நகரை எண்ணி ஏங்கிய நாட்களுமுண்டு, நகரை விட்டு நீங்கி சென்று விட வேண்டும் என எண்ணிய தருணங்களும் உண்டு.  இப்போதும் ஒரு பெரு நகரத்தில்தான் இருப்பு கொண்டுள்ளேன்.

நகரம் தன் காந்த சக்தியால் என்னை ஈர்த்துக்கொண்டே  செல்கிறது. நானுமொரு இரும்பை போல அதனுடனேயே பயணிக்கிறேன். பால்ய வயதில்  பொன்வண்டுகளை வளர்ப்பதில் தொடங்கிய கனவு, இன்று விஸ்திகரித்துள்ளது. உறவுகளால் சுழட்டி விடப்பட்ட பம்பரமென அவர்களுக்குள்ளாகவே சுழன்று கொண்டிருந்த என்னை, நகரம் சுதந்திரம் தந்து என்னை தன்னுள் ஐக்கியப் படுத்திகொண்டுள்ளது.

உறக்கம் களைந்த  பின்னிரவில்,  ஓயாத அந்த பேருந்து  இரைச்சல்களும், வானில் விமானங்களின் பேரிரைச்சலும்  வலிகளை தந்துகொண்டுள்ளது, மீண்டும் கனவு தேசத்தில் புகுந்து துயில் கொள்ள ஆசை கொண்டாலும் கடமை வந்து துயிலை களைத்துச் செல்கிறது.

நகரம் எப்படி நகரமாய் உரு கொண்டது. ஒரு காலத்தில் இவையும் வனமாகவோ, கற்கள் நிறைந்த பகுதிகளாகவோ இருந்திருக்கலாம், நகரத்தை உருவாக்க நினைத்த முதல் மனிதன் யார்? இல்லை நகரம் தன்னை தானே உருவாக்கி கொண்டதா… என நகரம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே உள்ளது.

நகரத்தில்  நடந்து செல்வதே என விருப்பமாக உள்ளது. நகரம் எண்ணற்ற வேறுபாடுகள் கொண்ட நிலைப்பாட்டினை காட்டிக்கொண்டேதானுள்ளது. நகரத்தில் நிரந்தரமாய் இருப்புகொண்டும், இருப்பற்றும் எண்ணற்ற மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒரு பெரிய பங்களாவின் அருகிலேயே, நடைபாதையில் தான் உடுத்தும் சேலையினை கூடாரமாக அமைத்து ஒரு குடும்பமும் வாழ்கிறது.

ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு அருகிலேயே, தள்ளு வண்டியில் இட்லி, தோசை விற்ப்பவனும் வியாபாரம் செய்கிறான். என எண்ணற்ற காட்சிகள் நகரத்தின் மாறுபட்ட பக்கங்களை தெளிவாய் காட்டிக் கொண்டுதானுள்ளது.

நகரத்தை பற்றி என்னும் வேளை உமா மகேஸ்வரி அவர்களின்  வெறும் பொழுது என்ற அவரது அகவிதை தொகுப்பில் நகரம் பற்றிய முரண் பாடுகளை அழகாய் கூறியிருப்பார்.

என் கண்ணாடிக்குள்ளிருந்து
எட்டிப் பார்த்தது ஒரு புதிய நகரம்.
சிறகுள்ள மனிதர்களும்,
உறங்காத பறவைகளும்
வாழ்ந்தார்கள் அதிலே,
வாடாத பூக்கள்
வற்றாத நதிகள்
அறுபடாத மரங்கள்
உவர்க்காத கடல்
தேவைகளும் திருட்டுகளும்
பசிகளும் ருசிகளும்
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
நாகரீக அநாகரீகங்களுமில்லை.
காலங்களையழித்து  நீளும் நாட்கள்.
பெண்களின் சிரிப்பொலி வேலைப்பளுவின்றி
கணவர்களுக்கு மாறாக காதலர்களும்,
உபதேசிகளின்றி பாடகர்களும்,
அரசியல்வாதிகளின்றி வழிகாட்டிகளும்
குழந்தைகளாகவேயிருக்கிற குழந்தைகளும்
மாமியாராகயிராத மாமியார்களும்
ஆச்சர்யமேற்படுத்தினர்.
கதவுகளில்லாத  வீடுகளும் ததும்பின
கட்டாயங்களற்ற பிரியங்கள்.
தேய்வுறாத சொற்கள்;
கனவுகளின் வாசனை.
அலை பரவும் நித்தியதுவத்தில்
பிறப்பு இறப்பின் மர்மங்கற்று
வரையறுக்கப்படாத மேகத்தன்மையோடி
வசித்தது அந்நகரம் என் கண்ணாடியுள்.
சென்றடைவதற்கான திசைகளையும்
சிறைபடுத்துவதற்கான சாதூர்யங்களையும்
நான் திட்டமிட்ட கணம்,
நகரம் உடைந்து நொறுங்கியது;
கண்ணாடியைக் காணவில்லை..

நகரத்தில் எதையோ தேடி அலைகிறேன் அது எது என எனக்கே தெரியவில்லை, அது தெரியும் தருணங்களில் நகரம் பற்றிய மாயை உடைந்து விடும் என நினைக்கிறேன்.

… குறிப்புகள் தொடரும் …


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube