கதைகள் இல்லாத உலகம் இல்லை என்றே எண்ணுகிறேன். நாம் வாழும் வாழ்க்கை செய்தியாகி பின் கதைகளாக மலர்கிறது. சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகள் தொடங்கி நண்பர்களிடம் கதை கேட்டு வளர்ந்தவன் நான். எப்போதும் கதைகளைச்சுற்றியே ஓடிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் திரு விசாகன் அவர்கள் எனக்கு சூதாடியும் தெய்வங்களும் என்ற புத்தகத்தை கொடுத்தார். சா. தேவதாஸ் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஏற்கனவே அவரது மொழிபெயர்ப்பு நூல்களை படித்துள்ளேன். புத்தகத்தை கையில் வாங்கியதும் முதலில் அந்த புத்தகம் தேர்ந்த வடிவமைப்பு கொண்டிருந்தது. 232 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இருந்தாலும் அதிக எடை இல்லாமல் இருந்தது மேலும் புத்தகத்தின் மேல் ஈர்ப்பை அதிகமாக்கியது.mgr111

உலக வாய்மொழிக்கதைகளை மொழிபெயர்த்து கொடுத்துள்ளார் ஆசிரியர். இந்தியக் கதைகள், பர்மிய நாட்டுப்புறக் கதைகள், இலங்கை கதைகள், சீனத்துக் கதைகள், ஐரோப்பியக் கதைகள் ஆப்பிரிக்க கதை, இத்தாலி நாட்டுக்கதை என ஏழு பிரிவாக கதைகளை கொடுத்துள்ளார். பூட்டான் பயணத்தில் இந்த புத்தகத்தை முழுவதுமாய் ரசித்து படித்தேன்.

புத்தகத்தில் அனைத்து தேசத்து கதைகளும் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு பால்யத்தில் கதைகள் கேட்டு வளர்ந்த நாட்கள் நினைவில் வந்தது. எங்கள் ஊர் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம். அப்பொழுது எங்கள் ஊர் கடைகளுக்கு பலசரக்கு ஜாமான்களை  உசிலம்பட்டியிலிருந்துதான் வாங்குவார்கள். மாட்டுவண்டியில்தான் லோட் கொண்டுவருவார்கள். அந்த வண்டிக்காரரின் பெயர் முத்து பல வயதானவர். அவர் உள்ளூர் வாசிகளால் வண்டிக்கார முத்து என அழைக்கப்பட்டார். அவரது மகன் ராமர். அவரும் லோட் எடுத்து வருவார்.

அப்பொழுதெல்லாம் இரவுகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படு. அவ்வேளைகளில் ஊர் சாவடியிலோ, இல்லை துவக்கப்பள்ளிக்கூட வராண்டாவில் அமர்ந்தோ கதைகளை அவர் கூறுவார். அவர் அதிகமாக பேய்க்கதைகளைத்தான் கூறுவார்.  அவர் காட்சிகளை விவரிப்பதே அலாதியாக இருக்கும். சிலாகித்து கதைகளை அவர் கூறும்பொழுது நானும் என் பால்யகால நண்பர்களும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்போம். பல இரவுகளில் அவர் கூறிய கதைகளினால் தூக்கமற்று பயத்தில் இரவுகளில் அலறுவோம். இதனால் பெற்றோர்கள் ராமரோடு சேராதிங்கடா எனக்கூட பலமுறை கூறியுள்ளனர்.

இப்புத்தகத்தில் ஆவிகளை விற்றவன் (ப.எண் 156) என்ற சீனா நாட்டுக்கதையை படித்தபொழுது எனக்கு மேற்கூறிய பழைய நினைவுகள் மனதில் உதித்தது.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் அவர்களின் கட்டுரை அற்புதமாக அமைந்துள்ளது. இலங்கை வாய்மொழிக்கதைகளில் ஹராந்தியன் என்னும் திருடன் பற்றிய கதையை படிக்கும்பொழுது அவனது சமயத்திற்கு ஏற்ற மதியின் செயல்கள் மிகவும்  ரசிக்கும்படியாக இருந்தது. எல்லாக்கதைகளும் அற்புதமான கதைகள்தான் தேர்ந்தெடுத்த சிறப்பான வாய்மொழிக்கதைகளை மொழிபெயர்த்து புத்தகமாக்கியுள்ளார்கள்.

சூதாடியும் தெய்வங்களும் கதையில் சூதாடியான திந்தாகராலா எப்படி தெய்வங்களையே தன் சூதாட்டத்திற்கு துணையாய் ஆக்கி வெற்றி கொண்டான் என்பதை படிக்க நன்றாய் இருந்தது.

தலைவன் இல்லாத தருணத்தில் தவறு செய்ய மனம் சஞ்சலப்படும் தலைவியை காப்பாற்ற கிளி சொன்ன எழுபது கதைகள் பிரிவில் உள்ள கதைகள் எல்லாமே நன்றாக இருந்தது குறிப்பாக தனஸ்ரீ யின் ஜடை (ப.எண் – 56) சிறப்பாக இருந்தது.

புதிதாய் புத்தகம் படிக்க முயற்சிப்பவர்கள் இத்தகைய எளிமையான வாய்மொழிக்கதைகளின் வழியாய் துவங்களாம். மிகவும் அற்புதமான புத்தகம் பன்முகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தகம் வாங்க 9487845666 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube