சில தினங்களுக்கு முன்புதான் மாராத்தான் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டேன். மாராத்தான் ஓட்டப்போட்டியில் பங்குபெற்று ஓடியது மிகுந்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. ஓட்டம் நாம் கருவில் உருவாகும் தருணத்திலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது என்ற உண்மையை இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் சிக்கி அநேகமானவர்கள் மறந்துவிடுகிறோம். இயங்குதல் என்ற பேருண்மைதான் தனிமனித வாழ்க்கை முதல், சமூகம் வரை மாற்றத்தை கொண்டுவருகிறது.
பூட்டானிலுள்ள பாரோ நகரில் இந்திய பூட்டானின் 50 ஆண்டுகால நிறைவை ஒட்டி மாராத்தான் ஓட்டம் பூட்டான் அரசாங்கத்தால் ஜீன் 2 ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் அலுவலகத்தின் சார்பாக நானும் இரு நண்பர்களும் கலந்துகொண்டோம்.
ஓட்டம் எனக்கு எப்போதும் விருப்பமான ஒன்றாகவே இருந்துவருகிறது. பால்யத்தில் எங்கள் கிராமத்தில் வைத்த ஓட்டப்போட்டியில் இரண்டாவதாக வந்து பென்சில் வாங்கிய நினைவு இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது.
நீண்டதூரம் கடந்து ஓடுவதைதான் மனது விரும்புகிறது. ஓட்டம் என்பது வெறும் உடல் வலிமையால் மட்டுமே நடப்பது அல்ல. ஓடும்போது நம் மனமும் வேலைசெய்கிறது. மனதை நெறிப்படுத்தி ஓட்ட இலக்கு முடிவு வரை உடலை மனம்தான் செயல்படவைக்கிறது.
பூட்டானில் மலைகளையும், நதிகளையும் கடந்து ஓடிய அனுபவங்கள் எப்போதும் மனதில் நிறைந்திருக்கிறது. பாச்சூ நதியின் கரையில் ஆரம்பித்து , பாரோ விமான நிலையத்தை சுற்றி , பாரோ மெயின் பஜாரில் நுழைந்து , மீண்டும் பாச்சூ நதிக்கரையை தொட்டு அதன் ஓரத்தில் அமைந்திருக்கும் பினிசிங் பாய்ண்ட்டை அடைய வேண்டும். பூட்டான் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
வழியெங்கும் ஆங்காங்கே தண்ணீரும் சாக்லேட்டும் கொடுக்கப்பட்டது. பசுமையான மரங்களையும், வழிந்தோடும் நீர் சுனைகளையும் பார்த்துக்கொண்டே ஓடிய கணங்கள் அற்புதமானவை.
புதிதாய் வாங்கிய சூ வினால் ஆரம்ப கிலோமீட்டர்களை கடக்கமுடியாமல் தவித்த கணத்தில் ஒரு வயதான பூட்டானியர் சொன்ன ஆறுதலான வார்த்தைகள் எப்போதும் மறக்கமுடியாதவை.
மாராத்தான் ஓட்டம் என்பது வெறும் ஓட்டம் மட்டும் அல்ல அது ஒரு அனுபவம்.
” மாரத்தான் போர் (Battle of Marathon) கிமு 490 ஆம் ஆண்டில் கிரேக்கம் மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம்பெற்றது. இப்போர் ஏத்தன்சு நகர மக்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே இடம்பெற்றது.
‘அரசே! அயோனாவிலுள்ள கிரேக்கர்கள் மக்களாட்சி வேண்டி கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது தாய்வழி தேசமான ஏதென்ஸ், எரித்திரியா போன்ற கிரேக்க நகரங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன’ செய்தி வந்தது பெர்சிய பேரரசர் முதலாம் டேரியசுக்கு. ‘கிரேக்கர்களை இப்படியே விடக்கூடாது. உடனே எதென்ஸ் மீது படையெடுத்து அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’- டேரியஸ் ஆணையிட்டார். தரைவழியே சென்று தாக்கவேண்டுமானால் தாமதமாகிவிடும், தவிரவும் மலைப்பகுதிகளில் கிரேக்கர்களை வெல்வதும் அவ்வளவு எளிதல்ல. எனவே கடல் வழியாக சென்று திடீர் தக்குதல் நடத்த முடிவு செய்த பெர்சியா, அறுநூறு கப்பல்களில் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு கிளம்பியது.
முதலில் எரித்திரியா தீவை முற்றுகையிட்டது. ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, துரோகிகளின் சதியால் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் எதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான டேடிஸ் தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.
மற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான பீடிப்பிடஸ்(Pheidippides) என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர்.அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 பிளேத்தீனிய வீரர்களும் களத்தில் இருந்தனர்.
ஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்ட்டியாடிஸ் தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே ‘மாரத்தான் ஒட்டம்’ என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான ‘முதல் மாரத்தான் போர்’ ஐரோப்பிய நாகரீக வளர்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை”.
Nantri :- http://www.gunathamizh.com/
இணையத்தில் மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்று, பெற்ற அனுபவங்களை வீரர்கள் பகிர்ந்துள்ளார்கள். அனைவரும் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய டாக்குமெண்ட்ரி.
எனது ஊர்காரரின் மாரத்தான் அனுபவம் மிகவும் அருமை …உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ..
அற்புத தகவல்கள்…
மாரத்தான் பற்றிய தங்கள் அனுபவங்களை அழகாய், எளிதாய் எங்களுள் கடத்திவிடும் லாவகம் உங்களுடையது…மேன்மேலும்பணி சிறக்க வாழ்த்துக்கள்…👍