தனிமையில் இருக்கும் தன் வாழ்க்கையில், தனது கடந்தகால வாழ்வை நினைத்தபடியே வாழும் செங்காடனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, இந்த கல்லும், மண்ணும் நாவல்.
நிலத்தையும், நிலம்சார்ந்த நினைவுகளையும், தன்னுள்ளையே அசைபோட்டபடி வாழ்க்கையை கடந்துகொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் செங்காடன். செங்காடன் தான் நாவலின் முதன்மை கதாபாத்திரம். நேரடியான வர்ணனைகளை தவிர்த்து, கதாபாத்திரங்களின் வழியாய் ,புனைவை முதன்மை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர்.
கோவை நகரின் அருகில் வசிக்கும் விவசாயி செங்காடன், தனக்கென உறவுகள் எதுவுமின்றி தனிமையிலேயே கழிந்த தன் வாழ்க்கையையும், தன் இளமைக்கால நினைவுகளையும் எண்ணிக்கொண்டும் , ஏங்கிக்கொண்டும் வாழ்க்கையை கழிக்கிறான். அவனுக்கு துணையாய் இருக்கும் ஒரே ஒரு ஜீவன் “கரையான்” (சிறுவன்) மட்டுமே. கரையானைத் திட்டி வேலை வாங்கும்போதுகூட அவன்மீது செங்காடன் கொண்டுள்ள கரிசனம் அற்புதமாக நாவலில் வெளிப்படுகிறது. செங்காடன் என்ற முதியவனின் நினைவுகளில் மிதந்து செல்கிறது கல்லும், மண்ணும் நாவல் என்னும் படகு. நாவலைப் படிக்கும்பொழுது எனக்கு பல இடங்களில்” நிலவறைக் குறிப்புகள் ” நாவலில் வரும் கதாப்பாத்திரத்தை நினைவுபடுத்துகிறது செங்காடனின் கதாபாத்திரம். கல்லையும், மண்ணையும் சார்ந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் செங்காடன், அவனுக்கு உதவி செய்யும் கரையான் இந்த இரு கதாபாத்திரங்களின் மூலமே கதையையும், நில அமைப்பையும் தனது வித்தியாசமான கதை சொல்லல் முறையில் தனிச்சிறப்பு செய்துள்ளார் ஆசிரியர்.
1960 களில் வெளிவந்த நாவலை மீண்டும் இத்தலைமுறை வாசகர்களின் கரங்களில் உழவ விட்டதற்கு சிறுவாணி வாசகர் மையத்திற்கு நன்றி.நாவலில் நான் ரசித்த சில வரிகளை இங்கே பதிகிறேன்.
“அமிழ்தம் அங்குத் தேங்கித் தன் காலடியில் நிற்பதாகவே அவனுக்குத் தோன்றியது. கவிஞன் தன் பாட்டைத் தானே பாடி அனுபவிக்கும் இனிமையையும், நிறைவையும் அவன் அந்த நீர்ப்பரப்பைப் பார்க்கும் போது அடைந்தான். இசை நீராக உருவெடுத்துத் தேங்கியிருக்குமானால் அதைக் காணும் இசைக் கலைஞன் எப்படி மகிழும்? அவன் மனத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், நிறைவும் அதைப் பார்க்கும்போது குடிகொண்டன. அவன் என்றோ இழந்துவிட்ட அவளுடைய அன்பு அவன் மனக்குறையைப் போக்க அங்கு நீராக உருவெடுத்து ஆழ்ந்து பரந்து குறையாது கிடப்பதாக உணர்ந்தான். அன்போடு அவன் தாய் அவனை அணைத்து ஊட்டிய பாலின் சுவையே, அவன் நினைவில் இல்லையெனினும், அந்த நீரின் சுவையில் கலந்துகிடப்பதாக அவன் எண்ணினான். (ப.எண் 50)
தன் நிலத்தின் மீது பெரும்காதல் கொண்ட செங்காடன் தன் உழைப்பின் மூலம் பாறை மிகுந்த நிலத்தில் கிணறு வெட்டுகிறான். அந்த கிணற்றில் சுவையான நீர் ஊற்றின் மூலம், கிணற்றில் நீர் நிறைந்து தளும்புகிறது. விவசாயமும் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கிணறு நாவலின் இறுதியில் நீர் ஊற்று வற்றி வறண்டுவிடுவது வாசகர்களின் மனதில் பெரும்வலியை தருகிறது.
செங்காடனின் விவசாய நிலத்தின் அருகிலேயே கல்குவாரிக்காக நிலத்தை வெடிவைத்து தோண்டும்போது , செங்காடனின் கிணற்றில் உண்டாகும் ஊற்று திசைமாறிப்போய்விடுகிறது.
இந்த நாவல் மண்ணை நம்பி வாழும் செங்காடனின் (உழைக்கும் வர்கம்) வாழ்க்கை, கல்லினால் (முதலாளி வர்க்கம்) சிதிலமடைந்து வீழ்வதை நாவல் சித்தரிக்கிறது. நாவலை வாசித்து முடிக்கும்போது ஒரு நல்ல நாவலை வாசித்த திருப்தியும், ஆசிரியர் வாழ்க்கையின் உண்மை நிலையை தத்துவார்த்த ரீதியில் நாவலாக புனைந்துள்ளதையும் நம்மால் உணரமுடிகிறது.
நாவலை வாங்க
சிறுவாணி வாசகர் மையம்
பவித்ரா பதிப்பகம்
24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே கே புதூர் (po)
கோவை – 641038
9488185920
9940985920
siruvanivasagar@gmail.com