CITY LIGHTS – CHARLES CHAPLIN (1931)

நகரம் அழகானதுதான் அவற்றை நாம் உன்னிப்பாக அவதானித்து பார்க்காதவரை,.. இந்த ஒரு வரியை  அடிநாதமாக வைத்துக் கொண்டு நகர்கிறது சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ்.

பால்யத்தில் ஞாயிற்று கிழமைகளில் வார வாரம் தூர்தர்சனில் ஒளிபரப்படும் சார்லி சாப்ளினின் நகைச்சுவைக்காக ஏங்கி தவித்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது. திரையில் சார்லி பல விதமாக சேட்டைகள் செய்து அடி வாங்குவார், அவற்றை கண்டு நண்பர்கள் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம். அப்போது அவ்வளவுதான் புரிந்தது.

ஆனால் வயது வளர வளர வாழ்க்கை கற்றுத்  தந்த புரிதல்கள் மனதை பக்குவப்படுத்தியது.

சார்லியின் படங்களை முழுவதுமாய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இப்போதுதான் நிறைவேறி உள்ளது. உலக திரைப்படங்கள் அனைத்தையும் ரசித்து பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு வாங்கிய PHILIPS DVD -யில் ஒரு நல்ல படம் பார்த்தேன் என்ற திருப்தியில் மனம் நிறைந்துள்ளது.

நகரத்தில் அலைந்து  திரியும் மனிதன் இருப்பதற்கு இடம் இல்லை, உடுத்துவதற்கு மாற்று உடை இல்லை, ஆனால் வாழ்க்கையை சந்தோசமான மன நிலையோடு கழிக்கிறான். சார்லி அறிமுகமாகும் காட்சியே கலை கட்டுகிறது, நகரத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவிற்க்காக பெரும் கூட்டம் கூடியுள்ளது. மேயர் தனது உரையை முடித்து விட்டு சிறப்பு விருந்தினரை அழைத்து சிலை திறக்க வைக்கிறார்.

 திரை விலக மக்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர் ஏனெனில் அந்த சிலையின் மேலே படுத்து உறங்கி கொண்டு உள்ளார் சார்லி சாப்ளின். இந்த காட்சியில் சிரிப்பு வந்தாலும் அவர் நகர வாழ்வில் அவலத்தை ஒரு படிமமாய் விட்டு செல்கிறார்.

சார்லியின் படங்களை அவதானித்து பார்க்கும் போது பல புரிதல்களை நமக்கு தருகிறார். நகரத்தில் அலைந்து திரிகிறார் அப்போதுதான் கண் தெரியாத அந்த Virginia Cherrill என்ற பெண்ணோடு நட்பு உண்டாகிறது .அவள் அன்பிற்காக ஏங்குகிறார். நகரத்தில் தன்னை அவமதித்தாலும் அந்த பெண்ணை மனதில்  நினைத்து கொண்டு வாழ்கிறார் சார்லி.

ஒரு முறை Harry Myers என்ற கோடிஸ்வரன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பொழுது அவனைக்  காப்பாற்றுகிறார்.  அப்போதும் Harry Myers  அதிகம் குடித்திருக்கிறான். தனக்கு புத்தி வந்து விட்டதாகவும் இனி  நீ என்னோடுதான் இருக்க வேண்டும் என்று கூறி சார்லியை தனது வீட்டிற்க்கு அழைத்து செல்கிறான்.

விருந்து . மெத்தையில் தூக்கம் என மெய் மறந்து கழிக்கிறார் அன்றைய இரவை சார்லி. அதிகாலை ஆனதும் Harry Myers க்கு போதை தெளிகிறது. பின் சார்லியை புரிந்து கொள்ள இயலாமல் இவன் யார் இவனை விரட்டு என தன் வீட்டு வேலைக்காரனான Al Ernest Garcia விடம்  கூறுகிறான்.  அவன் சார்லியை அடித்து விரட்டுகிறான்.

சார்லி வழக்கம் போல் இயல்பாய் வெளியே வந்து பணக்காரனின் காரை எடுத்து கொண்டு செல்கிறார். தனது மனம் கவர்ந்த  பூக்காரியிடம் செல்கிறார். சார்லி காரிலிருந்து இறங்கி வரும் சப்தத்தை கேட்டு, சார்லி மிகவும் பெரிய பணக்காரர் என்ற பிம்பத்தை மனதில் வரைந்து கொள்கிறாள் பூக்காரி Virginia Cherrill .

சார்லி அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு விடை பெறுகிறார்.  சார்லியை ஒரு கடை வீதியின் அருகில் சந்திக்கும் பொழுது மீண்டும் அந்த பணக்காரனுக்கு பழைய நினைவுகள் வருகிறது அப்போதும் அவன் போதையில்தான் இருக்கிறான்.

பின் வீட்டிற்க்கு அழைத்து செல்கிறான் அதே உபசரணைகள் கொண்டாட்டங்கள், பின் போதை தெளிந்த பின் சார்லியை தன் வேலைக்காரனிடம் சொல்லி விரட்டி அடிக்கிறான் .

குத்தும் உரலுக்கு ஒரு பக்கம் இடி, கொட்டும் தவிலுக்கு இருப்பக்கம் இடி என்பதை போல சார்லிக்கு எங்கு சென்றாலும் கேலியும் கிண்டலும் அவமானமும்தான் கிடைக்கிறது.

சார்லி மனம் ஒடிந்து ஒரு வீட்டின் மாடி படியில் சென்று அமர்கிறான். பின் உள்ளே இருந்து வரும் குரல் கேட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்க்கும் பொழுது அது தன் காதலி அந்த பூக்காரியின் வீடு என்பதை அறிந்து கொண்டு செல்கிறான்.

பின் அதே சாலையின் ஓரத்தில் அவள் பூக்களை விற்பனை செய்கிறாள் அங்கு வரும் சார்லி அவளிடம் ஆசையாய் பேசுகிறார் பின் ஒரு செய்தித்தாளை எடுத்து அவளுக்கு வாசித்து காட்டுகிறார். உனக்கு விரைவில் கண் சிகிச்சை செய்து, உனக்கு கண் பார்வை வர நகரத்தில் ஒரு டாக்டர் வந்திருப்பதாகவும் அங்கே உன்னை அழைத்துச்  செல்கிறேன் என்கிறார். அவள் அவ்வளவு பணம் இல்லையே என்கிறாள். பரவாயில்லை உனக்கு பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன்  எனச்  சொல்லி விட்டு அவளை பிரிந்து செல்கிறார் சார்லி அப்போது அவள் தன் வீட்டிற்கு வரும் படி விண்ணப்பிகிறாள் .

பின் சார்லி நகரத்தில் வேலை செய்து கிடைத்த பணத்தில் பொருட்களை வாங்கி கொண்டு வீடு செல்கிறார் . அங்கே சென்று பார்த்த பொழுது காதலியின் குடும்பம் மேலும் கஷ்டத்தில் உள்ளதை உணர்ந்து இதற்க்கு ஏதாவது ஓன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நகரத்தில் அலைகிறார்.

குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டு நன்றாக பெறுகிறார் குத்துக்களை, பின் வெறுமையோடு சாலையில் பயணிக்கிறார் அப்போது அதே குடிகார பணக்காரன் சார்லியை அடையாளம் கண்டு வீட்டிற்கு அழைத்து செல்கிறான். பின் தனது கஷ்டத்தை அவனிடம் கூறுகிறார் சார்லி. அவன் பணத்தை அள்ளி வீசுகிறான் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு விடை பெற என்னும் பொழுது அந்த வீட்டில் திருடர்கள் நுழைந்துள்ளதை உணர்ந்து சண்டை இடுகிறார் சார்லி பின் சிறுது நேரத்தில் பணக்காரனுக்கு போதை தெளிகிறது, அப்போது சார்லியை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை இவனை திருடன் என சொல்கிறார், சார்லி பணத்தோடு அந்த மாளிகையை விட்டு ஓடுகிறார் போலீஸ் துரத்துகிறது, தன் காதலியிடம் அந்த பணத்தை கொடுக்கிறார்.

இந்த பணத்தை வைத்து கொண்டு உன் வறுமையை போக்கி கொள், உனக்கு கண் சிகிச்சை செய்து கொள் என கூறிவிட்டு ஓடுகிறார் சார்லி. அந்த பூக்காரப் பெண் சார்லியின் அன்பில் மெய் மறந்து நிற்கிறாள். பின் போலீசில் பிடிபடும் சார்லி சில மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் விடுதலை அடைகிறார். அதே வெறுமையோடு நகரத்தில் வளம் வருகிறார், தன் காதலி முன்பு கடை வைத்திருந்த இடத்தை சென்று பார்க்கிறார் அங்கே அவள் இல்லை.

பின் மனதில் காதலை சுமந்து கொண்டு நகரத்தில் உலவுகிறார் தனது நைந்து போன உடையுடன். அவரை பார்க்கும் சமுதாயம் அவரை கேலி செய்கிறது .

அப்போது எதேச்சியாக தனது காதலி பூக்காரி Virginia Cherrill  யை சந்திக்கிறார். அவளுக்கு இப்போது கண் பார்வை வந்துள்ளது ஆனால் அவளால் சார்லியை அடையாளம் காண இயலவில்லை, தனது மனதில் அந்த மனிதரை பற்றி பெரிய கற்பனைகளை செய்து வைத்திருக்கிறாள். அவளுக்கு சார்லி ஓட்டிக் கொண்டு வந்த கார் சப்தம் நினைவில் படிந்திருந்தது கார் ஓட்டி வரும் அனைவரையும் கூர்ந்து பார்த்து கொண்டே இருந்தால், இப்போது அங்கு வந்திருக்கும் சார்லியை அவளால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை சிலரை எடுத்து சார்லியின் கைகளில் தரும்பொழுது அந்த பரிசத்தை எங்கோ உணர்ந்தது போன்ற உணர்வு அவள் உள் மனதில் எழுகிறது. பின் தனக்கு கண் பார்வை அளித்தவர் இவர்தான் என புரிந்து கொண்டு அவரோடு இணைகிறார்  Virginia Cherrill.

இத்துடன் திரைப்படம் முடிகிறது ஆனால் சார்லி நகரத்தின் மறு பக்கத்தை மிக தெளிவான புரிதலோடு கூறியுள்ளார்.

அவரது பால்ய காலத்தின் வறுமையை இத்தகைய நிகழ்வுகளோடுதான் கழித்ததாக அவரே கூறியுள்ளார். இந்த நிலை இன்னும் மாறாமல் இருப்பதை CITY LIGHTS மிக தெளிவாக நமக்கு சொல்கிறது …….

————————————————————————————————-
நடிகர்களின்விபரம் :CITY LIGHTS

Director: Charles Chaplin
Writer: Charles Chaplin (writer)
Release Date: 6 February 1931 (USA) See more »
Cast (Complete credited cast)
Virginia Cherrill … A Blind Girl
Florence Lee … The Blind Girl’s Grandmother
Harry Myers … An Eccentric Millionaire
Al Ernest Garcia … The Eccentric Millionaire’s Butler (as Allan Garcia)
Hank Mann … A Prizefighter

————————————————————————————————-

One Response so far.

  1. RAJ says:

    சார்லி சாப்ளினின் ஒரு மாமேதை…..
    இந்த பதிவை படித்து முடித்த உடன்….படத்தை பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது….
    நல்ல வர்ணனை…
    \\பால்யத்தில் ஞாயிற்று கிழமைகளில் வார வரம் தூர்தர்சனில் ஒளிபரப்படும் சார்லி சாப்ளினின் நகைச்சுவைக்காக ஏங்கி தவித்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது.\\
    இதே ஏக்கம் தான் எனக்கும்…என் பால்யத்தை நினைவு படுத்தியது..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube