இரயிலோசை..

 ஜனத்திரள் நிறைந்திருந்தது , தன் உடல் முழுவதும் கடிகாரத்தை சுற்றிக்கொண்டு (“குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா” “குச்பி லேலோ, பச்சாஸ் ரூபியா”) எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாயென சப்தம் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு நடுத்தர வயதுக்காரன்.

 புழுதி படர்ந்த மேனியுடன் பல குழந்தைகள் நடைபாதையில் நின்று கொண்டிருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தனர். நிராகரிப்பின் ஊடே கிடைக்கும் சில சில்லரைகளை வேகமாக ஒரு ரோபோ போல் சென்று, படியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவனிடம் கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தனர். அவன் சமோசா தின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது.

தன்னை அலங்கரித்து கொண்டு சில பெண்கள் அங்குமிங்குமாக நடைபாதையில் அலைந்து கொண்டிருந்தனர். முதியவரொருவர் தன் சிதைந்த கரங்களைக் காட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். எல்லா மனிதர்களும் பரபரப்புடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தனர் . ஒரு முதியவர் பழைய ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 கேரளா எக்ஸ்பிரஸிற்கு ரிசர்வேசன் வேண்டுமாயென பச்சை சட்டை அணிந்த ஒருவன் அனைவரின் காதினருகில் வந்து மெல்லிய சப்தத்தில் கூறிவிட்டு நகர்ந்து சென்று கொண்டிருந்தான். இரயில் நிலையம் முழுவதும் வெக்கை நிரம்பியிருந்தது.

 இந்த காட்சிகளையெல்லாம் இரயில் நிலைய சுவரோரம் சாய்ந்தபடி அவதானித்து கொண்டிருந்தான் நாகேஸ்வரன் என்ற நாகேஸ். தனது இருபத்தைந்து வருட இரயில் கனவு தற்பொழுதுதான் பூர்த்தியான சந்தோசத்தின் பிரதிபளிப்பு நாகேஸின் முகத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது. சட்டைப் பையிலிருந்து சிகெரெட் பாக்கெட்டையெடுத்தவன் பின் ஏதோ நினைவில் வர அதை பைக்குள்ளேயே விட்டுவிட்டு “உலகத்துல எவ்வளவோ செஞ்சுகிட்டு இருக்கானுங்க , இங்க நிம்மதியா சிகெரெட் கூட குடிக்க விடமாட்றாங்கெயென தனக்குத்தானே புலம்பிக்கொண்டான் .

நேற்று நாகேஸ் பணி செய்யும் உணவு விடுதியின் முதலாளி “ ஏலேய் மாப்ளகளா பொதுயெடத்துல சிகெரெட் குடிக்காதெங்கடா, டெல்லி போலீஸ் ரொம்ப மோசமானவனுங்கயென” எச்சரித்து அனுப்பியிருந்தார். நாகேஸ் மீண்டும் இரயில் நிலைய காட்சிகளுக்குள் மூழ்கிப் போனான்.நாகேஸிற்கு இவ்வாறு இரயில் நிலையத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது நிம்மதியாய் இருந்தது. அவனது இருபதைந்து வருடக் கனவல்லவாயிது. நாகேஸிற்கு சென்ற ஞாயிறோடு வயது முப்பதை கடந்திருந்தது. அவனுள் பழைய நினைவுகள் சிறிது சிறிதாய் மீண்டுகொண்டிருந்தன.

தனது ஐந்து வயது முதல், இரயிலைப்பற்றிய கனவுகளை மனதில் சுமந்து வருகிறான். ஒன்னாம் வகுப்பு கீதா டீச்சரை அவனால் இன்று வரை மறக்க இயலாது . அவர்தான் இரயிலைப்பற்றிய கனவை நாகேஸின் மனதில் முதன் முதலாய் பதியவைத்தது .

 பட்டிகள் நிறைந்த மதுரையில் கரட்டுப்பட்டியில் பிறந்து வளர்ந்தவன்தான் நாகேஸ். நடிகர் நாகேஸ் நடித்த எதிர் நீச்சல் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நாகேஸின் அம்மா கருப்பாயிக்கு பிரசவ வலி வந்து பிறந்ததினால் , நடிகர் நாகேஸின் மேல் கொண்ட அளவு கடந்த பிரியத்தின் காரணமாக, இவனுக்கும் நாகேஸ் என பெயர் வைத்துவிட்டனர் இது அவனது பெயர் பிறந்த கதை.

நாகேஸ் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தான். அதற்குப்பிறகு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு பொழுதைக் கழித்தான். கீதாரி குடும்பத்தில் பிறந்தவனாதலால் வம்சத்தொழில் ஒட்டுவாரொட்டி போல் விடாமல் அவனையும் ஒட்டிக் கொண்டது.

இவன நல்லா படிக்க வச்சு கவருமெண்ட் வேல வாங்கிப்பூடனுமுன்னு நெனச்சேன் . ஆனா என்னப் போலவே பொறந்து தொலச்சுருக்கான் பாரு” – என நாகேஸின் அப்பா நல்ல முத்து அடிக்கடி தனக்குத்தானே புலம்பிக் கொள்வார்.

 “வெத ஒன்னு வெதச்சா செடி ஒன்னா மொளைக்கும்” , ஒன்னய போலதான்யா இருப்பான் ஓம் புள்ளயும் என நாகேஸ்ற்காக அவனது அம்மா கருப்பாயி பரிந்து பேசுவாள். ஆனால் நாகேஸோ, மனதில் இரயிலைப் பற்றிய கனவுகளை சுமந்து கொண்டே பால்யத்தை கடந்து வந்தான் . இரயில் பார்க்க வேண்டுமென்றாலே மதுரைக்குதான் போக வேண்டும். கிராமத்திலிருந்து ஏதாவது ஒரு குடும்பம் மடப்புரம் காளியம்மனுக்கோ, அழகர் மலைக்கோ, திருப்பறங்குன்றத்திற்கோ ட்ராய்ட்டர் பிடித்து செல்வார்கள். அதை நோட்டம் பார்த்து வீட்டில் அடம்பிடித்து அவர்களோடு மதுரைக்கு சென்றுவிடுவான். அங்கு இரயிலைக் கண்டு சந்தோசம் கொள்வான் . இரயில் தண்டவாளங்களைப் பார்த்து பிரமித்து நிற்ப்பான். இரயில், தண்டவாளத்தில் ஓடும்போது இவன் மனதும் இரயிலோடேயே சென்றுவிடும். அவ்வளவு இரயில் பித்தன்.

அந்த இரயில் காட்சிகள் நாகேஸின் மனதில் பல கனவுகளை விதைத்துவிட்டுச் செல்லும். அந்தக் கனவுகள் நிறைந்த மனதுடன் வீடு வந்து சேர்வான். ஒவ்வொரு இரவிலும் இரயில் அவனுள் ஓடிக்கொண்டேயிருக்கும். பகலும் இரவுமாய் கழியும் காலத்தோடு நாகேஸின் வயதும் பெருகிக்கொண்டே வந்தது, இப்போதெல்லாம் இரயிலைப் பார்க்க வேண்டுமென்ற கனவு போய் , ”மாப்ள இந்த இரயிலுல எப்பயாச்சும் ஒரு தடவ ஏறி வெளியூருக்கு போயிட்டு வந்துரனும்டா என தன் சக நண்பர்களிடம் கூறிக்கொள்வான்.

 இராணுவ வீரர்களின் பூட்ஸ் சப்தம் கேட்டு நினைவுலகத்திற்கு வந்தவன் அந்த சப்தம் வரும் திசையை நோக்கி தன் பார்வயை வீசினான் அப்போது அவன் மனதில் தனலச்சுமியை பற்றிய நினைவு பூ போல் பூத்து நின்றது..

நாகேஸின் மாமன் மகள்தான் தனலச்சுமி. பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். அந்த ஊரிலேயே கருப்பாய் இருந்தாலும் மூக்கும் முழியுமாய் இருந்த சிலர்களில் தனமும் ஒருத்தி. தனலச்சுமியை மிகவும் நேசித்தான் நாகேஸ். ஆனால் அவளது அப்பாவோ “ரயிலேறிபோயி உத்தியோகம் பாக்குறவனுக்குதான்யா ஏன் பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுப்பேனென்பதில்” உறுதியாய் இருந்தார்.

பஞ்சாப்புக்கு போற இரயில் எப்ப வருமென ஒரு சர்தார்ஜி கேட்கும் குரலில் , நினைவிற்குவந்தவன் , தனக்கு தெரியாதென சைகை செய்தான் . கண்களில் நீர் நிரம்பி குளமாய் தேங்கி நின்றது.

 டேய்.. நாகேஸ் டேய் எவ்வளவு நேரந்தான் இங்கேயே நின்னுகிட்டு இருப்ப வாடா போவோம் , இப்ப போய் தூங்குனாதாண்டா காலங்காத்தால எழ முடியுமெனக் கூறிக்கொண்டே நாகேஸை இழுத்துச் சென்றான் நண்பன் குணா.

நாகேஸ் பணி புரியும் உணவு விடுதி வெகு தூரமில்லை. இரயில் நிலையத்தின் நேர் எதிரில்தான் இருந்தது. அங்கேயும் இரயிலோசை தெளிவாய் கேட்கும். உணவு விடுதிகள் நிறைந்த அந்த வீதியில் விருதுநகர் முனியாண்டி விலாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள உணவு விடுதியில்தான் நாகேஸ் வேலைக்கு சேர்ந்துள்ளான்.

கிராமத்து சாந்தமான சூழ்நிலையில் வாழ்ந்து பழகிய நாகேஸிற்கு நகரத்து பரபரப்பான வாழ்க்கை சிறிது ஒவ்வாமல் இருந்தது.இரயில் நிலையத்திலிருந்து இடைவிடாமல் கேட்டுக் கண்டிருக்கும் இரயில்களின் ஓசைகள் மட்டும் மனதிற்கு எப்போதும் ஆறுதல் தந்துகொண்டிருக்கும்.

 பின்னிரவு வரை பணி செய்துவிட்டு , மொட்டைமாடிக்கு சென்று தூங்க வேண்டும் தினமும் கண்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் மேலேயே நிலைத்திருக்கும். தனலச்சுமியும் டெல்லியிலதான இருக்கா, என்ற ரத்த பாசமும், அவள பாக்கவே கூடாது என்ற வைராக்கியமும் மாறி மாறி மனக் கடலில் சிறு அலையென எழும்பிக் கொண்டிருக்கும்.

அன்றைய இரவும் வானில் நச்சத்திரங்கள் நிரம்பி இருந்தது, இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து செல்லும் விமானமும் இடையிடையே வானில் பறந்து சென்று கொண்டிருந்தது.மனதில் தனத்தைப் பற்றிய எண்ண அலைகள் வழக்கம் போல் அடித்துக்கொண்டிருந்தது.

தனலட்சுமி அவளின் அப்பாவின் ஆசைப் படியே “ரயிலேறிபோயி உத்தியோகம் பாக்குற பட்டாளத்து காரனுக்கே வாக்கப்பட்டு” சென்ற காட்சிகள் நாகேஸின் கண் முன் விரிந்து நின்று நீங்காத வலியை தந்துகொண்டிருந்தது. தனமும் இவன்மேல் பாசமாய்தான் இருந்தாள் . கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாய் வளர்க்கப்பட்டதால் தந்தை சொல்லை மீற முடியாமல் தனது ஆசைகளை புதைத்துவிட்டு அப்பாவிற்கு பிடித்த இரயிலேறிப் போய் உத்தியோகம் பாக்குற பட்டாளத்து காரனுக்கே வாக்கப்பட்டு விட்டாள்.

எல்லோருக்கும் எரிச்சலை உண்டு பன்னும் இந்த இரயிலோசை நாகேஸிற்கு மட்டும் தாயின் தாலாட்டைப் போல இதமாய் இருந்தது. தினமும் அயராத உழைப்பும், போதிய ஓய்வின்மையும், மனதில் தனத்தை பற்றி மனதில் எழும் நிறைவேறாத ஆசையுமென எல்லாம் சேர்ந்து அவனுக்கு பெரும் மனச்சோர்வை தந்து கொண்டிருந்தது. இந்த பரபரப்பான நகர வாழ்வில் சிறிது சிறிதாய் சிதைந்து கொண்டிருந்தான் நாகேஸ்.

அன்றும் அப்படித்தான் இரயில் தறும் மன ஆறுதலுக்காக இரயில் நிலையம் சென்றவனை தற்செயலாக கண்டு கொண்டாள் தனம். தொலைந்து போன ஒருவனை கண்டு விட்ட சந்தோசம் ஒரு கணம் கண்களில் தெரிந்தாலும் . நாகேஸின் இன்றைய தோற்றம் அவள் மனதை நெகிழ வைத்து விட்டது.

ஏன் மாமா இங்கிருக்க ?..

நீ ஏன் இங்கன வந்த ..

இப்படி ஆளே செதஞ்சு போயி நிக்கிறியே..என கண்ணீர் வடித்தாள்.

தூரத்தில் இருந்து அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான் தனத்தின் கணவன்.

இவருக்கு மாத்தலாகி நாங்க ஊருக்குப் போறோம் . நீயும் எங்களோட வந்துரு மாமாயென.. தன் தாய்மாமனென்ற உரிமையோடு, பேசினாள் தனம்.

அவளது முகத்தைக் கூட பார்க்காமல் இரயில் நிலைய சுவரை இருப்பாய் பற்றிக் கொண்டிருக்கும் பல்லியையே பார்த்துக் கொண்டிருந்தான் நிராகரிப்பின் வலி நிறைந்த மனதோடு நாகேஸ்.

பின் கணவன் அழைக்க நாகேஸை விட்டு மனமில்லாமல் மெல்ல பிரிந்து நடந்தாள் தனம் . அதுவரை அமைதியாய் இருந்தவன் …

தனம் ஊருக்குத்தான போற , அங்கன போயி உஙக அப்பா கிட்ட சொல்லிடு ”மாமனும் இரயிலேறிப்போய்தான் உத்தியோகம் பாக்குதுன்னு” என வைராக்கியமான குரலில் கூறினான்

 விம்மிய குரலோடு கண்களில் நீர் கசிய, கணவனோடு மெல்ல நடைபாதையில் இருந்து இரயிலை நோக்கி நடந்து சென்றாள் தனலச்சுமி. இவர்களிருவரின் உள்ளார்ந்த அன்பிற்கு அடிநாதமாய் இரயிலோசை மட்டும் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது.

One Response so far.

  1. kamaraj says:

    நல்ல பதிவு


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube