சமீபத்தில் பார்த்த இந்த குறும்படம் மனதை நெகிழ செய்துவிட்டது. அற்புதமான குறும்படம் இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்லும் கருத்தை அழகாக தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த அவசரகால வாழ்க்கையில் மனித நேயத்தை மறந்து பலர் வாழ்ந்து வருகிறார்கள், மனிதன் என்றால்சகமனிதர்களை நேசித்து வாழ வேண்டும் என்ற நெறியை படித்த நம்மில் பலரே அதை மறந்துவிட்டு வாழ்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கு நாம் புத்தகங்களில் படித்த மனித நெறியை கூட படிக்க வைப்பதில்லை. இத்தகைய மோசமான சூழ்நிலையில் மனிதத்தை பேசவும், எழுதவும், காட்சிப்படுத்தவும் வேண்டியது மிக இன்றியமையாத பணியாக உள்ளது.
அந்த பணியை மிக அழகாக செய்துள்ளார் இயக்குனர்.
குழந்தையை மாறுவேட போட்டிக்கு தயார்படுத்துகிறார்கள் பெற்றோர்கள். அவனுக்கு பிச்சைக்கார வேசம், ஆங்கில வசனத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள். பிச்சைக்காரன் இங்கீலீஸ்ல பேசுவானாமா என்கிறான் சிறுவன் . பின் தாய் சொல்லிக் கொடுத்த ஆங்கில வசனத்தை சொல்கிறான்
I am a beggar
I live in the street..
I beg for money
I beg because …
ஒரு காட்சி முடிகிறது
முதல்நாள் பணிக்குச் செல்லும் போலீஸ்காரர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு நூறு ரூபாய் பணத்தை உண்டியலில் போட செல்லும்போது பிச்சைக்காரர் கை நீட்டுகிறார், அந்த போலீஸ்காரர் பிச்சைக்காரருக்கு பணத்தை குட்டுத்துவிட்டு செல்கிறார்.
முதல்நாள் பணியில் தலைமை காவலர் சொல்லும் மோசமான பணிகளை செய்கிறார். மனித நேயம் மிகுந்த அந்த போலீஸ்காரர் மனவிருப்பமின்றி கட்டளைக்கு அடிபணிந்து அந்த வேலையை செய்கிறார்.
அந்த சிறுவன் பிச்சைக்கார வேசம் போட்டு காரில் இருக்கிறான். தற்செயலாக உண்மை பிச்சைக்காரரும், மாறுவேட பிச்சைக்கார சிறுவனும் சந்தித்து உரையாடுகிறார்கள்.
தனது உண்மை நிலையை பாடலாக பாடுகிறார் பிச்சைக்காரர்..
கால்நடையா போகிறேன்
கஞ்சன்கிட்ட கேட்கிறேன்
உழைச்சுதிங்க வயசில்லே..
உசுறமாய்க்க மனசில்லே
என்ன மட்டும் மறந்தூட்டையே
பிச்சக்கார கடவுளே..
அந்த சிறுவன் அப்பாவின் மணிப்பரஸிலிருந்து நூறு ரூபாயை எடுத்து கொடுக்கிறான். பிச்சைக்காரர் கேட்காமல் எடுக்க கூடாது என வாங்க மறுக்கிறார், இதற்கிடையில் வந்த சிறுவனது அப்பா , வயதான பிச்சைக்காரரை அடித்து தள்ளிவிடுகிறான்.
அங்கு வந்த தலைமை காவலதிகாரி சிறுவனது தந்தையிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஞாயம் என்ன என விசாரிக்காமல் இருக்கிறார். இதைக்கண்ட பிச்சைக்காரர் தனது இயலாமையை எண்ணி வருந்தி யார் பிச்சைக்காரங்கன்னு தெரியல என வார்த்தையை விடுகிறார்.
இதைகேட்ட காவலதிகாரி அந்த பிச்சைக்காரரை அடித்து அவரிடமிருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்கிறார் (புதிய போலீஸ் கொடுத்தது) தான் கொடுத்த நூறு ரூபாய் நோட்டையும் பரித்துக் கொள்ளும் காவலதிகாரியின் இரக்கமற்ற மிருக மனசுவை எண்ணி கோபம் கொள்கிறான் புதிதாக வேலைக்கு சேர்ந்த போலீஸ்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் லஞ்சம் கொடுப்பவனின் கன்னத்தில் அடித்துவிட்டு, அந்த பிச்சைக்காரரை தேடிச் சென்று பத்துரூபாய் நோட்டை கொடுக்கிறான்.
இந்த காட்சிக்கு இடையே
மாறு வேட போட்டியில் அந்த சிறுவன் பிச்சைக்காரர் பாடிய பாடலை பாடி கைத்தட்டல்களை பெறுகிறான். குறும்படம் முடிந்ததும் அந்த பிச்சைக்காரரின் பாடலே மனதில் நிற்கிறது
கால்நடையா போகிறேன்
கஞ்சன்கிட்ட கேட்கிறேன்
உழைச்சுதிங்க வயசில்லே..
உசுறமாய்க்க மனசில்லே
என்ன மட்டும் மறந்தூட்டையே
பிச்சக்கார கடவுளே..
மிகவும் முக்கியமான குறும்படம். குறும்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
குறும்படத்தை பார்க்க..