கதாபாத்திரங்கள் :-

 

சம்பு சாஸ்த்திரி – குடும்பத்தலைவர் (நாவலின் முக்கியமான கதா பாத்திரம்)

நல்லான் – சம்பு சாஸ்த்திரியின் பணியாளன்

சாவித்திரி – சம்பு சாஸ்த்திரியின் மகள் (நவலின் நாயகி)

உமாராணி – சாவித்திரியின் மறு பெயர்

மங்களம் – சம்பு சாஸ்த்திரியின் மனைவி

சொர்ணம்மாள் – மங்களத்தின் தாய்

தங்கம்மாள் – சாவித்திரியின் அத்தை

ராஜாராமய்யர் – சாவித்திரியின் மாமா

        நீண்ட நாட்களாக அமரர் கல்கி அவர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளூர இருந்து வந்தது. சமீபத்தில் தியாக பூமி நாவலை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அண்ணன் வாங்கி கொடுத்தார்.

சென்னையிலிருந்து தில்லி செல்லும் இரயிலில் ஏறி நாவலோடு பயணிக்க தொடங்கினேன். அமரர் கல்கி அவர்களின் படைப்புகளை வாசிக்கும் பொழுது அப்படியே அந்த கதாபாத்திரங்கள் நம்முடன் காட்சிகளாக தெரிவதைப்போன்றும், உரையாடுவது போன்றும்  ஒரு எண்ணம் உருவாகும் என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அத்தகைய உணர்வை தியாக பூமி நாவலை வாசித்த பொழுது உணர முடிந்தது.

         தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்கரை என்ற சிற்றூரில் கதை நடைபெறுகிறது. ஒரு பிராமணக் குடும்பம் , அந்த குடும்பத்தின் தலைவரான சம்பு சாஸ்த்திரி பூஜைகள் செய்து கொண்டும் , நல்ல விசயங்களை ஏழை மக்களுக்கு பிரசங்கம் வழங்கியும் நாட்களை கழிக்கிறார். அவருக்கு  ஒர் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டும் தனது முதலாளியின் நல்ல மனதை புரிந்து கொண்டும் விசுவாசமாக இருக்கிறான் சம்பு சாஸ்த்திரியின் வேலைக்காரன் நல்லான்.

         நாவலின் தொடக்கத்தில் தனது மகள் சாவித்திரிக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டு , நீண்ட நாட்களுக்கு பிறகு இரயிலில் வந்திறங்குகிறார் சம்பு சாஸ்த்திரி. சம்பு சாஸ்த்திரியை அழைத்துச் செல்ல மாட்டு வண்டியுடன் தயாராக காத்துக் கொண்டுள்ளான் நல்லான்.

         நாவலை வாசிக்கும் பொழுது வாசிப்பாளர்கள் ஒவ்வொருவரின் மனநிலையையும் நாவல் எழுதப்பட்ட காலத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும் அப்போதுதான் நாவலோடு நாம் இயல்பாக பயணிக்க முடியும்.

         நெடுங்கரையில் உள்ள சம்பு சாஸ்த்திரி வீட்டில் சாவித்திரி தனக்கு வரப்போகும் கணவனை எண்ணி கனவில் லயித்து இருக்கிறாள், தனது தந்தையின் வரவிற்காக ஏங்குகிறாள். அதே வேளையில் வீட்டில் தனது சித்தி மங்களத்தின் கொடுமைக்கு ஆளாகிறாள். மங்களத்தின் பாட்டி சொர்ணம்மாள் தனது ஊசி முனை பேச்சுகளால் சாவித்திரியை புண்படுத்துகிறாள். இந்நிலையில் சம்பு சாஸ்த்திரி வீட்டிற்கு வந்து கல்யாணம் நிச்சயம் ஆண செய்தியை கூறுகிறார். சாவித்திரியின் மனது சந்தோசம் கொள்கிறது. சாவித்திரிக்கு திருமணம் நடக்கிறது. திருமணம் செய்து முடிந்ததும் சிறிது காலம் தந்தையின் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு , இராஜாராமயய்ரின் குடும்பம் வேலை நிமித்தமாக கல்கத்தா செல்கின்றனர். 

         நாவல் குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டங்கள், வேதனைகள் குழப்பங்கள் இவற்றில் எல்லாம் பயணித்து விட்டு வெளி உலகத்திற்கு வருகிறது. ஒரு நாள் பெரும் மழை பெய்து நெடுங்கரை கிராமத்தையே வெள்ளக்காடாக்கி விடுகிறது. குடிசைவாழ் மக்களின் குடிசைகள் எல்லாம் நீரில் மூழ்கி விடுகின்றது. அக்குடிசை பகுதியில் குடியிருக்கும் நல்லான் தனது மனைவியிடம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு சம்பு சாஸ்த்திரி ஐயா வீட்டிற்கு போகச் சொல்கிறான். ஏழை மக்களில் சிலர் பயம் கொள்கின்றனர். எப்படி உயர் சாதியினர் குடியிருக்கும்

