் அதிக நேரம் செலவிடுவான். வாலிபால் விளையாடும் இராணுவ வீரர்களின் விளையாட்டை பார்த்து ரசிப்பான்.  பேஸ்கெட்பால் மைதானத்தில் அங்கும் இங்குமாக உற்சாகமாக ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் தார்ஸியை அனைத்து இராணுவ வீரர்களும் பார்த்து ரசிப்பார்கள். ஒவ்வொரு இராணுவ வீரனும் தொலைந்த தனது பால்ய காலங்களை தார்ஸியின் வாயிலாக உயிர்ப்பித்து கொள்வார்கள். தார்ஸி முகாமில் உள்ள வீரர்களிடம்  செல்ல பிள்ளையாகவே வளர்ந்து வருகிறான்.

எங்கள் இராணுவ முகாம் ”டோக்லாம்” பிரச்சனை அதிகரிக்கவும் பூட்டானிலேயே இருந்துவிட்டது; இல்லை என்றால் எல்லா இராணுவ வீரர்களும்  அஸ்ஸாமில், ”ரங்கியா” என்ற இடத்தில் உள்ள நிரந்தர இராணுவமுகாமிற்கு சென்றுவிடுவோம். கடந்த இரண்டாண்டுகளாக பூட்டானில் உள்ள ”ஹா” என்ற இடத்தில் உள்ளோம். இந்த அழகிய பசுமையான இடத்தின் கிழக்குப்பகுதியில் நதி ஓடிக்கொண்டுள்ளது. பூட்டானில் ஊரின் பெயரோடுதான் நதிகள் அழைக்கப்படுகின்றன; அதனால் இந்த நதியை ஹாச்சூ என அழைக்கின்றனர். இரண்டு வருடங்களாக எனக்கு டோர்ஜியையும், தார்ஸியையும் தெரியும்.  பசுமையான அடர்ந்த காடுகள் நிறைந்திருக்கும் ”ஹா” கிராமத்திலிருந்ததுதான் தார்ஸி முகாமிற்கு வந்துசெல்வான்.

“ மூன்று வருடத்திற்கு முன்பு வரை தார்ஸி , கர்மா என்ற இளைஞனோடுதான் எப்போதும் சுற்றிக்கொண்டிருப்பான்”.

”கர்மா தார்ஸியைவிட பெரியவன் இளைஞனாக இருந்தான். இராணுவ முகாமில் உள்ள பேஸ்கெட்பால் மைதானத்தில் வந்து விளையாடிக்கொண்டிருப்பான்.  நல்ல உயரமாக இருந்தான் ; அவன் விரல்கள் நீண்டும் உயரத்திற்கேற்ற எடைகொண்டும் , பார்க்க உயரமான ஜாக்கிசான் போல் இருப்பான். அப்போதெல்லாம்  தார்ஸி  இராணுவ முகாமில் உள்ள ஜவான்களோடு அதிகமாக பழகமாட்டான். கர்மாவிற்கு பின்னாடியே சுற்றிக்கொண்டிருப்பான். கர்மா திம்புவில் உள்ள உணவு விடுதியொன்றில் பணிபுரிந்துவிட்டு வாரவாரம் ”ஹா” விற்கு வந்துவிடுவான். தார்ஸியின் வீடும் கர்மாவின் வீட்டின் அருகில்தான் இருந்தது.  தார்ஸிக்கு ”யாக்” (மாடுகள்) என்றால் அதிகம் பிடிக்கும்; கர்மாவின் வீட்டில் “யாக்” ஐந்திற்கும் மேல் வளர்த்தார்கள். கர்மாவின் வீட்டில்தான் தார்ஸி அதிக நேரத்தை செலவளிப்பான்.

தார்ஸிக்கு காரமான உணவென்றால் அதிகம் பிடிக்கும். ஒரு முறை  தார்ஸியும், கர்மாவும் சேந்து முகாமிற்கு வந்த பொழுத்கு கர்மாவின்  வீட்டில் செய்த ‘இமா டாட்சி’ என்ற மிளகாயும், தயிரும் சேர்ந்த  கூட்டை கொண்டுவந்தான். காரமாய் இருக்கும் உணவு. இதுதான் பூட்டானியர்களின் தேசிய உணவாகும் என கர்மா என்னிடம் கூறினான்.  இராணுவ முகாமிற்கு வந்து இருவரும் பேஸ்கட்பால் விளையாடுவார்கள். கர்மா என்னிடம் மனம்விட்டு நன்றாக பேசுவான் என முக்கர்ஜி கூறினார். அப்போதெல்லாம் திம்பு நகரத்தை பற்றிய கதைகளை தார்ஸிக்கு கூறிக்கொண்டேயிருப்பான் கர்மா. தார்ஸியும் கதைகள் கேட்பதில் விருப்பம் கொண்டவனாக இருந்தான்.  பனிபொழிந்துகொண்டிருந்த ஒரு ஞாயிற்று கிழமை காலையில் கர்மா, தார்ஸிக்கு கதை கூறிக்கொண்டிருந்தபோது நானும் அங்கிருந்தேன், அந்த கதை இன்னும் என் நினைவில் உள்ளது. அது முயலாக மாறிய மனிதனின் கதை

” ஒரு நாள் முதிய புத்த பிக்கு ஒருவர் உயர்ந்த  மலைமீது உள்ள மடாலயத்தில் வசித்து புத்த மத சடங்குகளை செய்து வந்தார்.  அந்த மலை முழுவதும் அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தது. அவர் தனக்கான உணவை தானே சமைத்து சாப்பிடுவார். கையில் சிறிய வீனைபோன்ற இசைக்கருவி வைத்திருப்பார்.  மாலை வேளையில் அந்த இசைக்கருவியை மீட்டிக்கொண்டே இருப்பார். அந்த இசையால் அந்த  மலைக்காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்தும் பரவசத்தில் மகிழ்ந்தன. அவரது நாட்கள் அமைதியாகவும் , மனநிறைவோடும் சென்றுகொண்டிருந்தது.

 

ஒரு முறை காட்டில் பறவைகளின் கீச்சல்களை கேட்ட அவர் அங்கு சென்று பார்த்தபொழுது வேடன் ஒருவன் மானை வேட்டையாட முயற்சித்துக்கொண்டிருந்தான். உயிர்களை துன்புறுத்தாத புத்தபிக்கிற்கு அந்தக்காட்சி பெரிய வலியை கொடுத்தது. வேடனிடம் சென்று உயிர்கள் எதையும் துன்புறுத்தக்கூடாது என்றார்.

 

அவன் புத்தபிக்குவை மதிக்காமல் மானை வேட்டையாடுவதிலேயே குறியாய் இருந்தான். அவனிடம் புத்தபிக்கு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவன் கேட்கவில்லை. இறுதியில் “நீ முயலாக மாறி வாயில்லா உயிர்களின் வலியை உணர்” என சாபமிட்டார். மறுகணத்திலேயே அந்த வேடன் முயலாக மாறினான் என கதையை கர்மா முடித்த பொழுது தார்ஸி கண்கள்விரிய கேட்டுக்கொண்டிருந்தான்” என முக்கர்ஜி கூறினார். முக்கர்ஜியின் மகன் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டதால் அவருக்கு குழந்தைகள் என்றாலே தனிப்பிரியம்தான்.

 

 

*******

தார்ஸிக்கு எப்போதும்  கதைகள்  என்றால் பிடிக்கும் , கதைகள் சொல்லும் இராணுவத்தினர்தான் அவனுக்கு ஆதர்சம். அவனுக்கு பூனை,யானை, குரங்கு கதைகளை விட, இரயில் கதைதான் மிகவும் பிடிக்கும். பூட்டானில் இரயில் இல்லாததால் ; தொலைக்காட்சியில் இரயில் காட்சிகள் வந்தால் மிகவும் ரசிப்பான். இரயிலில் பயணிக்க வேண்டுமென விரும்பினான். மின்சார இரயிலை விட , கரும் புகையை விட்டுக்கொண்டே செல்லும்  இரயில்தான் அவனுக்கு பிடித்திருந்தது. எப்போதாவது தார்ஸி முகாமிலேயே தங்கிவிடுவான். ஒரு நாள் இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை பார்த்துக்கொண்டேயிருந்தான்.

 

என்ன தார்ஸி வீட்டுக்கு போகலையா?

 

எனன வானத்துல பாத்துக்கிடேயிருக்க?

 

 

வானத்து நட்சத்திரங்களில் எது கர்மா என தேடிக்கிட்டே இருக்கேன் என்றான்.

 

நட்சத்திரங்கள் வானில் மினுங்கிக்கொண்டேயிருந்தன. எனக்கு அப்போதுதான் முக்கர்ஜி சொன்ன கர்மாவின் கதை நினைவில் வந்தது.

 

கர்மா திம்புவில் பணிபுரிந்தபோது அங்கே ஹோட்டலில் தங்கியிருந்த ரோஸலின் என்ற அமெரிக்க பெண்ணை காதலித்துவந்தான். அப்பொழுதெல்லாம் அவன் எப்போதும் ரோஸலினின் நினைவில் இருந்தான். என்னிடம் வரும்பொழுது ரோஸலின் பற்றித்தான் அதிகம் பேசுவான்.

 

“ரோஸலின் மிகவும் அழகாக இருப்பாள்,

 

அவளிடம்  எனக்கு மிகவும் பிடித்ததே அவளது கூர்மையான நாசிதான்”

 

அவள் புன்னகைக்கும்போது புளுபப்பி மலர்களைப் போன்றிருப்பாள்

 

அவள் அழகுமட்டும் என்னை ஈர்க்கவில்லை ;புத்தன் கூறியது போல அவள் அனைவரிடமும் கருணையுடன் இருந்தால் அந்த கருணைதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்திருக்கிறது.

 

அவள் ஒரு நாள் என்னிடம் ”கிரா” உடை அணியவேண்டும் என்றால் நான் அவளுக்கு ‘கிரா’ உடை வாங்கிதந்தேன். அந்த உடையில் பூட்டான் பெண்ணைப்போன்றே மிகவும் அழகாகத் தெரிந்தாள் என்றான்

 

 

ஒரு நாள் ”தார்ஸி” பரபரப்போடி கேம்பை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான். அவனது சின்ன கண்கள் கசிந்திருந்தது. பாதங்களில் புளுதிபடிந்திருந்தது; பயந்துபோய் இருந்தான். மூச்சு வாங்க ஓடி வந்ததினால் அந்தக் குளிரிலும் அவனுக்கு வியர்த்திருந்தது.

 

என்ன தார்ஸி ஏன் அழுகிறாய்?

 

”கர்மா .. கர்மா”  என்றான்.

 

அப்போதுதான் முகாமிற்கு காய்கறிகள் கொண்டுவரும் “லிமா “என்ற பெண் சொன்னாள்

 

ஆம் ….

 

”கர்மா இறந்துவிட்டான்”.

 

அதிகாலையில்தான் அவன் அருகில் உள்ள இலைகள் உதிர்த்து நின்றிருந்த ஆப்பிள் மரத்தின் கிளையில் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்தது தெரிந்தது. நேற்று  கர்மா தான் காதலித்த ரோஸலின் என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறினான்.

 

ஊரின் பெரியவரும் தார்ஸியின் தாத்தா டோர்ஜியிடம் இந்த செய்தியைக் கூறினார்கள். டோர்ஜி பூட்டான் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். ராஜாவிற்கு கூட இந்த நிபந்தனைதான்; அப்படி இருக்கும்போது கர்மா எப்படி வெளி நாட்டு பெண்ணை திருமணம் செய்யலாம். நாம் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். இந்த மாதிரி திருமணம் செய்து சில காலத்திலேயே பிரிந்தவர்களை நான் பார்த்துள்ளேன்.

 

இந்த திருமணம் வேண்டாம் என்றார்.  டோர்ஜியின் முடிவைத்தான் எப்போதும் கிராமத்தார்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வோம் கர்மாவின் அப்பாவும் ஏற்றுக்கொண்டார்.

 

கர்மாவிடம் நீ இனி திம்புவிற்கு பணிக்கு போக வேண்டாம். இங்கே கிராமத்திலேயே “யாக்கினை “ மேய்த்துக்கொண்டு வாழ்க்கையை நடத்து. உனக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து பெண்பார்த்து திருமணம் செய்யலாம் எனக்கூறினார் கர்மாவின் அப்பா. ஆனால் இன்றைக்கு அதிகாலைதான் கர்மா இறந்தது எல்லோருக்கும் தெரியும் என்றாள்.

 

 

தார்ஸி அழுது கொண்டு நின்றிருந்தான்.

 

எனக்கு கதைகள் சொல்ல யார் இருக்கா..

 

கர்மா.. கர்மா என அவனது உதடுகள் முணுமுணுத்தன. ஹாச்சூ நதி எப்போதும் போல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

 

******

 

ரவில் மலைமேட்டின் மேல் அமர்ந்துகொண்டு மலைமீது வளைந்து வளைந்து சென்று கொண்டிருக்கும் ஊர்திகளை பார்த்துக்கொண்டிருந்தான் தார்ஸி. ஊர்திகள் செல்வது நீண்ட மலைப்பாம்பொன்று ஒளிர்ந்துகொண்டே ஊர்ந்து செல்வதுபோலிருந்தது. பிரியமானவர்களின் மரணம் எப்போதுமே மனதில் ஆறாதவடுவாக நிலைத்துவிடுகிறது.  மௌனமாய் அமர்ந்திருக்கும் தார்ஸியிடன் சென்றமர்ந்தேன். நான் அன்றைய தனிமை நிறைந்த இரவில் தார்ஸிக்கு கதிரின் கதையை சொல்ல ஆரம்பித்தேன்,

 

கதிர் வசித்த தெருவில் ஜெயராணி என்ற அழகான பெண் இருந்தாள். ஜெயராணி கருப்பாக இருந்தாலும், இலட்சனமான முக அமைப்போடு அழகாக இருப்பாள். கேசம் நீண்டிருக்கும், புன்னகைத்தால் முகத்தில் நிலவின் ஒளி தெரிவதுபோன்றிருக்கும்; அழகான வெண்மையான பற்கள் ஜெயராணிக்கு. ஜெயராணி காதில் அழகான ஜிமிக்கி கம்மல் அணிந்திருப்பாள். சிறுவனான கதிரை எப்போதும் கிண்டல் செய்துகொண்டேயிருப்பாள்.

 

அவள் கதிரை பார்க்கும்பொழுதெல்லாம் “மச்சான் எப்ப பெரியவனாகி என்ன கல்யாணம் பண்ணிக்கப்போற; அப்ப நான் கிழவியா இருந்தாலும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பல்ல என கொஞ்சலாக பேசி கண்ணத்தில் முத்தம் தருவாள். ஜெயராணியின் வீட்டில் அழகான பேனாசோனிக் டேப்ரிக்கார்டர் இருக்கும் அதன் பொத்தான்கள் பார்க்க அழகாக இருக்கும். சுசீலாவின் பாடல்களை விரும்பி கேட்பாள்.

 

 

சில வருடங்களுக்குப் பிறகு கதிர் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஜெயராணிக்கு திருமணமாகிவிட்டது என தெரிந்தது. கதிர் ஜெயராணியை நினைத்து ஏங்கினான். அவள் கொஞ்சிப்பேசியதை உண்மை என நினைத்து வருந்தினான். பின் சில மாதங்களில் ஜெயராணி கணவன் வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததை கேள்விப்பட்டு வருந்தினான். பள்ளி ஜன்னலின் வழியே சுற்றும் பெரிய காற்றாடியை பார்த்துக்கொண்டேயிருந்தான். காற்றாடியில் ஜெயராணியின் முகம் சுழல்வதை போன்றிருந்தது கதிருக்கு.

 

“கதிர் இப்ப பெரியவனாகிட்டானா”? எனக் கேட்டான் தார்ஸி..

 

ஆம் என்றேன்.

 

கதிர் ’பாவம்’ என்றான்.

 

’ஹாச்சூ நதி’ நதியோரம் இருக்கும் கற்பாறையில் நதியின் நீர் படிந்து படிந்து பச்சையேறி இருக்கிறது. இந்தக் கற்பாறையை போன்றுதான் நம் மனங்களுமா, நம்மை நேசித்தவர்களின் நினைவுகளை சுமந்து சுமந்து அவர்களின் நினைவுகள் நம் மனதில் மாறாத வண்ணமாக படிந்துவிடுகிறதா?…

தார்ஸி சிறிய கல்லை எடுத்து ஹாச்சூ நதியில் வீசி எறிந்தான்; கல் நதியில் வட்ட வடிவ நீர்த்திவலைகளை உண்டாக்கியவாறு மூழ்கியது.

 

தார்ஸி புன்னகைத்தான். நானும் புன்னகைத்துக்கொண்டே தார்ஸியின் கரங்களைப்பற்றினேன். தார்ஸி கண்டிப்பாய் உணர்ந்திருப்பான் எனது கரங்கள்தான் கதிரின்கரங்களென.

 

6 Responses so far.

 1. Kannan says:

  அருமையான கதை நண்பரே..

 2. விஜயகுமார் says:

  அருமை, கதைக்குள் கதைகள் , நேர்த்தியான சொல்லாடல், ஹாச்சூ நதியின் கரையில் நானும் நடந்த ஆனந்தம். காதல் எனும் சூரியனை மறைத்துக்கொண்டு நிறைய கதிர்கள் பயணப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள் .

 3. Ramachandran says:

  அசத்திட்டீங்க போங்க ………

 4. D Narayanasamy says:

  nice story, lot of improvements in writing , keep going all the best

 5. ராஜாங்கம் says:

  படிக்க ஏதோ பயம் என்னை தொற்றிக் கொண்டது கடைசியில் கர்மா, ஜெயராணி மரணம். மகிழ்ச்சி இல்லை மரணம் நிச்சயமாக யாருக்கும் மகிழ்ச்சி தருவதில்லை
  மனசு வலி அண்ணனின் மரணம்

 6. Saravanan says:

  All the best nice story..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube