அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள் எல்லாப் பேருந்துகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் புகைத்துக் கொண்டிருந்தனர். புகை வானில் திட்டு திட்டாய் உருவங்களை உண்டாக்கியவாறு பறந்து சென்றுகொண்டிருந்தது.
மணி சரியாய் இரவு பத்து ஆகியிருந்தது , இப்போது வண்டி ஏறினால் உத்தேசமாய் காலை மூன்று மணிக்குள் மதுரையில் இருக்கும் வீட்டிற்கு போய்விடலாம் என கோயம்புத்தூர் , சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்த போது மனதில் எண்ணிக்கொண்டேன். இன்று அதிகாலையிலிருந்தே கோயம்புத்தூர் வாசம், மிகவும் நேசித்து படிக்கும் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தேன் .
கையில் அதிகப் பணமில்லை , முழுதாய் இருநூறு ரூபாய் இருந்தது. குளிர் தொந்தரவு காரணமாக மீண்டும் ஒரு டீ குடிக்க வேண்டும் போல தோன்றியது. டிக்கெட் போக ஐம்பது ரூபாய் மீதமிருக்கும். எந்தவித தயக்கமின்றி ஒரு டீ குடிக்கலாம்.
அண்ணே ஒரு டீ,
எட்டு ரூபா சில்ற இருக்கா..
இல்லண்ணே நூறா யிருக்கு
சில்ற இல்ல
நீ
சில்ற மாத்தி தா
மதுர மதுர மாட்டுத்தாவணி, மதுர மாட்டுத்தாவணி ஏறு ஏறு ஏறு
பஸ் போகப் பொகுது…
ஒரு கரகரப்பான குரல் பேருந்து நிலையத்திலிருந்து சப்தமாய் ஒலித்தது
பேருந்து இருந்த திசையை நோக்கி திரும்பினேன்
மூன்று பேர் அமரும் ஒரு சீட் முழுவதும் யாரும் அமராமல் காலியாய் இருந்தது
டீயை விட்டு விட்டு பேருந்தை நோக்கி ஜன்னல் ஓர சீட்டைப் பிடிக்க விரைந்தேன்.
பை பாஸ் ரைடர் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேருந்துதான். சீட் பலசாகி அழுக்கேறி போயிருந்தது, சரி பரவாயில்லை கிடைக்கிற பேருந்தில் ஏறி பயணிப்போம் என எண்ணிக் கொண்டேன். வானில் முழு நிலா எழுந்திருந்தது. நட்சத்திரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறிக் கிடந்தன.
பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னல் அருகே அமர்ந்து பயணம் செய்வது ஒரு அலாதியான இன்பத்தை தரக்கூடியவையாகத்தான் எப்போதும் எனக்கு இருந்து வருகிறது. ஜன்னலின் வழியாய் பரபரப்பான அசுர வேகத்தில் செயல்படும் இந்நகரம், பாம்பாட்டியின் கையில் பிடிபட்ட பாம்பைப்போல் சுருண்டு இரவுப்பெட்டிக்குள் அடங்கிவிடுகிறது என்பதை பார்த்து பார்த்து மனதில் பூரிப்பை உண்டாக்கி கொள்கிறேன்.
ஒரு தனியார் நிறுவணத்தில் டெலிவரிபாயாக வேலை செய்யும் எனக்கு இலக்கியத்தின் மீதும், எழுத்தாளர்களின் மீதும் அவ்வளவு அன்பு. தமிழ்நாட்டில் எந்த மூலையில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தாலும் அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்தவரை முயற்சிப்பேன். ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு செல்லும் போது நிகழும் சித்திரத்தை மனதில் நினைத்தால் ஆற்ற முடியா வலி மனதில் குவிந்துவிடுகிறது.
சார் யார்ரும் இந்த சீட்டுக்கு வர்ராங்களா..
ஐம்பது வயதை கடந்த ஒரு நபரின் குர ல், குரலின் வழியாய் அவர் நன்றாக குடித்திருக்கிறார் என்பதை எல்லோராலும் எளிதாக கண்டுபிடித்துவிட இயலும்.
சிவகாசிக்கு போற பஸ்தானே ..
நான் ரொம்ப ஸ்டெடியான ஆளு, என்ன அப்புடி பாக்குற தம்பி
ஆயிரம் ஆயிரம் ரூவா நோட்டா வச்சுருக்கேன் தெரியுமா என தன் டவுசர் பையிலிருந்து பணத்தை எடுத்து காட்டிக் கொண்டிருந்தார்.
சரி சரி பேசாம ஒக்காருங்க பஸ் கெளம்ப போகுது எனக் கூறினேன். சில வினாடிகளில் பேருந்து உர்ர் என்ற சப்த ஒலியுடன் நகரத் தொடங்கியது.
தம்பி என்ன படிக்கிறீங்க எனக் கேட்டார் தன் காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டே ..
ரஸ்ய நாவல் என்றேன்.
என்ன என்ன ரகசிய நாவலா எனக் கேட்டுக் கிட்டே என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு சிரித்தார். படம் எல்லாம் இருக்குமா என்றார்.
பதில் சொல்லாமல் ஜன்னலின் வழியாய் தெரியும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பீ நான் விருதுநகர்க்காரன். ராசா மாதிரி எனக்கு ரெண்டு புள்ளெங்க என்றார். ஒரு புள்ள பட்டாளத்துல ஆபிஸரா இருக்கான். இன்னொருத்தன் சாத்தூர் காலேஜ்ல புரப்பஸரா இருக்கான் என்றார்.
சாமிக்கு மாலை போட்டிருந்தார். பக்கத்தில் ரம் மின் நெடி மிகுதியாய் இருந்தது. அருகில் ஒருவன் தன் மனைவி , குழந்தைகளோடு மதுரைக்கு டிக்கெட் எடுத்திருந்தான். இவர் பேருந்தில் அருகில் இருக்கும் என்னிடம் சத்தம் போட்டு பேசிக் கொண்டுவந்தார். அவனுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறி “ கண்டெக்டர் சார் இந்த ஆள கீழ இறக்கி விடுறேங்களா இல்லையா. தண்ணிய போட்டுட்டு வந்து ரகளைய கொடுக்குறாரு” என சப்தமிட்டான்.
சரி பாஸ் பாத்துக்கலாம் என கண்டெக்டர் அவனை சமாதானம் செய்துவிட்டு என் அருகில் அமர்ந்திருக்கும் நபரை கண்டனம் செய்தார். அவர் எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் பேச்சை தொடர்ந்த வண்ணம் இருந்தார்.
கண்ணதாசனின் தத்துவப் பாடல்களை முனுமுனுத்தார், அவன்தான்யா உண்மையான கவிஞன் என்றார். அவர் வாயிலிருந்து வெற்றிலைப் போட்ட எச்சில் வழிந்துகொண்டிருந்தது. என்னை ஒதுக்கிவிட்டு ஜன்னலின் வழியாய் எச்சிலை துப்பினார்.
கண்டெக்டரிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து , விருதுநகருக்கு டிக்கெட் கேட்டார் அவர் டிக்கெட்டையும் கொடுத்து சில்லரையும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து என்னை அழைத்து பாவிப்பய டிக்கெட் கொடுத்துட்டு சில்லறை கொடுக்கல என ஆதங்கப்பட்டார்.
பேசாம தூங்குங்க என்றேன்
சரி நீ பெரிய பொஸ்த்தகமெல்லாம் படிக்கிறயே, நான் ஒரு கணக்குப் போட்டா ஒன்னால சொல்ல முடியுமா என்றார். கணக்கு எனவும் எனக்கு தூக்கிவாறிப் போட்டது, நம் வீக் பாய்ண்ட் தெரிஞ்சேதான் கேக்குறாரா இவர் என எண்ணினேன். அதே வேளை பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார் செல்வராஜ் சாரின் பிம்பம் மனதில் எழுந்தது.
சரி கேளுங்க என்றேன்.
ஒன்னால எல்லாம் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்றார். என் இரண்டாவது புள்ளதான் எல்லாத்துளையும் கில்லாடி என்றார். அவன் பட்டாளத்துல வயர்லெக்ஸ் டிபார்ட் மெண்ட்ல ஆபிஸரா இருக்கான், மொத புள்ள சாத்தூர்ல இருக்குற காலேஜ்ல டீச்சரா இருக்கான் என்றார். நரையோடிய அந்த மீசையை சிறிது முருக்கிவிட்டுக் கொண்டார். விருதுநகரில் பிரஸித்தி பெற்ற ஹோட்டலைச் சொல்லி அங்குதான் புரொட்டா மாஸ்ட்டரா இருக்கேன் என்றார்.
பஸ்ல இருந்து எறங்குறதுக்குள்ள சொல்லனும். இல்லையின்னா நான் ஒன்னைய மதுரையில இறங்கவிடமாட்டேன் என்றார். தஸ்தாவெஸ்கியின் மிஷ்கினின் கதாபாத்திரத்தில் மயங்கி இருந்தேன்.
கொஞ்ச நேரம் சும்மா இருங்க சார் , இந்த புஸ்த்தகத்த முடிக்கப்போறேன், பேசாம தூங்குங்க நானே எழுப்பி கேள்வி கேக்க சொல்றேன். கண்டெக்டர் டிக்கெட் போடவும் லைட்ட அமத்திருவாறே என்றேன்.
சப்தமாக கண்டெக்டர் மயிறுக்கு அவ்வளவு திமிறா, லைட்ட அமத்திருவானா அவன். புரோட்டாக் கடையில வெந்து வெந்து புரோட்டா போட்டு கொடுக்குறவேண்டா. என்னை மீறி அமத்திருவானா வென்ன மகன் என்றார்.
பயணிகள் அனைவரும் தூக்க களைப்பில் இருந்தனர். ஒருவன் மட்டும் கண்டெக்டர் சார் இவன எறக்கி விடுறங்களா என்ன என்றார். நான் மீண்டும் தஸ்தாவெஸ்கியுடன் உரையாடத் துவங்கினேன். பேருந்து கண்ணாடிகளுக்கு வெளியே மரங்கள் பின்னோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தன.
அசடன் நாவலை முடிக்கவும், கண்டெக்டர் ஒரு லைட்டை தவிர்த்து மற்ற அனைத்தையும் நிறுத்தியிருந்தார். என் பக்கத்தில் இருந்தவர் ஒரு குவாட்டர் பாட்டிலையெடுத்து மெதுவாக குடிக்கத் தொடங்கினார். என்னைப் பார்த்து கண்சிமிட்டினார்.
பணம் என்னடா
பணம் பணம்
குணம் தானடா
நிரந்தரம்
என்ற கண்ணதாசனின் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தார். பையில் இருந்து சிலவர் கவரில் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டை எடுத்தார். சிக்கன் பீஸ் அதில் இருந்தது, வாயில் போட்டுக் கொண்டு மென்று கடித்தார்.
என்னைப் பார்த்து என் கணக்குக்கு விடை சொல்ல முடியாமல் பஸ்ஸ விட்டு இறங்க முடியாது என்றார். நான் அவரை அதிகம் பேசவிடக் கூடாது என நினைத்துக் கொண்டு என் ஆதர்ஸமான எழுத்தாளர் மேடையில் பேசிய வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருந்தேன். கண்களை மெல்ல மெல்ல தூக்கம் தழுவிக் கொண்டிருந்தது.
நடு இரவில் பேருந்தில் சிறிது சலசலப்பு ஏற்பட தூக்கம் களைந்து பார்த்தேன், என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் பையை வெளியில் தூக்கி எறிந்துவிட்டு, அவரை கண்டெக்டர் ” பெருசுன்னு பொறுமையா இருந்தா சும்மா கரெச்சல கொடுத்துட்டே இருக்க, இறங்குயா வெளியே எனக்
கூறிக்கொண்டே அவரைத் தள்ளிவிட்டு” போகட்டும் போகட்டும் என்றார். நான் ஜன்னல் வழியாய் எந்த ஊர் எனக் காண முயன்றேன். கண்கள் எட்டியவரை வெளிச்சமே இல்லை.
எனது தூக்கம் களைந்துவிட்டது மனதெங்கும் அந்தப் பெரியவரைப் பற்றிய எண்ணமே எழுந்து நின்றது. கடைசி வரை அவரது கேள்வியை கேட்க சந்தர்ப்பம் தராமலேயே விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு மனதில் எழுந்த வண்ணமிருந்தது.
ஊருக்கு வந்தபின்னும் அந்தப் பேருந்து பயணத்தில் சந்தித்த நபரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் ஊர் போய் சேர்ந்திருப்பாரா. என்னிடம் கேட்க விரும்பிய கணக்கை யாரிடமாவது கேட்டிருப்பாரோ. அவருக்கு விடை கிடைத்திருக்குமா அன்றைக்கு பேருந்தில் இருந்து இறக்கி விடும் போது நான் ஏன் கண்டெக்டரிடம் பேசி அவரை இறங்க விடாமல் நிறுத்தியிருக்க கூடாது ..என சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
அந்தப் பெரியவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே ஒரு நாள் அவரைத் தேடி விருதுநகர் சென்றேன். அவர் சொன்ன ஹோட்டலில் போய் விசாரித்தேன். அண்ணே இந்த ஹோட்டல்ல புரோட்டா மாஸ்ட்டரா வேலை செய்யுற பெரியவர பாக்கனும் என்றேன்.
இங்க அஞ்சு பேரு வேலை செய்றாங்க , யார கேக்குற எல்லாத்துக்கும் அம்பது அறுபது வயசு இருக்கும். அவர் பேர் தெரியுமா எனக்கேட்டார் டீயை ஆற்றிக் கோண்டே. பேர் தெரியாது நாளு நாள் முன்னாடி கோயம்புத்தூர்ல இருந்து சிவகாசி போற பஸ்ல அவரப் பார்த்தேன். நல்லா தண்ணி அடிச்சிருந்தாப்ல என்றேன்.
ஓ முனியாண்டியச் சொல்றையா.. அந்த ஆளு ஒரு மாசமா கடைக்கு வர்றதில்லையே. குழந்தையில்லாத மனுசன் பொண்டாட்டி இருந்தவரைக்கும் நல்லா இருந்தாப்ள அவங்களும் ஒரு வருசம் முன்னாடி இறந்துட்டாங்க அப்ப குடிக்க ஆரம்பிச்ச மனுசன். எங்க இருப்பார்னு சொல்ல முடியாது எப்பயாவதும் வருவாப்ள
பத்து பதினைஞ்சு நாள் வேலை பாத்துட்டு காசு கேட்பாரு , குடுப்பேன் அதுக்கப்புறம் ஆள பார்க்க முடியாது எனக் கூறிவிட்டு, எத்தனை டீ என கல்லாவில் அம்ர்ந்திருந்த நபரைப் பார்த்துக் கேட்டுவிட்டு , டீ போட ஆரம்பித்தார்.
தனக்கு ரெண்டு பிள்ளைக எனக் கூறிய அந்தப் பெரியவரை எண்ணிப் பார்த்தேன். அவர் கற்பனையில் வரைந்த சித்திரம்தான் அவரது குழந்தைகளா. அவர் மனதில் போட்டு வைத்த மாயக் கணக்கு என்னவாக இருக்கும். தீராக்கணக்குகளை சுமந்தவண்ணம் எங்கே சுற்றிக்கொண்டிருப்பாரோ
super sir…