வேல ராமமூர்த்தி கதைகள்

புத்தக வாசிப்பில் நுழைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட பின், மிகவும் தாமதமாகத்தான் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துகளை கண்டு வாசித்து மகிழ்ந்தேன். எனது ஊருக்கு மிகவும் அருகில் இருப்பவர், இருந்தும் இவ்வளவு தாமதமாகத்தான் அந்த மாபெரும் எழுத்தாளுமையை கண்டடைய முடிந்தது.

இராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வரும்பொழுது சென்னையில் நண்பர் ஒருவரின் அறைக்கு சென்று வருவது வழக்கம். நண்பர் தனது செல்பில் நல்ல நல்ல நூல்களை வாங்கி வைத்திருப்பார். நானும் அவரது அறைக்கு சென்ற பொழுதுதான் வேல ராமமூர்த்தி கதைகள் என்ற புத்தகத்தை பார்த்தேன்.

வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது , முகப்பு படத்தை ராஜ்குமார் ஸ்தபதி மிக அழகாக தத்ரூபமாக படைத்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல ராமமூர்த்தி அவர்களின் ஊரான பெருநாழி கிராமத்திற்கு சென்றிருந்தேன் அப்பகுதி மக்களை அப்படியே தத்ரூபமாக  கொண்டு வந்துள்ளார் ராஜ்குமார் ஸ்தபதி.

வேல ராமமூர்த்தி அவர்களின் வெள்ளையத்தேவன் என்ற சிறுகதையை வாசித்திருந்தேன் (வடக்கு வாசல் இதழில் வெளிவந்தது) அப்போது அவரது எழுத்தை வாசிக்க நல்ல அனுபவமாக இருந்தது. அந்த மொழியே மிக வித்தியாசமாக இருந்தது. இப்போதுதான் அவரது படைப்புகளை முழுதாக வாசித்து புரிந்துகொள்ள முடிந்தது. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையும் முத்திரைக் கதைகள்தான். எந்த கதையையும் தள்ளிவிட்டு போக முடியாது,

முதல் கதையை வாசித்துவிட்டு , சில நிமிடங்கள் என்னால் அடுத்த கதைக்கு பயணிக்க இயலவில்லை. அப்படி ஒரு எழுத்து, அதுவும்  மகாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களை பற்றிய கதை , மிக வித்தியாசமான கண்ணோட்டத்தில் பாரதியை பார்த்துள்ளார் ஆசிரியர். கதையில்,  காட்சியும் உருவகமும் மிக தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளார். ஆனந்த விகடனில் வெளிவந்த பொழுதே மிக அதிக வாசகர்களை கவர்ந்த சிறுகதை.

புத்தகத்தில் மொத்தம் 38 சிறுகதைகள் உள்ளது. ஒவ்வொரு சிறுகதையை பற்றி சொன்னால் தனிப் பதிவே போட வேண்டும். . பல கதைகள் கிராமத்தில் நிலவும் ஜாதிய நிலைப்பாடுகளை தெளிவாக காட்டுகிறது. தலித் எழுத்தாளர்கள் (அதாவது தலித்திய மக்களின் வாழ்க்கையை பற்றி எழுதுபவர்கள்) என பலர்  சொல்லிக் கொண்டு திறிகின்றனர். ஆனால் வேல ராமமூர்த்தி சிறுகதைகளில் பல கதைகள் கிராமத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பேசுகின்றன. தலித்திய மக்களின் வாழ்க்கையை பற்றி பேசுகின்றன. ஆசிரியரின் கதைகள் அனைத்தும் கிராமத்தைச் சுற்றியே உள்ளன. பெருநாழி கிராமத்திற்கு போயுள்ளேன். அழகிய கிராமம். வெள்ளந்தியான மனிதர்கள், அன்பாக பழகுவார்கள். இந்த சிறுகதை தொகுப்பை வாசித்ததும் எனக்கு என்னவோ மீண்டும் ஒருமுறை அந்த பெருநாழி கிராமத்தை சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டுள்ளது.

புத்தகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள http://www.tamilpaper.net/?p=5153

வேலராமமூர்த்தி கதைகள்
விலை ரூ. 250

வம்சி புக்ஸ்
19, டி.எம். சாரோன்
திருவண்ணாமலை
தமிழ்நாடு 606 601

http://www.vamsibooks.com/


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube