உலக சினிமா என முத்திரை குத்தப்பட்ட திரைப்படங்களை பற்றி தமிழின்  தலைசிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியுள்ளனர், ஆகையால் நான் பார்த்த திரைப்படங்களின் திரைக்கதையையும், காட்சி அமைப்பையும் விவரித்து தங்களை விரக்தியடைய விடமாட்டேன்.

உலக சினிமா பற்றிய புத்தகங்களை வாசித்தபொழுது அத்தகைய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாளைய கனவாக இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் எழுத்தாளர் உமாசக்தி அவர்களை டிஸ்கவரி புக் பேலஸில் சந்தித்தேன்.

அப்போது உலகசினிமாக்களை பற்றி பேசும்போது, தான் அம்ருதா இதழில் உலகசினிமா பற்றிய தொடர் எழுதி வருவதாக கூறினார்கள். நானும் உலகசினிமா புத்தகங்களை வாசித்துள்ளேன், ஆனால் பார்க்கத்தான் இயலவில்லை என்றேன்.

சென்னையில் உள்ள ஜெமினி பாலத்திற்கு அருகில் உள்ள சாப்பிங் காம்ளெக்ஸில் எல்லா படங்களும் கிடைக்கிறதே என்றார். மறுநாளே எனக்கு தெரிந்த திரைப்படங்களை பட்டியளிட்டேன். வடபழனியிலிருந்து 17 M – ல் ஏறி ஜெமினி பாலத்தின் அருகில் இறங்கி , கடையை விசாரித்து திரைப்படங்களை வாங்கினேன். வாசக நண்பர்கள் யாருக்காவது திரைப்படங்களை பார்க்க விரும்பினால் மேலே சொன்ன ரூட் சிறிது உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

திரைப்படத்தை நான் புரிந்து கொண்டதைதான் இங்கே பதிகிறேன். ஆகையால் சினிமாவை மிக மிக அதிகமாக நேசிக்கும் நண்பர்கள் ஏதாவது குறையிருந்தால், பொறுத்துக் கொள்ள வேண்டும்.

சரி, விசயத்திற்கு வருகிறேன்…

இது ஒரு Iranian film கதையில் மிக முக்கியமான காதபாத்திரங்கள் மூன்று பேர், சகோதரன் (அலி), சகோதரி (Zahra) , சூ. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் சிறுவன், தன் தங்கையின் சூவை தைத்து வாங்கி கொண்டு செல்வதில் தொடங்குகிறது திரைப்படம்.   இந்த காட்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் பால்யகாலம் கண்டிப்பாய் வந்து போகும்.

Ali தனது தங்கை Zahra's ன் shoes வுடன்

பால்யத்தில் சூ அணிவது என்பது ஒரு சாதனையாகவே இருந்தது. நான் முதன்முதலில் சூ அணிந்ததே என் உறவினர் ஒருவர் தன் வீட்டு குழந்தைக்கு வாங்கி உபயோகித்து பின் எனக்கு கொடுத்ததுதான் . அப்போதெல்லாம் பழசு, புதுசு என்ற பாகுபாடையெல்லாம் மனது அறியவில்லை. அது ஒரு வசந்த காலம் . அந்த கருப்பு கலர் சிறிய சூவை போட்டுக் கொண்டு வீதியில் நடக்கும்போது தனி பெருமிதம் மனதில் ஊற்று நீரைப்போல குமிழ்ந்து சந்தோசமளிக்கும். அந்த நினைவுகளை இந்த CHILDREN OF HEAVEN திரைப்படக் காட்சி ஆள்மனதிலிருந்து எழுப்பிவிட்டது.

சூவை (காலணியை) தைத்து வாங்கிக் கொண்டுவரும்போது, காய்கறி வாங்க கடைக்குள் நுழைகிறான், அப்படி நுழையும்போது கடையின் வெளியில் கழிவுகள் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் அருகிலேயே தனது தங்கையின் சூவை ஒரு பாலித்தீன் கவரில் போட்டுவைத்து விட்டு கடைக்குள் நுழைகிறான்.

கடையில் உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டு வந்து பார்க்கும் அவனுக்கு சூ காணாமல் போனது தெரியவருகிறது. அலி கடைக்குள் நுழையும் போதே கழிவுகளை அகற்றுபவர் தெரியாமல் சூ சுற்றிவைக்கப்பட்டுள்ள பாலித்தீன் கவரையும் எடுத்துச் சென்றுவிடுகிறார்.

சூ காணாமல் போகவும் சிறுவன் அடையும் பதட்டம். மிக இயல்பானது சிறுவயதில் அத்தகைய பதட்டத்தை கண்டிப்பாய் அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். திரைப்படத்தில் சிறுவன் ஏக்கத்துடன் வைத்திருக்கும் முகபாவம் மிக மிக எதார்த்தமானது.

சூ தேடும் போது அவன் காய்கறிகளை தெரியாமல் தட்டி விடுகிறான். கடைக்காரன் அலியை விரட்டி விடுகிறான் , வேறு வழியின்றி அலி கடைக்காரனிடமிருந்து தப்பித்து, வீடு வந்து சேர்கிறான். வீட்டில் அறையில் இருக்கும் தங்கையிடம் அழுது புலம்புகிறான். அவளும் கண்ணீர் வடிக்கிறாள்.

மனது அலைகிறது மீண்டும் காய்கறி கடைக்கு ஓடுகிறான். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தேடுகிறான், கடைக்காரன் அலியை பார்த்து திட்டுகிறான். அலி மீண்டும் அவனிடமிருந்து தப்பித்து வீடுவந்து சேர்கிறான்.

இனி வீட்டில் இருக்கும் ஒரு சூ அதாவது அலியின் ஒரு சூவை வைத்துக் கொண்டு இருவரும் பள்ளிக்கு சென்று வர வேண்டும் . காலையில் Zahra ற்கு பள்ளி, மதியத்திற்கு மேல் அலிக்கு. Zahra பள்ளி முடிந்ததும் வேக வேகமாக ஓடிவந்து அண்ணனுக்கு சூ வைக் கொடுக்கிறாள். அலி அணிந்து கொண்டு வேகமாக ஓடி பள்ளிக்கு தினமும் சில நிமிடங்கள் தாமதமாகவே செல்கிறான்.

படம் முழுவதுமே இருவரும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அப்பா, அம்மா அன்றாட பிரச்சனைகளை சமாளிக்க போடும் சண்டை , அப்பா படும் கஷ்ட்டம் என வேதனையான குடும்ப சூழல், அத்தகைய சூழலுக்கு மத்தியில் அழகான இவர்களது உலகம். ஒரு முறை Zahra பள்ளியை விட்டு ஓடி வரும் பொழுது சூ சாக்கடையினுள் விழுந்து விடுகிறது, அந்த சூ வை எடுக்க அவள் போராடும் காட்சி ஒரு சோக கவிதை.

 சில நிமிட போராட்டத்திற்குப் பின் சாலையோரக் கடைக்காரனின் உதவியால் சூவை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி அண்ணனிடன் அந்த ஈரமான சூவை கொடுக்கிறாள்.

அலி அந்த ஈரமான சூவை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லும் போது தலைமை ஆசிரியர் பார்த்துக் கண்டிக்கிறார். திரைப்படம் முழுவதுமே குழந்தைகளின் மன நிலை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

அந்த பால்ய காலத்து செயல்கள் அனைத்தும் மிக அற்புதமானவை. தங்கள் குடும்பத்தில் இருக்கும் வறுமையான சூழல் காரணமாக அப்பாவால் சூ வாங்கித்தர இயலாது என தெரிந்து கொண்ட , இரு குழந்தைகளும் வீட்டு பெரியவர்களிடம் எதுவும் சொல்லாமல், அவர்களே அந்த பிரச்சனைகளை ஏற்றுக் கொண்டு போராடுகிறார்கள்.

Zahra மனதில் சூ தான் நிறைந்திருந்தது. அவள் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அனைவரின் சூவையும் பார்க்கிறாள். சூ அவள் மனதில் பெரும் வலியை உண்டாக்குகிறது. அழுக்கான சூ வை அணிந்துள்ளோம் என அவள் வெட்கப்படுகிறாள்.

இப்படி வலியுடன் இருக்கும் போது பள்ளியில்  தனது சூ வை அணிந்து ஒரு மாணவி இருப்பதை பார்த்து விடுகிறாள். அன்று மாலை பள்ளி விட்டதும் அவளை பின் தொடர்ந்து சென்று அவளது வீட்டை கண்டுபிடிக்கிறாள். வீட்டிற்கு வந்ததும் அண்ணனிடம் அந்த விசயத்தை சொல்கிறாள். மறு நாள் இருவரும் அவளது வீட்டிற்கு செல்கின்றனர்.

தூரத்திலிருந்து அவளது வீட்டை பார்க்கும் பொழுது, நம்மை விட ஏழ்மையாக உள்ள குடும்ப சூழலை உணர்ந்து அவர்கள் ஏதும் பேசாமல் மௌனமாக செல்கின்றனர்.

இந்நிலையில் அலியின் பள்ளிக்கூடத்தில் ஓட்ட போட்டிக்கான தேர்வு நடக்கிறது. அலி தனது கிழிந்த சூ வை வைத்துக் கொண்டு அந்த போட்டியில் கலந்து கொள்ள இயலாது என வருந்தி ஒதுங்குகிறான். எனினும் ஒரு நாள் ஆற்றாமல் என்னால் நன்றாக ஓட முடியும் என உடற்கல்வி ஆசிரியரின் அறைக்கு சென்று கண்ணீர் சிந்துகிறான்.

பின்னர் அவனை ஓட விட்டு பார்க்கிறார் ஆசிரியர், அப்போது அவனுக்குள் இருக்கும் தனித்திறமையை கண்டு கொண்டு அலியை போட்டிக்கு அலைத்து செல்கின்றனர். ஆயிரம் மாணவர்களை ஓட விடுகின்றனர். அலி கிழிந்த சூவுடன் ஓடுகிறான். அலி ஓடி வெற்றி பெறுகிறான்.

அவனுக்கு கிடைத்த வெற்றியினால் அவனுக்கு பதக்கங்கள் கிடைக்கின்றன. அனைவரும் அலியோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்கள் அவனை கொண்டாடுகிறார்கள். ஆனால் அலிக்கு சந்தோசம் இல்லை ஏனெனில் அவனுக்கு தேவை கோப்பைகள் அல்ல அவனுக்கு தேவை ஒரு ஜோடி சூ , அது இராண்டாம் பரிசாக கொடுக்கப் படிகிறது, தன்னால் சூவை ஜெயிக்க முடியவில்லையே என வருந்துகிறான். தமது பெற்றோர்கள், தனது சகோதரி அங்கு இல்லையே என வருந்துகிறான். அன்பிற்காக ஏங்குகிறான்.

மாலையில் வீடு வந்து சேர்கிறான். தங்கை அவளை ஆவலுடன் எதிர் கொள்கிறாள். அந்த காட்சியில் இருவரின் முகபாவங்களும் மிக அழகாக வெளிப்படும். அவனுக்கு இந்த வெற்றி பெரிய சந்தோசத்தை கொடுக்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும் தனது கால்களை தொட்டிக்குள் வைக்கிறான், மீன்கள் அவனது கால்களை வந்து முத்தமிடுகின்றன. இந்த காட்சியோடு திரைப்படம் முடிகிறது. இந்த திரைப்படத்தில் சூ என்ற ஒன்று ஒரு பெரிய குறியீடு.

சூ என்பது அன்புதான். அவன் அன்பிற்காக ஏங்குகிறான். அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படும் பெற்றோர்கள், வறுமையின் சூழலால் தங்கள் குழந்தைகளை கவனிக்காமால் விட்டு விடுகின்றனர். அவர்களுக்காக நேரத்தை செலவு செய்வதில்லை. இந்த திரைப்படம் நமக்கு அன்பின் தேவையை உணர்த்துகிறது. குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் அவர்களது உலகத்தினுள் பயணிக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது.

படத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள

http://en.wikipedia.org/wiki/Children_of_Heaven

3 Responses so far.

  1. இந்தப் படத்தை எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக எழுதி விட்டார்கள். நானும் எத்தனையோ முறை பார்த்து விட்டேன். எனக்குத் தோன்றியது – இதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியவே முடியாது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு கவிதை. எதைச் சொல்ல, எதை விட? வேறு என்னென்ன படங்கள் வாங்கி வந்திருக்கிறீர்கள் என்று பட்டியல் தந்தால் ஓசி கேட்க வசதியாக இருக்கும்.

  2. நானும் இந்தப்படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் விட்டலன்.ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீர்கள்…

  3. இந்தப் படத்தின் இறுதிக்காட்சிகளை முதல்முறையாகப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருக்கிறது. அழுகை & மகிழ்ச்சியைத் தாண்டிய ஒரு அனுபவத்தை தந்தது. நல்ல படம்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube