நீண்ட நாட்களுக்கு பிறகு எனது சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். ஊரில் உள்ள மனிதர்களின் சுபாவம் மாறினாலும் எப்போதும் மாறாமல் இருக்கிறது அந்த இயற்கை. எனது ஊர் பசுமையான பகுதி அல்ல , இருப்பினும் அங்கே அடிக்கும் வெய்யிலும், காற்றும் அலாதியானது. இந்தியாவில் எங்கெங்கோ சுற்ற வாய்ப்பு கிடைத்தாலும் , பிறந்த ஊரின் வெய்யிலையும், காற்றையும் எங்கும் நான் அனுபவித்ததில்லை. மதுரையில் உள்ள மேற்கு மலைத்தொடர்களின் அடிவாரத்தின் அருகில் இருக்கிறது எனது ஊர். வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் மலைகள் தன் அழகினால் கவர்ந்திலுக்கும். பால்யத்திலிருந்தே மலைகளோடு பேசியிருக்கிறேன், மலைகளுக்கு தெரியும் எனது ரகசியங்கள், துக்கங்கள் எல்லாம். மலை ஒரு தோழனைப்போல் எப்போதும் உள்ளது.
சிறு வயதில் திருப்பரங்குன்றம் வழியாக மதுரை செல்லும் போது, மலையை மிக அருகில் பார்த்து வியந்தது இன்னும் மனதில் பசுமையாக உள்ளது. அழகர்கோவில் மலைக்கு சென்றது ஒரு சுகமான அனுபவம். மலையேருவது என்பதே மாபெரும் சாகசம்தான்.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் “மாகாலிங்க மலைக்கு (சதுரகிரி மலைக்கு) அந்த பகுதி மக்கள் அனைவரும் செல்வார்கள். அப்படி பால்யத்திலிருந்தே மலையேறுவது ஒரு அனுபவமாக கிடைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரிஷிகேஸ் சென்றிருந்தேன் அங்கே கங்கை நதியை கடந்து நீல்கண்ட் மகாதேவ் வை தரிசிக்க மலை ஏறினேன். ஒரே ஏற்றம்தான் . அங்கங்கே நின்று தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்து ஏறினேன். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மலையின் உச்சியில் இருந்து கங்கையை பார்க்கும் பொழுது , ஒரு மாபெரும் நதி பதுங்கி பதுங்கி பாய்வது போன்றிருந்தது.
மலைகள் எப்போதும் நெருங்கிய ஆத்மார்த்தமான தோழனாகவே இருக்கின்றது, மலைகளை பற்றிய கனவுகளோடும் , ஊர் பாசத்தோடும் , ஊருக்குச் சென்ற எனக்கு மாபெரும் வலி காத்துக் கொண்டிருந்தது. நான் மிகவும் நேசிக்கும் எனது ஊரின் அருகிலேயே இருக்கும் ஒரு சிறுமலை எங்கள் ஊர் மக்கள் ஓணாக்கரட்டு என அழைத்து வந்த (அந்த மலையின் வடிவம் ஒரு ஓணானை போன்றிருக்கும்) அந்த மலையின் சிறு பகுதியை வெடிவைத்து இருந்தனர்.
அங்கே மலையை உடைத்து வீடுகட்டுவதற்கு கற்களை எடுத்து உள்ளார்கள். நான் மிகவும் நேசிக்கும் அந்த மலையின் நிலையை என்னால் காண இயலவில்லை. உடலில் ஒரு புண் வந்தால் உள்ளம் எப்படி துடிக்குமோ அப்படியொரு மனநிலை எனக்கிருந்தது.
அந்த மலையின் அடிவாரத்தின் அருகிலேதான் எங்களது சிறுதோட்டம் இருந்தது. அந்த செம்மண் நிறைந்த பூமிக்கு ஒரு நிரந்தர அடையாளமாகவும் , தொலைதூரத்தில் இருந்து பேருந்தில் பயணித்து வரும் பொழுது , டேய் நம்ம ஊரு பக்கத்துல வந்தூட்டம்டா என அந்த மலையை கண்டு கூறுவதற்கான அடையாளச் சின்னமாகவும் இருந்த அந்த மலையை இப்படி செய்துவிட்டார்களே என வருத்தம் கொண்டேன்.
நாம் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என நண்பர்களிடம் கேட்ட பொழுது யாரும் கண்டுகொள்ளவில்லை, இதெல்லாம் தாலுகா ஆபிசுக்கு தெரிஞ்சுதான் நடக்குது என்றனர். ஒரு மலையை எளிதாய் வெடிவைத்து சிதிலமடையச் செய்து விடலாம். ஆனால் அந்த மலையை நம்மால் உருவாக்க இயலாது.
மலைகள் காலத்தின் அடையாளம்,அந்த மலையை நம் முன்னோர்கள் கண்கள் பார்த்திருக்கின்றன, மலையின் மீது கண்டிப்பாய் அவர்களும் ஏறியிருப்பார்கள். அவர்கள் பயணித்த பாதையில்தான் நாமும் பயணிக்கிறோம். இத்தனை காலம் நம் முன்னோர்கள் காத்து வந்த மலையை , இப்போது சிதிலமடைந்து காணும் போது மனதில் வலி மிகுகிறது.
மலைகள் வெறும்
மலைகள் மட்டுமல்ல
மலைகள் நம்மோடு பேசும்
நாம் மலைகளோடு பேசினால்..
அன்பின் விட்டலன்..
மலை என்பது வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆனதல்ல.அதனுள் நம் உணர்வுகள் உறைந்து படிந்திருக்கின்றன.உங்களின் இதே உணர்வை நானும் பெற்றதுண்டு.’70 களில் மதுரை காரைக்குடி சாலையில் பயணித்தபோது மேலூர் ரோடில் இருந்த பாறை மலைகளுக்குள் என் கற்பனை பிம்பங்கள் பல இருந்தன.இப்போது கால மாற்றத்தால் அவை அழிக்கப்பட்டு குவாரிகளாகி விட்டன;அந்த வெறுமை அந்தச் சாலையில் போகும்போதெல்லாம் என் முகத்தில் அறைகிறது.[இப்போது வழக்கு நடக்கும் குவாரி உட்பட..]
Mighty useful. Make no mistake, I apprceiate it.
//ஒரு மலையை எளிதாய் வெடிவைத்து சிதிலமடையச் செய்து விடலாம். ஆனால் அந்த மலையை நம்மால் உருவாக்க இயலாது// யாருக்கு இங்கே கவலை இதுபற்றியெல்லாம்… எல்லாருக்கும் அவனவன் தேவை நிறைவடைந்தால் சரி என்று மனதுக்குள் ஊறிப்போயாயிற்று.
மதுரையின் மலைகள் மொட்டையாக்கப் பட்டுள்ளன என்றால் சென்னைப் போன்ற நகரங்களில ஏரிகள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. சமீபத்தில் UNESCO மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் சேர்த்து அறிவித்ததை அந்தந்த மாநில அர்சுகளே வரவேற்க்கவில்லை என்பது தான் இன்றைய நிலை. இது பற்றிய என்பதிவை நேரமிருந்தால் படியுங்கள்.