 பகுதிக்கு போறது என அஞ்சி நடுங்குகின்றனர். இந்நிகழ்வு அக்கால சூழ்நிலையில் சமுதாயத்தில் நிலவிய சாதிய பாகுபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

 நல்லான் அவர்களுக்கு தைரியம் கொடுத்து தன் முதலாளி சம்பு சாஸ்த்திரி அவர்களின் நல்ல குணத்தை அறிந்து அவர்களை தைரியமாக போகச் சொல்கிறான். ஏழை மக்கள் சம்பு சாஸ்த்திரியின் மாட்டுக் கொட்டகையில் அன்றிரவு தங்குகின்றனர். விடிந்ததும் ஊர் மக்கள் கீழ் சாதி பயல்கள் எப்படி நம்மளை போன்றவர்கள் குடியிருக்கும்  பகுதிக்கு வரலாம். சம்பு சாஸ்த்திரி நீர்தான் எல்லாத்துக்கும் காரணம் எனக் கூறி சம்பு சாஸ்த்திரி அவர்களை ஊரை விட்டே தள்ளி வைக்கின்றனர்.

 சில மாதங்களுக்கு பிறகு சாவித்திரி கல்கத்தாவிற்கு செல்கிறாள். கனவுகளோடு கல்யாணம் செய்த அவளை அவள் கணவன்  தரன் வெறுக்கிறான் . பட்டிக்காடு என்றுக் கூறி அவளை திட்டுகிறான். அவள் அத்தை தங்கமும் மருமகளை கொடுமை படுத்துகிறாள். மாமனார் ராஜாராமய்யர்தான் சாவித்திரிக்கு சிறிது ஆறுதலாக உள்ளார்.

 இந்நிலையில் சாவித்திரி கர்ப்பம் தரிக்கிறாள்.  சாவித்திரியை தனியாக இரயிலில் நெடுங்கரைக்கு செல்லுமாறு அனுப்புகின்றனர். இதே வேளையில் நெடுங்கரையில் உள்ள சம்பு சாஸ்த்திரி ஊரில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக பாட்டு சொல்லிக் கொடுக்க சென்னை வருகிறார்.சாவித்திரி நெடுங்கரைக்கு சென்று அங்கு யாருமில்லாததால் , மீண்டும் சென்னை வந்து தந்தையை தேடி அலைகிறாள், அங்கே அவளுக்கு பிரசவமாகிறது அழகான பெண் குழந்தைக்கு அம்மா ஆகிறாள்.

 நகரத்தில் தனியாய் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ வழியில்லாமல் தள்ளாடுகிறாள். ஒரு நாள் பம்பாயில் வேலை செய்ய பெண் தேவை என்ற விளம்பரத்தை காண்கிறாள். தனியாளாய் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்ள செல்லும்போது, அங்கே தந்தை சம்பு சாஸ்த்திரியிடம் காண்கிறாள். அவர் கண்மூடி இறைவனை வணங்கி கொண்டிருக்கும் போது குழந்தையை அவரடியில் வைத்து விட்டு , நம்பிக்கையுடன் பம்பாய் பை பயணிக்கிறாள்.

 நெடு நாட்களுக்கு பின் உமாராணியாக மறு அவதாரம் எடுத்து சென்னைக்கு வருகிறாள், சென்னையில் தனது குழந்தை சாருவைக் காண்கிறாள். அதே நேரத்தில் தரனையும் காண்கிறாள், அவனுக்கு உதவி செய்கிறாள் ஆனால் அவனோடு வாழ விருப்பம் இன்றி வெறுக்கிறாள்.

 இறுதியில் இருவருமே குடும்ப வாழ்க்கை வாழ விருப்பமின்றி தேசத் தொண்டு செய்வதற்கு களத்தில் இறங்குகின்றனர். அங்கே ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு மீண்டும் குடும்பவாழ்க்கையை இனிதே துவங்குகின்றனர்.சம்பு சாஸ்த்திரி சேரி மக்கள் தனக்கு அமைத்து கொடுத்த குடிசையிலேயே சந்தோசமாக உள்ளார்.

  வாசிப்பை நேசிக்கும் இளையசமுதாயத்தினர் அனைவரும் கண்டிப்பாய் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான எழுத்தாளர் அமரர் கல்கி அவர்கள். தியாக பூமி நாவலை வாசிக்கும் பொழது , புத்தகத்தை மூட மனமில்லை, கதாபாத்திரங்கள் நம்மை ஈர்த்து செல்கின்றது , சம்பு சாஸ்த்திரியை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா என்று எண்ண செய்வதுதான் நாவலின் பலம்.

 

———————————————————————————————

திருமகள் நிலையம்
சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்
ப.எண். 28, பு.எண் 13, சிவப்பிரகாசம் தெரு
தியாகராயர் நகர், சென்னை – 600 017
தொலைபேசி : 24342899, 24327696

———————————————————————————————


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube