பால்ய காலத்தில் இருந்தே ராஜேஷ் கண்ணா அவர்களின் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை தற்பொழுதுதான் பூர்த்தி அடைந்துள்ளது. ராஜேஷ் கண்ணா இந்திய சினிமாவின் ஒரு அத்தியாயம். அவரின் திரைப்படங்கள் அன்றைய கால கட்டங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடிக்கொண்டிருக்குமாம் அவ்வளவு ரசிகர்கள். சமீபத்தில் அவதார் என்ற படத்தை பார்த்தேன். அவதார் நிராகரிப்பை சுமந்து திறியும் ஒருவனின் கதை. காதல் நிறைந்துள்ளது, இதே போன்று பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இந்த திரைப்படம் கொண்டுள்ள மையக் கருத்தின் அடிநாதம் இன்றைய சமகால வாழ்வில் இன்னும் இழையோடிக்கொண்டுதான் உள்ளது.

குடும்பத்திற்காகவே வாழும் மனிதனின் அன்பை நிராகரிக்கும் போது, அவனது மனம் இருவேறு நிகழ்வுகளை சந்திக்கிறது 1. மனம் உடைந்து, தன்னை இழந்து கொள்ளலாம். 2. தன்னை நிராகரிப்பவர்களை முழுமையை நிராகரித்து விட்டு ஒரு புது வாழ்வை அமைத்து கொள்ளலாம்.  நம்மில் இரண்டாம் உத்தியை கையாள்பவர்கள் மிக  குறைவு.

 அவதார் திரைப்படமும் இந்த இரண்டாம் உத்தியை மேற்கொண்டு செல்கிறது. தன்னை நிராகரித்த பிள்ளைகளினால் மனம் கவலைப்பட்டு அமர்ந்து விடாமல் வாழ்க்கையை மீண்டும் புத்துணர்வோடு தொடங்கி வெற்றி அடைகிறார் கதாநயாகன்.

வயதான  காலத்தில் பெற்றோர்களை நிராகரிப்பவர்களின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது  இந்த படம்.

இன்றளவும் பசுமையாய்  நினைவில் உள்ளது பால்ய காலத்தில் எங்கள் வீட்டிற்க்கு முன் இருக்கும் ஒரு அரசாங்க கட்டிடத்தில் முதியவள் ஒருத்தி (பாட்டி) இருந்தாள். நான் அந்த பாட்டியிடம் சென்று அமர்ந்து கொள்வேன். அந்த பாட்டிக்கு மூக்குப் பொடி, சூட மிட்டாய், (ஒரு வகையான மிட்டாய் இருமலுக்கு உகந்தது) எங்கள் வீட்டில் உள்ள பனங்கற்கண்டு என எடுத்து கொண்டுபோய் தருவேன். அந்த பாட்டி சந்தோஷத்தில் பூரித்து போவாள்.

பாட்டி தான் வாழ்ந்த கதையையும் தன்னை இந்த நிலைக்கு இட்டுவிட்ட கதையையும் சொல்லி புலம்புவாள். அந்த நினைவுகள் இப்போது மீண்டும் வந்து செல்கிறது. முதுமையை ஏன் வெறுக்கிறோம். குழந்தை காலம், இளமைக் காலத்தைப் போல இதுவும் ஒரு காலம்தானே…

ஏன் அறிவியல் எவ்வளோ வளர்ந்துவிட்ட இக்காலத்தில், இன்னும் நாம் வாழ்க்கைக்கு தேவையான அன்பையும், நேசத்தையும் கற்றுக் கொள்வதில் முழுமையடையாமல்தான் உள்ளோம்.

முதுமையை நான் நேசிக்கிறேன், முதுமை கொண்டாடப்பட வேண்டிய கால கட்டம். அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

இன்றைய கால கட்டத்தில் கூட  முதுமைக்கு நாம் உறிய அங்கீகாரம் தராமல்தான் உள்ளோம். பேருந்துகளில் இருக்கும் முதியவர்களுக்கான இடத்தில் கூட பெரும்பாலும் வாலிபர்கள்தான் அமர்ந்திருப்பார்கள், முதுமையை சுமந்து கொண்டு எத்தனையோ மனிதர்கள் பேருந்துக் கூட்டத்தினுள்  வலியை சுமந்து கொண்டு நின்று கொண்டிருப்பார்கள். இந்த காட்சி பெரும்பாலும் நகரத்தில் அதிகம் காணக்  கிடைக்கிறது.

தினம் தினம் எத்தனையோ  மாற்றங்களை கண்டு வரும் நாம். மனித நேயத்திலும் அதை உட்படுத்தி வருகிறோம் என்பதே வேதனைக்குறிய விசயமாக உள்ளது.

முன்பெல்லாம் சாலையில் நடந்து சென்றாலே “என்னையா எந்த ஊரு எங்கன போற…  கொஞ்சம் தண்ணி குடுச்சுட்டு போயா…”

என  கேட்க்கும்  மனித நேயமிக்க மனிதர்கள் இருந்தார்கள், இப்போது சக மனிதர்களின் மீது பாசம் காட்டும் மனிதர்கள் குறைந்துள்ளார்கள் என்பதே உண்மை…

உலக சினிமா என வெளி நாட்டு திரைப்படங்களை கொண்டாடி மகிழும் நாம், நம் வசம் உள்ள கொண்டாடப்பட வேண்டிய திரைப்படங்களை மறந்துவிடுகிறோம். அவதார் என்ற இப்படம் வெளிவந்து இருபத்தி  எட்டு ஆண்டுகள் கடந்து விட்டாலும்  இத்திரைப்படம் விட்டு விட்டு சென்றுள்ள கருத்து இன்றளவும்  சம கால வாழ்வின்   சாயலாகவே உள்ளது.

One Response so far.

  1. Narayanan says:

    நல்ல விமர்சனம் …..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube