நேற்று இரவுதான் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பார்த்தேன். எளிய மனிதர்களின் கதையை அவதானித்து, அழகாக இயக்கியுள்ளார். எப்போதோ பேப்பரில் படித்த செய்திதான் கரு. அந்த கருவையை மையமாக வைத்து அவர் செய்திருக்கும் திரை மொழி மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. அவர் இயக்கிய காதல் படத்தில் கூட வெகுஜன சினிமாக்கான சில உத்திகளை வைத்திருப்பார்.

ஆனால் இந்த வழக்கு எண் : 18/9 திரைப்படத்தில் மிக எதார்த்தமான கதையை , இந்த கால கட்டத்திற்கு மிக மிக தேவையான கதையை சொல்லியிருக்கிறார். பாடல் வரிகள் மனதில் நிறைந்துள்ளது. படத்தில் அவ்வபோது வரும் “வானத்தையே எட்டிப் புடிப்பேன், பூமியையே சுத்திவருவேன் “ பாடல் மனதை காட்சிகளின் ஊடாகவே பிணைத்து வைத்துள்ளது.

திரைப்படத்தில் இன்னும் கொஞ்சம் பின்னனி இசையை வலுப்படுத்தியிருந்தால் , நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மிக மிக எதார்த்தமான படம். படத்தை பார்க்கும் பொழுது சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, அபு சன்சார் போன்ற படங்கள் நினைவில் வந்தது.

எளிய மனிதர்களின் வாழ்க்கைக்குள்ளாகவே பயணித்து படம் நகர்கிறது. ஒரு வழக்கு , அந்த வழக்கை விசாரிக்கும் பொழுது கிடைக்கும் பாத்திரங்கள் , அவர்களின் வாழ்க்கை , வலிகள் , காதல், போராட்டங்கள் . பல பொது விசயங்களை இந்த படத்தின் மூலம் ஒரு செய்தியாக கொடுக்காமல், எதார்த்தமாக கொடுத்ததுதான் இந்த படத்திற்கு பெரும் பலம்.

விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பது, கந்து வட்டி முறை, முறுக்கு கம்பெனிகளில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் சிறார்கள் என நிஜ வாழ்க்கையிலிருந்து பல செய்திகளை சொல்லியிருக்கின்றார். அனைவரும் புது முகங்கள், அந்த அனைத்து புதுமுகங்களையும் அழகாக வேலை வாங்கியுள்ளார். பாலாஜி சக்திவேல் அவர்கள்.

விசாரனையில் முன்னும் பின்னுமாக கதை நகர்ந்து செல்கிறது. தமிழில் விருமாண்டி படத்தில் குற்றவாளிகள் தங்களது குற்றங்களை , தங்களின் பார்வையில் சொல்லும் காட்சி அமைப்பு வரும், இந்த படத்திலும் ஒரு கதையை இருவர் சொல்கின்றனர். சாலையோர இட்லி கடையில் வேலை செய்யும் வேலுச்சாமியின் பார்வையிலும், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஆர்த்தியின் பார்வையிலும்.

ஒரு தெரு, ஒரு பள்ளி , ஒரு குடியிருப்பு பகுதி , காவல் நிலையம் இதுதான் கதைக் களம். அவற்றுள் வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்கள் . விஜய் மில்டனின் கேமிரா அழகாக பயணித்துள்ளது. குறிப்பாக காவல் நிலையத்திற்குள் கேமிரா பயணிப்பது ஒரு கவிதையை போன்றிருந்தது.

தனது குடும்பத்தில் உள்ள வறுமையை உணர்ந்து முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு செல்லும், சிறுவன் வேலுச்சாமி அந்த ஏஜெண்டுடன் மோட்டார் சைக்கிளிள் பயணிக்கும் பொழுது , பள்ளியில் கேட்கும் ”தாயின் மணிகொடி பாரீர்” பாடல் மிக வலி மிகுந்த காட்சியமைப்பு.

இந்த படத்தில் மேலும் என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் விலைமாது ரோஸி கதாபாத்திரம். வேலுச்சாமி சாலையில் பசி மயக்கத்துடன் மயங்கி கிடக்கும் போது, அந்த பரபரப்பான சாலையில் கடந்து செல்லும் எண்ணற்ற மனித முகங்கள் யாரும் உதவ வராத போது ரோஸி, வேலுவின் மீது காட்டும் அக்கறை மிக மேன்மையானது. எளிய மனிதர்களுக்கு, எப்போதுமே உதவுபவர்கள் எளிய மனிதர்களே என்ற உண்மையை இந்த காட்சி முன்வைக்கிறது.

எதார்த்த வாழ்வில் நாம் சாலையை கடக்கும் போது , எத்தனையோ பேர்கள் சாலையில் விழுந்து கிடக்கிறார்கள், அவர்களின் வலி என்ன என ஆராயாமல் , நம் மனதில் குடி கொண்டு விடுகிறது , “தண்ணியடுச்சுட்டுதான் இப்படி விழுந்து கெடக்கிறான்” என்ற எண்ணம் ,, இந்த விசயத்தை ரோஸியின் கருணையினால் முன் வைக்கிறது காட்சியமைப்பு .

யாரும் உதவாத போது , அவளுக்குள் இருக்கும் கருணை , எளிய மனிதர்களை தனக்கு சொந்தமானவராக எண்ணிக் கொள்ளும் பாசம் , அவனுக்காக இட்லி வாங்கி கொடுத்து , அவன் கதையை கேட்டறிந்து, அவனுக்காக கண்ணீர் சிந்தி ஒரு வேலையையும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு , கடந்து செல்லும் காட்சி, திரைப்படத்தில் மிக முக்கியமான காட்சியாகும்.

—————————————————————————————————–

இந்த படத்தில் மிக முக்கியமாக இந்த கால கட்டத்தில் கைப்பேசியை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை முன் வைக்கிறது , தினேஸ் கதாபாத்திரத்தில் நடித்த மிதுன் முரளி கச்சிதமான பொறுத்தம். தன் வீட்டின் அருகில் இருக்கும் ஆர்த்தியை கவர அவன் செய்யும் மோடி மஸ்த்தான் வேலைகள் எல்லாமே படத்தில் மிக எதார்த்தமாகவும் அழகாகவும் வந்துள்ளது.

இன்றைய கால கட்டத்தில் கைப்பேசி என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. அத்தகைய கைப்பேசிகளை தவறான தேவைக்கு பயன் படுத்தும் தினேஸ். அந்த கைப்பேசியில் எடுக்கும் படங்களை தன் நண்பர்களிடம் காட்டி சந்தோசம் அடைந்து கொள்கிறான்.

இது தெரியாமல் அவன் வசதியில், அவன் வைத்திருக்கும் விலை உயர்ந்த போனிலும், அவனது ஏமாற்றும் பேச்சிலும் மயங்கி ஆர்த்தி அவன் வளையில் விழுந்து , ஒரு கட்டத்தில் அவன் வக்கிர புத்தியை கண்டுகொண்டு விலகி விடுகிறாள்.

அந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத தினேஸ் திராவகம், ஆர்த்தியின் முகத்தில் திராவகம் வீச முயற்சிக்கும் பொழுது, கதை மாறுகிறது..

அந்த கதை ஜோதியின் வாழ்க்கையில் பயணித்து, ஜோதியை காதலிக்கும் வேலுவை உள்ளே தள்ளுகிறது..

—————————————————————————————————

இட்லிக்கடையில் வேலை செய்ய வரும் சின்னச்சாமி கதாபாத்திரம் மிக அருமையான கதாபாத்திரம். அவன் பேசும் வசனங்களும் , நடிப்பும் மிக எதார்த்தமாக உள்ளது. யோவ், யோவ் என அவன் பேசும் வசனங்கள் மனதை கவர்கிறது

—————————————————————————————————

வேலு, ஜோதி இருவருக்குமிடையேயான காதல் , கண்களாலேயே பேசிக் கொள்ளும் கவிதை மொழி. இறுதிக் காட்சியில் ஜோதியின் முகம் எரிந்து விட்டது என கூறியதும். வேலு அழுது குமுறும் காட்சியில், மனதை நெகிழ வைக்கிறார் வேலு .

போலீஸ் இன்ஸ்பெக்டரின் பொய்யான வார்த்தைகளை நம்பி செய்யாத குற்றத்திற்கு தண்டனையை, காதலியின் நலனுக்காக ஏற்றுக் கொள்ளும் வேலு, பின் சின்னச்சாமியின் வாயிலாக அனைத்து உண்மைகளும் தெரியவர இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஆஸிட் வீச செல்லும் போது ஜோதி கடிதத்தில் பேசும் வசனங்கள் படத்திற்கான பெரும் பலம். ————————————————————————————————–

இரண்டு பாடல்களும் மிக அற்புதமாக உள்ளது, ஒரு குரல் கெட்குது பெண்ணே , உயிர் விடும் முன்னே” பாடலில் நா.முத்துக்குமார் மனதை நெகிழ வைக்கிறார். வானத்தையே எட்டிப் புடிப்பேன் பாடல் , படத்திற்கான ஜீவன், மீண்டும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வழக்கு எண்:18/9 திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனின் மனதில் குடியிருக்கும் என நினைக்கிறேன்.

நடிகர்களின் விபரங்களை இங்கே காணலாம்:-

  • Sri as Velu
  • Mithun Murali as Dinesh
  • Urmila Mahanta as Jothi
  • Manisha Yadav as Aarthi
  • Muthuraman as Kumaravel
  • Chinnasamy as Chinnasamy
  • Senthil as Vediappan
  • Rani as Rani
  • Rithika as Jayalakshmi
  • Goutham as Goutham
  • Vidhya Eeshwar as Gayathri
  • Anjalai as Parvathy
  • Devi as Rosy

  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube