ஒற்று – அண்டோ கால்பட்

5_0946

படிக்கப்படும் எல்லாப் புத்தகங்களும் மனம் விரும்பிய புத்தகங்களாக மாறிவிடுவதில்லை. சில புத்தகங்களே மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறது. சமீபத்தில் படித்த அண்டோ கால்பட் எழுதிய ஒற்று நாவல்  மனதில் நின்றுவிட்ட நாவல். எந்த ஒரு மொழி விளையாட்டுமின்றி, நேரடியாக எளிமையாக சொல்லிச் செல்கிறார். மிக இயல்பாக நாவலில் பயணிக்க முடிகிறது

தாய்மையின் மேல் அன்பில்லாதவர்கள் மிகவும் சிலரே. கொடூர குணம் கொண்டவனும் தன் தாயின் மேல் அன்பு கொண்டுதான் இருப்பான். அண்டோ கால்பட்டும் தன் தாயின் மேல் அன்புகொண்டு இந்நாவலைப் படைத்துள்ளார். தாய் பாசத்தை நாவல் பேசினாலும், கதை சொல்லல் முறையில் நாவலை நீர்த்துப்போக விடாமல் நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். குறிப்பாக நாவலில் சொல்லப்பட்டுள்ள கவிதைகள் அற்புதமானவை.

“ கரையில் விழுந்த அலையை
உள்ளிழுக்கும் கடலாய் பழைய
நினைவில் விழுந்த மனதை
காலம் தன்னுள்ளிழுத்துக்கொண்டது”

பிரிந்த பின்பு நினைவுகள்
பிறந்தால்…
பிரிந்த உறவின் உன்னதம்
உணர்ந்தால்…
புரிந்து கொள்ளுங்கள் இனி
இழப்பதற்கு எதுவுமில்லை…
பிரிவுகளும் நிரந்தரமில்லை!

மீனாட்சி மெஷின் ஆஸ்பத்திரியில் கேன்சரில் போராடும் அன்னையை காண்பிக்கும் போது; நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடந்து வந்திருக்கும் வேதனை மிக்க கனங்களை பதிவு செய்கிறார் ஆசிரியர். நாவலில் வரும் டாக்டர் மனதில் நின்றுவிடுகிறார். பண வேட்டை நிறைந்த இன்றைய சமூகத்தில் மிகவும் சிலரே சேவை மனதோடு செயல்படுகின்றனர். அவர்களுள் ஒருவராக டாக்டர் இருக்கிறார்.

தன் கதைகளைக் கூறும்போது கொஞ்சம் பிசகினால் கூட நாவல் கட்டமைப்பிலிருந்து விலகி  செய்திகள் சேர்ந்த தொகுப்பாக மாறிவிடும். ஆனால் கதையில் காலத்தை முன்னும் , பின்னும் நகர்த்திக் கதை கூறும் முறை கையாளப்பட்டுள்ளது. அதுவே இந்நாவலின் தனிச்சிறப்பாக உள்ளது.

பால்யத்தை அழகாக நாவலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். பால்ய கால வாழ்க்கை என்பதே சொர்கத்தில் இருப்பது போன்றுதான் ; எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியுமின்றி மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க கூடிய காலமது. அத்தகைய பால்ய கால நினைவுகளையும், பால்ய கால அனுபவங்களையும் நாவலில் அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

டீன் ஏஜ் பருவத்தில் உருவாகும் காதலையும், அக்காதலின் வழியாய் பொங்கிவழியும் காமத்தையும் மிக இயல்பாய் பதிவு செய்துள்ளார்.

// அவள் தண்ணியை எடுத்து என்னிடம் நீட்டவும், நான் அவளை நெருங்கி அவளது கன்னங்களை என் கைகளில் ஏந்தி, அவளது இதழ்களில் என் இதழ்களை பதித்தேன்… அந்த மெல்லிய மல்லிகை மொட்டை கொஞ்சம் அழுத்திச் சுவைத்து விட்டேன்… பதற்றத்தில்! அவள் அப்படியே என் காலடியில் அமர்ந்து விட்டாள்… அதிர்ச்சியில்..\\

சில அற்பமான விசயங்களினால் நாம் நமது வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை இழந்திருக்கிறோம் என்பதை நாவலின் இறுதியில் தன் தாயின் மரணத்தறுவாயில் அருகில் இருக்காமல் அல்லாடியதை பார்கும் பொழுது மனதில் வலி மிகுகிறது..

நாவலின் இறுதி அத்தியாயம் மிகவும் முக்கியமானது…

இறுதி அத்தியாயத்தை படித்துவிட்டு நாவலில் பயணம் செய்து பார்த்தால் நாவல் நம் மனதின் அக முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கும் தருணங்களை உணரலாம்.

தன்னுடைய முதல் நாவலின் வழியாய் மிக எளிமையாக வாழ்க்கையை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அனைவரும் படித்துக் கொண்டாட வேண்டிய நாவல்.

வாசகன் பதிப்பகம் மிகவும் சிறப்பான முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இணையத்தின் வழியாய் வாங்க..

 

 

 

One Response so far.

  1. anto gaulbert says:

    தங்களது சிறப்பான விமர்சனத்துக்கு எனது நன்றிகள்.
    இத்தனை பெரிய ஊக்கம் உற்சாகம் அளிக்கிறது. ‘ஒற்று’ எனது இரண்டாவது நாவல். எனது முதல் நாவல் ‘பதினாறாம் காம்பவுண்ட்’ வம்சி வெளியீடாக வந்தது.

    தோழர்.ஏகலைவன் அவர்களது பெரும் முயற்சியும், ஆதரவும் தான் இத்தனை பெரிய ஊக்கத்திற்கு அடிநாதம். நன்றி தோழா..!


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube