எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள் எப்பொழுதும் மனதிற்கு நெருக்கமான உணர்வினைத் தரக்கூடியவை. சமீபத்தில் மகாராஜாவின் ரயில் வண்டி என்ற அவரது சிறுகதைத் தொகுப்பை படித்தேன். தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் படித்தபின் நம் மனதில் சிறு மகிழ்ச்சியையோ, சோகத்தையோ  கதைகள் உருவாக்கிவிட்டுச் செல்கின்றன.

பத்மாவதி என்ற பெண்ணின் அகமனதின் ஏக்கங்களை “கொம்புளானா” என்ற சிறுகதையில் கூறியிருப்பார். பத்மாவதி தன் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் பணிகளை , கணவன் முதல் குழந்தைகள் வரை யாரும் புரிந்துகொள்வதில்லை. குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு மெசின் போன்றே அவளை எண்ணுகின்றனர்.a muttu

ஒரு முறை பத்மாவதிக்கு பிறந்தநாள் வருகிறது. கணவன் பிறந்தநாள் பரிசாக ஒரு பார்சல் தருகிறான் மிகுந்த ஆவலோடு அந்த பார்சலில் தான் ஆசையாக கேட்ட ஒரு செருப்போ, ஜிம் ட்ரெஸ்ஸோ அல்லது தான் படிக்க விரும்பிய புக்கர் பரிசு பெற்ற புத்தகமோ என எண்ணிக்கொண்டே பார்சலை பிரிக்கிறாள். அந்த பார்சலில் இருப்பதோ சைனீஸ் நூடில்ஸ் சமைப்பதற்கு ஏதுவான ஒரு பாத்திரம். தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை முகத்தில் காட்டாமல் “தாங்க்யூ” என்கிறாள்

கதையின் இறுதிவரிகள் இப்படி முடிகின்றன.

“அடுத்த பிறந்த தினத்துக்கு இன்னும் 364 நாட்கள் இருந்தன. அதன் வரவை நினைத்தால் அவளுக்கு கிலி பிடித்தது. அந்த தினத்தில், பிறந்த நாள் பரிசாக பீட்ஸா பாத்திரம் கிடைத்துவிடக்கூடும் என்ற பீதி இப்பொழுதே அவளைப் பிடித்து ஆட்டத் தொடங்கியது.

மகாராஜாவின் ரயில் வண்டி என்ற சிறுகதையில் ஜோர்ஜ் மாஸ்ட்டர் வீட்டில் தங்கும் ஒருவனுக்கும், மாஸ்ட்டர் மகளான ரொஸலினுக்கும் உருவான காதலை இதமான மொழிநடையில் சொல்கிறார். அந்த நிறைவேறாக் காதலையும் , ரொசலினின் நினைவுகளையும் அவனே மீண்டும் நினைத்துப்பார்க்கிறான்.

அந்த அழகானக் காதல் கதையை படிக்கும்பொழுது எழுத்தாளர் சின்ன சின்ன விசயங்களையும் அற்புதமாக பதிவு செய்துள்ளார் என்பதை உணரமுடிகிறது.

ராகுகாலம்” கதையில் நைரோபியாவில் பணி செய்யும் ஒருவனுக்கும் அவனது அலுவலகத்தில் ஓட்டுனர் பணியிலிருக்கும் “ மாரியோ                ங் கோமா” என்பவனைப் பற்றியும் அவனைச் சுற்றியும் கதை நகர்கிறது. கதையைப் படிக்கும்போது முத்துலிங்கம் அவர்களின் அங்கதத்தன்மை மிக்க எழுத்துக்களை படித்து மகிழலாம்.

அவன் ராகுகாலம் என்றாள் என்ன எனக்கேட்கிறான். அவனுக்கு ராகுகாலத்தைப் பற்றி விளக்குகிறான் கதைச்சொல்லி. பின் கதைச்சொல்லியே அவனுக்கு வேறு அலுவலகத்தில் பணி ஏற்பாடு செய்துவிட்டு அங்கே போ என்கிறான். சில மாதங்கள் கழித்து சாலையோரத்தில் அவனைப் பார்க்கும் பொழுது நான் அனுப்பிய பணி ஏற்பாடு என்ன ஆயிற்று எனக்கேட்டபொழுது.

அங்கிருந்து அழைப்பு வந்தது.

ஆனால்

அது சரியான ராகுகாலம் என்கிறான்.

தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் என்ற கதையில் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றபோது குளத்தில் மூழ்கி இறந்த தன் தம்பியின் மரணத்தை என்னும் அண்ணனின் மன வேதனையை அற்புதமாக பதிவு செய்கிறார்.

“சுருட்டி விடும் கன்வஸ் திரைகள் கொண்ட, ஒஸ்டின் செவன் பெட்டி வடிவக் கார் சன்னல் கரை இருக்கையை, திரும்பி வரும்போது அவனுக்குக் கொடுத்த வாக்கை நான் காப்பாற்ற முடியாததையும் சொல்லவில்லை” எனக் கதை முடிகிறது

தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் அற்புதமானவை.

யூட்யூப்பிலும் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள் ஒலி வடிவில் கிடைக்கின்றன.

இரவில் அந்தக்கதைகளைக் கேட்டுக்கொண்டே தூங்கும்போது பல அன்பு முகங்கள் நமக்கு கனவுகளில் தோன்றுவதை யாராலும் மறுக்க இயலாது.

https://amuttu.net/

 

 

 

 

 

 

 

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube