நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

`

என்ற குறளின் பொருளுக்கேற்றார்போல் , தான் கற்றுக்கொண்ட நூல்கள் பற்றியும் , தன்னுள் எழும்பிய சமுதாயக்கருத்துக்களையும் “ நவில்தொறும்” என்ற இந்தப் புத்தகமாக நமக்கு கொடுத்துள்ளார் ஆசிரியர் எம்.ஏ.  சுசீலா அம்மா அவர்கள்.

Susila mam Wrapper

வாசிப்பின் முதல்படியில் இருக்கும் தோழர்களுக்கு இந்தப்புத்தகத்தின் வாயிலாக பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இயலும். புத்தகத்திலுள்ள பத்தொன்பது கட்டுரைகளில் எவற்றையும் தவிர்க்க இயலாது வாசிக்க தூண்டுவதுதான் ஆசிரியரின் சாதனை.

 

ஒரு மாற்றுப் பரிணாமமாய்” என்ற கட்டுரையில் மனோஜ் குரூர் எழுதியிருக்கும்” நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற நாவலைப்பற்றி நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். சங்ககால வாழ்க்கையை, பண்பாட்டை, நிலவியல்காட்சிகளை நமக்கு அறிமுகப்படுத்துவதாக கூறுகிறார் ஆசிரியர். இந்தக் கட்டுரையை படிக்கும்பொழுது நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமெழுகிறது.

 

 

அ. முத்துலிங்கம் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது எழுத்துநடையும் நகைச்சுவை உணர்வும் , அவரது பரந்த வாசிப்பும், பல நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களும் அந்த அனுபவங்களை அழகிய எழுத்து மாலைகளாக கோர்த்துத்தரும் லாவகமும் அவரது தனிச்சிறப்பு. சுசீலா அம்மாவின் “ புனைவாகும் குறிப்புகள்” என்ற கட்டுரையை வாசித்தபின் (அ. முத்துலிங்கம் அவர்களின்” உண்மை கலந்த நாட்குறிப்புகள்” பற்றிய வாசிப்பு அனுபவம்) எனக்கு முத்துலிங்கம் அவர்களின் புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. மதுரை இரயில் நிலையம் எதிரிலுள்ள மல்லிகை புத்தக அங்காடிக்குச்சென்று ”மகாராஜாவின் ரயில் வண்டி” என்ற அவரது சிறுகதை புத்தகத்தை வாங்கிப்படித்துக்கொண்டுள்ளேன்.

 

 

தீவிரவாதத்தின் நிழலில்” என்ற கட்டுரை ”கலங்கிய நதி” நாவலின் வாசிப்பு அனுபவமும், அதோடு அந்த நாவல் வாசிப்பவர்களின் உள்ளத்தில் உண்டாக்கும் கேள்விகளையும் நமக்கு முன் வைக்கிறார்.

இந்த நாவலை நான் டெல்லியிலிருந்தபொழுது வாசித்துள்ளேன். வடக்கு வாசல் அலுவலகத்தில் இந்த நூல் மதிப்புரையை தட்டச்சு செய்யும்பொழுது நானும் உடனிருந்தேன் என்ற நினைவும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நூல் விமர்சனத்தில் எனக்குப்பிடித்த வரிகள்

 

நதியின் ஓரத்தில் உட்கார்ந்தபடி, இளைப்பாறிக் கொண்டே அதை ரசித்துக்கொண்டிருக்கும் வரையில் – அதன் வெள்ளத்தில் மிதந்து பிழைக்கத் தேவையில்லாத வரையில் – நதியின் காட்சி பார்வைக்கு அழகானதுதான். நெருங்கிச் செல்லும்போது கசண்டும் குப்பையுமாய்ச் சாக்கடை நாற்றமடிக்கும் அந்தக் கலங்கிய நதிக்குள் இறங்கித் தூர்வாரித் தூய்மை செய்யும்ப்போதே சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது

 

இ.பா.வின் கண்ணன் என்ற கட்டுரை இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ”கிருஷ்ணா கிருஷ்ணா” நூலைப்பற்றியும் . மரபின் வேர்களோடு நவீனம் என்ற கட்டுரை நாஞ்சில் நாடன் அவர்கள் சாகித்திய அகாதமி விருதுபெற்ற புத்தகமான “ சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பை முன்வைத்துமிருக்கிறது. சூடிய பூ சூடற்க நூலுக்கான பாராட்டுவிழா நடைபெற்றபொழுது நாஞ்சில் அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இந்த நூலைப்பற்றியும் , சுசீலா அம்மா அவர்கள் இந்த கட்டுரையை மேடையில் வாசித்தபொழுது கேட்ட நல்தருணங்களையும் நினைவில் கொண்டு நிறுத்துகின்றன.

FB_IMG_14465573296468646

இன்னும் புத்தகத்தில் உள்ள பல கட்டுரைகளை வாசிக்கும் பொழுது எழுத்தாளர் வண்ணதாசனையும் , மொழிபெயர்ப்பாளர் கொல்கத்தா கிருஸ்ணமூர்த்தி அவர்களைப்பற்றியும், அற்புதமான வங்க நாவல்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. 36 வங்க நூல்களை தமிழுக்கு அவர் மொழிபெயர்த்து தந்திருக்கிறார் என்பதை படிக்கும்பொழுது ஆச்சர்யமாக உள்ளது.                     ”நீலகண்ட பறவையைத்தேடி” என்ற வங்க நாவலை இன்னும் படிக்கவில்லை. மதுரையில் தேடி வாங்க வேண்டும்.

புத்தகங்களைப் பற்றிய பார்வை மட்டுமல்லாமல் தனது இருபெரும் அற்புதமான மொழிபெயர்ப்புகளான “ குற்றமும் தண்டனையும்” மற்றும் அசடன் நாவல்கள் பற்றிய மொழிபெயர்ப்பு அனுபவத்தை ”இரண்டு பயணங்கள்” என்ற கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். (தஸ்தயெவ்ஸ்கி என்ற எழுத்தாளரை சுசீலா அம்மாவின் மொழிபெயர்ப்பு வழியாகத்தான் கண்டடைந்தேன்)

 

தஸ்தயெவ்ஸ்கி எப்படி தன்னுள் உட்புகுந்தார் என்பதை மிக அற்புதமாக சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.

 

கண்ணகி பற்றிய கட்டுரைகளும் , ஆண்டாள் பற்றிய கட்டுரையும், பாரதி பற்றிய கட்டுரைகளும் நமக்கு ஆசிரியரின் தமிழ் பற்றையும், தமிழ் ஆற்றலையும் நமக்கு காட்டிச்செல்கிறது.

 

மரபிலிருந்து, நவீன இலக்கியம் வரை அனைத்து விசயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன.

 

இந்த அற்புதமான புத்தகத்தை தமிழ் வாசகர்களுக்கு தந்த சிறுவாணி வாசகர் மையத்தை வணங்குகிறேன். வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நல்ல புத்தகங்களை வெளியிட்டு வருகிறது சிறுவாணி வாசகர் மையம்.

 

வாசகர்கள் அனைவரும் சிறுவாணி வாசகர் மையத்தில் இணைந்து அறிவார்ந்த விவாதங்களை தொடர வேண்டும் என்பது என் விருப்பம்

 

siruvanivasagar@gmail.com   26731059_2124651267765447_3651572600503456583_n

Cell N0: 94881 85920

99409 85920


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube