இயற்கையை அறிதல் – 2

மாலை சூரியன் சாய்ந்து கொண்டிருந்தது, கங்கை அன்னை மிதமான சப்தத்துடன் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தாள், கங்கை அன்னையை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் ஒரு அமைதி உண்டானது. கால்களை கங்கையில் நனையும்படி வைத்து விட்டு கரையோர படிகளில் அமர்ந்து கொண்டேன்.

அந்தக் காட்சி அற்புதமானது, மாலை வேளையில் கங்கை கரையோரம் நடக்கும் தீபாராதனை பிரசித்தி பெற்றது, பஜனை பாடல்களும், இசை சப்தங்களும் மனதை நெகிழ வைத்தது. வெளி நாட்டிலிருந்து வந்து பலர் மிக மிக உருகி பிரார்த்தனைகளை செய்து கொண்டிருந்தை பார்க்கும் பொழுது, சந்தோசமாக இருந்தது.

மாலையில் கங்கை

தியான நிலையில் அமர்ந்திருக்கும் சிவ பகவானுக்கு தீபாராதனை காட்டினார்கள். அந்த மாலை வேளையில் நதியின் சப்ததோடு நடந்த இந்த நிகழ்வு மனதிற்கு நிறைவை தந்தது.

தியான நிலையில் இருக்கும் சிவ பகவான்

மாலை வேளையில் நதியை பார்ப்பது ஒரு அலாதியான சுகம்தான். சிறிது நாட்கள் முன்பு water திரைப்படத்தை பார்த்தேன், அந்த படத்தில் கங்கை மிக முக்கியமான குறியீடாக இருக்கும். காசியில் நடக்கும் திரைப்படமது. அந்த திரைப்படத்தை பார்த்த நாள் முதலே, கங்கையின் மீது ஒரு அளப்பரிய ஆசை மனதில் உண்டானது.

கங்கைக்கு செல்லவேண்டும். அந்த நதியின் ஓசையை, கூழாங்கற்களின் பாடலை கேட்க வேண்டும், என மனதில் எண்ணங்கள் பெருகி வழிந்து கொண்டிருந்தன.

தீபாராதனை முடிந்தவுடன், நடந்து அறை வந்து சேர்ந்தேன். மனம் நிறைய பொங்கும் அமைதியுடன் உறங்கிவிட்டேன்.

அதிகாலை எழுந்தவுடன் நீல்கண்ட் மகாதேவ்-வை தரிசிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். கங்கைக்கு சென்று குளித்தேன்.

அதிகாலையில் கங்கை

 நேற்று மாலையில் மறைந்த சூரியன் மெல்ல மெல்ல மேலெழுந்து வந்து கொண்டிருந்தான். சாமியார்கள் கங்கை கரை ஓரத்திலேயே துயில் கொண்டு இருந்தனர். கங்கையில் குளித்துவிட்டு நேராக நீல்கண்ட் மகாதேவ் – வை தரிசிக்க என் நடை பயணத்தை துவக்கினேன்.

தள்ளுவண்டியில் தேநீர் விற்றுக் கொண்டிருக்கும் முதியவரிடம் நீல்கண்ட்-ற்கு செல்லும் பாதையை கேட்டேன். அவர் இங்கிருந்து ஜீப் வழியாகவும் செல்லலாம், நடந்தும் செல்லலாம் என்றார். நடப்பது என்பது நமக்கு பிடித்தமான விசயம் ஆயிற்றே, அவரிடம் தேநீர் அருந்திவிட்டு மலையை நோக்கி எனது நடைப் பயணத்தை துவக்கினேன். வழியெங்கும் மனிதர்கள் உற்சாகமாக நீல்கண்ட் மகாதேவ்க்கு ஜே எனவும், பம் பம் போலே, ஜெய் போலெ எனவும் சப்தமிட்டுக் கொண்டே வந்தனர்.

மலை பாதையில், பக்தர் ஒருவர்

மலை ஏறுவது ஒரு சாகசம், சில மாதங்கள் முன்பு பணி நிமித்தமாக இமயமலைத் தொடரில் ஏறியுள்ளேன். மலை ஏறும் பொழுது ஏனோ பால்ய கால நினைவு வந்து சென்றது, சிறுவயதில் ஊருக்கு அருகில் இருக்கும் சதுரகிரி மகாலிங்கேஸ்வர் கோயிலுக்கு மலை ஏறிய நினைவு மனதில் பசுமையாய் நிறைந்துள்ளது

மலையேற்றத்தின் போது

மரங்களும், செடிகொடுகளுன் நிறந்த மலையில், பக்தர்களின் மூச்சுக் காற்றின் சப்தத்தோடு நீல்கண்ட் மகாதேவைக் காண மலையேறிக் கொண்டிருந்தேன். மலையின் வளைவுகளில் இருந்து கீழே பார்க்கும் பொழுது கங்கை அன்னை பூமியில் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி மிக அற்புதமாக தெரிந்தது.

வழியெங்கும் சாமியார்கள் நிறைந்திருந்தனர்.

மலையில் இருக்கும் சாமியார்

மலைப் பயணத்தில் இடையிடேயே பெண்கள் சிலர் வலுக்கட்டாயமாக பக்தர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டிருந்தனர். ஒரே ஏற்றமான பாதையாய் இருந்ததால் இடையிடேயே நின்று சுவாசத்தை சீர் படுத்திக் கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். மலைகளில் அங்காடிகள் நிறைந்திருந்தன.பக்கோடாவும், சாயாவும், குளிர்பானங்களும் வைத்திருந்தனர்.

நீல்கண்ட் மகாதேவ் நாலாப் புறமும் மலைகள் சூழ பள்ளமான இடத்தில் எழுந்தருளிக் கொண்டிருந்தார்.

நீல்கண்ட் மகாதேவ் கோயில்

மலையில் இருந்து இறங்கி அறை வந்து சேர்ந்தேன். சிறிது ஓய்வெடுத்துவிட்டு மாலையில் திரிவேணி சங்கமத்திற்கு சென்று தியானிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

மாலையில் அறையை விட்டு கிளம்பி கங்கையை நோக்கி நடந்தேன் சாலையின் ஓரமிருக்கும் சந்திர மௌலீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன் இறைவனை தரிசித்தேன், பிரசாதமாக வடையும், பாயாசமும் தந்தார்கள், பின் திருப்பதி பாலாஜி கோவிலுக்கு சென்றேன் அங்கே பொங்கல் கொடுத்தார்கள்.

வீதிகளெங்கும் தெய்வீக மணம் வீசிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் தங்களது கடமைகளை சிறப்பாய் செய்து கொண்டிருந்தனர். குறிப்பாய் யாரிடமும் வழிக் கேட்டாலும், அன்பாய் புரியவைக்கின்றனர், சென்னையில் ஒரு முறை வழிகேட்ட பொழுது ஏற்பட்ட கசப்பான அனுபவம், இங்கு வந்ததும் மறைந்துவிட்டது.

அன்பான மனிதர்களுடன் இருக்கிறோம் என்பதே உற்சாகமாய் இருந்தது.

திரிவேணி சங்கமத்தை அடைந்தேன்.  கங்கை சப்ததோடு ஓடிக் கொண்டிருந்தாள், அருகில் மலையும், கரையில் இருக்கும் மரங்களும், ஆலயமணி ஓசையும் மனதை நெகிழ வைத்தது. அமைதியான சூழலில் மாலை வேளையில் நதியின் சப்தத்தோடு கண்களை மூடினேன். நதியின் சப்தம் மட்டுமே மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது, சிறிது நேரத்திற்கு பின் கண்களை திறந்து பார்த்தபொழுது மனதில் பேரமைதி நிலை கொண்டிருந்தது.

இயற்கையை அறிதல் – 1

One Response so far.

  1. Suriya says:

    நண்பரே! உங்கள் பயண கட்டுரை நேரில் சென்று பார்க்க ஆவலை தூண்டுகிறது.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube