சிகை அலங்காரம்…

எப்போதும் சிகை அலங்காரம் செய்வது எரிச்சல் ஊட்டும் விசயமாகவே உள்ளது. பால்யத்திலிருந்தே நிறைய முடியோடு அலைவது பிடித்தவிசயமாக இருந்து வந்தது. ஆனால் பணி புரியும் அலுவலகம் முடிக்கு நிரந்தர எதிரி. அளவாகத்தான் முடி வைத்திருக்க வேண்டும். அதுவும் ஒழுங்காக முடியை வாரியிருக்க வேண்டும். என்ன செய்வது “எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இன்றைய மாலைப் பொழுதில் மரங்கள் இருபுறமும் அடர்ந்து நிறைந்திருந்த சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். நீங்கள் எங்கே என கேட்பது புரிகிறது. அவசரப்படாதீர்கள் சிறிது பொருங்கள், நான் ஒன்றும் அலிபாபா அல்ல மலைக் கள்ளர்களிடமிருந்து தங்கங்களை அபகரித்து வர, இதோ நான் வர வேண்டிய இடம் வந்து விட்டது.

பரவாயில்லை, அதிக கூட்டமில்லை எனினும் ஒரு பத்து நிமிடம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தது, வாசிக்க புத்தகம் எடுத்து வந்திருக்கலாம், சரி பரவாயில்லை சிறிது நேரம் கண்களால் உலகத்தை அவதானித்து பார்க்கலாமே …

என்னை சுற்றிலும் கண்ணாடியிருந்தது உருவத்தின் பின் பகுதியை, முன்னால் இருக்கும் கண்ணாடியில் அற்புதமாக காண முடிந்தது. இதேபோல் ஒவ்வொரு மனிதனுடைய அகத்தை பார்க்க கூடிய கண்ணாடி இருந்தால், இந்த உலகத்தில் ஏமாற்றமே இருக்காதே என்ற எண்ணம் மனதில் உதித்து மறைந்தது.

சாப் ஆப்கா நம்பர் ஆகையாகே… ஜல்திக்கரோ என அவன் என்னை விரட்ட துவங்கினான்.

என்னப்பா நீயி..முடிய வெட்ட போறயா… ஆள வெட்ட போறயா என வடிவேல் பாணியில் வசனத்தை பேசிக் கொண்டு அவன் முன் அமர்ந்தேன். உன் முகத்தை நீயே அதிகம் நேரம் உற்று அவதானித்து பார் உனக்குள்ளும் ஒரு குரங்கு இருக்கும் என எங்கோ வாசித்தது, இன்று அர்த்தமாகிவிட்டதை உணர்ந்தேன். எனக்குள் ஒரு குரங்கிருந்தது அது கட்டற்று ஆடிக் கொண்டிருந்தது.

நான் என்னை நானே கண்டு கொண்டும் புரிந்து கொண்டும் இருந்த வேளையில் அவன் தனது பணியை ஆரம்பித்திருந்தான். கிரிச்.. கிரிச்ச.. கிரிச்ச்..  தண்ணீரை எடுத்து அடித்தான். பின் மீண்டும் கிரிச்.. கிரிச்.. கிரிச்.. என் மேல் முடிகள் கொத்து கொத்தாக விழத் துவங்கியது. எனது பால்ய கால ஆசை நிறைவேறாமல் அழிக்கப் படும் போது, எதுவும் செய்ய இயலாமல் எல்லாம் நன்மைக்கே” என உதடுகள் முனுமுனுத்தாலும் ஏக்கம் உள்ளுக்குள் புகைந்து கொண்டுதானிருந்தது.

கண்ணாடிக்குள் ஊடுறுவி என் பால்ய காலத்திற்குள் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.

யேய் ஒழுங்கா இருக்க மாட்டீங்களா…

பேசாம ஒக்காருங்க.. இல்ல முடி வெட்டுற சாக்குல ஒங்க காத அறுத்து பூடுவேன் என சலூன் கடைக்காரர் ராசு கூறும் போது பயம் உள்ளுக்குள் ஊடுறுவி விடும், ஆனால் அந்த பயம் சிறிது நேரத்திலேயே மறைந்து சிரிப்பலைகளாக உருவெடுக்கும். அந்த சிரிப்பலைகள் உருவாக காரணம் அங்கிருக்கும் கண்ணாடிகள்தான், ஒவ்வொரு கண்ணாடியிலும் ஒரு தோற்றம் தெரியும், ஒரு கண்ணாடியில் குண்டாகவும், மற்றொரு கண்ணாடியில் குள்ளமாகவும் தெரியும். மதுரையில் நடக்கும் சர்கஸில்தான் அத்தகைய கண்ணாடியை பார்த்திருக்கிறேன்.

சகோதரர்கள் மூவரும் ஒரே நாளில், ஒரே வேளையில்தான் முடிவெட்டிக் கொள்வோம். ராசு ஒவ்வொருவரையும் முடிவெட்டும் போது திட்டிக் கொண்டே வெட்டுவது மனதிற்கு சந்தோசமாக இருக்கும். வெட்டிய முடிகளை ராசு யூரியா சாக்கில் அள்ளி வைக்கும் போது, இத என்ன செய்வீங்க என கேட்டதற்கு ஒரு முறை…

ஆமா பெரிய தங்கமுடி… போயி அடகு கடையில வச்சு மொதலாளி ஆகப் போறேன் போறீங்களா, என விரட்டியடித்தார்.

ஓகையா… ஓகையா என சிகை அலங்காரம் செய்பவன் என்னை எழுப்பிவிடவும்தான் நிகழ்வுலகத்திற்கு வந்தேன்.

பணம் எவ்வளவு எனக் கேட்டேன் இருபது ரூபாய் என கூறினான். சென்னையில் ஒரு முறை சகோதரன் 150 பது ரூபாய் கொடுத்து முடிவெட்டிக் கொண்டது நினைவில் வந்து சென்றது. அவனை நேசமுடன் பார்த்துக் கொண்டே வெளியேறினேன். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து மனதில் உதித்த ராசு இப்போது என்ன செய்து கொண்டிருப்பார் என எண்ணியவாறே நடக்கத் துவங்கினேன் மரங்கள் நிறைந்து, சருகுகள் உதிர்ந்திருந்த அந்த சாலையில்.

2 Responses so far.

  1. இருபது பரவாயில்லையே… பகிர்வுக்கு நன்றி… வாழ்த்துக்கள்

  2. kabilan says:

    ரொம்ப நல்ல இருக்கு नानबा


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube