கிறிஸ்துமஸ் சமயத்தில்.. (ஆண்டன் செக்காவ்)

தமிழில் : எம்.ஏ.சுசீலா

ஆண்டன் செக்காவ் கதையை மிக எதார்த்தமாக நகர்த்திக்கொண்டு போய் முடிவில் மனதில் கதாபாத்திரங்களின் மேல் அன்பை, ஏக்கத்தை  மனதில் உண்டாக்கிவிடுவார். செக்காவின் எளிய எதார்த்தமான நகைச்சுவை உணர்வு மிக்க கதை சொல்லல் முறைக்குத்தான் அனைவரும் செக்காவ்வை இன்றளவும் விரும்பி படிக்கிறார்கள்.

சமீபத்தில் கனலி தளத்தில் வெளியாகியுள்ள ”கிறிஸ்துமஸ் சமயத்தில்” என்ற சிறுகதையை படித்தேன். எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

தொடர்ந்து செக்காவை படித்துவருகிறேன்.”ஆண்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள்” என திரு சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பில் பல கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பை கிண்டல் வழியாகப்படித்தேன். இந்த தொகுப்பில் கிறிஸ்துமஸ் சமயத்தில் என்ற இக்கதை இல்லை.

இனி செக்காவின் கிறிஸ்துமஸ் சமயத்துக்குச்செல்லலாம்…

”வஸிலிஸா” என்ற  மூதாட்டி நீண்ட காலமாக பிரிந்திருக்கும் தன் மகளை எண்ணி ஏங்குகிறாள். கிறிஸ்துமஸ் சமயத்தில் அவளுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்ளவும் ஏன் தனக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்ற ஏக்கத்தை மனதில் சுமந்தபடி மகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என நினைக்கிறாள். வஸிலிஸாவிற்கு எழுதப்படிக்கத் தெரியாது. தன் வயதானக் கணவன் பியோடரோடு , ”யெகர்: என்ற மதுக்கடையில் இருப்பவனிடம் கடிதம் எழுதித்தருமாறு கேட்கிறாள். அவன் பணம் பெற்றுக்கொண்டு கடிதம் எழுதி தருபவன்தான். இவன் முன்னாள் இராணுவ வீரன். “வஸிலிஸா” என்ற அந்த மூதாட்டி தன் மன உணர்வுகளை முழுவதுமாய் வெளிப்படுத்த இயலாமல் துன்புருகிறாள். மகளின் நினைவே அந்த மூதாட்டியின் மனதை ஆட்கொண்டிருக்கிறது.

’வஸிலிஸா” சொல்லச் சொல்ல யெகர் எழுதுகிறான். ஒரு கட்டத்தில் அவளிடமிருந்து பதில் வராததால் என்ன எழுதுவது எனக்கேட்கிறான்.

அப்போது பியோடர் உங்களைப்போல தன் மருமகனும் இராணுவ சேவையை முடித்துவிட்டு பீட்டர்ஸ்பர்கில் காவலாளியாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர்தான் என்கிறார்.

யெகரும் இராணுவத்தில் பணிபுரிந்துள்ளதால் தன் இராணுவ சம்பாசனைகளை கடிதத்தில் எழுதுகிறான்.

ஒரு கட்டத்தில் வஸிலிஸா பணம் கொடுத்துவிட்டு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு செல்கிறாள்.

கடிதம் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மகள் யெஃபிமியாவைச் சென்றடைகிறது. தனது மூன்று குழந்தைகளுக்கு தன் அம்மா, அப்பாவிடமிருந்து கடிதம் வந்ததைக் காண்பித்து சந்தோசத்தில் மகிழ்கிறாள். தன் பால்ய கால கிறிஸ்துமஸ் விழாவை கிராமத்தில் கொண்டாடி மகிழ்ந்ததை நினைவுகொள்கிறாள்.

தாத்தாவைப் பற்றியும் , பாட்டியைப் பற்றியும் , ஊரைப்பற்றியும் குழந்தைகளுக்கு சொல்கிறாள்.

கடிதத்தை குடுத்துவிட்டுச் சென்ற கணவனின் காலடி சப்தத்தைக் கேட்டு பயந்து நடுங்குகிறாள்.

மகளை எண்ணி ஏங்கும் தாயின் ஏக்கத்தோடு தொடங்கும் சிறுகதை, தாய், தந்தையை எண்ணி ஏக்கத்தோடிருக்கும் மகளின் வலியோடு முடிகிறது.

கடிதத்தின் வாயிலாய் ஒரு அற்புதமான சிறுகதையை கொடுத்துள்ளார் ஆண்டன் செக்காவ்.

பிற மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது எம்.ஏ.சுசீலா அம்மாவின் மொழிபெயர்ப்பு கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறது.

சிறுகதையை படிக்க..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube