அம்மா…

mahi

 

 

அம்மா இறந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டது. நாளை அம்மாவின் நினைவுதினம். மனமெங்கும் அம்மாவின் நினைவுகள் நிரம்பியுள்ளது. அப்பா, சில நிமிடங்களுக்கு முன்பு போன் செய்திருந்தார். அவர் நாளை அம்மா இறந்த தினம் என்றார். அவர் குரல் சோகத்தை சுமந்துதான் சொன்னது. பெருந்துயரம் என நான் நினைப்பது உடன் வாழ்ந்த மனிதர்களை இழப்பதுதான் என நினைக்கிறேன். அதுவும் மனதால் ஒன்றிய தம்பதிகளில் யார் பிரிந்தாலும் பெருந்துயரமே.

 

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எந்த ஒரு பிணக்கும் வந்ததில்லை. அம்மா வீட்டு வேலைகளில் மும்முரமாகவும், விவசாய வேலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டும் வாழ்ந்தார். அப்போது ஓட்டு வீட்டில்தான் வாழ்ந்து வந்தோம், நான் பிறக்கும் முன்னர் மண் வீட்டில் இருந்ததாகவும், பின்னர்தான் ஓட்டுவீடு எடுக்கப்பட்டதாகவும் அம்மா சொல்லி இருந்தார்.

அம்மா வாசல் தெளிக்கும் போதே நானும் எழுந்து விடுவேன். கடைக்குட்டியானதால் அம்மாவை எப்போதும் பிரிய மனம் வராது. அம்மா சானம் கரைத்து வாசல் தெளித்து கோலம் போடுவாள். பின்னர் மாடுகள், ஆடுகள் நிறைந்திருந்த வீட்டை பராமரிப்பில் . பின் பத்து நபர்களைக் கொண்ட அவ்வீட்டில் தனி மனுசியாக உணவு தயாரிப்பாள். பம்பரமாக சுழன்று கொண்டேயிருப்பாள்.

கலாவதி என்ற என் அம்மாவின் பெயரை என் தாத்தா (இராமசாமி ஆசிரியர்) சில நேரங்களில் காலாவதி என அழைக்கும் போது அனைவரும் புன்னகைப்போம். அம்மாவும் புன்னகைப்பாள். நான்கு பிள்ளைகள் பெற்று, அனைவரையும் ஒன்றுபோல் பார்த்து பாசம் காட்டி வளர்த்து விட்டாள் அம்மா.

அம்மாவோடு தோட்டத்திற்குச் செல்லும்போது சிறுதாக்காளி பழங்களை பரித்து முந்தானையில் முடிந்துவைத்து கொண்டுவந்து தருவாள். அதன் சுவையே அழாதியானது.

ஒரு நதியைப்போல்; ஒரு பறவையைப்போல் அம்மா ஓடிக்கொண்டே இருந்தாள்.

அவளின் நிழலில் எல்லோரும் வளர்ந்து; நின்று; விரிந்து;படர்ந்து வாழ எத்தனிக்கும் வேலை. அம்மாவிற்கு கொடிய நோய் இருப்பது தெரிந்தது. பணி நிமித்தமாய் வாழ்க்கைச் சூழலில் சிக்கி சுழன்று; அலைக்கழிப்பில் சிக்கி எங்கெங்கோ அழைந்து கொண்டிருந்தேன். அவ்வேளையில் என் அம்மாவிற்கு பெரும் துணையாய் இருந்தவர் என் மூத்த அண்ணனும், அப்பாவும்தான். அவர்கள் தான் அம்மாவை பார்த்துக்கொண்டும். பராமரித்தும் வந்தனர்.

அவர்களால் பெரு நோயிலிருந்து மீண்டுவந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார் அம்மா.  இந்த புகைப்படம் ஒன்றுதான் அம்மாவின் நினைவுகளை அசைபோட வைத்துக்கொண்டே உள்ளது. மனக்குழப்பமும், அயர்ச்சியும் உண்டாகும் போது அம்மாவின் நினைவுகள் ஒன்றுதான் ஆறுதல் அளித்துக் கொண்டுள்ளது.

மண்வீட்டில்
வாக்கப்பட்டு
ஓட்டு வீட்டில்
வாழ்ந்து
பளிங்குத்தரை
பதித்த வீட்டை கட்டி
எங்களுக்கு
தந்து விட்டு
தெய்வமாகிவிட்டாயே
தாயே!

 

One Response so far.


  1. அம்மாவின்நினைவுகள் சுகம். தாய்க்கு மாற்று யார்?


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube