இரயில் “பபினா” ஸ்டேசனை வந்தடைந்த பொழுது ஆகாசமெங்கும் மஞ்சள் பூத்திருந்தது; ஜன்னலின் வெளியே “வெக்கை மிதந்துகொண்டிருந்தது”; இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பூங்காவில் மஞ்சள் அரளிப்பூக்கள் அழகாய் மலர்ந்திருந்தது: வெக்கை ஏறியிருக்கும் மரப்பலகையில் படிந்திருக்கும் தூசியை பிஞ்சுக்கரங்களால் துடைத்துவிட்டு ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள் சிறுமி. வெள்ளை நிறத்தில் ரோஜா பூ எம்ராய்டிங் பொதிந்த ஆடை அணிந்திருந்தாள். இரயில் மெல்ல நகரத்துவங்கியது. என் கண்கள்; பூங்காவையும் குழந்தையையும் “கண்களைவிட்டு மறையும் வரை” பார்த்துக்கொண்டேயிருந்தது. இராணுவத்தில் சேர்ந்து முதன் முதலாய் அம்மாவையும், நண்பர்களையும் பிரிந்து செல்லும் வலிக்கு வெக்கையை ஏற்றுக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே ஊஞ்சலில் ஆடி மகிழும் சிறுமியின் உற்சாகமான புன்னகை மருந்திட்டிருந்தது.photo
சட்டைப்பையிலிருந்து அம்மா கும்பிட்டுக் கொடுத்துவிட்ட அய்யனார் சாமி விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். “கோவிலுக்கே போகமாட்டேன்” என கூறும்பொழுதெல்லாம்.. “ அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுப்பா…. அய்யனார் சாமி ரொம்ப துடியான சாமி”… “நமக்கும் நல்ல காலம் பொறக்கும்யா”.. என அம்மாக் கூறிய வார்த்தைகள் நதியலைகளை போல் மனதில் அடித்துக்கொண்டிருந்தது.
அப்பா உயிருடன் இருந்தவரை ஊருக்கு அருகில் நடக்கும் திருவிழாக்களுக்கெல்லாம் அழைத்துச்செல்வார். வானம் பார்த்த கரிசல் பூமியை நம்பிதான் வாழ்க்கையோட்டம் இருந்தது. அப்பா விவசாயத்திற்காக வாங்கிய கந்துவட்டிகடன் தொல்லையால், தற்கொலைசெய்து கொண்டபின்; அம்மா தோட்ட வேலை செய்தும்; கூலி வேலைக்கு சென்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கவைத்ததை நினைக்கும் பொழுதுதெல்லாம் என் கண்களில் நீர்கோர்த்துக்கொள்ளும்.
அப்பா இறந்தபின் அம்மாவும், நானும் குடியிருந்த மண் வீட்டை கந்துவட்டிக்காரர்கள் எடுத்துக்கொண்டபோது நெருங்கிய உறவினர்கள் உதவி எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தனர் ; ஆதரவாக கூட பேசவில்லை. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த மதிவாணன் மாமா , கண்ணகி அக்காவின் குடும்பம்தான் எங்களுக்கு ஆதரவாக பேசி உதவிசெய்தனர். பின் சொந்த ஊரிலேயே அகதியைப்போல் குடிசையிட்டு வாழ்ந்து; அம்மா ஆளாக்கிவிட்டதை நினைக்கும் பொழுது அம்மாவின் வாசனை மனதெல்லாம் நிறைந்திருக்கும்.
இரயில் வனங்களையும், மலைகளையும் கடந்து ஜான்சி இரயில் நிலையத்தை வந்தடைந்தது. சமோசா விற்பவர்கள் இரயில் நிலையத்தில் தங்கள் பச்சை வண்ண பிளாஸ்டிக் கூடைகளை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர்.
இரண்டு சாம்பல்நிற சூட்கேஸ்களை இழுத்துக்கொண்டு இரயில்நிலையத்தை விட்டு வெளியில் வரும்பொழுது; வெள்ளைநிறத்தில் குர்த்தா அணிந்த ஒருவன் என்னை நோக்கி வந்தான்; அவனது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தது, கண்கள் சிறியதாக இருந்தது , விரல்கள் நீண்டிருந்தது.
அவன் எனது சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு..
“ஆஜாவ்”… “கெண்டோன்மெண்ட் ஜானாஹேனா”?
“மேரேசாத் ஆஜாவ்” எனக்கூறிக்கொண்டே அருகில் உள்ள மஞ்சள் நிற ஆட்டோவில் சூட்கேஸ்களை வைத்தான். அவனது “கரகரத்த குரலை”க்கேட்கும் பொழுது நடிகர் எம்.என். நம்பியாரின் குரலைப்போன்றிருந்தது.
ஆட்டோ ரயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே வரும்பொழுது ஜான்சிராணி லச்சுமிபாயின் பெரிய சிலை சாலையின் மத்தியில் நின்றிருந்தது. ஜான்சிக்காக தன் உயிரை விதையாய் விதைத்து போரிட்ட வீரத்தின் அடையாளமாய் லச்சுமிபாய் வாளேந்தி குதிரையில் கம்பீர அழகோடு நின்றிருந்தாள்.
ஆட்டோவில் முகமத் ரபியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும் பொழுது ‘ஹிந்திக்கார குடும்பம் (பிகாரிலிருந்து பிஸ்கெட் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த குடும்பம்) ஊரில் இருந்தார்கள். அந்த வீட்டுக்கார சிறுவன் ரபி நாராயணும் , நானும் பால்ய நண்பர்கள். அப்போதே ஹிந்திப் பாடல்களை ரபி நாராயணுடன் சேர்ந்து அடிக்கடி கேட்பேன். முகமத் ரபியின் “ஓ அஸினா ஜுல்போவாலி ஜானா யகாம்”.. என்ற உற்சாகமான பாடலை ஆட்டோவில் கேட்கும்பொழுது பழைய பசுமையான பால்யகால நினைவுகள் மனதில் சித்திரமாய் உதித்தது.
ஆட்டோ ஜான்சி இரயில்வே ஸ்டேசன் சாலையில் வளைந்து வளைந்து சென்றுகொண்டிருந்தது. வெக்கைக் காற்று வீசிக்கொண்டிருந்தது.

“முகமத் ரபி பிடிக்குமா” ..?
“பகுத் பசந்த்” எனக்கூறிக்கொண்டே மகிழ்ச்சியாய் தலையாட்டினான் ஆட்டோக்காரன் பின் “இதர் ஹர்மி பகுத்தே” எனக் கூறிக்கொண்டே வெய்யிலோடு ஊர்ந்து சென்று கொண்டிருந்தான்

 

ஆட்டோக்காரன் கூறியது போன்றே வெக்கை ஜான்சியில் மிகுதியாகவேயிருந்தது…
“ஆப்ஹா நாம் ஹியாகே”? எனக் கேட்டதற்கு..
வாயில் மென்றுகொண்டிருந்த பாக்கை துப்பிவிட்டு.. தன் சிவந்த உதடுகளைத் திறந்து…
“ராம்சிங்” என்றான்.
ஆட்டோ ஜான்சி நகரத்தை விட்டு இராணுவ முகாமுக்குள் சென்றுகொண்டிருந்தது. வழியெங்கும் நூறாண்டுகளுக்கு மேலான கட்டிடங்கள் அழகாய் காட்சி அளித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கட்டிடமும் உயரமானதாகவும், விசாலமானதாகவும் இருந்தன. கட்டிடங்களை சுற்றி வேம்புவும், அரசுவும், லவ்வா மற்றும் மா மரங்களும் இருந்தன. சாலையோரத்தில் கரும்புஜீஸ் கடைகள் அதிகமாகத் தென்பட்டன. பெரும்பாலும் மனிதர்கள் மெலிந்து, வாயில் எதாவது பாக்குகளை மென்றுகொண்டு, சிவந்த உதடுகளைக் கொண்டிருந்தனர்.
“இந்த பங்களாக்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆபிஸர் குடும்பங்கள் வசித்த இடங்கள்”. பங்களாக்களின் அருகில் இருக்கும் சின்ன சின்ன கட்டிடங்கள் அனைத்தும் பங்களாக்களில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்ந்த கட்டிடங்கள். பிரிட்டிஸ்காரன் நாட்டை விட்டு போனபோது இவர்களின் விஸ்வாசத்திற்காக இங்கிருக்க அனுமதியளித்துவிட்டு சென்றுவிட்டான். இப்போதிருக்கும் இராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும் கெண்ட்டோன்மெண்ட்டை விட்டு இவர்களை வெளியேற்ற முடியவில்லை.
“மே மாதத்தில் ஜான்சியில் வெய்யில் அதிகமாகத்தான் இருக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாய் மழை பெய்துகொண்டேயிருக்கும், மழைக்காலத்தில் நகரத்தில்தான் பிரச்சனை; இராணுவ கெண்டோன்மெண்ட்டில் அழகாய் வடிகால்கள் அமைக்கப்பட்டிருப்பதால். மழை பெய்தாலும் நீர் வடிகால்களுக்கு சென்றுவிடும்”. “ அதெல்லாம் பிரிட்டிஷ்காரன் மூள” அவன் நமக்கு கெடுதி மட்டும் பண்ணல; நல்லதும் செஞ்சிருக்கான்.
”தண்ணிக்கு கூட அடுச்சுக்கிறாங்க”?
”எல்லாரும் இந்தியர்கள், சகோதரர்களுன்னு சொல்றாங்க”..
”ஆனா ஒருத்தன் பசியால துடிக்கிறப்ப .. பக்கத்துல இருக்குறவன் பால்பாயாசம் குடிக்கிற கதைதான் இப்ப நாட்டுல நடந்துகிட்டிருக்கு ; இந்த கொடுமைய பாக்குறப்ப; பிரிட்டிஸ்காரன் கொடுமையே பரவாயில்லனு தோணுது” என ராம்சிங் சிரித்துக் கொண்டே கூறினான்.
ராம்சிங் கூறியது போலவே கெண்டோன்மெண்ட்டில் கால்வாய்கள் அகலமாய் ; சாலையிலிருந்த நீர் எல்லாம் வடிகால்களுக்கு வடிந்து செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தது. ஆட்டோ யூனிட்டை அடைந்த பொழுது வெக்கை குறைந்தது போல் இருந்தது. யூனிட்டிற்குள் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது.
ராம்சிங் ஆட்டோவை யூனிட்டின் எதிரே உள்ள ஆலமரத்தின் அடியில் நிறுத்தினான். ஆலமரம் பல விழுதுகள் விட்டிருந்தது. ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதுகளும் பெரிய தூண்களைப் போல் கம்பீரமாக இருந்தன. ஆலமரத்தை பார்த்த பொழுது பால்யத்தில் கம்மாக்கரை அய்யனார் சாமி கோவில் அருகில் உள்ள ஆலமரத்தில் தூரியாடி விளையாடி மகிழ்ந்த நினைவுகள் வந்து சென்றது. பசுமை போர்த்திய ஆலமரத்தின் இலைகள் பார்க்க அழகாக இருந்தன. மரத்திலிருந்து கிளிகளின் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆலமரத்தின் அருகில் பழமையான சிறிய கட்டிடமும், கட்டிடத்தின் வராண்டாவில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட தள்ளுவண்டியொன்று நின்றிருந்தது.
இந்த கட்டிடத்தில்தான் “குர்னாம்சிங்” தங்கி உள்ளார். அவர் பஞ்சாபை சேர்ந்த சர்தார்ஜி. அவர் உண்டாக்கும் சமோசாவுக்கும், லஸ்ஸிக்கும் இந்த ஜான்சி கெண்ட்டோன்மெண்ட்டில் டிமாண்ட் அதிகம். சர்தார்ஜிக்கு குடும்பம் இல்லை ஒண்டிக்கட்டையாகத்தான் உள்ளார். மிகவும் நல்ல மனிதர் என்றான் ராம்சிங். ராம்சிங் சூட்கேஸ்களை இறக்கிவைத்தான்; தனது கைப்பேசி எண்ணைக் கூறினான்; சிறிது நேரத்தில் முகமத் ரபியின் பாடலை ஓடவிட்டுக்கொண்டே ஆட்டோ வெய்யிலோடு நகர்ந்து சென்றது.
கிளிகளின் சப்தத்தோடு; காகங்களும் கரைந்து கொண்டிருந்தது.
“காக்கா கத்துனா வீட்டுக்கு விருந்தாளி வருவாங்கன்னு” அம்மா சொன்னது ஏனோ அப்போது நினைவில் வந்தது. பட்டாளத்துக்காரனுக்கு அவன் வேலை செய்யும் யூனிட்தானே வீடு; என எண்ணிக்கொண்டே யூனிட்டின் இரும்புகேட்டை நோக்கிச்சென்றேன்.

******

 பெரிய பழமைவாய்ந்த கட்டிடங்களை காணும்பொழுதும், அந்த கட்டிடத்தில் இருக்கும்பொழுதும் நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்து கொண்டிருப்பதை போன்ற உணர்வுகள் வந்து கொண்டேயிருந்தது. யூனிட்டிற்கு வந்து பல வாரங்கள் கடந்திருந்தன. ட்ரெய்னிங்கில் நாட்கள் வேகமாக சென்றுகொண்டிருந்தது.

கெண்டோன்மெண்ட்டில் உள்ள எல்லா இடங்களைப்போல யூனிட்டினுள்ளும் வேம்புவும், அரசுவும், பெருநெல்லியும், மாமரங்களும், லவ்வா மரங்களும் அதிகமாக இருந்தன. யூனிட்டிற்குள் இராஜஸ்தானைச் சேர்ந்த “ராம்லால் சேட்” கடை வைத்து நடத்திக்கொண்டிருந்தார்.
“ இருபது வயதில் இந்த யூனிட்டிற்குள் வந்தேன் இப்போது எனக்கு வயசு அறுபது ஆகப்போகுது” எத்தனையோ ஜவான்களையும், அதிகாரிகளையும் பாத்திருக்கேன்” என அவர் கூறும்போது அவர் குரலில் காலத்தை கடந்துவந்த பெருமிதம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.
கடையின் அருகில் இருக்கும் பெரிய லவ்வா மரத்தின் அடியில் பாலித்தின் பேப்பரை விரித்துவைத்து அதில் விழும்பழங்களை காயவைத்து; அரைத்து வைத்து பொடியாக்கி சாப்பிடுவார். உடம்பை ஆரோக்யமாக வைத்திருக்க இயற்கையிலிருந்தே நாம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பார்.
“ மரத்தை தட்டி ஏன் பறிக்க மாட்றீங்க”? என கேட்டதற்கு..
“என் கண்ணு முன்னாடு வச்சு வளந்த மரம்”
“இந்த மரத்த அடிக்கிறது என் மகள அடிக்கிறது போல“;
“அவளா பாத்து கொடுக்குறது மட்டும் போதும்” என்பார்.
யாராவது மரத்தில் கல் எடுத்து எறிவதை பார்த்தாலே கோபம் கொள்வார். அவர் கோபப்பட்டு “சாலா ………..” என ஹிந்தியில் திட்டுவார். ராம்லால் கடையில் பீடி, சிகரெட், சாய், ஆம்பேலேட் ,சமோசா ஜான்சியில் மிகவும் பிரசித்திபெற்ற ரஸ்மலாய்யும் கிடைக்கும் . ஜான்சியில் அதிகமாக எருமை மாடுகள் உள்ளதால் பாலுக்கு பஞ்சமில்லை. ரஸ்மலாயை சதர்பஜாரில் “ஹல்திராம்” கடையிலிருந்து வாங்கி வருவார். “ஹல்திராம் ஸ்வீட் மாதிரி அருமையான ஸ்வீட் இந்த சதர்பஜாரிலேயே எவன்கிட்டயும் கிடைக்காது” என்பார். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசும்பொழுது அவரது முகம், மேலும் பிரகாசமாகிவிடும். ராம்லாலின் கடையில் கருப்பும், சிவப்பும் கலந்த வண்ணங்கொண்ட “சிங்கி” என்ற பெண் நாய் ராம்லாலை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும். சிங்கியின் வாலின் நுனியில் சிறிய அளவு வெண்மையான ரோமங்கள் இருக்கும். அந்த ரோமமே சிங்கியை மேலும் அழகாக காண்பித்துக்கொண்டிருந்தது. “சிங்கி” அந்த சிறிய கடையில் உரிமையோடு நடந்துகொள்ளும். ராம்லாலும் சிங்கியை பிரியத்தோடு பார்த்துக்கொள்வார்.
“பனி அதிகாமா விழுந்துக்கிட்டிருந்த டிசம்பர் மாசம் ராத்திரி; காம்பௌண்ட் சுவரோரத்துல இருக்குற பொந்துலருந்து ஊளையிட்டுகிட்டேயிருந்தது தூங்க முடியாம எந்திரிச்சுபோய் பார்த்தா “சின்ன குட்டியாய் “சிங்கி” சுருண்டு படுத்திட்டிருந்துச்சு”. பாக்க பாவமா இருந்துச்சு. சிங்கிய எடுத்துட்டுவந்து வளத்துட்டுவர்ரேன் என சிங்கியை கொஞ்சிக்கொண்டே ராம்லால் கூறும்பொழுது சிங்கி தனது சிறிய கால்களை அவரிடம் கொடுத்து விளையாடும்.
சிங்கியும் ராம்லால் எங்குபோனாலும் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ட்ரெய்னிங்கில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ராம்லாலின் கடையில் வந்து அமர்ந்து கொள்வேன். ராம்லாலின் கடையிலிருந்து பார்த்தால் எதிரில் விழுதுவிட்ட பெரிய ஆலமரம் அழகாய்த்தெரியும். ஆலமர நிழலில் சர்தார்ஜி குர்னாம்சிங் அவரது தள்ளுவண்டி கடையில் பணிசெய்து கொண்டிருப்பார்.
ட்ரெய்னிங்கில் கைப்பேசி வைத்திருக்க அனுமதியில்லாததால்; ராம்லால் கடைக்கு வந்துதான் கிராமத்தில் உள்ள அம்மாவிற்கு வாரவாரம் பேசுவேன். ராம்லால் சிறிய பழமையான நோக்கியா போன் வைத்திருந்தார்; அந்த நோக்கியா போனிற்கு சிவப்பு நிறத்தில் உறை இட்டிருந்தார்; உறையின் பின்புறம் ரோஜாப்பூ ஸ்டிக்கர் ஒன்று ஒட்டி வைத்திருந்தார். ட்ரெய்னிங்கில் உள்ள ஜவான்கள் அனைவரும் ராம்லாலிடம் கணக்கு வைத்திருந்தனர். மதிவாணன் மாமாவிடம்தான் கைப்பேசியிருந்தது.. டவுனுக்கு வேலைக்குப்போகும் மதிவாணன் மாமா இரவுதான் குடிசைக்கு வருவார். அம்மாவிடம் இரவுதான் பேசமுடியும்.
“அய்யா எப்படியா இருக்க..
சாப்பாடு நல்லா போடுறாங்களா..
உடம்ப நல்லா பாத்துக்கையா..
நீ ஏன் கண்ணுக்குள்ளேயே நிக்கிறய்யா..
என அம்மா பேசும் ஒவ்வொரு முறையும் கண்ணீர்விட்டு உடைந்துபோன குரலில் பேசுவது வாடிக்கையாயிருந்தது. அம்மாவின் கருணைமிக்க வேதனையான குரலைக்கேட்கும் பொழுது கண்கள் குளமாகிவிடும். மொழி தெரியாவிட்டாலும் “ரோனா நஹி பச்சா” என ஆதரவாக பேசுவார் ராம்லால். அக்கணத்தில் ராம்லாலின் முகம் மதிவாணன் மாமா முகம் போல் தெரிந்து கொண்டிருந்தது.
*****
வெய்யில் எப்போதும்போலில்லாமல் கொளுத்திக்கொண்டிருந்தது. வெய்யில் ஆறு தார்சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது. குர்னாம்சிங் லஸ்ஸியோடு, நிம்பு பாணியும் (எலுமிச்சம் பழச்சாறு) தயாரித்தும் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு மதிய வேளையில் குர்னாம்சிங்கின் கடைக்குச் சென்றேன்.
“ஆஜாவ் ஆஜாவ்”
என்ன வேணும் “ஜவான்”
“நிம்பு பாணி” என்றேன்.

குர்னாம் சிங்கின் நிம்புப்பாணி வெக்கைக்கு நன்றாயிருந்தது; ஐஸ் நீரைப்பயன்படுத்தாமல் குளிர்ந்த மண்பானை நீரைப்பயன்படுத்தி நிம்புப்பாணி செய்திருந்தால் மேலும் சுவையாய் இருந்தது. குர்னாம் சிங்கின் அருகில் சாம்பல் நிற வண்ணத்தில் கொலுகொலுவென இரண்டு பூனைகள் இருந்தன. இரண்டும் ஒரே வண்ணத்திலும், அளவிலும் ஒன்றாயிருந்தது பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. மஞ்சளும் கருப்பு வண்ணமும் கலந்த அதன் கண்களைக்காணும் பொழுது “அப்போகலிப்டோ (APOCALYPTO) திரைப்படத்தில் வரும் கரும்சிறுத்தையின் கண்களைப் போன்றிந்தது.
ஆலமரத்தில் இருக்கும் கிளைகளில் கிளிகள் அமர்ந்திருந்தன. கிளிகளின் சப்தத்தைக் கேட்கும்பொழுது இளையராஜாவின் பின்னனி இசையைக் கேட்பது போன்ற உணர்வை தந்துகொண்டிருந்தது.
“எத்தனை வருசமா கடை வச்சிருக்கீங்க”
“இருபது வருசமா”
கொஞ்சநாள் முன்னாடி வரை.. என் பொண்டாட்டி “ஹர்பீரித் ஹவுர்” கூட ஒத்தாசையா இருந்தா; இப்ப அவ இல்ல; இரண்டு வருசம் முன்னாடி கேன்சர் வந்து இறந்துட்டா…
“குழந்தைங்க”…?
தனது நீண்ட வலிமையான கைகளை அசைத்துக்கொண்டே நஹி என்றார். ..இந்த அறையும், இந்த மரமும்தான் என் மனைவி நினைவா இருக்கு என தனது வெளுத்த தாடியை தடவிக்கொண்டே கூறினார் குர்னாம்சிங்.
இந்த வெய்யில் காலத்துல ஆலமர நிழலுல “ஹர்பீரித் ஹவுரோட ஒக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்போம்; அப்போதெல்லாம் அவளுக்கு நான் குழந்தையா; எனக்கு அவ குழந்தையா தெரிவா”;பக்கத்துல இருக்குற குருதுவாருக்கு போவோம்; எல்லாம் நல்லா போயிட்டிருக்கும்போதுதான் கேன்சர் நோய் அவளுக்கு இருக்குதுன்னு தெரிஞ்சிச்சு.. என குர்னாம்சிங் கூறும்போது, குர்னாம்சிங்கின் கண்கள் கசிந்திருந்தது; கைகளில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது. இந்தக் கட்டடத்தில்தான் இருபது வருசமா ஒன்னா இருந்தோம்.. என அவரது வலது கை பக்கம் பத்தடி தூரத்தில் இருந்த பழமையான கட்டிடத்தை காண்பித்தார். அந்தக் கட்டிடம் பழமையான கட்டிடமாக இருந்தாலும் சேதமில்லாமல் இருந்தது . ஆலமரத்தின் கிளைகள் கட்டிடத்தின் மேல் படர்ந்திருந்தன.
“ஹர்பீரித்” அடிக்கடி சொல்லுவா..
“ஏன் புள்ளைக இல்லைன்னு கவலைப்படுற சர்தார்ஜி”
இங்க ட்ரெய்னிங்ல இருக்குற எல்லாப் பிள்ளைகளும் நம்ம பிள்ளைகதானே; நமக்குன்னு பிள்ளைக இருந்தா ; இந்த வயசுல இருந்துருப்பாங்கள்ள”என குர்னாம்சிங் கூறும்போதே தூரத்தில் சுபேதார் திவாரி வந்து கொண்டிருந்தார்.
குள்ளமாக, இடுங்கிய கண்களுடன் வெள்ளைக் குர்தா அணிந்து வந்தார். பண்டிட்ஜி போஸ்ட்டில் இராணுவத்தில் சேர்ந்ததால் கோவிலில் பூஜைகள் செய்வதுதான் சுபேதார் திவாரியின் பணி.
“குர்னாம்சிங் எப்படி இருக்க” எனக் கூறிக்கொண்டே லஸ்ஸி வைத்திருந்த கிளாசை எடுத்துக் குடித்தார்.
“லஸ்ஸி முன்ன மாதிரி இல்லையே”
”தண்ணி அதிகமா ஊத்துரைய்யா” ?
உனக்கு விசயம் தெரியுமா நாளைக்கு யூனிட்டுக்கு புது கமாண்ட்டிங் ஆபிஸர் வர்ராரு.. அவர் வந்த உடனே கொஞ்ச நாளுள இங்க இருக்குற பழைய கட்டிடமெல்லாம் இடிச்சுடுவாங்க; ரொம்ப நாளா பிளான் நடந்துக்கிட்டிருக்கு

”அதென்ன நிம்பு பாணியா’? வெய்யிலுக்கு ரொம்ப நல்லது; ஒரு கிளாஸ் கொடு…
“நீ இருக்குற இந்த கட்டிடமும் டெமோலெஸ்ல வருது”
”சரி நேரமாகுது புது கமாண்டிங் ஆபிஸர் வீட்டுக்கு போகனும்”.
”அவரோட வீட்டுக்கு பூஜை பண்ணனும்”; “வேலை நிறைய இருக்கு வர்ரேன்” எனக்கூறிக்கொண்டே சென்றுவிட்டார் சுபேதார் திவாரி.
சில தினங்களுக்கு முன் மெஸ்ஸில் வேலை செய்து கொண்டிருந்த ரூப்சிங்க் கோவிலுக்குள் வந்த பொழுது
“ நீயெல்லாம் எப்படி உள்ள வர்ர என” கூறி ரூப்சிங்கை விரட்டியிருந்தார்; எந்தவித வேறுபாடுகளின்றி பழகிவரும் இராணுவத்தினர்களுக்கு மத்தியில் ஒரு களையைப்போலிருந்தார் சுபேதார் திவாரி. குர்னாம்சிங்கின் கடையை விட்டு நடந்து செல்லும் போது கூட “சுபேதார் திவாரியின் உதடுகள் ஏதோ சுலோகங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தது”.
குர்னாம்சிங் அமைதியாய் “மனைவியின் ஞாபகங்களை சுமந்து நிற்கும் கட்டிடத்தைப் பார்த்தார். கட்டிடத்தின் ஆருகில் சென்று ஹர்பிரீத் சுவரில் வரைந்திருந்த சிறிய ரோஜாச் செடி ஓவியத்தை வருடினார்”.
தூரத்து சாலையில் ஆட்டோவின் ஹாரன் சப்தம் கேட்டது;
ராம்சிங்கின் ஆட்டோதான்.
ஆட்டோவிலிருந்து முகத்தைக்காட்டி என்னையும், குர்னாம் சிங்கையும் பார்த்துக்கொண்டு புன்னகைத்தவாறு கைகளை அசைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான்.
வெக்கை ஆறு அனைவரையும் தன்னுள் நிரப்பிக்கொண்டு வேகமாய் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

******

சுபேதார் திவாரி சொன்னது போல் மறுநாளே புதிய கமாண்டிங் ஆபிஸர் “கர்னல் அனிமேஷ்” யூனிட்டிற்கு வந்திருந்தார். அனைவரையும் அமரவைத்து தர்பார் எடுத்தார். தர்பாரில் “பழைய கட்டிடங்கள் நூறாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் அவற்றை டெமோலெஸ் செய்துவிட்டு புதிய கட்டிடங்கள் இங்கு வரப்போகிறது; ஒரு பகுதியிலிருந்து இவற்றை ஆரம்பிக்க வேண்டும்: கட்டிடடத்திற்கு இடஞ்சலாக இருக்கும் மரங்களையும் அகற்ற வேண்டும்; கொஞ்ச காலம் சிரமமாக இருக்கும் பின் எல்லாம் சரி ஆகிவிடும்” என்றார்.
சுபேதார் திவாரி கர்னலுக்கு அருகிலேயே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார். மிகவும் பணிவாக கர்னலுக்கு அருகில் சென்று அடிக்கடி காதில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முகம் அன்று தந்திரமான நரியின் முகமாக என் கண்களுக்கு தெரிந்துகொண்டிருந்தது.
சில வாரங்களில் யூனிட்டிற்குள் புதிய கார்களில் காண்ட்ராக்டர்கள் வரத்தொடங்கினர். நில அளவை மேற்கொண்டனர். சிங்கி அவர்களைப்பார்த்து குரைத்து கொண்டிருந்தது.
அன்று இராணுவ அலுவலகத்துக்கு முன் குர்னாம்சிங்கும், ராம்லாலும் நின்றிருந்தனர்.கமாண்டிங் ஆபிஸர் அவர்களிடம் ஏதோக் கூறிக்கொண்டிருந்தார். இருவரும் அமைதியாய் நின்றிருந்தனர். யூனிட்டிற்குள் லாரிகள் வரத்தொடங்கின பசுமை நிறைந்திருந்த யூனிட்டில் லாரிகளின் சப்தத்தை மரத்திலிருக்கும் பறவைகள் கேட்டு மிரட்சியில் சப்தமெலுப்பிக்கொண்டிருந்தன.
சில தினங்களில் குர்னாம்சிங் கட்டிடத்தை காலிசெய்து சென்றுவிட்டதாக யூனிட்டில் பேசிக்கொண்டனர். ராம்லால் மட்டும் யூனிட்டின் வேறு பகுதியில் கடையை மாற்றியிருந்தார். பழமையான விழுதுகளோடிருந்த ஆலமரமும் வெட்டப்பட்டது. குர்னாம்சிங் வாழ்ந்த பழமையான கட்டிடத்தையும் இடித்துக்கொண்டிருந்தனர்.
அன்று முழுவதும் எனக்கு ட்ரெய்னிங்கில் மனமே ஒட்டவில்லை. சரியாக நடைபயிற்சி செய்யாததால் ”ட்ரில் இன்ஸ்டெக்ட்டர் பட்டிதார்” சுவரில் தலை கீழாய் நிற்கவைத்து பனிஷ்மெண்ட் கொடுத்தார்.
சில மாதங்களில் யூனிட்டில் எல்லா மரங்களையும், கட்டிடத்தையும் வெட்டி, இடித்து; பெரிய வெட்ட வெளியே உருவாகியிருந்தது. புதிய கட்டிடங்கள் முளைக்கத்தொடங்கின. குர்னாம்சிங்கும், ராம்லாலும் சென்றுவிட்ட பின் ஜாவான்கள் அனைவரும் வருத்தத்துடனே ட்ரெய்னிங் செய்தனர். நாட்கள் கடந்து கொண்டிருந்தது. மழைத்தூரிக்கொண்டிருந்த காலை வேளையில் எனது நான்குமாதகால ட்ரெய்னிங்கை முடித்துவிட்டு ராம்சிங்கின் ஆட்டோவில் யூனிட்டை விட்டு வெளியேறினேன். நேசித்த மனிதர்கள் வாழ்ந்த இடத்தை பிரிந்து செல்வது வலிமிக்கதாய் இருந்தது. ஆட்டோ சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது விழுதுகள் விட்டு கம்பீரமாக படர்ந்திருந்த ஆலமரம் இருந்த இடத்தை என் கண்கள் பார்த்தது; வெட்டவெளியான வெறுமை நிறைந்திருந்த அந்த இடத்தில் “சிங்கி” மட்டும் எதையோ தொலைத்தது போல் தனியாக குரைத்துக்கொண்டிருந்தது.

-முற்றும்-

2 Responses so far.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube