நேற்று இத்திரைப்படத்தைப் பார்த்தேன் , மணி பகல் இரண்டுக்கே மேக மூட்டத்துடன் இருந்தது . மெல்ல சாரல் விழுந்துகொண்டிருந்தது திருமங்கலத்தில் உள்ள பாணு திரையரங்கத்தில் திரைப்படத்தை காணச் சென்றேன். மிஷ்கின் அவர்களின் படம் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவர் படம் எப்போதும் சக மனித வாழ்வை வெகு இயல்பாய் படம் பிடித்துக் காட்டும். இசையோடு படம் துவங்குகிறது. அரோல் கொரலி இசையில் நம்மை மெய் மறக்க வைக்கிறார். வயலின் இசை மனதை வருடுகிறது. படத்தில் ஒரே பாடல் என்றாலும் கதையின் ஜீவனை சுமந்து வருகிறது , கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியின் அருமையான கவிதையாய் பாடலை தந்துள்ளார்.
போகும்பாதை தூரமில்லை
வாழும்வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள்கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள்விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு
நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின்பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
கருணைமார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே
இத்தகை அழகிய கவிதையாய் பாடல் அமைந்திருப்பது படத்தின் பலம் . பாடலுக்காகவே மீண்டும் தைரியமாய் ஒரு முறை பிசாசை பார்க்க வேண்டும் போல் உள்ளது. இனி பிசாசைப் பற்றிப் பேசுவோம் , பிசாசாக வரும் நடிகை ப்ரயாகா அழகாக உள்ளார். படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே அழகாக காண்பிக்கிறார்கள். பின்னர்தானே அவர் பிசாசாக மாறி விடுகிறாரே. இன்னும் அவர் அழகை தமிழக ரசிகர்களுக்கு கொஞ்சம் காட்டியிருக்கலாம். அவருக்கான காட்சிகளை கொஞ்சம் நீட்டி இருக்கலாம் என எண்ணத் தோன்றினாலும் அவருக்கு அவ்வளவுதான் அழகியாக இருக்க திரைக்கதை இடம் கொடுக்கிறது. ஹீரோ சித்தார்த் (நாகா) ஒரு இசைஞர். இசைக்காக வாழ்பவர் , இசையை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர். ஆனால் படத்தில் முகத்தை சரியாக காண்பிக்காமல் பாதி பக்க முகத்தையே மறைக்கிறது அவர் ஹேர் ஸ்டைல் . இது கொஞ்சம் ஓவர் தான் . இயல்பாகவே அவருக்கு இருக்கும் ஹேர் ஸ்டைலயே வைத்திருக்கலாம் . அதி புனைவாக தெரிகிறது. இது படத்தின் பலவீனம் .
பிசாசு படத்தை இருபிரிவாக பிரிக்கலாம் இடைவேளைக்கு முன், இடைவேளைக்கு பின் இடைவேளைக்கு முன்பு அழகிய ப்ரயாகா மரணித்து பேயாக வந்து காமெடி செய்கிறார். சிறுவனோடு விளையாடுகிறார். பீர் பாட்டில்களை உடைத்துப் போடுகிறார். வாவ் இப்படி ஒரு பிசாசு எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. செண்டிமெண்டாக சித்தார்த்தின் அம்மா பாத்ரூம் ல் வழுக்கி விழும் போது காப்பாற்றுவதும் , பொண்டாட்டியை அடிக்கும் பக்கத்து வீட்டுக்காரனை வெளுத்துக் கட்டுவதும் பலே போட வைக்கிறது. பிசாசை விரட்ட வரும் பொய்யான அந்த பெண்ணின் கதாபாத்திரம் மிக அருமையான நகைச்சுவையை தந்திருக்கிறது. தியேட்டரில் உள்ள அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். அதே போல பொய் அறிவு ஜீவியாக வரும் கதாபாத்திரத்தை பிசாசு பின்னாடி குத்தி அனுப்புவது சூப்பர் காமெடி.
ப்ரயாகா வின் தந்தையாக நடித்துள்ளார் ராதா ரவி அவரது கதாப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். தன் மகள் மரணித்த செய்தியை கேட்டவுடனும், மகளை பிசாசாக சித்தார்த் வீட்டில் பார்த்ததும் வீட்டுக்கு வாமா ஏன் சாமி என ஏங்குவதும் மிகவும் உருக்கம். கண்கலங்க வைத்து விடுகிறார்.
படத்தின் மைனஸ் என சொன்னால் சண்டைக் காட்சி , மிஷ்கினுக்கான சண்டை இப்படித்தான் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. அயர்வளிக்கிறது பிசாசாக வரும் ப்ரயாகா வை இன்னும் கொஞ்சம் பிசாசாக நன்றாக காட்டி இருக்கலாம். ராதா ரவி தன் மகளின் உடலை ஐஸில் போட்டு வைத்திருக்கும் முறை வெகு செயற்கையாக உள்ளது. பின்னனி இசை அருமை. மெஸெஜ் என சொன்னால் ஒரு மனிதனின் தவறால் எவ்வளவு மனிதர்களின் வாழ்க்கை சிதிலமடைகிறது என்பதை சித்தரித்துள்ளது படம். கதை முழுவதும் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன் இயக்குனருக்கு செய்யும் மரியாதை என வைத்துக் கொள்ளலாம் படத்தை தியேட்டரில் பாருங்கள் அழகிய மனிதநேயமிக்க பிசாசு உங்களுக்காக காத்துக் கொண்டுள்ளது.