யூட்டியூப்பில் பழைய ஹிந்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போதுதான் சல்லீல் சௌத்ரியின் இசையில் “அப்னி கானி சோடுஜாவ், குச்து நிசானி சோடுஜாவ்” என்ற அற்புதமான வரிகள் கொண்ட வலிமிகுந்த பாடலை கேட்டேன் .
படம் தோ பிகா ஜமீன். வெளியான ஆண்டு 1953 இயக்குனர் ; பிமல் ராய் திரைப்படத்தில் மீனா குமாரி , ரத்தன் குமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பார்கள் |
இப்பொழுதுள்ள அதிகாரவர்கமிக்க அடாவடித்தனமான தமிழக அரசியல் சூழலில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எட்டுவழி சாலை என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்களை அபகரித்து , பண ஆசைகாட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் அரசாங்கத்தை போன்றே இத்திரைப்படத்திலும் ஜமீன்தார் ஒருவன் உள்ளான்.
பன்னாட்டு கள்ள முதலாளிகள் , ஜமீனுக்கு ஆசைவார்த்தைகள் கூறி விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட திட்டம் வகுக்கின்றனர், அந்த திட்டத்திற்கு ஒரு இரண்டு ஏக்கர் நிலம் இடஞ்சாலாக உள்ளது. அந்த நிலம் சம்பு மேத்தோ என்ற ஏழை விவசாயினுடையது. அந்த நிலம்தான் சம்பு மேத்தோவுக்கு வாழ்வாதாரம்.
ஜமீன், சம்புவை அழைத்து ஆசைவார்த்தைகள் கூறி நிலத்தை அபகரிக்க பார்கிறான், அதற்கு இணங்காத சம்புவை; உடனே கடனை திருப்பித்தரச்சொல்லி மிரட்டுகிறான். வீட்டிற்கு வரும் சம்பு மனைவியின் காதணிகளை வாங்கி அடகுவைத்து ஜமீனுக்கு கொடுக்க வேண்டிய 38 ரூபாயை எடுத்துக்கொண்டுவருகிறான். ஆனால் பொய் கணக்கு எழுதிவைத்திருக்கும் ஜமீனின் திருட்டுத்தனத்தை அப்பொழுதுதான் வெகுளியான சம்புநாத் மேத்தோ புரிந்துகொள்கிறான்.
நீதிமன்றத்திற்கு செல்லும் சம்புவிற்கு அங்கும் ஞாயம் கிடைக்கவில்லை. மூன்று மாதத்தில் இருநூற்றி முப்பத்தெட்டு ரூபாய் பணத்தை திருப்பிச்செலுத்த வேண்டும் இல்லை என்றால் நிலம் ஜமீன் வசம் சென்றுவிடும் நீதிபதிகள் கூறுகின்றனர். கிராமவாசி ஒருவனின் யோசனையின் பேரில் சம்பு நகரத்திற்கு சென்று பணம் சம்பாரிக்க நினைத்து முதன்முதலாய் வீட்டை பிரிந்து நகரத்திற்கு செல்கிறான்.
நகரத்திற்கு செல்லும் ஆசையில் மகன் கண்ணையாவும் சம்புவிற்கு தெரியாமல் இரயிலில் அமர்ந்துகொள்கிறான். பின் மகனோடு நகரத்தில் கஸ்ட்டபடுகிறான் சம்பு மேத்தோ. ரிக்ஸா இழுத்து இழுத்து தன் உடலை வருத்தி பணம் சம்பாரிக்கிறான். மகனும் தன் பங்கிற்கு சூ பாலிஸ் செய்து பணம் சம்பாரிக்கிறான்.
அப்படி இருவரும் உழைத்தும் அந்த பணத்தை அவர்களால் முழுமையாக சம்பாரிக்க முடியவில்லை. கிராமத்திலிருந்து மனைவியும் ஒரு கட்டத்தில் சம்புவைதேடி நகரம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள்.
இறுதியில் காயம் அடைந்த மனைவியை காப்பாற்ற தான் சேகரித்த பணத்தை செலவு செய்கிறான் சம்பு.
குறிப்பிட்ட காலத்தில் பணம் கட்டாததால் சம்புவின் இரண்டு ஏக்கர் நிலத்தை ஜமீன் எடுத்துக்கொள்கிறான். சம்புவின் வையதான தந்தையை பைத்தியமாக்கி சம்புவின் வீட்டையும் ஜமீன் அபகரித்துக்கொள்கிறான்.
நீண்ட நாட்களுக்கு பின் சம்பு மனைவி குழந்தைகளோடு கிராமத்திற்கு வருகிறான்; அங்கே அவனது நிலத்தில் இரும்பு வேளி அமைக்கப்பட்டு தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகள் நடந்துவருவதை காண்கிறான்.
இறுதியில் ஆசையாய் தன் நிலத்தின் ஒரு பிடி மண்ணை எடுக்கும் சம்புவையை காவல்காரன் சப்தமிட்டு கீழே போடச்சொல்கிறான்.
படம் முடிகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நோக்கத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மக்களை வளைத்து நசுக்க முடியும் என்பதை இத்திரைப்படம் மிகத்தெளிவாக மக்கள் முன் வைத்துள்ளது.
இத்திரைப்படம் 1953 ல் வெளியாகியுள்ளது. 1948 ல் வெளியான பை சைக்கிள் திவ்ஸின் பாதிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது என்பதை தெளிவாக உணர முடிகிறது. பல காட்சிகள் ஒற்றுமையாக காண்பிக்கப்பட்டுள்ளன.
பை சைக்கிள் திவ்ஸிலும் சாமான்யனின் வாழ்க்கை சிக்கலே கதையாக உள்ளது, இத்திரைப்படத்திலும் அக்கருத்தே மையமாக உள்ளது. பை சைக்கிள் திவ்ஸில் அவனது வாழ்வாதரமான சைக்கிள் திருட்டுப்போக்கிறது. இத்திரைப்படத்திலும் நிலம் அபகரிக்கப்படுகிறது.
தந்தையும் , மகனும் நகரத்தில் அவதியுருகிற காட்சிகள் இரு திரைப்படங்களிலும் ஒன்றாக உள்ளது.
திரைப்படத்தில் சலீல் சொளத்திரியின் இசை மனதை ஆட்கொள்கிறது.
இப்பொழுதுள்ள தமிழக அரசியல் நிலைப்பாடு, திரைப்படத்தில் வரும் ஜமீனின் நிலைப்பாடும் ஒன்றாக இருப்பதை நமது அகமனது உணரத்தான் செய்கிறது.