இயற்கையை அறிதல் – 1

நேற்று டெல்லியில் இருந்து இரயிலில் கிளம்பி ஹரிதுவாரில் இறங்கி, அதிகாலை ரிஷிகேசில் உள்ள கோவிலூர் மடம் வந்து சேர்ந்தேன். அறையில் சிறிது ஓய்வெடுத்து விட்டு,  கங்கை அன்னையை வணங்க ஆயத்தமானேன். ரிஷிகேசில் உள்ள ஒரு தேநீர் கடையில், இரண்டு மட்டி (தட்டை), ஒரு கோப்பை தேநீரோடு காலை உணவை முடித்துவிட்டு. அவரிடம் ராம் ஜூலா, லக்ஷ்மண் ஜூலாவிற்கு எப்படி போவது என கேட்டு அறிந்து கொண்டேன். அவர் வெகு இயல்பான மனிதராக இருந்தார். கிரிக்கெட் ரசிகராகவும் இருந்தார்.

அவர் பொறுமையாக எனக்கு வழியை சொன்னார். பின்னர் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு எனது பயணத்தை தொடங்கினேன். வழியெங்கும் சன்யாசிகள் நிறைந்திருந்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆசிரமம் என்னை கவர்ந்தது, உள்ளே அனுமதிப்பார்களா என தயங்கிக் கொண்டே வாசலில் நின்றிருக்கும் சிறுமியிடம் கேட்டேன்.

அவள் அனுமதித்தாள், மேலே பல சன்யாசிகள் இருப்பதாக கூறினாள். நான் அந்த உயரமான படிகட்டுகளில் பயபக்தியுடன் ஏறினேன். மேலே பெரிய அறையிருந்தது, அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்து கொண்டு சன்யாசிகள் தியானம் செய்து கொண்டிருந்தனர்.

ராம்சரன்

வெளியில் வரும்பொழுது ஒரு சன்யாசி வாசலில் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று இந்த மடத்தின் பெயர் என்ன எனக் கேட்டேன். அவர் இது கைலாஷ் ஆஸ்ரம் என்றார், பிறகு அவரே தொடர்ந்து, இங்கு சாப்பாட்டிற்கு எந்த பிரச்சனையும் இல்லை, இங்கே எங்களது பிழைப்பு நன்றாக செல்கிறது எனக் கூறிக் கொண்டே, பல மடங்களின் பெயர்களை சொல்லி இந்த, இந்த நேரத்தில் இங்கெல்லாம் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்றார்.

கைலாஸ் ஆஸ்ரமத்தில் சாமியார் ராம்சரன் எடுத்த புகைப்படம்

கைலாஷ் ஆஸ்ரமத்திலிருந்து வெளியேறி சாலையில் நடக்கத்துவங்கினேன். கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது, அனைவரின் துன்பங்களையும், வலிகளையும் கங்கை அன்னை தீர்ப்பாள் என்ற நம்பிக்கையுடன் கங்கையை காணும் பொழுது எண்ணிக் கொண்டேன். கங்கையின் இரு கரைகளிலும் கோவில்கள் நிறைந்திருந்தன.  ராம் ஜூலா இருக்கும் இடத்தில் சில சிறுமிகள் கோதுமை உருண்டைகளை கங்கையில் இருக்கும் மீன்களுக்கு போடும் படி விற்றுக் கொண்டிருந்தனர். பத்து ரூபாய்க்கு கோதுமை உருண்டைகள் வாங்கி ராம் ஜூலாவின் மேல் இருந்து (ராம் ஜீலா எனபது ஒரு பாலம்) கங்கையில் கொட்டினேன். பெரிய பெரிய மீன்கள் அந்த கோதுமை உருண்டைகளை சாப்பிட வந்தன.

அந்த சிறுமிகள் அம் பியார்சே இஸ்கு பால்ராகும் பத்தாகே கியா என்றார்கள். நான் சிரித்தேன், அம் கெய்சே படா கோராகும், அய்சே அமரா மச்சிலிபி படா ஓஹா என்றனர்.

ராம் ஜீலா

ராம் ஜீலா, கங்கை கரையிலிருந்து

கங்கை கரைக்கு வந்து, கங்கையில் குளித்தேன், குளிராக இருந்தாலும், கங்கையில் குளித்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. சிறிது நேரம் கங்கையை அவதானித்துக் கொண்டிருந்தேன். மனதில் அமைதியும், வாழ்வின் உண்மையும் புரிந்தது போன்ற உணர்வு மனதில் வந்து சென்றது.

ஒரு சிறுவன் கங்கையில் இறங்கி ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தான். நான் ஏதாவது தொலைத்து விட்டாயா எனக் கேட்டேன், அதற்கு அவன் இல்லை என்றான். உன் பெயர் என்ன என்றேன் அசோக் என்றான். அவன் என்னோடு பேசினாலும் தொடர்ந்து தேடிக் கொண்டேதான் இருந்தான். தேடுதலும் ஒரு தவம்தான், அவனும் தவம்தான் செய்கிறான் என எண்ணிக் கொண்டேன். அவன் தேடுதலை நிறுத்தவில்லை தொடர்ந்து தேடிக் கொண்டேயிருந்தான். சிறிது நேரத்திற்கு பின் குனிந்து கங்கையுள் புதையுண்டிருக்கும் சிறு கூளாங்கற்களை எடுத்து எடுத்து தேடினான். பின் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் அவன் கையில் சிக்குண்டது, பிறகும் தேடிக் கொண்டேயிருந்தான். அவனும் தவம்தான் செய்கிறான் இல்லையா…

கங்கையில் நாணயங்களை தேடும் அசோக்

கங்கையில் தீபங்களை விட்டு வழிபட கரையில் தீபங்கள் விற்றுக் கொண்டிருக்கும் பெண்ணிடம் தீபம் வாங்கினேன். பின் கங்கை அன்னையை எண்ணிக் கொண்டு அனைவருக்கும் மன நிம்மதியான வாழ்வை வழங்க பிரார்த்தனை செய்து கொண்டு கங்கையில் தீபத்தைவிட்டேன்.

ஒரு வயதானவரை இருவர் கைத்தாங்களாக கங்கையில் இறக்கி குளிக்க வைத்தினார். அவர் நெகிழ்ந்து சப்தமாக ஜெய் கங்காம்மா ஜெய் கங்காம்மா எனக் கூறிக் கொண்டு குளித்தது கங்கை கரையில் இருக்கும் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தது.

கங்கையில் குளிக்கச் செல்லும் முதியவர்

சிறிது நேரம் ராம் ஜீலாவில் இருக்கும் கங்கை கரையில் இருந்துவிட்டு, லக்ஷ்மண் ஜூலாவிற்கு கிளம்பினேன். வழியில் ஒரு இடத்தில் தேநீர் அருந்தினேன். முதியவரிடம் வழிக் கேட்டேன், இயற்கையை ரசித்துக் கொண்டே நடந்தேன். கங்கையின் காட்சிகள் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்து கொண்டிருந்தது.

கண்களே தெரியாத முதியவர், சாலையில் கம்பீரமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். நான் உதவுகிறேன் என சொன்னதற்கு யாரும் எனக்கு உதவி செய்ய தேவையில்லை என்றார். உங்கள் பெயர் என்ன எனக் கேட்டதற்கு கடவுள் பெயர்தான் எனக்கும், எனக்கு வேறு பெயர் இல்லை என்றார். தொடர்ந்து ராம நாமத்தை கூறிக் கொண்டே சாலையில் நடந்து சென்றார்.

சாலையோரத்தில் ஒருவர் அழகாக புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவர் அருகில் நின்று வாசிப்பை கேட்டு மகிழ்ந்தேன்.

புல்லாங்குழல் வாசிப்பவர்

 தொடர்ந்து சாலையோர மனிதர்களையும், இயற்கையையும் அவதானித்துக் கொண்டே லக்ஷ்மண் ஜூலாவை வந்தடைந்தேன்.

லக்ஷ்மண் ஜூலாவில்

இயற்கை கற்றுத்தறும் பாடம் மிகப் பெரியது, துன்பங்கள் நம்மை கசக்கி பிழியும் பொழுது இயற்கையை தவிர நமக்கு ஆறுதல் அளிக்க யாருமில்லை.

இயற்கையே நீ ஒரு
பிரமாண்டம்
உன்னை அறிய துவங்குவதே
ஒரு தவம்தான்…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube