IMG-20200108-WA0022

இலக்கிய வாசிப்பைத் தன் வாழ்வின் மூச்சாகவே கொண்டிருக்கும் தேவராஜ் விட்டலன், படைப்பிலக்கிய தாகத்தோடு பல ஆண்டுகளாக அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து கடுமையான உழைப்போடு முயன்று வருபவர். இணைகோடுகளான இந்த இரண்டு செயல்பாடுகளுமே இன்று அவர் எட்டியிருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கின்றன.

‘கைக்குட்டைக் கனவுகள்’(2008),ஜான்சிராணியின் குதிரை (2016)ஆகிய இரு கவிதை நூல்களை வெளியிட்டிருப்பதோடு, கணையாழி, உயிரெழுத்து, பயணம் போன்ற தேர்ந்த இலக்கிய சிற்றிதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதி வரும் அவர், க சீ சிவகுமார் நினைவுச் சிறுகதைப்போட்டியில் சிறந்த சிறுகதைக்கான பரிசையும் வென்றிருக்கிறார். விட்டலன் எழுதியிருக்கும் ஒரு சில சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘காஷ்மீரியன்’ என்னும் நேர்த்தியான முதல் தொகுப்பாக வெளிவரும் இந்தத் தருணம் – அவரது படிநிலை வளர்ச்சியைப் பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியாக அவதானித்து வருபவள் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.

புனைவு என்பது வாழ்வை மையமிட்டது; வாழ்வின் அடித்தளத்தில் கால் கொண்டிருப்பது; அதைச்சார்ந்தே இயங்குவது. கதையிலோ கவிதையிலோ அசலான தன்மையோடு அது முகம் காட்ட வேண்டுமென்றால் அதற்கான முதல் தேவை புனைவில் வைக்கப்படும் வாழ்வோடு படைப்பாளி கொண்டிருக்கும் நேரடியான பரிச்சயம்; அந்த வாழ்வோடு இணக்கமும் பிணக்கமுமாய் அவன் கொண்டிருக்கும் ஊடாட்டம். தனக்குப் பழக்கப்படாத களம்.., அறிமுகமில்லாத மனிதர்கள் என்று தான் விரும்பிய எதை எழுதவும் ஒரு படைப்பாளி உரிமை பெற்றிருக்கிறான் என்றபோதும் அவன் காலூன்றி நிற்கும் களத்தில் அவனது எழுத்துக்கள் தோய்ந்திருக்கும்போதுதான் உண்மைக்குப் பக்கத்தில் நின்றபடி அதன் நம்பகத் தன்மைக்கு வலுச் சேர்க்கின்றன.

விட்டலன் கதைகளின் இயங்குதளங்கள் அவ்வாறானவையே. தில்லி,ராஜஸ்தான்,பஞ்சாப், ஜம்மு என இராணுவப்பணி நிமித்தம் புனைகதை ஆசிரியர் செல்ல நேர்ந்த பல வட மாநிலங்கள், பிறரால் எளிதில் செல்ல முடியாத எல்லையோரப் பகுதிகள், பூடான் முதலிய அண்டை நாடுகள் எனப் பலவற்றிலும் அவரது புனைவுகள் சஞ்சரிக்கின்றன. குறிப்பிட்ட அந்த இடங்களின் நிலவியல் தன்மைகள்,அங்குள்ள தட்பவெப்பம்,அங்கே மட்டுமே மலரக்கூடிய பூக்கள்..கிடைக்கக்கூடிய பழங்கள்..உண்ணக்கிடைக்கும் உணவு வகைகள்..வித்தியாசமான பல பெயர்கள் என்று தான் செலவிட்ட இடங்களின் நுட்பமான தகவல்களை நுண்ணுணர்வோடும் கூர்மையோடும் உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டிருக்கிறது அவரது படைப்பு மனம். அதனாலேயே வேறுபட்ட புதிய பின்னணிகளோடு கூடிய கதைகள் இத் தொகுப்பில் வாசிக்கக்கிடைக்கின்றன. அதிகம் அறிந்திராத இராணுவ ’பாரக்’குகள்,’பங்கர்’கள் இவற்றினூடே பயணிக்கும் அனுபவத்தை வாசகர்களும் பெற முடிகிறது. குறுகிய கால முகாம் வாழ்விலும்- மொழி,இனம் போன்ற குறுகிய வரையறைகளைத் தாண்டி இராணுவப் பணியாளர்கள் ஒருவரோடொருவர் கொள்ளும் நட்பு, பகிர்ந்து கொள்ளும் காதல் அனுபவங்கள்,பிரிய நேரும்போது எழும் மெய்யான துயரம் ஆகியவற்றை உணரவும் முடிகிறது.

விட்டலனின் மற்றோர் இயங்கு தளம் அவர் பிறந்து வளர்ந்த மண் மணம் கமழும் தென் தமிழ்நாட்டுக் கிராமப்பகுதிகள். வானமே எல்லையாக்கிப் பிரதேச எல்லைக்கோடுகளைத் தாண்டிப் பறந்தாலும் தானிருந்த கூட்டுக்குத் திரும்புவதை மறக்காத பறவைகள் போலத் தன் சொந்த மண்ணின் நினைவுகளையும் பதிவுகளாக்கத் தவறவில்லை அவரது எழுதுகோல். சொல்லப்போனால் உலகின் எந்த மூலையிலும் நிறைந்திருக்கும் அன்பு,பாசம்,காதல் ஆகிய உணர்வுகளின் பொதுப்படைத் தன்மையை வெளிச்சமிடும் வகையில் அவரது நிறையக் கதைகள் வடக்கு தெற்கு என இரண்டுக்கும் பாலமிடும் வகையிலும் கூட அமைந்திருக்கின்றன. பூட்டானில் உள்ள தார்ஸிக்கு ஜெயராணியின் கதையை சொல்ல முடிவதும் [ஹாச்சூ], பல வயதான வடநாட்டு முதியவர்கள் தமிழ்நாட்டு கிராமங்களின் தாத்தாக்களைக் கதை சொல்லிக்கு நினைவூட்ட முடிவதும் இதனாலேதான். படைப்பின் உள்மன வழிகாட்டலில் நேர்ந்திருக்கும் இனிய தற்செயல் வெளிப்பாடுகளான இவை கதைகளின் நேர்த்தியைக் கூடுதலாக்குகின்றன.

அயல்புலங்களை மையமிட்டு அமைந்திருக்கும் ஜான்ஸி,காஷ்மீரியன்,ஹாச்சூ முதலிய கதைகளைப்போல சொந்த மண்ணில் மட்டுமே வேர் பிடித்து நிற்கும் முத்துலட்சுமியின் கேள்வி,இருவேறுலகங்கள் போன்ற வேறு சில கதைகளும் தொகுப்பில் உண்டு. வடிவ நேர்த்தியில் சிறப்பான கதைகளுக்குக் காட்டாக இரு வேறுலகம்,சில்லரை ஆகியவற்றைச் சொல்லலாம். சிறுகதைகளுக்குத் தேவையான சொற்சிக்கனமும்,வருணனையில் மிகையற்ற கச்சிதமும் பல சிறுகதைகளில் கைகூடியிருக்கின்றன. முத்துலட்சுமியின் கேள்வி மனித மனச்சாட்சியை அசைத்துப்பார்க்கும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது. கதை நிகழ் பின்புலம் எதுவென்றாலும் ‘காஷ்மீரியன்’ தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் மானுட நேயத்தைப்பற்றி..அதில் ஊறும் அளவற்ற கருணை பற்றி, சக உயிர்களின் பால் வற்றாமல் சுரக்கும் அன்பைப்பற்றியும் பேசுகின்றன. இன்னும் செம்மைப்பட்டாக வேண்டிய மனிதப்பண்புகளை மென்மையாகக் கோடி காட்டும் அம்மாவின் வாசனை போன்ற கதைகளும் உண்டு.

விட்டலனின் கதைகள் வாழ்வின் போதாமையை, அவலங்களை, சிக்கல்களைப் பெரிதுபடுத்தியபடி கழிவிரக்கத்தோடு அங்கலாய்த்துக் கொண்டிருப்பதில்லை. மாறாக மனிதர்களின் நல்லுணர்வுகளை, நேர்மறை உணர்வுகளை முன்வைத்து அவற்றின் வழி மானுடத்தை மேலும் முன்னகர்த்துவதே இக்கதைகளின் சாரமாக இருக்கிறது. வாசகர்களுக்கு வேறுபட்ட அனுபவங்களைத் தருவதாக இருக்கும்’காஷ்மீரியன்’ தொகுப்பு வெற்றி பெற வேண்டுமென்றும், புனைவு வெளியில் புதுப்புது நவீன உத்திகளைக் கையாண்டு இன்னும் பல சிகரங்களை திரு தேவராஜ் விட்டலன் எட்ட வேண்டுமென்றும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

 

நன்றி: எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா அம்மா


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube