இன்று, நண்பனுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, பிடிப்பது, பிடிக்காதது பற்றி பேச்சு வந்தது, அவன் வட இந்திய ரொட்டியிலிருந்து, நம்ம ஊர் சாம்பாரை தொட்டு, கணினி மென்பொருளுக்கு வந்து, திரைப்பட நடிகர்கள் வரை தனக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி  கூறிக் கொண்டிருந்தான். எனது முறை வந்த பொழுது நான் எனக்கு பிடிக்காததை பற்றி கூற விரும்பவில்லை, ஏனெனில் நாம் பிடிக்காதது என கூறும் ஒன்று ஒரு சிலருக்கு நிறைய பிடித்திருக்கும். அவர்களுக்குள் ஏன் என் பதில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்க வேண்டும் ஆதலால் என் பதில் எப்போதும் பிடித்தது பற்றியே இருக்கும் எனக் கூறினேன்.

டேய், சாமி ஓங்கிட்ட பேச முடியாதுடா, மொதல புடுச்சத சொல்லுடா என்றான். நான் சிரித்துக் கொண்டே எனக்கு எப்போதும் பிடித்தது ஒன்றே ஒன்றுதான் அது புத்தகங்கள், புத்தக வாசனை எனக்கு மிக மிக பிடிக்கும் என்றேன். மனிதர்களில் கூட நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளார்கள் ஆனால் புத்தகங்கள் அப்படியல்ல, கெட்ட புத்தகங்கள் என நாம் எதையும் ஒதுக்க முடியாது. ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு விசயம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவன் என் பதிலை மௌனமாய் ஆமோதித்தான்.

 அவனிடமிருந்து விடை பெற்ற பிறகு..

டெல்லியின் மாலைக் குளிரோடு என் பயணத்தை துவங்கினேன். சாலையின் இரு புறங்களிலும் மெல்ல மெல்ல குளிர் கசிந்து கொண்டிருந்தது. குளிரை போக்க மனிதர்கள் சாலை ஓரங்களில் தீமூட்டி குழு குழுவாக நின்று கொண்டிருந்தனர். தில்லி தமிழ்ச்சங்கத்தை நோக்கிய என் பயணம் சாலையோர எளிய மனிதர்களை கண்டு கொண்டே நகர்ந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளிலும் ஒரு புத்தகத்தை வாசித்து விட வேண்டும் , பணி நெருக்கடியிலும் கண்டிப்பாய் வாசித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற என் பழைய உறுதி மொழியை இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து தீவிரமாக செயல் படுத்தி வருகிறேன். அதற்கு உறுதுனையாக இருக்கும் தில்லி தமிழ் சங்கத்தையும், தில்லியில் உள்ள இலக்கியத்தை, மனிதத்தை நேசிக்கும் மனிதர்களுக்கும் என் நன்றிகள்.

நூலகத்திற்குள் சென்றவுடன் புத்தக அடுக்குகளில் எந்த ஒரு தேடலும் இன்றி , கிடைத்த புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் . சு.ரா வின் உரைகளின் தொகுப்பு கிடைத்தது, அந்த புத்தகங்களின் பக்கங்களை வாசிக்க துவங்கினேன். அதில் உண்மை இருந்தது எழுத்தையும், எழுத்தாளர்களையும் இரு பிரிவுகளாக பிரித்திருந்தார். அவர் பிரித்திருந்த ஒரு பிரிவினர் இலக்கியத்துக்காக மொழிக்காக வாழ்வியில் கூறுகளை அவதானித்து, மனித வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் இருந்தும் தங்களது தீவிர வாசிப்பின் வழியாகவும், தனது சிந்தனையையும் ஒன்று சேர்த்து இலக்கியம் படைப்பவர்கள், மற்றவர்கள் வெகுஜன ஊடகங்களுக்காக எழுத்து மாயயை உருவாக்கி வாசகர்களின் சிந்தனையை மழுங்கச் செய்பவர்கள்.

ஒரு வாசகன் எப்போது தீவிர எழுத்தாளன் ஆகிறான். அவ்வாறு உருவாகும் போது அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவ்வளவு என்பதை வரையறை செய்திருந்தார். எப்போதும் உண்மையை கூறும் எழுத்துக்களை வாசிக்கும் பொழுது சலிப்புத்தட்டுவதில்லை, எனக்கும் அப்படித்தான் இருந்தது.

பின் நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என நினைத்த காப்காவின் எழுத்துக்களை உள்ளடக்கிய புத்தகம் கண்ணில் தட்டுபட்டது. (காஃப்காவின் கடிதங்கள் கதைகள், கட்டுரைகள் தமிழில்- சா. தேவதாஸ் வ.உ.சி. நூலகம்) அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு நூலகத்தை விட்டு வெளியே வந்த பொழுது, தமிழ்ச் சங்க அரங்கத்திலிருந்து வந்த கிராமிய இசை என் மனதை இழுத்துச் சென்றது . அரங்கத்திற்குள் சென்றேன் அரங்கம் நிரம்பி இருந்தது.

முறத்தால் புலியை விரட்டிய தமிழ் பெண்மகளின் வீரத்தை காட்சியாக நிகழ்த்தினர். அந்த காட்சியில் நடித்த நடிகர்களின் முகபாவங்கள் மிக அருமையாக இருந்தது. இயல்பான நடிப்பு பார்வையாளர்களை வசியம் செய்தது. பின் புலியாட்டம் ஆடினார்கள் அருமையாக வேசம் போட்டுக் கொண்டு ஆடினார்கள் இருவர். ஒரு புலி தன் பருத்த தொப்பையை ஆட்டிக் கொண்டு சீறிக் கொண்டிருந்தது.

சிறிது இடைவெளிக்கு பின் கரகாட்டம் ஆடப்பட்டது. கொட்டுகளின் ஒலி அரங்கத்தையே மெய் சிலிர்க்க வைத்தது. கொட்டுகளின் ஒலியை கண்களை மூடிக் கொண்டு கேட்ட பொழுது, எனது கிராமத்தில் நடக்கும் திருவிழாக்களின் நினைவுகள் மனதில் காட்சிகளாய் விரிந்து நின்றது.

மனிதத்தை மறந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இக்கால சூழ்நிலையில் கிராமிய இசையை, கிராமிய கலைஞர்களைக் கண்டது மனதிற்கு ஆறுதல் அளித்தது. “கொல வெறி கொல வெறி டி யை கேட்டு சலித்து போன என் செவிகளுக்கு, இந்த குளிர்காலத்தில் கிராமிய இசையை கேட்டது மனதிற்கு நிறைவாய் இருந்தது.

5 Responses so far.

  1. சிறியதொரு மாலை அனுபவம்…மிக மென்மையாக..உண்மையாக,…மெய்யான உணர்வுகளோடு பதிவாகியிருக்கிறது விட்டலன்.
    உங்கள் எழுத்தில் நாளும் முதிர்ச்சியும் நயமும் கூடி வருவது கண்டு மகிழ்கிறேன்…

    • Caelyn says:

      Along with the whole thing that appears to be developing within this area, your points of view are generally rather refreshing. Nonseheltse, I beg your pardon, because I do not subscribe to your whole theory, all be it refreshing none the less. It would seem to me that your commentary are generally not entirely validated and in simple fact you are yourself not really completely confident of the assertion. In any event I did enjoy reading through it.

  2. வாசிக்கச் சுகமான எழுத்து. வாழ்த்துகள்.

  3. sathya says:

    மிக்க அழகு..வாசிப்பு உங்களை வான் அளவு உயர்த்துகிறது..வாழ்த்துகள் நண்பரே..

  4. Narayanan says:

    அழகான அனுபவம் ……..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube