புனைவுக்கதைகளைவிட நம் ஊடே உலாவும்  சமுதாய முடிச்சுகளையும், நல்உணர்வுகளை மெல்லத் தூண்டிவிட்டுப் போகும் கதைகளையே மனது விரும்புகிறது. அத்தகைய கதைகள் நிரம்பிய தொகுப்பாக காட்டாறு சிறுகதைத் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 11 கதைகளுமே மிக முக்கியமானச் சிறுகதைகள், எதையுமே தவிர்த்துப் போக யாராலும் இயலாது. உறவுகள், உணர்வுகள், பால்ய ஆசைகள், பால்ய வாழ்க்கைகள், காதல் என  மனித உணர்வுகள் அனைத்தும் இத்தொகுப்பில் கொட்டிக் கிடக்கின்றது.kkkkk

சிறுகதை ஜாம்பவான்களென நம் இலக்கியச் சூழல் முன்னிருத்தும் படைப்பாளர்களுக்கு ஈடானதுதான் இந்தக் காட்டாறு சிறுகதைத் தொகுப்பிலுள்ள அனைத்து கதைகளுமே,நல்ல கதைகள் இருந்தும் , இக்கதைகள் இன்னும் இலக்கியச் சூழலில் ஏன் அதிகம் விவாதிக்கப்படவில்லை என்பதை எண்ணும் போது வருத்தமாகத்தான் உள்ளது.

இத்தொகுப்பை பல முறை படித்துள்ளேன்.  ஏதாவதொரு இக்கட்டானத் தருண்ம் உருவாகும் பொழுது, இக்கதைகள் அத்தருணத்தை கடந்துச் செல்ல உதவுகின்றது.

இத்தொகுப்பில் “மானாவாரி” என்ற சிறுகதை தமிழகத்தில்  இக்கதை விவசாயிகளின் வாழ்க்கையைப் பிரதிபளிக்கிறது. மழையை நம்பியே விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அரசு விவசாயிகளுக்கு எந்தவகையில் உதவுசெய்கிறது, அந்த உதவியும் பயனளிக்காமல் எப்படி விவசாயியின் வாழ்க்கையை திண்டாடச் செய்கிறது என்பதை  மிக இயல்பாக சத்தமில்லாமல் அமைதியாகச் சொல்லிச் செல்கிறார்..

இன்றைய காலகட்டத்தில் விவசாயியைப் பற்றி , அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, அவர்களின் வலிகளைப் பற்றி பதிவு செய்த முக்கியமான கதைகளில் மானாவாரி என்ற இச்சிறுகதையும் ஒன்று..

இணையத்தில் வாங்க ..

http://www.udumalai.com/kaataru-19157.htm

ஆசிரியரின் இணையதளம்

http://jshajahanwriter.blogspot.in/

 

 

**********************************************************

  மானாவாரி

(ஜே. ஷாஜஹான்)

 

பெருசு வீட்டிற்குள் நுழைந்தும் பேரக்குழந்தைகளின் சப்தம் கூடியது. கிழவி செத்தபிறகு வீடு எப்போதும் திறந்தே கிடப்பதால் யார் யாருடைய பேரக்குழந்தைகளோ ஓடுவதும், கதவை மூடிக்கொண்டு நடிப்பதுமாக கூச்சல் தெருவரை கேட்கும். முன்பெல்லாம் தாத்தாவைக் கண்டதும் நடிப்பது தடைப்படும். இப்பொழுதெல்லாம் அஜித்களும், விஜய்களும், தாத்தாவையும் பொருட்படுத்தாமல் சண்டைபோட்டு நிஜ அடிகள்பட்டு அழுக ஆரம்பித்து கருப்பசாமியாகவும், சிவாவாகவும் மாறி வீட்டுக்குப் போகும்வரை கூச்சல்தான். எதையும் பெருசு பொருட்படுத்துவதில்லை. யாராவது கண்டிச்சாலும், “அவபோனப்பிறவ்ய் ஒத்தையில் வெறுமையா இருக்கப்பா, பிள்ளைகளாவது கத்திட்டு கிடக்கட்டும்” என்பார். பருத்திச் சாக்கை எடுத்துக்கொண்டு காட்டுக்கு கிளம்பவும் மறுபடியும் வீட்டிற்குள் பெருங்கூப்பாடு போட்டு ஒரு கதாநாயகன் ஒன்பது கதாநாயகன்களை எச்சரித்துக் கொண்டிருந்தான்.

 

வெயில் மெல்ல ஏறி வந்தது. காட்டுக்குள் வெயில் கூடுதலாகத் தெரிகிற மாதிரிப்பட்டது. “வயசாயிருச்சில்ல” என்று தேற்றிக்கொண்டார். தண்ணீர் வற்றி கிணற்றுக்குள் சுற்றுச்சுவர்கல் இடிந்து தளர்ந்து ஏதோதோ செடிகளும்  மரங்களும் மண்டிக்கிடந்தன. இந்த வெயிலிலும் இருட்டு மண்டிக்கிடந்தது கிணறு. எட்டிப் பார்க்கையில் குளிர்ந்த காற்று வீசுவது மாதிரியிருந்தது. என்னவோ தப்பு நடந்து எல்லாக் கிணறும் வத்திப் போச்சு. மண்ணு குணம்தான் மனுசனுக்கும். இளக்கமான ஈரமான மனுசனுங்க காணாமல் போய் காய்ஞ்ச, கரடுதட்டிப் போன கூட்டமாக மாத்திப்புடுச்சு பூமி. சாமிட்ட என்ன இருக்கு. எல்லாம் பூமிட்டல்ல இருக்கு.

 

திடீர் திடீர்னு பெஞ்ச மழையை நம்பி ஊர்ல ஏதோ வெள்ளாமை நடக்குது. கிழவரும் பருத்தி நட்டார். விவசாயத்தை விடுறது உசுறவிடுறது மாதிரி. லாபமோ நட்டமோ செய்ய வேண்டியதுதான். விவசாயம் விட்டுட்டா ஊரில் மருவாதை இருக்குமோ. இடம் விட்டு விட்டு பருத்தி நட்டா நல்லா காய் பிடிக்கும். பருத்தி விதை வாங்க விவசாய ஆபிஸ் போனார்.

 

”பெருசு! இது ராஜபாளையம் ரகம் ஒண்ணு ரெண்டு மழை போதும் நல்லா வரும்”னு சொன்னத நம்பி வாங்கி நட்டார். ஆனா என்னவோ ஒப்பலை. ஆனாலும் வாழணுமே. மகன்காரன் வரப்போக பணம் காசு தருவான்தான். தனக்குன்னு வேணாமா?

 

போனதடவ வந்தப்பகூட “ஏதும் விவசாயம் கழுதை குதிரை வேணாம்ப்பா. உனக்கு என்ன தேவையோ நாங்க தாரோம். கையில இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் காட்டுல கொட்டிட்டு இருக்காதப்பா. இதுக்கு மேல விவசாயம் பார்த்தா, நான் வரப்போக மாட்டேன்பா” என்று திட்டமாகச் சொல்லிவிட்டான்.

 

இந்த காட்டுல வந்த வெள்ளாமை, தோட்டத்தில் வந்த சம்பாத்தியம்தான் இவனைப் படிக்க வச்சது. வேலை வாங்க வச்சது. இவன் ஆத்தா இருந்தா “போடா மசுறுனு திட்டி அனுப்பியிருப்பா. காட்டுலேயே இருக்கனும் அவளுக்கு.பிள்ள அப்பனைப் புரிஞ்சுக்காட்டி அப்பன் புள்ளைகளைப் புரிஞ்சுக்கிற வேண்டியதுதான் அப்பு, மனுசனுக்கென்ன எல்லாருமே நல்லவன்தான். காட்டுமேட்ல வளந்த பயக சொல்லத்தெரியாம சொல்லிவாய்ங்க.”

 

பருத்திச் செடிகள் காய் பிடிச்சிருக்கு. என்னவோ மருந்தெல்லாம் வாங்கியடிச்சாச்சு. மருந்தடிக்க அடிக்க கலர்கலரா பூச்சி ஆயுது. மருந்தடிச்ச பருத்தி எடுத்தா கைவிரலெல்லாம் அரிக்க ஆரம்பிக்குது. இன்னும் இரண்டொரு நாளில நிறைய வெடிக்கும். எங்க வெடிக்கிற வரைக்கும் பொறுக்க முடியுது? காயைப் பிச்சு விளையறதுக்கு முன்னேயே போடுறானுங்க.பாவம்ல பருத்தி. பெருசு வெடிச்ச பருத்தியாப்பாத்து பறிச்சாரு. ஒரு முக்கால் சாக்கு தேறும்போது லேசா இருட்ட ஆரம்பிச்சுச்சு. எடுத்தவரைக்கும் போதும்னு வீட்டுக்குக் கொண்டுபோய் யூரியா சாக்குல கட்டி முடிச்சுப் போட்டாரு. வெள்ளிக்கிழமை நல்ல நாளுமதுவுமா முதல்பருத்தி போட்டு பெருமாளுக்கு காணிக்கை செலுத்தணும்னு நினைப்பு வந்துச்சு.

 

சம்சாரித்தனம் போனதும் எத்தனையோ விசயங்கள் அத்துப்போச்சு. சாதிசனம் உறவுபோச்சு. பெரியவர் சின்னவர் மருவாதி போச்சு. எப்படியெப்படியோ சம்பாதிச்சவனெல்லாம் பெரிய ஆளாயிட்டான். அந்தக் காலத்திலேயும் தப்புப்பண்னவன் இருந்தான்தான். கள்ளநோட்டு சுப்பையன் காரவீடுகட்டி ஓகோன்னு இருந்தான். ஆனாலும் ஊருக்குள்ள கள்ளநோட்டுச் சுப்பையான்னுதான் அவன் பேரு. அவன் காசுக்கு மருவாதியில்ல, என்னத்தெப் பொலம்பி என்ன பன்ன. காலம் மாறுதாம் காலம்.

 

எங்க மாறியிருக்கு? மாத்தினவன் பூராம் தப்புத் தப்பா மாத்திப்புட்டு மறுபடியும் பழையதுக்கே போகணும்கிறான். இரண்டுபேர் கட்டிச்சேந்து அணைக்கமுடியாத மரமா இருந்ததை அழிக்க வேணாம்னோம். கட்டடம் வேணாமா, கம்பெனி வேணாமான்னு பேசி அழிச்சுப்புட்டு இப்ப காடு வளக்கனும்னு ஊருக்கு பேசுனா எப்படி வளக்குறது. எவன் வளக்குறது அது என்ன வீட்டு முத்தத்துல வளக்குற பூச்செடியா? நினைச்சா வளக்க, வேண்டான்னா புடுங்கி எரிய.

 

வயக்காட்டுக்குள்ள இவ்வளவு உரத்தை போடக் கூடாது. உப்புடான்னு சண்டை போட்டா படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் உரம் போடாம எப்படி விவசாயம் பாக்குறதுன்னான். ரேடியோவில் எப்ப பார்த்தாலும் அந்த உரம்போடு, இந்த மருந்த அடின்னு ரவுசு பண்ணிட்டு இப்ப இயற்கையா வெவசாயம் பண்ணணும். உரம் வேண்டாம், மருந்து வேண்டாமின்னா முடியுதா? மண்ணு  மலடாப் போச்சு; போக்கிட்டோம். இப்பப்போய் உடனே மாத்தமுடியுமா?

 

சாமான்யனைவிட கூர் அதிகமாக இருந்தாத்தான் சர்க்காருக்கு மதிப்பு. நமக்கும் மோசமாக, நாம ரோசனை சொல்ற மாதிரி மக்களுக்கு என்ன செய்ய முடியும்? நம்ம காலம் ஓடியிரும். பாவப்பட்டது என்ன செய்யும். எப்படி பொழைக்கும்? மண்ணை நம்பி வாழ்ந்தவன் பூராம் ஓடிக்கிட்டிருக்கானே.

 

பெரிசு பருத்தியைக் கொண்டுவந்து  முன்வாசலில் வைத்துவிட்டு, ஊசியும் நூலும் வைத்துவிட்டு பின்கட்டுப்பக்கம் குளிக்கப் போச்சு.குளிச்சுட்டு வரும்போது பிள்ளைகள் மூட்டையில் ஏறி குதிக்குதுகள், செல்வம் மகன் ஓடிவந்து குதிச்சதில் தையல்விட்டு மூடை தெரிச்சுடுச்சு. குளிச்சு வந்த பெரிசுக்கு  எங்கிருந்தோ ஒரு வேகம் வந்து  பயலை இரண்டு அடி அடிச்சிட்டாரு. அழுதுட்டுப் போயிட்டான்.

 

மூட்டையை மாத்திக்கட்டி மறுபடியும் தைச்சு முடிக்கும்போது வலையபட்டியா கத்திக்கிட்டு வந்தா. ”ஏன் மாமா எப்பப்பார்த்தாலும் வீட்டுக்குள்ளே விளையாட விட்டுட்டு  வேடிக்கை பார்க்காதீங்கன்னு சொன்னா கேட்காம இருந்துட்டு திடீர்னு இழுத்துவச்சி அடுச்சா என்ன அர்த்தம்? முதுகில் அஞ்சு விரலு பதிஞ்சிருச்சி. அது அப்பனோ நானோ கூட இப்படி அடிச்சதில்ல. இனிமே உங்க வீட்டுப்பக்கம் வராம பார்த்துக்கிறேன். நீங்களும் வீட்டை பூட்டிக்கிட்டுப் போங்க. இதுகளை நீங்க விடவும் வேணாம். இப்படி நாயடி அடிக்கவும் வேணாம்.” மூக்கை இழுத்துச் சிந்தி முந்தானையில துடைச்சிட்டுப் போயிட்டா. பொடிச்சிறுக்கி எப்படிப் பேசுறா? ஒத்தைப் பயலை வச்சுக்கிட்டு ஏழுமணிக்கெல்லாம் கஞ்சிய ஊத்தி, “ தூங்க தாத்தா வீட்டுக்குப் போடான்னு” அனுப்பி வச்சுப்புட்டு கதவடைக்கிறவ என்ன வக்கணையா பேசுறா. நானும் கோபத்துல யாரு என்னனு பார்க்கல. அப்படிப் பலமா அடிப்போம்னு தெரியல. ஆமா கையெல்லாம் எரியுது! பாவம் பச்சை மண்ணுக. சரி எங்க போகப் போவுதுக. பருத்திப் போட்டு கருப்பட்டி மிட்டாயும் காராச்சேவும் வாங்கிவந்து விடிய கூப்பிட்டு பங்குவச்சா கழுதைக ஓடிவந்திடும். செல்வம் இருந்தா இப்படி பேச விடமாட்டான் “பெரியப்பா அடிக்காம யாருடி எம்புள்ளைய அடிப்பான்னு” கேட்பான் எனக்கும் பேரன்தான்.

 

மூட்டையத் தூக்கிட்டு ஆறரை காருக்கு போகும்போது அறியாமலேயே கண்ணு செல்வம் வீட்டுப்பககம் பார்த்துச்சு. செல்வம் உக்காந்திருந்தான். கண்டும் காணாததுபோல விரைப்பாக திரும்பிக்கிட்டான். அடப்பாவி மகனே. மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டான் மேனாமினுக்கியைக் கட்டுனவனும் கெட்டான்னு சரியாத்தான் சொல்லியிருக்கான். சின்னப்பிள்ளைய ஒரு தட்டு தட்டுனதுக்கு நீ இருந்துகிட்டுமா அவளைப் பேசவிட்டு பாத்தேன்னு நெனைச்சுகிட்டே மந்தைக்கு வந்தாரு.

 

பஸ்ஸில கூட்டமில்லை. ஆனா வரவர கூட்டம் ஏறி நிற்க இடமில்ல. முக்கு ரோட்டுல ஏறின ஒரு ஆளு மூட்டயில உக்காரப் போக கோவம் வந்து “எந்திரிடானு” சத்தம் போடவும் முறைச்சுட்டுப் பின்னால் போயி நின்னுக்கிட்டான். அதென்னவோ பருத்தி மூட்டயில யாராவது உக்காந்தா, வெளையாண்டா பொல்லாத கோவம் வருது. அதப்பதிரமாக் கொண்டுபோயி சேத்தா எட்டணா கூடத் தருவான்தான். அதுக்காக இல்ல. அந்தக் காலந்தொட்டு பருத்தி மூட்டயில விளையாட அப்பனாத்தா விட்டதில்ல. என்ன பழக்கமோ நமக்கும் வந்து ஒட்டிக்கிச்சு. சின்னப்பயல வம்படியா அடிச்சாச்சு. ரவைக்கு கதை கேக்க வருதுகளோ என்னவோ. அதெல்லாம் அனுப்பி வச்சிருவாளுக. வயசாக வயசாக மூளை கொழம்புது.

 

பஸ் ஸ்டாப்புல நான் நீன்னு வண்டிக்காரனுக, சுமை கூலிக்காரனுக பருத்திச் சாக்குக்கு மல்லுக் கட்டறான்க. முக்க்காச் சாக்கத் தூக்க கூலியாளு வேறயா. பெரிசு தலையில் வைச்சுட்டு நடந்தார்.

 

பருத்திக் கடையில் நல்ல கூட்டம். சாயந்த்ரம் பஸ்ஸீக வர்ற நேரம். கமிஷன் கடைக்காரன் கோவம் கோவமா பேசுறான் சம்சாரி சத்தம் போட்டா ஆகுமா? கொண்டுபோயி எடை வைக்கவும், விலை போடறவன் பருத்தியப் பிச்சுப் பார்த்து “இந்த ச் சனியன் வேணாம்யான்னு” சாக்க எறிஞ்சுப்போட்டான். வெலம் வந்து பெரிசு சத்தம் போட்டார். பெரிசு சத்தம்போட்டு கடைக்குள்ளிருந்து பெரியாள் வந்து சமாதானப் படுத்தினார். “ வம்பாடு பட்டு பருத்திய விளையவச்சுக் கொண்டுவந்தா சனியன்னு வெளிய வீசுறான்யா” கொதித்தார் பெரிசு.

 

”கோபப்படாதீங்க, பய புதுசு. இந்த ரகப் பருத்தி கொஞ்சங்கூட எழ நிக்கிறதில்லை. வாங்கி அரச்சா நட்டம்தான் வருது. அதான் அந்தப் பருத்தி  வாங்க வேண்டான்னு சொல்லொயிருந்தேன். அந்த கடைகள்ல போட்டீங்கன்னா கலந்து வித்துடுவாங்க. அதுக்கு மேல நா எடுத்தா காசு சும்மா தர்றமாதிரிதான். என்ன செய்ய? வெளிநாட்டுல இருந்து பருத்தியும் கப்பல் கப்பலா இறங்க ஆரம்பிச்சிருச்சு.”

 

அவன் கேவலமாச் சொன்னத முதலாளி பதமாகச்சொல்றான். விவசாய ஆபிசுலதான் இந்த விதையத் தந்தான். உருப்படியில்லாத விதய ஆபிசுல ஏன் தரணும். ஆடு மாடுட்ட காப்பாத்தி, பிள்ளைகள் வெளையாட விடாம பொத்திப்பொத்திக் கொண்டுவந்து சேர்த்தா, கடைசில இது வேண்டாத சனியனாப் போச்சா.? மொதமொதப் பருத்தி தூக்கிட்டுப் போங்கறானே.

 

சத்தமில்லாம கடைலிருந்து மூட்டையத் தூக்கிட்டு பஸ்ஸ்டான்ட் வரும்போது சுமை தூக்கறவங்க ஒரு மாதிரி பாத்தாங்க. பஸ் காசு போக கூடுதலாக ஒரு ரூபா இருந்துச்சு. பருத்தி போட்டு காசு வரும்னு நினைச்சுட்டு பத்து ரூபாயோட வந்துட்டோம். இல்லைனா இன்னொரு பத்துரூபாய் எடுத்துட்டு வந்திருக்கலாம். பிள்ளைகளுக்கு சேவாவது வாங்கிட்டுப் போகலாம். கொண்டுவந்த பருத்திய நாலு கடைதள்ளி, போட்டு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம். வேணாம் வயசாக வயசாக வெட்டி ரோஷம் பொத்துக்கிட்டு வருது.

 

அப்ப மனுசனுக்கு சூடு சொரணை இருக்கக்கூடாதா? என்ன பாடுபட்டு கொண்டு வந்தா, எங்கியாவது கொண்டுபோயிப் போடுனு சொன்னா, சம்சாரி மருவாதி கெட்டு சம்பாதிப்பானா. இப்படிக் கிடந்து மருள வேண்டியிருக்கு.

 

பருத்திய திரும்ப பஸ்ல ஏத்திட்டு ஊருக்குப் போகக் கேவலமா இருக்கு. என்ன செய்றதுனு தெரியல. பஸ்சு கிளம்பும் போது திரும்பிப் பாத்தா, சாக்கு ஒத்தையில் அதே இடத்தில கிடக்கு. பேசாம வீட்டுக்குக் கொண்டு போயிட்டா நாளப்பின்ன எவன்கிட்டயாவது கொடுத்தனுப்பி மத்த கடையில் கேட்டுக்கலாம். வீரப்பா உக்காந்திருந்த பெரிசு பஸ் வெளிய போயி திரும்பும்போது மூட்டையத் திரும்பிப் பார்த்துச்சு.

 

தாய் தகப்பனைத் தவறவிட்ட குழந்தை மாதிரி அனாதையாய்க் கிடந்துச்சு பருத்திச் சாக்கு.

 

 

 

 

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube