வாழ்க்கையே ஒரு கேலிசித்திரம் தானா? கடவுள் வரைந்த சித்திரங்கள் தான் நாமா? இயற்கை முதல் மனித உருவங்கள் வரை எத்தனை விதமான சித்திரங்கள் எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் என எத்தனையோ கேள்விகள் மனதில் எழுந்து மறைகிறது.   திரு. கல்யாண்ஜி அவர்களின் முழுத்தொகுப்பை ஒரு சேர வாசிப்பது இம்முறைதான் விகடனில் அவரது கவிதைகளை வாசித்துள்ளேன். அகம் புறம் தொடரை ரசித்து ரசித்து வாசித்த அனுபவம் நினைவில் வந்து செல்கிறது.

கதையை புரிந்துகொள்ளும் மன நிலையை விட ஒரு கவிதையை விரைவில் புரிந்து கொள்வது இயலாத காரியமாய் உள்ளது. பல முறை கவிதையினுள் பிரவேசித்து அதன் ஜீவனை பார்த்து வாசித்து ரசிக்க பல கணங்கள் தேவைப்படுகிறது.

தாயின் கருவறையில் இருந்து வெளி வரும் சிசு இக்கணத்தில் பிறக்குமென யாராலும் உறுதியாக கூற முடியாததுபோல்தான் ஒரு கவிதை பிறக்கும் கணங்களும். கவிதை ஏதோ ஒரு கணத்தில் பிறந்து மலர்ந்து மனம் வீசுகிறது.

மழை குறித்த கவிதையில்

மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா..
ஒரு பச்சை புழுவைக் காணோம் வெகுநாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொருக்கி போய் விட்டதாக..

எனத் தொடங்கும் கவிதை ..

இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள்ளே தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்..
என முடிகிறது..

மழையை நாம் மழையாக ரசித்து பார்ப்பதில்லை, மழை நமக்கு தறுகின்றது, நாம்தான் அதை வரவேற்ககூடிய மன நிலையில்லாமல் உள்ளோம் என்பதை அழகான கவிநயதோடு உணர்த்தியுள்ளார்.

குப்பைக் கேள்விகள் என்ற கவிதையில்

இதோ கிடக்கிற இந்த உரையில்
யாருக்கு யார் எழுதிய கடிதம்,
இந்த மாத்திரைத்தாள்
எறிந்தவர் எந்த வீட்டுக் கட்டிலில்
என தொடங்கும் கவிதை
எரியாமல் எரித்திருந்தால்
எத்தனை கேள்விகள்
தவிர்க்கப் பட்டிருக்கும்
குப்பையில் முளைக்காமல்.
என முடிகிறது..

எறியப்பட்ட பொருட்களெல்லாம் வெறும் பொருட்களல்ல அவையும் ஏதோ ஒரு கணத்தில் நம் வாழ்வோடு சேர்ந்து பயணித்துள்ளது. அவற்றுக்குள்ளும் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது என்பதை இக்கவிதை உணர்த்துகிறது .

இப்படித்தான் என்ற கவிதை

நெடும் பொழுது
அனைத்தையும் அணிந்து
நடக்கிறோம்.
சிறுபொழுது
அனைத்தையும் களைந்து
கிடக்கிறோம்.

உயர உயர பறக்கிற பறவை
ஓரோர்கணம்
பறக்காமல் மிதக்கிறது..
இப்படித்தான் இருக்கிறது
எல்லாமும்.

மாறுதல்கள் வாழ்க்கையில் மிகவும் நிலையானது என்பதை வார்த்தைகளில் அழகாகவும் அருமையாகவும் புரிய வைக்கிறார்.  புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் கவிதைகள் பல புரிதல்களோடு காத்திருக்கின்றது தேடுவோர்களுக்காக… கவிதையை நேசிக்கும் அனைவரும் வாங்கி வாசித்து நேசிக்க வேண்டிய புத்தகம் இந்த இன்னொரு கேலிச் சித்திரம்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube