தாத்தாக்களின் உலகம்..
பணிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் கல்கத்தா இரயில் நிலையத்தில் குவ்காத்தி செல்லும் காம்ரூப் எக்ஸ்பிரஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுவனை ,வயதான நபர் கரங்களை பிடித்து நிதானமாக இரயிலை பிடிக்க அழைத்துச்சென்றார். அந்த காட்சி என் மனதில் பழைய நினைவுகளை கிளர்த்திவிட்டது.
அப்பா, அம்மாவின் அன்பைக்காட்டிலும் தாத்தா, பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது என எண்ணுகிறேன். தாத்தாவின் கரங்களின் வழியே நீண்ட இந்த வாழ்க்கையின் அனுபவங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
பால்யகாலத்தில் தாத்தாதான் எங்களுக்கு எல்லாமாக இருந்தார். பள்ளியில் சேர்ப்பது முதல் பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் தாத்தாதான் வந்து செல்வார்.
தாத்தா என் நினைவில் அழியாத சித்திரமாக பதிந்துள்ளார். வெளுத்த தலை, வளைந்த கைத்தடி, மூக்குப்பொடி நெடி மிகுந்த அவரது தேக வாசனை. செருப்பில்லாத அவரது பாதங்கள்.
ஆறாம் வகுப்பில் அண்ணனும், நானும் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம். நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் ‘ ஞாயிற்று கிழமை நீங்கள் என்னை பார்க்க வரும் பொழுது கொள்ளது வாங்கிவரவும் என எழுதியிருந்தேன்.
ஞாயிற்று கிழமைகளில் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களை பார்க்க வீட்டிலிருந்து யாராவது வருவார்களென பள்ளி வாசல் வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டிருப்போம்.
தாத்தா வந்தார் வெறும் கையோடு நான் அப்போது அறியாமையில் கெட்ட வார்த்தைகளில் திட்டினேன் ,தாத்தா சிரித்துக்கொண்டே இருந்தார். பின் அந்த சிறிய கிராமத்து கடைக்கு அழைத்துச் சென்று முறுக்கு பாக்கெட் வாங்கித்தந்தார்.
பள்ளி விடுமுறையில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வோம். அப்படியான கோடைகால விடுமுறையில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடிவெடுத்தோம். மணிகண்டன் என்ற ஐயப்பன் சாமி பற்றிய திரைப்படமும், சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படமும் ஓடிக்கொண்டிருந்தன . ஒரு பேப்பரில் இரண்டு திரைப்படங்களின் பெயர்களின் பெயர்களை எழுதி சீட்டுக்குலுக்கிப்போட்டு எடுத்தோம். எம்.ஜி ஆரின் சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் வந்தது ; படம் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்தோம்.
தாத்தாவிற்கு ஆஸ்த்துமா பிரச்சனை இருந்தது. அவர் எப்போதும் அதீதமாக சீராக இல்லாத மூச்சை விட்டுக்கொண்டிருப்பார். அப்படியிருந்தும் எப்போதும் உற்சாகமாக இருப்பார்
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு சைக்கிளிள் சென்ற அனுபவத்தை கூறுவார். கஷ்ட்டமான நேரத்தில் விவேக சிந்தாமணியிலிருந்து இந்த பாடலை அடிக்கடி பாடுவார்
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே.
– விவேக சிந்தாமணி (77) எண்சீரடி ஆசிரிய விருத்தம்.
கணிதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். எனக்கு கணிதம் என்றாலே பார்டர் பாஸ்தான். சகோதரர்களும் , சகோதரியும் கணிதத்தில் என்னை போன்றில்லை.
வாய்கணக்கு அற்புதமாக கூறுவார்; ஊர் கணக்குவகைகளையும் அவர்தான் பார்த்து வந்தார். அவருக்கு கேசரி மிகவும் பிடிக்கும். ஆசிரியராய் இருந்து ரிட்டையர் ஆனவர். ஒரு முறை அரியர் பணத்தை வாங்க உசிலம்பட்டிக்கும், சேடபட்டிக்கும் தாத்தாவோடு துணையாய் நானும் சென்றேன். அப்பொழுது உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு முன் டிக்கா ஹோட்டல் என்ற ஹோட்டல் இருந்தது. அங்கே வெண்பொங்கல் வாங்கி தறுவார். சுவையாக இருக்கும் . மதிய வேளையில் புரோட்டாவும், சுக்காவும் வாங்கித்தறுவார். தாத்தா அசைவம் விரும்பி சாப்பிடுவார்.
மத்திய அரசு வேலை கிடைத்து ட்ரெய்னிங்கிற்காக என்னை பேருந்து நிலையம் வந்து வழியனுப்பினார். அந்த நிகழ்வுதான் எனக்கும் தாத்தாவிற்குமான கடைசி நிகழ்வு. கண்பார்வை அப்போது அவருக்கு மங்கியிருந்தது. பேருந்து கண்ணாடியின் வழியாய் தாத்தாவை பார்த்துக்கொண்டேயிருந்தேன். தாத்தா பேருந்து சென்ற வழியையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அழுதுகொண்டிருந்தேன். தாத்தாக்களின் அன்பு அளவிடமுடியாதது. தாத்தா, பாட்டிகளின் அன்பை அறியாமல் வளரும் குழந்தைகளை பார்க்கும்பொழுது, மனது வலிக்கிறது. எல்லோருக்கும்
பொழியும் அன்பு மழை அவர்களுக்கும் பொழியட்டும்.
அப்பா, அம்மா அன்பைகாட்டிலும் தாத்தா பாட்டிகளின் அன்பு கருணைமிக்கது
உண்மைதான் நம் தாத்தாவின் ஞாபகங்கள் நாம் உள்ளவரை மறக்காது..
உண்மைதான் மாப்பிள்ளை. உங்களுக்கு கிடைத்த தாத்தா பாட்டி ….வாா்ததைகளுக்குள் அடக்க முடியாத பந்தம்.
தாத்தாவின் உலகத்தில் எனக்கும் என் மகனுக்கும் இடமில்லை
உணர்வுபூர்வமான சித்திரம்…தாத்தா மனசில் நிற்கிறார். இறுதி வரிகள் பொன் போன்றவை..எழுத்து பிழைகள் தவிருங்களேன்..