வெய்யில் உக்கிரமாயிருந்தது, கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது. வட இந்திய வெய்யில், டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம். நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக் கூடுதல்தான். சும்மா அமர்ந்திருந்தாலும் உடம்பில் எண்ணெய் ஊற்றிவிட்டது போன்ற ஒரு பிசுபிசுப்பு வந்துகொண்டேயிருக்கும், வற்றாத ஆறுபோல.
யுவராஜ் ஜான்ஸி வந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது. பள்ளிக்கூடத்தில் ஜான்ஸிராணி லச்சுமிபாய் பற்றிப் படிக்கும்பொழுது மனதில் பெரும்மனக்கிளர்ச்சி உருவாகி வந்தது உண்மைதான், ஆனால் இப்போது இங்கு அடித்துக் கொண்டிருக்கும் வெய்யில், அந்த உணர்ச்சிகளையே வென்று விடும் போல, மஞ்சள் பூத்தது போல் ஊரேல்லாம் மஞ்சள்நிற உடை உடுத்தியிருந்தது.
வெய்யிலோடுத்திரியும் ஊரிலிருந்து வந்திருந்தாலும் , ஜான்ஸியில் அடிக்கும் வெய்யில் அவனுள் எரிச்சலான எண்ணங்களைத் தந்து கொண்டிருந்தது.
லெப்ட்… ரைட்… லெப்ட்… ரைட்… அட்டேன்ஸன்… என ப்ரேட் கிரவுண்டிலிருந்து தொடர்ந்து பலத்த சப்தம் வந்து கொண்டேயிருந்தது. இராணுவ வீரர்களின் பூட்ஸ் சப்தத்தால் வேம்புவும், அரசுவும், புளிய மரங்களும் நிறைந்திருந்த ப்ரேட் கிரவுண்ட் பகுதியில் பறவைகள் கூச்சலிட்டுக் பறந்து கொண்டிருந்தன. 1852ல் கென்டோன்மெண்ட் ஆரம்பித்ததிலிருந்து இங்கு பூட்ஸ் சப்தம் கேட்டுக் கொண்டுதானுள்ளது. இந்தப் பறவைகளும் இப்படித்தான் கீச்சொலிகளை எழுப்பிக் கொண்டே தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கின்றன.
கரும்பச்சை வண்ண நிறத்திலிருக்கும் அவனது பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் வெள்ளை நிறக் கைக்குட்டையை எடுத்து நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்துக்கொண்டான். கைகளெல்லாம் “இன்சாஸ்” துப்பாக்கியைப்பிடித்து பிடித்து காய்ந்துபோயிருந்தது.
“சவ்தான்” என சுபேதார்மேஜர், காமாண்டிங் ஆபிஸரின் ஜீப்பை தொலைதூரத்தில் பார்த்துவிட்டு கத்தினார். அவர் முன்பு, நூறு பேர்களும் அப்படியே ஆடாமல் அசையாமல் ஒரு கையில் துப்பாக்கியும், மற்றொரு கையை உடம்போடு ஒட்டியவாறு , மூச்சுசப்தம் மட்டும் கேட்கும் பேரமைதியோடு நின்றிருந்தார்கள்.
ஜீப் அருகில்வந்ததும்
மீண்டும் “சலாமிதேகா சலாமிசஸ்” எனக் கத்தினார், வலது கையின் பக்கவாட்டிலிருந்த துப்பாக்கியை முகத்திற்கு நேர் கொண்டுவந்து , இடது காலைத் தூக்கி , வலதுகாலின் பக்கத்தில் ஒட்டியவாறு வைத்து, தாங்கிப் பிடித்திருந்தார்கள் ஜவான்கள் . ஜீப் கடந்து சென்ற சில விநாடிகள் கழித்து “ பகல்சஸ்” என்றார். மீண்டும் துப்பாக்கியை பழைய நிலைக்கே கொண்டுவந்தார்கள் ஜவான்கள், பின் “ விஸ்ராம்” என்றார் சுபேதார்மேஜர். கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுவிட்டு சில கணங்கள் கழித்து விடுவித்தால் உண்டாகும் சுகம் யுவராஜிற்கு அப்போது இருந்தது.
மீண்டும் கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த வியர்வையை துடைத்துக்கொண்டான், பக்கத்தில் அஸ்ஸாமைச் சேர்ந்த நண்பன் சர்க்கார் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். யுவராஜிற்கு மிகவும் நெருக்கமான நண்பனாகயிருந்தான் சர்க்கார். ஜபல்பூரில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் பூத்த நட்பு. மழைக்கால நாளொன்றில் மழையில் நனைந்து கொண்டு சென்ற யுவராஜிற்கு தன் மழைக்கோட் கொடுத்து ஆதரவு தந்தான் சர்க்கார். ஹிந்தி மொழி அறியாத அக்காலத்தில் அவன் செய்த உதவியில் தாயின் கரிசனத்தைக் கண்டான் யுவராஜ். அன்றிலிருந்து இருவரும் தோழர்களாயினர். ஒரு வருடகாலப் பயிற்சிக்குப்பின் ஜான்ஸிக்கு போஸ்டிங் இருவரும் ஒன்றாகச் செல்லப் போகிறோம் எனத் தெரிந்த நாளில் ஹேக் வெட்டி பிறந்த நாள் போல் கொண்டாடினார்கள். ஜான்ஸி என்ற பெயரைக் கேட்டதும் அதிக உற்சாகமாயிருந்த யுவராஜின் ரகசியத்தை சர்க்கார் மட்டும் அறிந்திருந்தான். அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் பொதுவாக கள்ளம் கபடமற்ற மனிதர்களாகவே அதிகம் தெரிகின்றனர். அவர்கள் எப்போதும் அன்பை அனைவரிடமும் காட்டுபவர்களாகவும், ஒரு முறை பழகிவிட்டால், கடைசிவரை தோழமையை காப்பாற்றுவார்களென சர்க்கார் வழியாக அறிந்து கொண்டான் யுவராஜ். ஜான்ஸியில், தனிமை சூழ்ந்த , பறவைகளின் சப்தமற்ற, நிசப்தமான இரவுகளில் நீண்ட நேரம் ப்ரேட் கிரவுண்ட்டில் அமர்ந்து பேசிக்கொள்வார்கள்.
யுவராஜ் “எனக்கு சகோதரி இருக்கா, நீ அவளைக் கட்டிக்க உன்னப்பத்தி சர்மிளாக்கிட்ட நிறையச் சொல்லொயிருக்கேன்.. நாமச் சேர்ந்தெடுத்த போட்டோக்களை வாட்சப்புல அனுப்பினேன். உன்ன ரொம்ப புடுச்சிருக்குன்னா… எனச் சொல்லி அமைதியானான் சர்க்கார்.
யுவராஜ் சிறு புன்னகைசெய்துவிட்டு “ உன் தங்கச்சிக்கு சாம்பார் வைக்கத் தெரியுமா; மெதுவடைச் செய்யத் தெரியுமா; கோலம்போடத் தெரியுமா; இதெல்லாம் தெரிஞ்சிருந்தாதான் கட்டுக்குவேன் எனச்சிரித்தான். சர்க்கார் “அவளுக்கு நீதான் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும்” எனச் சொல்லிச் சிரித்தான்.
நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக்கொண்டே அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது
************************************
இரவில் தனித்திருக்கும்பொழுது பழைய நினைவுகளில் மூழ்கிப்போவான் யுவராஜ். ஒரு முறை ஜான்ஸி கென்டோன்மெண்ட்டின் மந்திர்கிரவுண்ட் பகுதியில் காவல்பார்த்துக் கொண்டிருந்த பொழுது இரவை ரம்மியமாக்கி பறந்து சென்றுகொண்டிருந்தது அழகிய மஞ்சள் வண்ண மின்மினிப்பூச்சி. அந்த மின்மினிப்பூச்சியை பார்த்தபொழுது நீண்ட காலத்திற்கு முன் அம்மாவோடு இருந்த நினைவு அவன் மனதில் வந்து சென்றது; தனது கேசத்தை கோதிக்கொண்டே அம்மா சொன்ன அந்த ஆதரவான வார்த்தை ஏனோ இப்போது அவனுக்கு தேவையாய் இருந்தது;
” நீ பட்டாளத்துக்கு போகப்போறேன்னு சொல்றப்ப; நாட்டக்காப்பாத்த நம்ம புள்ளயும் போகுதேன்னு சந்தோசமா இருந்தாலும். அம்மாவுக்கு நீ ஒரே புள்ள, நீ போனயின்னா நான் என்ன பண்ணுவேன் என நினைக்குறப்ப பயமா இருக்குப்பா”
“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, வந்துருவேன் நானும் நாட்டுக்காக ஏதாவது செய்யனுமில்ல ; நம்ம நாட்டுக்குள்ளேயே வந்து சுட்டுட்டு போறாங்க அவங்கள விடக்கூடாது”
“பட்டாளத்துக்குப் போனாதான்; அவங்கள சுட்டுத்தள்ள முடியும்”.
அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையிருந்தது. மஞ்சள்வெளிச்சத்தில் புத்தர் மேலும் அழகாய்த் தெரிந்தார். யாரோ தொலை தூரத்தில் அடிக்கும் விசில். சப்தம் கேட்டது, அவனும் பட்டாளத்தில் சேர்ந்தவனாகத்தான் இருப்பான், தூங்காமல் விழித்திருக்க அவனுக்கு அவனே செய்யும் சம்பாஷனைதான் இது. தன் கழுத்தில் கட்டியிருக்கும் விசிலை எடுத்து யுவராஜும் சப்தம்செய்தான்.
கரட்டிலிருந்து ஏதோதோ விலங்குகளின் சப்தம் வந்து கொண்டிருந்தது.
********************************************************************************************************
விடிந்ததும் தம்ளரை எடுத்து மெஸ்ஸுக்கு செனறான். . தமிழ்க்காரர்தான் குக்காக இருந்தார்; அவர் போடுகுற டீ தான் நன்றாக இருக்கும் . தேயிலையை நன்றாக கொதிக்கவைத்து ,இஞ்சியைக் கொஞ்சம் தட்டிப் போட்டு, பின் பாலை ஊற்றித் தயாரிப்பார், டீ நல்ல நிறத்துடன் , நறுமணம் சேர்ந்து, சுவையாக இருக்கும்.
சர்க்கார் வந்தான்….
” தேரேக்கு பத்தாகே கியா”
என்னத் தெரியுமா எனக் கேட்கிறான் எனப் புரியாத விளிகளோடு ,“கியாகே” என்றான் யுவராஜ் …
அவனுக்குப் பக்கத்திலிருந்த கணேசன் அண்ணன்தான் சொன்னார்.
”தம்பி ஒன்னைய கமாண்டிங் ஆபிஸர் வீட்டுக்கு அனுப்பப் போறதா சி.கெச்.எம் (கம்பெனியில் இருக்கும் ஜவான்களை கண்கானிப்பவர்) அமரேந்தர் சிங் சொல்லிக்கிட்டிருக்கார்”. “போ என்னான்னு கேளு” எனக் கூறிவிட்டு கையில் வெள்ளையடிக்கும் பிரஸோடு கடந்து சென்றார்.
யுவராஜிற்கு ஒரே படபடப்பாய் இருந்தது. கமாண்டிங் ஆபிஸர் ரொம்ப நல்லவர்தான் பீஹாரைச் சேர்ந்தவர். ஆஜானுபாகவானத் தோற்றம். நல்லச் சிவப்பு. மூக்கு நீண்டு அழகாக இருக்கும், ஒரு சாயலில் நடிகர் அரவிந்த்சாமி போல் இருப்பார்.
விடுமுறை போகும்போது மட்டும்தான் அவரிடம் பேசியுள்ளான் யுவராஜ், மற்றபடி அவரைப் பற்றி எதுவும் அதிகம் தெரியாது. புதிதாய் வந்த சோல்ஜர்களில் நன்றாக வேலை செய்பவனும், டிசிப்ளினான பையனாக வேண்டும் எனக் கூறியபடியால் சி.கெச்.எம் அமரேந்தர் சிங் யுவராஜை தேர்ந்தெடுத்தார்.
யுவராஜ் அவசரமாக தன் பேக்கைத் திறந்து துணிகளை மடித்துவைத்தான். “என்ன கேட்கமுடியும் இவர்களிடம் பட்டாளத்தில் போ என்று சொன்னால் போய்தான் ஆகவேண்டும்”. அவனது கண்ணில் அரக்குநிற தடித்த அட்டை போட்ட டைரி தட்டுப்பட்டது. டைரியைத் திறந்து பக்கங்களைப் புரட்டினான். ஜபல்பூரில் இருந்தபொழுது எழுதியது..
ஜான்ஸி போஸ்ட்டிங் போகவேண்டும் எனத் தெரிந்த நாளில் மிகவும் உற்சாகமாய் இருந்தான். ஜான்ஸி என்ற பெயர்தான் அதற்குக் காரணம். தன் கிராமத்தில் இருக்கும் மாமன் மகள் ஜான்ஸியின் நினைவுகளை மனதில் எப்போதும் பசுமையாய் வைத்திருந்தான்; படிக்கும் காலத்திலிருந்தே ஜான்ஸியின் மீது பிரியமாய் இருந்தான்.
ஜான்ஸிக்கு டிசம்பர் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதற்காகவே தன் வீட்டில் டிசம்பர் பூச்செடியை வளர்த்தான் யுவராஜ். ஜான்ஸியிடம் அதிகம் அவன் பேசியதில்லை. எப்போதும் அவள் சர்ச்சிற்கு செல்லும்போது அவளையே பார்த்துக்கொண்டிருப்பான். ஜான்ஸி ஒரு முறைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் செல்வாள். அவள் சென்ற பின் அவள் அமர்ந்த டெஸ்கிலேயே அமர்ந்து பிரார்த்திப்பான். ஜான்ஸி அவனைக் கடந்துபோகும் பொழுதெல்லாம் “எம்மோடு தங்கும் ஆண்டவரே என்னோடு பேசும் என் இயேசுவே” என்ற பாடலை முணுமுணுப்பான்.
பட்டாளத்துக்கு வந்த பிறகு அவள் நினைவுகளே இவனுக்கு போதுமானதாக இருந்தது. ஜான்ஸியின் நினைவுகள் வரும்பொழுது தனது டைரியில் கவிதைகளாக எழுதிவைத்திருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் எழுதிய கவிதையை சர்க்காரிடம் மொழிபெய்ர்த்துச் சொல்வான்.
“அபிதக் நகிகயா….? என
சி.கெச்.எம் அமரேந்தர் சிங் அதிகாரமான கரகரத்த குரலில் கேட்டார்.
“ஜெயின் சார்” எனச் சொல்லிக்கொண்டே டைரியை மூடிவைத்தான்.
“ஜாராவும்” சார் எனக்கூறிக்கொண்டே.. தனது படுக்கையை வேகமாக சுருட்டி எடுத்துக் கொண்டான். வெய்யில் ஏறியிருந்தது. கம்பெனியை ஒட்டிய சுவரில் மஞ்சள் அரளிப்பூக்கள் பூத்திருந்தது.
**************************************
கமாண்டிங் ஆபிஸரின் வீட்டிற்கு பணிக்கு வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. இப்போது மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. மழைக்கோட் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டியுள்ளது. எப்போது மழை வரும் எனச் சொல்ல முடியாது, திடீரென்று குளிர்காற்று வீசி, மழைக்கொட்டிவிடும்.
அதிகாலையில் மரங்களும், பூச்செடிகளும், மழையில் குளித்து முடித்த இளம்பெண் போல் அழகாயிருந்தன.
”ஹாலிங் பெல் ஒலித்தது” ” சாட்ஸ் அணிந்த, பாப் கட்டிங் செய்து கொண்ட கமாண்டிங் ஆபிஸரின் மனைவி மிக எரிச்சலாக திட்டிக் கொண்டே அது சரியில்லை இது சரியில்லை எனச் சொல்லிச் சென்றாள்.
இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். இங்கு எல்லோரும் அவர்களுக்கு வேலைக்காரர்கள் மட்டும்தான். ஜவான்கள் இல்லை , நாட்டைக் காக்க போராடும் போர்வீரர்கள் இல்லை,
சில தினங்களுக்கு முன்பு ஜான்ஸிராணிக் கோட்டைக்கு போய்விட்டு வந்த யுவராஜை வெளுத்து வாங்கிவிட்டாள், கமாண்டிங் ஆபிஸரின் மனைவி என்ற மரியாதைக்காகவே அங்கு பணிபுரியும் அனைவரும் அமைதியாய் இருந்தனர், யுவராஜும் கூட.
சர்க்கார் எப்போதாவது வந்து போய் கொண்டிருப்பான்,இப்போது அவனும் இல்லை, சர்க்காரை ஹெட்குவாட்டருக்கு அனுப்பியிருந்தார்கள், இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவு. கைப்பேசியில் நேரம் கிடைக்கும் போது பேசுவான்.
அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையென ஸ்டெல்லா அக்கா போன் செய்து சொன்னார்.
“பயப்படாத, உடனே வரத்தேவையில்லை, சித்திரைப் பொங்கலை அனுசரிச்சு வந்தாப் போதும்”
அப்பத்தான உன் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க,..
அம்மாவுக்கு ஒன்னுமில்ல,,,
நாங்க பாத்துக்கிறோம்…
ஜான்ஸிக்கு வர்ர ஞாயிறு கல்யாணம் யாரோ கூடப் படிக்கிறப் பையனாம். கல்யாணம் முடிஞ்ச கையோட வெளிநாடு போறாங்கலாம். அந்தப் பையனோட மாமா அங்க வரச் சொல்லிட்டாராம்..
சரி உடம்ப பாத்துக்க.. எனச் சொல்லி ஸ்டெல்லா அக்கா வைக்கவும் , யுவராஜிற்கு ஏனோ, இப்போது சர்க்கார் கூட இருந்தால் ஆறுதலாக இருக்கும் என எண்ணினான். சர்ச்சில் திருமணத்தின்போது பாடும் ”மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே” என்ற பாடலை சப்தமாகப் பாடினான். ஜன்னலுக்கு வெளியே மழைத் தூரிக் கொண்டிருந்தது.
– முற்றும் –
…………
தீக்கதிர் இதழில்
ஜான்ஸி சிறுகதை பற்றிய விமர்சனம் வந்துள்ளது…
தேவராஜ் விட்டலனின், ‘ஜான் ஸி’, ச.சுப்பாராவின் ‘மெல்லுவதற்குக் கொஞ்சம் அவல்’ இரண்டும் தொலைக் காட்சித் தொடர்களில் வரும் எப்பிசோட்கள் போல் படிக்கும் போது அடுத்து என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ஜான்ஸி என்ற ஊரையும் பெண்ணின் பெயரையும் இணைத்துப் பார்க்கிற யுவராஜ் எண்ணப்படி பயிற்சிக்கு ஊர் கிடைத்தாலும் வாழ்க்கைத் துணையாக அந்தப் பெண்கிடைக்காமல் போகிற ஏமாற்றத்தைச் சொல்கிறது.
இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளுகிற மனப்பக்குவம் தான் கதையின் கருவாகிறது.