பூட்டான் அழகான அமைதியான சிறிய நாடு என மட்டும்தான் பூட்டான் வரும்வரை கேள்விப்பட்டிருந்தேன். பணி நிமித்தமாக பூட்டான் வந்த நாள் முதல் பூட்டானின் இயற்கை அழகில் மனம் தொலைந்துவிட்டிருக்கிறது. பெரிய மலைகளின் பள்ளத்தாக்குகளில் சின்ன சின்ன கிராமங்களாக பூட்டான் மக்கள்  அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

என் அலுவலகத்தின் அருகில் ஹாச்சூ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. நதியின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மரத்திலாளான சிறிய வழித்தடங்களில்  நின்று நதியை பார்க்கும்பொழுது; நதி மனதையும் ஈரமாக்கிச்செல்கிறது கூழாங்கற்கள் நிறைந்த நதி வழித்தடங்களை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது மனது இலகுவாகிறது. இரவுப்பணிக்குச்  செல்லும்போது அந்த நதியின் சப்தம்  இசையைப்போல் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்கமுடிகிறது. ”ஹா” என்ற ஊரில் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நதியின் பெயர் ஹாச்சூ.

இதே நதி திம்புவில் பாயும் போது  திம்சூ வாகவும், பாரோ என்ற ஊரில் பாயும்பொழுது பாச்சூ வாகவும் பெயர்மாறுகிறது. இங்கே ஊரின் பெயரோடு நதியை இணைத்து அழைத்துக்கொள்கின்றனர் ( இல்லை நதியின் பெயர்வழியாக இந்த ஊரின்பெயர்களே உருவாகியிருக்கலாம்).

bhutan1_14423

குளிர் மிக அதிகமாக உள்ளது அதிகாலையில் மைனஸ் ஐந்து , ஆறுக்கெல்லாம் சென்றுவிடுகிறது. இங்குள்ள அனைத்து வீடுகளும் மரங்களால் கட்டப்படவையே. வீடுகள் முன் அழகிய ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

சிறிய வீடுகளின் மேல் சிவப்பு நிறத்தில் மிளகாய்களை, வத்தல்களாக்க வெப்பத்தில் வைத்துள்ளனர். பூட்டான் மலைச் சாலைகளைக்கடந்து செல்லும்போது சாலை ஓரங்களில் பல வண்ண பிரார்த்தனைகொடிகள்  இருப்பதைக் காணமுடியும். மந்திரங்கள் எழுதியிருக்கும் அந்தக்கொடிகள் காற்றில் அசையும்போது ; அங்கிருக்கும் தீய சக்திகள் மறைந்துவிடுகின்றன என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களின் மனதில் இருக்கின்றது.  இயல்பிலேயே அமைதியை விரும்பும் மக்களாக உள்ளதால்; பூட்டான் தேசம் முழுவதுமே அமைதி தவழ்கிறது.

”ஹா” வில் இருக்கும் அலுவலக லைப்ரேரியில்தான் புத்தகம் கிடைத்தது. இந்த லைப்ரேரியில் பல நல்ல புத்தகங்கள் இருப்பது மனதிற்கு  சந்தோசமாக  இருக்கிறது.

பூட்டானுக்கு வந்து முதலில் படித்த புத்தகம் Journey Across Singye Dzong [in Eastern Bhutan. T. Sangay Wangchuk” எழுதிய இந்தப்புத்தகம் ஒரு பயணத்தைப்பற்றியது. கிழக்கு பூட்டானில் உள்ள Singye Dzong என்ற மடாலயத்திற்கு அவர் மேற்கொண்ட பயணத்தை அழகாக விவரித்திருப்பார். புத்தகத்தைப்படிக்கும் பொழுது நாமும் அவரோடு பயணிப்பதைப்போன்ற உணர்வுகள் மனதில் எழுkஇறது.

சமீபத்தில் Hidden Bhutan: Entering the Kingdom of the Thunder Dragon என்ற புத்தகத்தைப்படித்தேன். Martin Uitzஎன்பவர் எழுதியிருக்கிறார். பூட்டானைப்பற்றியும் நாட்டின் கலாச்சாரத்தைப்பற்றியும் அறிந்துகொள்ள இந்தப்புத்தகம் உதவுகிறது.

 

இந்த புத்தகத்தில் ஆசிரியர் பூட்டான் பயணத்தில் திம்புவில் பார்த்த Travellers and Magicians என்ற திரைப்படத்தைப்பற்றி கூறியிருந்தார். அந்தப்பத்தியை படித்ததிலிருந்து அந்தப்படத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டுமென்ற  ஆர்வம் மனதில் எழுந்தது . இணையத்தில்தேடி படத்தை பார்த்தேன்.

 

Khyentse Norbu  திரைக்கதை  எழுதி  இயக்கி  உள்ளார்.  ”டோண்டப்” என்ற இளைஞன் பூட்டான் அரசாங்கத்தில் ஒரு ஊழியன். தனிமை நிரம்பிய அழகான கிராமத்தில் பணிபுரிகிறான். அவனது மனமெங்கும் அமெரிக்கா சென்று அங்கு பணிபுரிய வேண்டும் என விரும்புகிறான்.  திம்புவில் உள்ள அயல்நாட்டு  அலுவலகத்தில் விசாவிற்காக அனுமதிக்கடிதம் அனுப்பி அதன் பதிலுக்காக  தினமும் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அழைப்பிற்காக கடிதம் வந்துள்ளதா என ஏங்குகிறான்.

சில நாட்களுக்குப்பின் திம்புவிலிருந்து கடிதம் வருகிறது. மனம் சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறது. எப்படியாவது இந்த தனிமைநிறைந்த கிராமத்தைவிட்டுச் சென்றுவிடவேண்டுமென்று நினைக்கிறான் “டோண்டப்”. அவசரமாக அனுமதிப்பெற்று கிராமத்தைவிட்டு திம்புவிற்கு கிளம்புகிறான். இரண்டு நாட்களில் திம்புவிற்கு வரவேண்டும் இல்லையெனில் அமெரிக்கப்பயணத்திற்கான வாய்ப்பு மறுதலிக்கப்படும் என கடிதத்தில் எழுதியிருந்ததால் அவன் வேகவேகமாக திம்புவிற்கு கிளம்புகிறான்.   அந்த கிராமத்திலிருந்து திம்புவிற்கு செல்ல ஒரே ஒரு பேருந்துதான் உள்ளதால் அந்த  பேருந்தைப் பிடிக்க மலையில் வேகமாக சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஓடுகிறான், சிறிய மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடங்களின் வாயிலாக நதியை கடந்து செல்கிறான்.

வேகமாகச்சென்றும் அந்தப் பேருந்தை தவறவிடுகிறான். பின் காத்திருக்கிறான் அங்கே ஆப்பிள் விற்கும் வயதானவரும் அவனோடு காத்திருக்கிறார். வழியில் வரும் கார்களை நிறுத்திப்பார்த்து முயற்சிக்கிறான். கார் நிற்காமல செல்கிறது.

சிறிது நேரத்தில் அங்கே புத்த துறவி வருகிறார். அவர் பதட்டத்தோடு சிகரெட் புகைத்துக்கொண்டிருக்கும் டோண்டப்பிடம் விசாரிக்கிறார். டோண்டப் அவரிடம் பேச விருப்பமில்லாமல் தகவல்களைச் சொல்கிறான். இரவு வருகிறது புத்த துறவி உண்டாக்கிய தேநீரைப் அனைவரும் பருகுகின்றனர். புத்த துறவி அந்த குளிரான இரவில் டோண்டப்பிற்கு “TASHI” தாசியின் கதையைக் கூறுகிறார்.

பல வருடங்களுக்கு முன்பு அழகிய பூட்டான் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரு மகன்கள். முதல் மகன்தான் தாசி. தாசியை மந்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு மடாலயத்திற்கு அனுப்புகிறார். தாசிக்கு மந்திரங்களின் மேல் விருப்பமில்லாமல் படிக்கிறான். அவன் மனமெங்கும் அருகில் இருக்கும் கிராமத்தில் உள்ள அழகிய பெண்களின் மீதே நாட்டம் கொள்கிறது.

ஒரு நாள், தாசிக்கு உணவு கொண்டு செல்ல அப்பா சகோதரன் கர்மாவிடம் சொல்கிறார். அவன் தன் கழுதையோடு உணவை எடுத்துக்கொண்டு மடாலயத்தை நோக்கி பயணிக்கிறான்.

சகோதரன் கொடுத்த உணவையும் பாணத்தையும் பருகிவிட்டு அருகில் கிராமத்தில் உள்ள அழகிய பெண்களை காண மனம் ஆவல் கொள்கிறது என்கிறான்.

சகோதரன் கொண்டுவந்த கழுதை அழகிய குதிரையாக அவன் கண்களுக்குத் தெரிகிறது. குதிரையில் ஏறி பயணிக்கிறான். மலைகளில் தாறுமாறாக ஓடும் குதிரை அடர்ந்த காட்டில் தாசியை கீழே தள்ளிவிட்டு ஓடிச்செல்கிறது.

அங்கே கால்களில் அடிபட்ட காயத்துடன், மழையில் நனைந்தவாறே இருட்டில் தள்ளாடி பயணிக்கிறான். ஒரு கட்டத்தில் தனிமையான சிறிய வீடொன்றை காட்டில் பார்க்கிறான். அங்கிருக்கும் வயதானவர் தாசியை வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்.

”காலை புலர்கிறது டோண்டப்பும், துறவியும் ஆப்பிள் விற்பவரும் திம்புவிற்கு செல்ல சாலையில் காத்துக்கொண்டுள்ளனர். அப்போது அங்கே Rice paper  தயாரிப்பவரும், அவரது இளம்பெண்ணும் பயணத்தில் இணைந்துகொள்கின்றனர்.

சாலையில்  வரும்  லாரியில்  அனைவரும்  ஏறிக்கொண்டு  திம்புவை  நோக்கி  பயணிக்கின்றனர்.

இரவில் கதையை முழுமையாக கேட்காமல் தூங்கிவிட்டாய் டோண்டப் எனக்கூறிக்கொண்டே தாசியின் கதையை கூறுகிறார். புத்த துறவி…

அடர்ந்த காட்டில் வயதானவன் வீட்டில் தங்கியிருக்கும் தாசி அங்கு வயதானவனின் இளம்மனைவியான ”டெக்கி” மீது காதல் கொள்கிறான். அவளும் இளமையான தாசியின் மீது காதல் கொள்கிறார். அதன் வழியாய் அவள் கர்பம் கொள்கிறாள். இருவரும் சேர்ந்து வயதானவனை கொள்ள திட்டம் போடுகின்றனர்.

வயதானவன் குடிக்கும் பாணத்தில் விசம் கலந்து கொடுக்கின்றனர். பாணத்தை பருகிய வயதானவன் மரணிக்காமல் தள்ளாடுகிறான். தினமும் அவன் துன்பத்தில் அலறுகிறான்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்து சென்ருவிட வேண்டும் என உத்தேசித்து வீட்டை விட்டு ஓடுகிறான்.  தாசியின் பின்னாலேயே டெக்கியும் என்னை விட்டு விட்டு சென்றுவிடாதே என்னையும் அழைத்துச் செல் என சப்தமெலுப்பிக்கொண்டே ஓடிவருகிறாள்.

ஓடி வரும் வழியில் நதியைக்கடக்கும் போது, நதியில் விழுந்து இறந்து விடுகிறாள் டெக்கி.

லாரி வேறு பாதையில் செல்வதால் ஒரு இடத்தில் அனைவரையும் இறக்கி விட்டு செல்கிறது. அன்றைய இரவை அங்குதான் கழிக்கின்றனர். Rice paper தயாரிப்பவரின் அழகிய பெண்ணான சோனம்  டோண்டப் மீது காதல் கொள்கிறாள்.

அன்றைய இரவில் துறவி தாசியின் கதையை மேலும் சொல்கிறாள் அவளை விட்டு நீங்கிய தாசி மனவேதனையுடன் குதிரையில் ஏறி பயணித்த இடத்தை வந்தடைகிறான். அங்கே தான் ஏறிச்சென்ற குதிரை கழுதையாக அவனுக்கு காட்சியளிக்கிறது.

அதிகாலை புலர்ந்ததும் கூட்டம் நிறைந்த வண்டி ஒன்று வருகிறது . அதில் புத்த துறவியும், டோண்டப்பும் ஏறி திம்புவிற்கு பயணத்தை தொடர்கின்றனர். பயணத்தில் “ bloosom is beautiful because its temporary  என்ற வார்த்தையை புத்த துறவி கூறுகிறார். அந்த சிறிய வண்டி மலை முகடுகளில் சென்று மறைகிறது படம் அங்கே அழகிய இசையோடு முடிகிறது.

“நாம் இருக்கும் இடத்தை நேசிக்க  வேண்டும்” என்ற நல்லுணர்வு இப்படத்தை காணும்பொழுது உண்டாகிறது.

 https://en.wikipedia.org/wiki/Travellers_and_Magicians

 

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube