பள்ளிக்கால வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்பொழுது கடந்து வந்த அந்த காலங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர்களான இராமசாமி (சூட்டு வாத்தியார்) அவர் மட்டும்தான் பள்ளியில் சூட் போட்டுக்கொண்டு வருவார். கனபதி வாத்தியார் (தலைமை ஆசிரியர்), கந்தசாமி ஆசிரியர் (ரெண்டாப்பு வாத்தியார், ஹேன்சமாக இருப்பார். புன்னகைத்தால் அழகாக இருப்பார். அவருக்கு சிங்கப்பல் இருக்கும் . ஜோசப் வாத்தியார் (அவர் ரைட் போடும் ஸ்டெயிலே அழகாக இருக்கும். அவரது ரைட்டில் நீண்ட பாம்பொன்று சிலேட்டில் வளைந்து துயில்கொண்டிருக்கும். பஞ்சவர்ண டீச்சர் (குரங்கு டீச்சர்) டீச்சர் எப்போதும் சிடு சிடுவென இருப்பார். பெருமாள் வாத்தியார் (என் நண்பன் விவேகாணந்தனின் தந்தை) நல்ல மனிதர். கீதா டீச்சர் (கருப்பாக குண்டாக அழகாக இருப்பார் டீச்சர்), அவரிடம் டியூசன் படித்தது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. மல்லிகா டீச்சர் (சிவப்பாக அழகாக ஒல்லியாக இருப்பார், கண்டிப்பானவர்). இவர்களெல்லாம் என் ஆரம்பகால பள்ளி ஆசிரியர்கள்.
உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும்; மன ஆழம் வரை தொடவில்லை. ஏன் ஆசிரியர்களைப்பற்றி சொல்கிறான் என எண்ணுவீர்கள் Hichki என்ற ஹிந்தி சினிமாவை பார்த்தபின்தான் ஆசிரியர்களைப்பற்றிய எண்ணங்கள் மனதில் உதித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ராணிமுக்கர்ஜி நல்ல கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். Hichki என்ற ஹிந்தி வார்த்தைக்கு விக்கல் என அர்த்தம். Tourette syndrome என்ற நோயினால் சிறுவயதிலேயே பாதிக்கபடுகிறாள் Naina Mathur (Rani Mukerji) அடிக்கடி அவளுக்கு விக்கல் வருகிறது அதனால் ஒரு இழுவை போன்ற குரல்சப்தம் அவளுக்கு உண்டாகிறது. பள்ளியில் சக குழந்தைகள் அனைவரு நேனா மாத்தூரை கேலி செய்கின்றனர். ஆசிரியர்கள் கூட அவளது இயலாமையை நகைப்புள்ளாக்குகின்றனர்.
நேனா மாத்தூரை சிறப்பு பள்ளியில் சேர்க்கவேண்டும் (ஊனமுற்ற) என அப்பா சொல்கிறார். அதற்கு நேனா மாத்தூரின் அம்மா இல்லை என் மகள் நார்மல்தான் அவளும் எல்லாக் குழந்தைகளைப்போல்தான் உள்ளாள். அவளை நார்மலான குழந்தைகள் படிக்கும் நல்ல பள்ளியில்தான் படிக்கவைப்பேன் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் உண்டான கருத்துவேறுபாட்டால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்று வாழ்கின்றனர்.
ஒரு நாள் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் Mr. Khan (Vikram Gokhale) a former principal நேனா மாத்தூரை அழைத்து தன்னம்பிக்கை ஊட்டுகிறார். கான் நேனா மாத்தூரின் மனதில் ரோல்மாடல் ஆகிறார். தான் பெரியவர் ஆகி கான் போன்ற நல்லாசிரியராக வரவேண்டும் என்ற லச்சியத்தை சிறுவயதிலேயே மனதில் ஏற்றிக்கொள்கிறாள். பெரியவளாகி ஆசிரியர் பணிக்கு முயற்சித்து பார்க்கிறாள். எல்லா தகுதிகளும் இருந்து அவளுக்கு உண்டாகும் விக்கல் பிரச்சனையால் நிராகரிக்கப்படுகிறாள். எனினும் நம்பிக்கையை இழந்துவிடாமல் முயற்சிக்கிறாள். அந்நிலையில் அவளது தந்தை நீ வங்கி வேலைக்கு முயற்சிசெய் என்கிறார்.
நேனா அதை ஏற்காமல். தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு முயற்சிக்கிறாள். ஒரு பள்ளியில் அவளது திறமையை கண்டு பணியில் அமர்த்துகிறது. அவளுக்கு 9F class கொடுக்கப்படுகிறது. இங்குதான் திரைக்கதை வலுப்பெறுகிறது. அனைவரும் நேனாவை வியப்போடு பார்க்கின்றனர். ஏனெனில் 9F மாணவர்கள் யாருக்கும் அடங்காதவர்கள் என அனைவராலும் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர்.
நேனா மாத்தூர் ஏன் அவர்கள் அப்படி அடங்காமல் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கை பிரச்சனைதான் இதற்கு காரணம் என ஆராய்ந்து கண்டுபிடிக்கிறாள். பின் நேனா தனது வித்தியாசமான அன்பான அணுகுமுறையால் மாணவர்களின் மனதில் இடம்பிடித்து அவர்களை சிறப்பான மதிப்பெண்கள் எடுக்க வைக்கிறாள். பள்ளி நிர்வாகம் நேனா மாத்தூரை பாராட்டுகிறது.
இதற்கிடையில் திரைக்கதையில் சுவாரசியம் ஏற்படுத்த நேனா மாத்தூரின் செயல்பாடுகளிலும், அந்த மாணவர்களின் மேலும் நம்பிக்கையற்ற ஆசிரியர் ஒருவர் வருகிறார்.
பின்னனி இசையில் Hitesh Sonik சிறப்பாக செய்துள்ளார். ராணி முக்கர்ஜி தன் சிறப்பான நடிப்பினால் நேனா மாத்தூர் கதாப்பாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறார். Director Siddharth P. Malhotra வின் இத்திரைப்படம் இந்தி சினிமாவில் சிறப்பான இடத்தை தக்கவைத்துகொண்டுள்ளது.அருமையான திரைப்படம். அனைவரும் குடும்பத்தோடு பார்க்ககூடிய திரைப்படம். முரட்டுக்குத்து குத்தும் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இத்தகைய திரைப்படம் பாடம்
கரெக்ட் …
மனஆழம் வரை தொடுவது நம் பால்யத்தில் பார்க்கும் ஆசிரியர்கள் தான்…
அழகான திரைப்பட விமர்சனம் அருமையாய் வந்திருக்கிறது..
அருமை ஐயா… உங்களது, திரைப்படம் பற்றிய பார்வையும் – விளக்கமும்..
நன்றி…